எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

ஆக்கமும் பெண்ணாலே நூல் மதிப்பு


ஆக்கமும் பெண்ணாலே நூல் மதிப்பு



கே .சிவக்குமார்

முனைவர் பட்ட ஆய்வாளர்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்


                சமகால மக்களின் வாழ்நிலை எத்தகைய பழைய வரலாற்று உண்மைகளை அடித்தளமாகக் கொண்டு வளர்ந்திருக்கிறது? இந்த உண்மைகளை அறிந்து கொண்டிருப்பதன் வழியாக உருவாக்கப்படுகின்ற கருத்தியல் மருந்துகளால் சமகால வாழ்வின் ஆறாத காயங்களையும், வலிகளையும், வீக்கங்களையும் எதிர்காலத்திலாவது போக்கியாக வேண்டும். இந்த மாபெரும் இலட்சியங்களை முதன்மையாகக் கொண்டே சமூக அக்கறையுடைய கலை இலக்கிய அறிவியல் படைப்புகள் யாவும் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய செயல்களில் வெளிவருகின்ற எந்தவொரு படைப்பும் வரலாற்றில் தவிர்க்க முடியாத அங்கீகாரத்தைப் பெறுவது உறுதி.
                ‘ஆக்கமும் பெண்ணாலே பெண் படைப்பாக்க ஆளுமைகளின் உரையாடல்என்ற இலக்கிய ஆராய்ச்சி நூல் இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுகின்ற தகுதியுடன் வெளிவந்திருக்கிறது. இந்நூலில் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. நூலாசிரியர் முனைவர் ஏ.இராஜலட்சுமி. யாழினி முனுசாமியின் பதிப்புரையுடன் முரண்களரி படைப்பகம் வெளியிட்டுள்ளது. நல்ல மதிப்புரையை முனைவர் இரா.லட்சாராமன் வழங்கியுள்ளார்.
                ஏராளமான சமகால இலக்கியங்கள் வெளிவருகின்ற சூழலில் பழைய இலக்கியங்களை நாம் ஏன் பயில வேண்டும்? இந்தக் கேள்விக்கு விடையை உணராமல் ஆரோக்கியமான ஆராய்ச்சிகளும், கலந்துரையாடல்களும், விவாதங்களும், எதிர்கால மாற்றங்களும் நிகழவே முடியாது. நமது முன்னோர்களின் உழைப்பு, உற்பத்தி,சகமனித உறவு, சிந்தனைமுறை, பொருளாதார சூழல், பண்பாட்டுச் சூழல், சமூக வாழ்வியல் நிலை, சமூக உளவியல் நிலை, சமூக உடன்பாடுகள், சமூக முரண்பாடுகள் ஆகியவற்றை அறிவதிலிருந்தே நமது வரலாற்றின் உண்மைகளை அறிய முடிகிறது. நமது வரலாற்று உணர்வையும், அறிவியல் உணர்வையும், கலை இலக்கிய உணர்வையும், வலிமைப்படுத்துவதற்காகவும் சமகாலம் பற்றிய உலகப்பார்வையைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இலக்கியங்கள் முக்கிய ஆற்றல்களாக விளங்குகின்றன. எனவே நாம் சமகால இலக்கியங்களிலிருந்து பழங்கால இலக்கியங்கள்வரை பயிற்சி பெறுவது இன்றியமையாத கடமையாக இருக்கிறது.
                இந்நூலில் சங்க இலக்கியங்களை முதன்மைப்படுத்தி ஆறு கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.
1.       சங்க இலக்கியப் பெண் புலவர்களின் கருத்துச் செல்நெறி                                                                                                                   
2.       சங்கப் பாடல்களில் பெண் கருத்துச் சுதந்திரமும்-மீறலும்
3.       சங்கஇலக்கியம், புதுக்கவிதை – பெண் படைப்பு வெளி
4.       இலக்கிய  ஆக்கப் பண்பும் அகநானூறும்
5.       சங்க இலக்கியம், பெண்-உணவு-கருத்தாக்கவெளி
6.       சிறுபாணாற்றப்படை வழி விறலியரும் அவர்தம் வாழ்நிலையும்
                சங்க இலக்கியக் காலங்களில் பெண்களின் வாழ்நிலை பற்றிய உண்மைகளை விளக்குவதே இக்கட்டுரைகளின் முதன்மை நோக்கம். தாய் தலைமை சமூகம் உடைக்கப்பட்டு தந்தை அதிகாரச் சமூகம் நிலைபெறுகின்ற காலக்கட்டத்தைச் சங்க இலக்கியக் காலங்களில் அறிய முடிகின்றது. ஆண்களை முதன்மைப்படுத்தியே சங்க இலக்கியப் பெண்கள் சிந்திக்கின்றனர். ஆணின் பின்னிணைப்பாகவே பெண் வாழ்கிறாள். ‘பெண் என்பவள் ஆணுக்குச் சொத்து. ஆண் என்பவன் பெண்ணுக்கு எஜமான். இந்த நிலமை சங்க இலக்கியக் காலங்களிலேயே உருவாகிவிட்டிருப்பதை உணர முடிகிறது. உடன்கட்டை சடங்கால் உயிரிழந்த பெண்களுக்கும், உடன்கட்டையிலும் கொடிய கைம்மை நோன்பில் வாழ்விழந்த பெண்களுக்கும் பெருங்கோப்பெண்டுவின் பாடல் ஒரு வரலாற்று ஆதாரமாகும். சங்ககால ஆண் புலவர்களுக்கு நிகரான பெண் பாற் புலவர்களையும் சமகால பெண் கவிஞர்களையும் ஒப்பிட்டு சில முடிவுகளை இந்நூலாசிரியர் தருகிறார். சமகால வாழ்நிலையில் பெண்களின் பாலுணர்வை வெளிப்படுத்தும் கவிதைகளில் உணர்வுக்கு முதன்மை இல்லை. வெறும் வார்த்தைகள் மட்டுமே கவிதையாகிவிட முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
                அரசியல் சார்ந்த அறிவும் இயக்கமும் சங்க இலக்கியக்காலப் பெண் புலவர்களுக்கு இருந்துள்ளது. ஆனால், சமகால அரசியலும் ஆரோக்யமான விமர்சனங்களும் நவீன பெண் கவிஞர்களுக்குப் போதவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
                வீட்டிலுள்ளவர்களுக்கும் வீடு வருகின்ற விருந்தினர்களுக்கும் உணவு சமைத்து பரிமாறுகிறவர்கள் பெண்களே. வீட்டிற்கு வெளியே பலரும் கூடுகின்ற நிகழ்வில் உணவு சமைத்து பரிமாறுகிறவர்கள் பெரும்பாலும் ஆண்களே. சமகாலத்திலுள்ள இந்நிலை சங்க இலக்கியக் காலத்திலிருந்து தொடர்கிறது. இதற்கு சிறுபாணாற்றுப்படையையும் மதுரைக் காஞ்சியையும் சான்று காட்டுகிறார் ஆசிரியர்.
                சிறுபாணாற்றுப்படையின் விறலியர் வாழ்விலிருந்து இரண்டு முடிவுகளுக்கு இந்நூலாசிரியர் வருகிறார். 1.பெண்ணின் திறமையும் ஆற்றலும் புறந்தள்ளப்பட்டு அவளின் புறத்தோற்றமே நுகர்பொருளாக முன்வைக்கப்பெற்ற தன்மையினையே  இப்பாடல்கள் உறுதி செய்கின்றன. 2.கலைத்திறன் வழி சமூக அடையாளம் என்பதைக் கடந்து வயிற்றுப்பாட்டிற்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் அவல நிலையினையே இச்சான்றுகள் முன்வைக்கின்றன.
                சங்க இலக்கியக் காலத்திற்குப் பிறகு நவீன இலக்கிய கால ஆரம்பம்வரை பெண் கவிஞர்களே இல்லை. ஆனால், பக்தி இலக்கிய காலத்தில் மட்டும் இரண்டு பெண் புலவர்கள் இருந்துள்ளனர். 1.காரைக்காலம்மையார் 2.ஆண்டாள். இவ்விருவரும் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்நூலில் ஆண்டாள் பற்றிய கட்டுரை இடம்பெறாதது சிறு குறையே. ‘காரைக்காலம்மையார் பாடல்களின் படைப்பு வெளி என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆணை முன்னிறுத்தியே குடும்ப அமைப்புச் செயல்படுகிறது. தனித்து வாழும் பெண்ணிற்கு சமூக அங்கீகாரம் மறுக்கப்படுவது உண்மை. இத்தகைய வாழ்வின் கொடுமையான வலிகளை காரைக்காலம்மையார் சுமந்திருக்கிறார். இத்தகைய சுமைகளை எளிமைப்படுத்த சிவபக்தியை நாடியிருக்கிறார். அவரது பாடல்களில் இத்தகைய உண்மைகள் பிரதிபலிப்பதை இந்நூலாசிரியர் உணர்த்துகிறார்.
                நவீன இலக்கியங்களை முதன்மைப்படுத்தி ஒன்பது கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
1.       தமிழ் பெண்ணிய கவியுலகு
2.       பெண் படைப்புகளும்-சுய தணிக்கையும்
3.       குடும்ப அமைப்பில் பெண் அடையாள உருவாக்கம்
4.       நவீனக் கவிதையும் பாலினப் படைப்பாக்கச் செல்நெறியும்
5.       பெண் படைப்புகளில் புதிய சொல்லாடல்கள்
6.       உதய நகரிலிருந்கு ஒரு பயணம்
7.       முள்ளின் கிளையிலிருந்து
8.       மாத்தா ஹரி
9.       பாம்புக் காட்டில் ஒரு தாழை-ஒரு கருத்தாக்கப் பதிவு
இவற்றில் தனித்துவமான நான்கு கவிதை நூல்கள் பற்றிய நான்கு கட்டுரைகள் அடங்கியுள்ளன.
1.       உதயநகரிலிருந்து -இரா.மீனாட்சி
2.       ஓசை புதையும் வெளி- தி.பரமேஸ்வரி
3.       மரக்கலம் திரும்பும் பறவை-தமிழரசி
4.       பாம்புக் காட்டில் தாழை-கவிஞர் லதா
முத்துமீனாவின் தன்வரலாற்றுப் பதிவாகிய ‘முள் என்ற நூலைப் பற்றிய ஒரு கட்டுரை அடங்கியுள்ளது. மாத்தாஹரி என்ற நாவலைப் பற்றிய ஒரு கட்டுரையும் அடங்கியுள்ளது.
                150 இலக்கிய வரலாற்று நூல்களிலும் பெண் படைப்பாளர்களின் பங்களிப்பே இல்லை. புதுக்கவிதை வரலாற்றைப் புரட்டித் தேடினாலும் பெண் படைப்பாளிகளைக் காணவில்லை. ஆசிரியரின் இந்த ஆதங்கம் அதன் காரணம் ஆணுலகமே என்று சுட்டிக்காட்டுகிறது.
                இந்த ஆணுடன் பாலுறவு உரிமையை விரும்புவாளா என்ற கேள்விக்கே இடமின்றி, ஒத்த புரிதல் சிறிதும் வலிமை பெறாத நிலையில் திருமணத்தின் வழியாக ஒரு பெண் கணவன் வீட்டிற்குச் சொாத்தாக மாற்றப்படுகிறாள். நவீன காலத்திலும் பெண்களுக்குத் தொடரும் இத்தகைய சகிப்புத்தனமான வாழ்வின் ஏராளமான வலிகளை இலக்கியச் சான்றுகள் வழியாக இந்நூலாசிரியர் உணர்த்துகிறார்.
வேரோடு பிடுங்கி நடப்பட்ட செடி வேர் பிடித்து அலங்காரமாய் நிற்கிறது. ஆனால், பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வேரோடு பிடுங்கி நடப்படும் பெண்ணுக்கு வாழ்க்கை ஒட்டவில்லை. மனதும் உடலும் பிளவுபடுகின்ற துன்பத்தைத் திரிசடை கவிதையிலிருந்து மட்டுமல்ல, இரா.மீனாட்சியின் கவிதையிலிருந்தும் விளக்குகிறார்.                               
                                “அடிபட்டு மிதிபட்டு நாளும் சாவதைவிட                                                                                                                                                                                  மகள் நல்ல பாம்புடன் வாழும்போது                                                                                                                                                                                          தப்பித் தவறி மருமகன்                                                                                                                                                                                                                              கொத்தி மகிழ்ந்தாலும்                                                                                                                                                                                                                                       சாவு ஒருமுறைதானே பிடுங்கல் வாழ்நாள் முழுதும் இல்லையே
                பெண் தன் வாழ்க்கையை பிறருக்காக வாழ்தலையே சமூகம் கற்பிக்கிறது. அதாவது, ஆண்களுக்காக வாழ்தல். அத்தகைய வாழ்முறையே உயர்ந்த வாழ்முறையாக கட்டமைக்கிறது. தன்னைக் குறித்து சிந்திக்கவோ செயல்படவோ எந்த தருணமும் பெண்ணிற்கு வாய்ப்பதே இல்லை. இவ்வாறு பெண் விடுதலையுணர்வில் அக்கறையுடைய ஆசிரியர் ஆதங்கப்படுகிறார்.
                காம்புகள் கிள்ளப்பட்ட வலியிலிருந்து நாரினால் இறுக்கப்படும் தண்டணைக்கு உன் அகராதியில் அழகு என்று அர்த்தமா? பெண்களைப் பூவாக பூஜிக்கும் ஆண்களின் அழகியல் பார்வைக்கு தமிழச்சியின் இக் கவிதையைக் கொண்டு பலமான கொட்டு வைக்கிறார் ஆசிரியர்.
                ஆண்களின் வரலாற்றுக்குள் பெண்களின் வரலாறு நிச்சயம் அடங்காது. ஆணுலகிற்கும் பெண்ணுலகிற்கும் இடையிலான இடைவெளி மிக நீண்ட தனித்துவத்தைப் பெற்றிருக்கிறது. ஆண்களின் வரலாற்றுக்குள் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்கள் தனது வரலாற்றை எழுதுவது சாதாரண முயற்சியல்ல. இந்த அளவில் ‘முள் என்ற முத்துமீனாவின் தன்வரலாற்றுப் பதிவை பெருமித உணர்வுடன் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
                ‘மாத்தாஹரி என்ற நாவல் சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தின் கதறலைக் காதுகொடுத்துக் கேட்காத சமூகப் பொதுபுத்தியைச் சம்மட்டியால் அடிக்கிறது. இந்த நாவலை எடுத்துப் பேசுவதன் வழியாக ஆணாதிக்கச் சமூகத்திற்கு ஆசிரியர் சார்பாகவும் சம்மட்டியால் ஒரு அடி விழுந்திருக்கிறது.
                இந்நூலின் பத்தொன்பதாவது கட்டுரை ‘பெண்-ஒரு சமூகப் பார்வை. தகவல்களின் தகுதி அடிப்படையில் இக்கட்டுரை முன்னுரையாக இடம் பெற்றிருக்க வேண்டும். பெண்ணை மிக உயர்ந்த இடத்தில் வைத்து ஆராதிக்கும் நம் சமூகம், எதார்த்தத்தில் அவளை பள்ளம் தோண்டி புதைக்கும் மனோபாவத்துடன் செயல்படுவதேன்? இந்தக் கேள்வியுடன் இக்கட்டுரை ஆரம்பமாகிறது. பழங்கற்காலம், சரித்திரக்காலம், தமிழ் இலக்கியங்களில் பெண் ஆகிய மூன்று உட்தலைப்புகளில் வரலாறு முழுவதும் பெண்கள் ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலையினை விளக்கியுள்ளார். சமூக மனக்கட்டமைப்பு அது உருவாக்கியுள்ள பழைய கருத்தியல் நிலையை முற்றிலும் மாற்ற வேண்டும். அதாவது, ஆண் மனதில் பெண் ஒடுக்குமுறை உணர்வையும், பெண் மனதில் ஆணாதிக்க நலன் சார்ந்த உணர்வையும் மாற்ற வேண்டும். தனிமனித மனக்கட்டமைப்பு மாற்றமே இதற்கு அடிப்படையாக அமைய முடியும். இந்த நம்பிக்கையோடு இந்நூலாசிரியர் இக்கட்டுரையை முடித்திருக்கிறார்.
                எதார்த்தத்தில் தனிமனித மனக்கட்டமைப்பு சமூக வாழ்நிலை கட்டமைப்பால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே சமூக வாழ்நிலையில் மாற்றம் நிகழாமல் தனிமனித மனதில் மாற்றம் நிகழ்வது சாத்தியமல்ல. எனவே சமூக வாழ்நிலையை மாற்றும் இலக்கை முதன்மையாகக் கொண்டுள்ள சமூகமாற்றக் களங்களில் இணையாமல் தனிமனித மாற்றத்தைச் சாதிக்க முடியாது. சரியான சமூகவிஞ்ஞானக் களங்களால் மட்டுமே சமூக வாழ்நிலையிலும் தனிமனித மனநிலையிலும் மாற்றத்தை நிகழ்த்த முடியும். எனவே, பெண் விடுதலை உணர்வில் தெளிவான உலகப்பார்வையைக் கொண்டுள்ள  இந்நூலாசிரியர் தனக்கான சமூகமாற்றக் களத்தைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி போன்ற சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்று செயலாற்ற முன்வர வேண்டும்.
                இறுதிக் கட்டுரையான ‘சற்றே சிந்திக்க இந்நூலுக்கு நல்ல முடிவுரையாக அமைந்துள்ளது. விலங்குகள் கைகளுக்கோ கால்களுக்கோ அல்ல. மூளைக்கு என்பதால் சற்றுகாலம் நீடிக்கிறது.

                பெண்விடுதலையை விரைவில் சாதிக்க வேண்டும் என்ற உணர்வு இந்நூலாசிரியரின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது. தாய் தலைமை சமூகம் இயற்கையானது. தந்தை அதிகார சமூகம் ஆண்களின் சொத்துடைமையால் உருவாக்கப்பட்டது. ஆண்களுக்குச் சொத்தாக பெண்கள் மாறியதால் பெண்ணடிமைச் சமூகம் நிலைபெற்றுள்ளது. சமூக விஞ்ஞானிகள் கூற்றுப்படி பெண் விடுதலையின்றி சமூக விடுதலை சாத்தியமில்லை. இந்நூல் தந்தை அதிகார சமூகத்தை உடைப்பதில் தனக்கான தனித்துவத்தை உறுதிப்படுத்தும் என்பது உறுதி.


வெளிவந்த விபரம்
புதிய கோடாங்கி, மார்ச் 2014 (பக்கம் 36 - 38)
மீண்டும் அகரம், டிச.2013-ஜன.பிப்.2014, (பக்கம் 43 - 46)



No comments:

அதிகம் படித்தவை