எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 12, 2017

கல்வி கசடற

கல்வி கசடற
புதியவன்
           
            வகுப்பறை என்பது வாந்தியெடுக்கப்படும் கழிப்பறை அல்ல. இது வாழ்விற்காக அறிவை சமைக்கும் அடுப்பறை. நமது வகுப்பறைகளை நினைத்துப் பாருங்கள். அரங்கில் பேசுவதற்கும், கட்டுரை வாசிப்பதற்கும், செம்மைப்படுத்தும் நோக்கில் வினா எழுப்புவதற்கும், தக்க பதில் உரைக்கும் ஆற்றலை வளர்ப்பதற்கும், நூல்களைத் தேடி வாசித்துப் புரிவதற்கான நிர்பந்தம் எழுவதற்கும், அறிவியல் உணர்வையும், கலை உணர்வையும், இலக்கிய உணர்வையும், சமூக அறிவையும், சமூக அக்கறையையும் வளர்த்துக்கொள்வதற்கும், கலந்துரையாடல் மற்றும் விவாதப்பண்புகளை வளர்த்துக்கொள்வதற்கும், தங்களுக்கு வெளியில் அதிகாரச் சூழலில் அறிமுகமில்லாத புதிய அவைகளில் சமூகத்தின் பல்வேறு தளங்களில் ஆரோக்கியமானவர்களாகவும், சக்தி மிகுந்தவர்களாகவும், பலசாலிகளாகவும் செயல்படுவதற்கான பயிற்சியை எடுத்துக்கொள்வதற்கும், முன் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், என இத்தகைய இலக்குகளுடன் வகுப்பறை இயங்கியது உண்டா? இந்த இலட்சிய வகுப்புகளை விரும்பியே இக்கட்டுரை அமைகிறது.
            இந்தக் கட்டுரை புதுவைப் பல்கலை தமிழியற்புலத்தில் ஆய்வாளர் தினத்திற்காக 2011ல் பேசுவதற்காகத் தயாரிக்கப்பட்டது. சில சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளது. “மாணவர் அவையின் முரண்பாடும் கவனிப்பாளர்களது பொறுப்புணர்வும்” என்பது இதன் தலைப்பாக இருந்தது. இங்கு தலைப்பு மாறியுள்ளது. இந்த நூலின் இலக்கு நோக்கி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
 இது மாணவர்களும் ஆய்வாளர்களும் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டுள்ள பயிற்சிக்களம். இத்தகைய பயிற்சிக்களங்களையே 'மாணவர்களது அவை' என துணியலாம். இவர்கள் தன்னெழுச்சியாகவோ அல்லது சில சமூகமாற்றச் சக்திகளின் பின்னணியிலோ இத்தகைய அவையை அமைத்துக்கொள்கிறார்கள். APSC மாணவர்கள் நிகழ்த்தும் படிப்புவட்டமும், PILC ஆய்வாளர்கள் நிகழ்த்தும் புதன்வட்டமும், தேடலை நோக்கியும் இத்தகைய மாணவர்களது அவைக்கு உதாரணம். சமூகத்தில் சிறுசிறு அளவாக ஆங்காங்கே இயங்கக்கூடிய இத்தகைய அவைகள் வரவேற்பிற்குரிய வகையில் வளர்ந்து வருகின்றன.
           
            இத்தகைய அவையிலும், வீட்டிலும், தெருவிலும், நாட்டிலும், உலகிலும், பிரபஞ்சம் அல்லது பேரண்டம்  முழுவதிலும் சரி,
'இயங்காத பொருளென்று எதுவுமே இல்லை.
இயக்கம் அல்லாமல் வேறொன்றும் இல்லை'.
            இயற்கை மனிதன் சமூகம் என்ற வளர்ச்சியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில் மனிதர்களது உடல், மூளை, உழைப்பு, சிந்தனை, பண்பாடு, நாகரிகம் என அனைத்திலும் ஏராளமான மாற்றங்களுடன் இயங்கி வந்திருக்கிறது மனிதவரலாறு.
            பேரண்டம் முழுவதும் பொருள்களால் நிரம்பியிருக்கின்றன. மனித சமூகத்திலோ பொருள் பற்றிய சிந்தனைகளும், கருத்துகளும் கூடுதலாக நிரம்பியிருக்கின்றன.
            பொருள் இல்லாமல் சிந்தனைகளும், கருத்துக்களும் எப்படி இருக்க முடியாதோ அப்படியே வரலாறு இல்லாத பொருள்களும் இருக்க முடியாது. பொருளின் வரலாற்றிற்கு இயக்கம் அடிப்படையென்றால் இயக்கப்போக்கிற்கு அடிப்படை எது? அதுதான்; முரண்பாட்டு விதி.
           
            'பிரபஞ்சத்தில் இயங்காத பொருளென்று எதுவுமில்லை.
           முரண்பாடுகள் இல்லையெனில் இயக்கமே இல்லை'
            முரண்பாடு என்பதை எப்படி புரிந்துகொள்வது? எதிர்ப்பதம், எதிர்நிலை, எதிரெதிர் முனையிலுள்ள இரண்டு தன்மைகள், ஒன்றோடொன்று சண்டையிடும் இரண்டு கூறுகள்ஒன்றுக்கொன்று எதிர்நிலையில் நிற்பது. 'வியாக்கியானங்கள் இருக்கட்டும், எடுத்துக்காட்டுகள் இல்லாமல் எப்படி  புரிவது?' சில எடுத்துக்காட்டுக்கள்...
குளிர்ச்சி Xவெப்பம்
நல்லது Xகெட்டது
சரி Xதவறு
ஒற்றுமை Xவேற்றுமை 
பெண் Xஆண்
 உயர்வு Xதாழ்வு
பொருள்  Xகருத்து
 அறிவியல் தத்துவம் X அறிவெதிர் தத்துவம்
  உண்மை Xபொய்
உழைப்பு Xசுரண்டல்...
            இந்த எடுத்துக்காட்டுக்களை மேற்கண்ட வியாக்கியானங்களோடு பொருத்திப்பார்க்க வேண்டும். இதுதான் முரண்பாடு.
            முரண்பாடு என்பது இயக்கத்திற்கு எப்படி அடிப்படையாகும்? இதை விளக்குவதற்கு 'இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல் வாத' தத்துவ ஆசிரியர்கள் கூறும் எடுத்துக்காட்டிலிருந்து ஒன்று. அதாவது, சமூகவிஞ்ஞானத் தத்துவ ஆசிரியர்களை இப்படியும் சொல்லலாம்.
            (எ.கா.) நீருள்ள பாத்திரம் அடுப்பின் நெருப்பில் வைக்கப்படுகிறது. சிறிது சிறிதாக வெப்பமடைகின்ற நீர் ஒருக் கட்டத்தில் தீடீரென நீராவியாக மாறுகிறது. இப்படி பாத்திரத்திலிருந்து நீரானது நீராவியாக மாறிய இயக்கப்போக்கிற்கு            'குளிர்ச்சி Xவெப்பம்' என்ற முரண்பாடு அடிப்படையாக அமைகிறது. நீருக்குள் இருக்கின்ற குளிர்ச்சித் தன்மைக்கும், வெப்பக் கூறுகளுக்கும் இடையில் சண்டை நிகழ்கிறது. பலவீனமாக இருந்த வெப்பக்கூறுகள் படிப்படியாக வளர்கிறது. பலத்துடன் இருந்த குளிர்ச்சித்தன்மை வெப்பக்கூறுகளின் வளர்ச்சிக்கு மாறாக வீழ்கிறது. வெப்பஅளவு 30 (முப்பது டிகிரி), 40,50,60,70 டிகிரி என வளரும் போக்கில் நீரின் வெப்ப அளவு உயர்கிறது. குளிர்ச்சியின் அளவு சரிகிறது. வெப்ப அளவில் தொடர்கின்ற மாற்றம் நீரினது பண்பையே மாற்றிவிடுகிறது. அதாவது சரியாக நூறு டிகிரி என்ற வெப்ப அளவில் நீர் நீராவியாக மாறிவிடுகிறது. முரண்பாட்டில் ஏற்படுகின்ற அளவுமாற்றம் இயங்குகின்ற பொருள்களின் பண்பையே மாற்றிவிடுகிறது என்பதை உணரலாம்.
நீர் வெப்பமடையும் போக்கிலே குளிர்ச்சி தன் பலத்தை இழக்கிறதே தவிர இல்லாமல் போய்விடுவதில்லை. இது முரண்பாட்டு விதியில் முக்கியமானது. இவ்விதி மேற்கண்ட எல்லா எடுத்துக்காட்டுக்களுக்கும் பொருந்தும் என்பது மட்டுமல்ல. 'இயற்கை மனிதன் –  சமூகம் –  சிந்தனை' என எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.
இந்தப் பொருத்தப்பாட்டினைச் சமூக விஞ்ஞான உணர்வை வளர்த்துக் கொள்ளும் இலக்குடன் சரியான முறையில் வாசிப்பதும், யோசிப்பதும், பேசுவதும், செயல்படுவதும் என்ற தொடர் வட்ட வளர்ச்சிப் போக்கிலேயே உணர்ந்து கொள்ள முடியும். சமூகவிஞ்ஞானக்களம் இதற்குக் கை கொடுக்கும்.
                        இனி இந்த முரண்பாட்டுவிதியை மாணவர் அவைக்குப் பொருத்திக்காட்டும் நோக்கில் கட்டுரை விரைகிறது. மாணவர் என்பவர் யார்? எதார்த்த வாழ்வில் இதன் அர்த்தம் இப்படி இருக்கிறது. வகுப்பறையில் ஆசிரியரின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு பாடம் படிப்பவரே மாணவர் ஆவார். இதனால் மாணவரைப்பற்றி அறிய ஆசிரியரின் துணையை இக்கட்டுரை நாடுகிறது.
            முரண்பாட்டுவிதியில்  வகுப்பறையை ஆராயும் போது, ஆசிரியரும் மாணவரும் முதன்மை முரண்பாடாக அமைகின்றனர். ஆசிரியர் வகுப்பறையில் பேசுவதற்காக தொடர்ந்து படிக்கிறார். படித்துத் தகவல்களைச் சேகரிக்கிறார். இதைச் செய்யாவிட்டால் வகுப்பறையில் ஆசிரியர் பேசுவதற்கு விசயம் இருக்காது. ஆகவே பேசவும் முடியாது. ஒவ்வொரு வகுப்பறைக்கும் முன்னதாகப் பேசுவதற்காகவே படிக்க வேண்டியது ஆசிரியருக்கு அவசியமாகிறது. அப்படியென்றால் ஆசிரியரின் எதிர்நிலையில் இருக்கின்ற மாணவனின் தன்மை எது?
            மாணவர் வகுப்பறையில் படிப்பதற்காகப் பேசியாக வேண்டும். பாடம் கேட்டும், படித்தும் சேகரித்த தகவல்களைப்பற்றி மாணவர்கள் பேசாவிட்டால் வகுப்பறையில்  படிக்க முடியாது. ஒவ்வொரு வகுப்பிற்கு முன்னதாகவும் படிப்பதற்காகவே படித்தவற்றைப் பேச வேண்டியவர் ஆகிறார். எதைப் படித்தோம்? எப்படிப் படித்தோம்? ஏன் படித்தோம்? படித்ததற்கும் நடைமுறை வாழ்விற்கும் உள்ள தொடர்பு என்ன? பெற்ற தகவல்கள் உண்மையா, பொய்யா? ஏற்கத் தகுந்ததா இல்லையா? என இதுபோன்று படித்தவற்றை மாணவர்கள் பேசுவதன் விளைவாக எழக்கூடிய ஏராளமான கேள்விகள்தான் மாணவர்களைப் பண்படுத்துகின்றன. இத்தகைய மாணவர்களே தேடல் மிகுந்தவர்களாகவும், தெளிந்த படிப்பாளர்களாகவும், நல்ல செயல் வீரர்களாகவும் சிறப்பு பெறுவார்கள்.
ஆசிரியப் பண்பானது 'பேசுவதற்காகப் படித்தல்' என்பதாக இருக்கின்றபோது 'படிப்பதற்காகப் பேசுதல்' என்பதே மாணவப்பண்பாக இருக்க முடியும்.                  இது இக்கட்டுரையின் துணிபு.
            இது இன்றைய இயந்திரத்தனமான, வியாபாரத்தனமான கல்வி முறையிலுள்ள ஆரோக்கியமற்ற வகுப்பறைக்குப் பொருத்திப்பார்ப்பதற்காக அல்ல. மாறாக, எது நல்ல வகுப்பு என்ற இலட்சிய நோக்கினை முன்மொழிகிறது. வகுப்பறையில் எத்தகைய மாற்றங்களை சாதிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
            இக்கட்டுரைச் சுட்டுகின்ற மாணவர்களது அவையில் ஒவ்வொருவரும் சில நோக்கங்களில் ஆசிரியப்பண்பு மிகுந்தவராகவும், பல நோக்கங்களில் மாணவப்பண்பு மிகுந்தவராகவும் செயல்படுவது அவசியமாகும். மாணவர்களது அவையில் உள்ள முரண்பாடுகளைக் கவனிக்கவும்.
பெரியவர் Xசிறியவர்
ஆசிரியர் Xமாணவர்
 ஆண் Xபெண்
 சத்தம் Xஅமைதி
 உயர்திணை Xஅஃறிணை
 ஊக்கம் Xசோர்வு
         பேசுபவர்  Xபார்வையாளர்
(அல்லது)
கட்டுரையாளர்  Xகவனிப்பாளர்.
இப்படி பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன.
மாணவர்களது அவையின் இயக்கத்திற்கு வலிமைச் சேர்க்கும் முதன்மை முரண்பாட்டைக் கணக்கிடுவோம்.
பேசுபவர்Xபார்வையாளர்கள் () கட்டுரையாளர்Xகவனிப்பாளர்கள்
 இந்த முரண்பாடே மாணவர்களது அவையின் முதன்மை முரண்பாடாக அல்லது முக்கிய முரண்பாடாக இருக்கிறது. ஏனெனில் இந்த முரண்பாடே குறிப்பிட்ட இடத்தை மாணவர் அவையாக நமக்கு உணர்த்துகிறது. இனி இந்த முரண்பாட்டில் தீர்மானிக்கும் சக்தியைக் கணக்கிடப் போகிறோம். அதாவது, கவனிப்பாளர்களே மாணவர் அவையைத் தீர்மானிக்கும் சக்தியுடையவர்கள் என்பதை உணரப் போகிறோம்.
            நடைமுறை வாழ்விலிருந்து பெரிதும் விலகியுள்ள இன்றைய வியாபாரத்தனமான, இயந்திரத்தனமான கல்வியின் வரலாற்றில் வெற்றி பெற்றவர்களைவிட வெற்றி பெறாதவர்களின் கூட்டமே அதிகம். முன்னிலைப் பெற்ற மாணவர்களைவிட முன்னிலைப் பெற இயலாது பின்னேறிய மாணவர்களும், தோல்வியடைந்த மாணவர்களும், தண்டனைப்பெற்ற மாணவர்களுமே அதிகம். இத்தகைய விளைச்சலிலிருந்து வந்தவர்களாகத்தான் மாணவர்களது அவையின் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.
            இத்தகைய வரலாற்றுக்குரிய ஒரு மாணவர் பொது அவையில் தனது கருத்தைத் துணிச்சலுடனும், உறுதியுடனும் பேசுவதில் தயக்கம் காட்டுகிறார். கட்டுரை வாசிப்பதும், அவையில் பேசுவதும் அவருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. 'அவையைக்' குறித்துக் கேள்வி எழுப்பக்கூட ஏகப்பட்ட தயக்கம். 'தான் உண்டு, தன் வேலை உண்டு, தனக்கென குட்டி வட்டமுண்டு, பொது விசயங்களில் தலையிடக் கூடாது, அது அனாவசியமானது, பிரச்சனைக்குரியது' இப்படியான ஆரோக்கியமற்ற அறிவெதிர் பண்பிற்கு பெரும்பாலானவர்கள் பலியிடப்பட்டுள்ளார்கள். இதனாலேயே  இப்படி பலவீனமாக வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் கூடுகின்ற அவையில் தனக்கான பொறுப்புகளுடன் தலையிடுதல் என்பதைக்கூட பொதுவிசயங்களில்; தலையிடுவதாகவும் அல்லது பிரச்சனைகளில் தலையிடுவதாகவும் உணர்கிறார்கள். இதற்காக வாயைத் திறக்காமல் தனது கருத்துரிமையைக்கூட கைவிடுபவர்களாக இருக்கிறார்கள். இத்தகையப் போக்கு மாற வேண்டும் என்பதுதான் மாணவர்களது அவையின் நோக்கம். ஏனெனில் வகுப்பறை என்பது கருத்துக்களின் விளையாட்டு மைதானம். எனவே கருத்துரிமையைப் போற்றுவது வகுப்பறையின் இன்றியமையாத கடமை. இங்கு விளையாட்டு மைதானம் என்பதை உவமைக்காக மட்டும் சொல்ல விரும்பவில்லை.
விளையாட்டு என்பது கல்வி, அறிவு ஆகியவற்றுடன் கலந்திருப்பது. இவற்றிலிருந்து விளையாட்டைத் தனியாகப் பிரிக்கக் கூடாது. அப்படிப் பிரித்தால் விளையாட்டின் நோக்கமும் அர்த்தமும் திரிந்து மலடாகிவிடும். ஏனெனில் விளையாட்டு என்பது வினை ஆற்றுவதற்கான முன் நிகழ்வு. அதாவது, உழைப்பிற்கு ஊக்கம் பெறுகின்ற நிகழ்வு. கருத்திற்கும் செயலுக்கும் உற்சாகம் ஊட்டுகின்ற நிகழ்வு. இன்று நமது கல்விக் கூடங்களும் வியாபார உலகமும் விளையாட்டு உணர்வை மலடாக்கிவிட்டன. விவசாய பூமியில் களைகளைப் பாதுகாத்து வளர்ப்பார்களா? ஆனால் இன்றைய விளையாட்டுகளில் இதுதான் நிகழ்கிறது. விளையாட்டு என்பது ஜெயிப்பதற்காகவோ தோற்பதற்காகவோ அல்ல. விளையாட்டு விளையாடுவதற்காக மட்டுந்தான். ஒலிம்பிக் விளையாட்டின் இத்தகைய நோக்கம் இன்று தோற்றுவிட்டது. ஆனாலும் சமூகவிஞ்ஞானக் களங்களில் புதுபிக்க முடியும். ஏனெனில் சமூகவிஞ்ஞானிகளின் விளையாட்டுப் பயிற்சிகள் வினை ஆற்றுவதற்காக மட்டுமே. எனவே, வகுப்பறை கண்டுள்ள வரலாற்றுத் தோல்வியை மாணவர்களது அவையே சாதிக்க வேண்டியுள்ளது.
கல்வியும் ஒரு விளையாட்டே. வினை ஆற்றுவதற்கான அறிவையும் ஆற்றலையும் வகுப்பறை வழங்க வேண்டும். செயல் மீதான ஆர்வத்தையும் மரியாதையையும் கல்வி உருவாக்க வேண்டும். ஆனால் வகுப்பறைக் கல்வி இத்தகைய வாழ்க்கையைச் சாதிக்கவில்லை.
மாணவர்களது அவை வெற்றி பெறுவதில் அதிகப் பொறுப்பு யாருக்கு இருக்கிறது. கட்டுரையாளர்களுக்கா  Xகவனிப்பாளர்களுக்கா?
(அவையில் பலருக்கும் முன்நின்று பேசுபவர், வாசிப்பவர், தன் கருத்தை மொழிபவர் என பல அர்த்தங்களில் 'கட்டுரையாளர்' என்ற சொல் இங்குப் பயன்படுத்தப்படுகிறது.)
            மாணவர்களது அவையைப் பொறுத்தவரை பெரும்பாலான கட்டுரையாளரின் நிலை என்ன தெரியுமா? கவனிப்பாளர்களது அளவிற்கு அனுபவம் இல்லாதவர். அல்லது. கவனிப்பாளர்களைப்போல அனுபவமே இல்லாதவர். இவர் பேசும்போதோவாசிக்கும்போதோ இவருக்கு இருக்கின்ற பொறுப்புகளைவிட கவனிப்பாளர்களுக்கே அதிக பொறுப்புணர்வு தேவைப்படுகிறது. ஏனெனில் கவனிப்பாளர்களே தீர்மானிக்கும் சக்தியுடையவர்களாக இருக்கிறார்கள்.
            கட்டுரையாளரின் பேச்சிலோ அல்லது வாசிப்பிலோ அவரது பலவீனமே பெரும்பாலும் வெளிப்படலாம். அதாவது, கவனிப்பாளர்களது கண்களைப் பார்த்து பேச முன்வந்தவர் பய உணர்வால் பின்தள்ளப்படலாம். கைகள் நடுக்கம்தர, உடல் வெடுவெடுக்க, நாக்கும் பேச்சும் உதறலாம். பயத்தின் காரணமாகப் பாதியிலேயே முடித்துக்கொள்ளலாம். வந்தவர் வணக்கம் சொன்னதோடு, வாயெடுத்துப் பேச முடியாமல் தடுமாறி அமரலாம். கூச்சம், தயக்கம், பயம் இவைகளிடத்தில் தன்னைத் தோற்கடித்துக் கொள்ளலாம். மாணவர்களது அவையின் வெற்றி இத்தகைய பலவீனம் நிறைந்த கட்டுரையாளர்களின் வளர்ச்சியில்தான் இருக்கிறது. இதைப் புரிந்துணர்வதே கவனிப்பாளர்களது முக்கியப்பொறுப்பு.
            இந்த வகையில் கட்டுரையாளர்களது பலவீனத்தைப் பொறுத்துக்கொள்ளும் பொறுப்பாளராக, கவனிப்பாளர்கள் செயல்படுவது அவசியம். 'பொறுமை கடலைவிடப் பெரிது'. எல்லோரையும் போலவே கட்டுரையாளரும் தனது அங்கீகாரத்திற்கான முயற்சியை மேற்கொள்கிறார். இதைக் கவனிப்பாளர்கள் உணர்ந்திருப்பது மிகவும் அடிப்படையானது. ஏனெனில் கவனிப்பாளர்களே கட்டுரையாளரை அங்கீகரிக்கும் பொறுப்புடையவர்களாக செயல்பட முடியும். கட்டுரையாளருக்கான அங்கீகாரம் தரப்படாவிட்டால் அது சகமனிதருடைய சுயமரியாதைக்கான பிரச்சனையாகவும், சுதந்திரத்திற்கான பிரச்சனையாகவும் அமையும். அங்கீகாரம் என்பது எத்தகைய முக்கியத்துவம் உடையது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கதை.

எவ்வளவு பெரிய ஆளா இருந்தா என்ன? அங்கீகாரம் இல்லாம, அடுத்த அடி எடுத்து வைக்கிறது கஷ்டம்யா! ஒரு கதை சொல்றேன் கேளும்!
ஒரு வீட்டில் அப்பா அம்மா இரண்டு பேருக்கும் பிள்ளை படிக்க வேண்டும் என்பதில் அளவுகடந்த அக்கறை இருந்தது. பிள்ளையை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள். அவனும் தினசரி பள்ளிக்கூடம் போய்வந்தான். ஒருநாள் அவனிடம் அம்மா கேட்டாள்.
'எங்கே! ஒண்ணு ரெண்டு சொல்லு பாப்போம்!'
'ஒண்ணு'
மௌனம். அதற்கு மேல் அவன் சொல்லவில்லை.
அம்மா மீண்டும் 'சொல்லு' என்றாள்.
'ஒண்ணு!'
அத்துடன் நின்றுவிட்டது. அம்மா தரதரவென்று பையனை இழுத்துக்கொண்டு ஆசிரியரிடம் போனாள்.
'இவனுக்கு ஒண்ணு, ரெண்டு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா?' என்று கேட்டாள்.
'! கேட்டுப்பாருங்கள்! நூறு வரைக்கும் சொல்வானே!' என்றார் ஆசிரியர்.
'நீங்களே கேட்டுப்பாருங்க!' என்று அம்மா சலித்தாள்.
'சொல்லுடா!' என்றார் ஆசிரியர்.
அவன் சொன்னான்.
'ஒண்ணு'
உடனே ஆசிரியர் 'ம்!' கொட்டினார் ஆதரவாக. தயக்கமின்றி பையன் 'இரண்டு' சொன்னான்;. ஆசிரியர் மறக்காமல் 'ம்!' கொட்டினார். எக்ஸ்பிரஸ் வேகத்தில் பையன் சொல்ல ஆரம்பித்தான்.
'மூணு'
'ம்ம்!'
'நாலு!'
'ம்ம்!'
நூறு வரை பையன் மளமளவென்று சொல்லி முடித்தான். அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.”
(எனக்குரிய இடம் எங்கே? கல்விக்கூட சிந்தனைகள் - .மாடசாமி, பக்கம்-19)
பொறுப்புணர்வு மிகுந்த கவனிப்பாளர்கள் கட்டுரையாளரை எப்படி அங்கீகரிக்க வேண்டும்?
            முதலில் குறையைச் சுட்டிக்காட்டி பிறகு நிறையைச் சொல்லி நெறிப்படுத்த முயல்வது தவறான அணுகுமுறையாகும். குறை சொல்லி நெடு தூரம் ஓட வைத்தப் பிறகு நிறையைச் சொல்வதில் ஒரு பயனும் இல்லை. சொன்னாலும் கேட்க முடியாத அளவிற்கு  கட்டுரையாளர் அன்னியப்பட்டுப் போயிருப்பார். நிறையிலிருந்து குறைக்குச் செல்வதே சரியான அணுகுமுறை. அதாவது கட்டுரையாளரின் நிறையை முதலில் சொல்லி அவரை நெருங்கி வரவைத்து பிறகு அவரை நெறிப்படுத்தும் முறையில் குறையைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
            கவனிப்பாளர்கள் இத்தகைய அணுகுமுறையைக் கையாள்வது அவசியம். இதுவே கட்டுரையாளருக்கும் கவனிப்பாளருக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும். கட்டுரையாளரும் தன்னைப் பலப்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

கட்டுரையாளரிடம் நிறை என்று எதுவுமில்லை என கவனிப்பாளர்கள் கருதும் பட்சத்தில் வாசிக்க அல்லது பேச முன்வந்த அவரது முயற்சியையாவது பாராட்டி அங்கீகரிப்பது அவசியம்.

            அப்படியென்றால் கவனிப்பாளர்கள் தங்கள் ஆதங்கத்தை, விமர்சனத்தை எப்படித்தான் வெளிக்காட்ட முடியும்? மாபெரும் பொறுப்புணர்வுமிக்க இந்தக் கேள்விக்கு கவனிப்பாளர்கள்தான் அதிக கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும். இதற்கு இக்கட்டுரை சீன மக்களின் சமூகவிஞ்ஞானத் தந்தையாகிய மாசேதுங் அவர்களுடைய மேற்கோள் ஒன்றினை நினைவுப்படுத்த முனைகிறது.
“நண்பரை விமர்சிக்கும் போது பூனை தன் குட்டியைக் கவ்வுவதைப்போல விமர்சிக்க வேண்டும். எதிரியை விமர்சிப்பதென்றால் புலி தன் இரையைக் கவ்வுவதைப்போல விமர்சிக்க வேண்டும்.

கவனிப்பாளர்களது விமர்சனம் கட்டுரையாளரை எப்படிக் கருதுவதாக அமைய வேண்டும்? நண்பராகவா அல்லது எதிரியாகவா? மாணவர்களது அவையின் வெற்றியைக் கருத்தில் கொண்ட எந்தக் கவனிப்பாளரும் நண்பர் என்ற உணர்வு நிலையிலிருந்துதான் கட்டுரையாளரை விமர்சிக்க முடியும்.
            கட்டுரையாளர்களின் வெற்றியில்தான் இக்கட்டுரையின் இலட்சியமாகிய மாணவர்களது அவையின் வெற்றியும் இருக்கிறது. ஆனால் கட்டுரையாளரது வெற்றியை நிர்பந்திப்பதே கவனிப்பாளர்களது  பொறுப்புணர்வுதான். இந்த வகையில் கட்டுரையாளர்களின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டது மாணவர்களது அவை. மாணவர்களது அவையின் வெற்றியை தீர்மானிப்பதில் கவனிப்பாளர்களது பொறுப்புணர்வுக்கே அதிகப் பங்குண்டு. எனவே கவனிப்பாளர்களே மாணவர்களது அவையை தீர்மானிக்கும் சக்தியாவர்.
            இத்தகைய மாணவர்களது அவையாக வகுப்பறைகள் எழுச்சி பெற வேண்டும். நமது கல்விக்கூட வகுப்புகள் இத்தகைய மாணவர்களது அவையாக இருந்ததில்லை. காரணம், தெளிவான சமூக அறிவு, நேர்மையான சமூக அக்கறை, ஆரோக்கியமான சமூகப் பாதுகாப்பு இவற்றை உருவாக்குவது கல்வியின் நோக்கமாக இல்லை. சகமனித நேசம், சமூக உணர்வு, சுதந்திரம், சுயமரியாதை இவற்றைச் சாதிக்கும் இலட்சியம் வகுப்பறை பண்பாட்டில் காணவில்லை. எனவே, மாணவர் அவையின் இலட்சியங்களைச் சாதிக்க சமூகவிஞ்ஞானிகளின் வகுப்புகள் அவசியப்படுகின்றன.

துணைநூற் பட்டியல்
1.         முரண்பாடுகளைப் பற்றி மாசேதுங், கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை.
2.         எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க ஜே. hஜஹான், வாசல் வெளியீடு.
3.         எனக்குரிய இடம் எங்கே? கல்விக்கூட சிந்தனைகள் - .மாடசாமி, அருவி வெளியீடு.
4.         மார்க்சிய மெய்ஞானம் - ஜார்ஜ் பொலிட்சர் (தமிழில்: ஆர்.கே.கண்ணன்),                 NCBH  வெளியீடு.




வெளிவந்த விபரம்

காக்கை சிறகினிலே, செப்.2012,
மாணவர் அவை என்ற தலைப்பில் (பக் 34-37)

புதுப்புனல், ஜுலை 2011,
மாணவர் அவை என்ற தலைப்பில் (பக் 34-37)

சாளரம் மாணவர் இதழ் விபரம் குறிப்பில்லை

நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலில்






No comments:

அதிகம் படித்தவை