எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, May 17, 2017

விதி-1.4 இயங்குதல் தன் இலக்கை அடைதல் என்பது முன்பிருந்த நிலைக்கு திரும்பாமல் அந்நிலையைவிட உயர்ந்த நிலைக்கு மாறுதல் மட்டுமே. (சிறுகதை 6)

விதி-1.4  இயங்குதல் தன் இலக்கை அடைதல் என்பது முன்பிருந்த நிலைக்கு தேங்கும்படி திரும்பாமல் அந்நிலையைவிட உயர்ந்த நிலைக்கு மாறுதல் மட்டுமே. (சிறுகதை 6)
            இனி இயங்குதலின் நான்காம் தன்மை. இப்பொழுது நாம் இயங்குதலின் உயர்ந்த நிலைக்குச் செல்லப் போகிறோம்.
            இயங்குதல் தன் இலக்கை அடைதல் என்பது, முன்பு இருந்த நிலைக்கு திரும்பாமலும் தேங்காமலும் அதைவிட உயர்வான நிலையை அடைவதாகும். அதாவது, விதை செடியாகி செடி மரமாகி மரம் பூ பூத்து பூ காய் காய்த்து காய் கனியாகி கனி விதையாகி விதை மீண்டும் செடியாகி செடி மீண்டும் மரமாகி மாற்றங்கள் தொடர்கின்றன. இந்த மாற்றங்களுள் முந்தைய நிலையைவிட உயர்ந்த நிலையை நம்மால் கவனிக்க முடியும். விதை மரமாக மாறியதும் ஒரு பழத்தை மட்டும் தருவதில்லை. ஆயிரம் பழங்களைத் தருகின்றது. ஆயிரம் பழங்களின் வழியாக ஒரு விதை ஆயிரம் விதைகளாக மாறியுள்ளது. இங்கு ஆயிரம் விதைகள் என்பது ஒரு விதை என்ற முந்தைய நிலையைவிட உயர்ந்த நிலையாகும்.
            சரி, பூங்காவனத்தைக் கவனிப்போம். இது ஓர் அதிசய கிராமம். இந்தக் கிராமத்து ஆண்கள் மது அருந்துவதையே மறந்துவிட்டார்கள். ஒரு கிராமமே மது பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கிறது. இந்த அதிசயத்தை என்னவென்பது! இதைச் சாதித்தது இக்கிராமத்துப் பெண்கள். அமைதி கெடுக்கும் பல பிரச்சனைகளில் கள்ளச்சாராயமும் ஒன்று. பூங்காவனம் கள்ளச் சாராயத்தாலும் மலர்ச்சியின்றி வாடியிருந்தது. எல்லா ஊர்களைப் போலவும் ஆண்கள் குடிகாரர்களாக இருந்தார்கள்.
            பெண்களிடம் குடிகார ஆண்கள் செய்கின்ற கேவலமான வீரச்செயல்கள் இங்கும் நிகழ்ந்து கொண்டிருந்தன. குடிக்கக் காசு கேட்டு சண்டை போடுவார்கள். வீட்டுச் சாமான்களைத் திருடி எடைக்குப் போடுவார்கள். வந்த காசுக்கு குடித்துவிட்டு வம்பு செய்வார்கள். இப்படி ஏராளமான லீலைகள். இந்த ஆண்கள் படுத்துரப்பாட்டைச் சொல்லி மாளாது. ஆண்களை ஆட வைத்து வேடிக்கைப் பார்க்கிறது, கள்ளச் சாராயக்கடை. இதன் கள்ளச்சிரிப்பு கண்டபடி ஒலிக்கிறது. இதற்கு முதல் வெடியை வைத்தவள், சரசம்மா.
            குடிகாரப் புருசனின் தொந்தரவால் வெறிபிடித்திருந்தாள். காசு கேட்டு அடித்தவனைக் கடைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள். போனவன் நல்ல போதையில் வந்திருக்கிறான். அவன் உடல்பலத்தைச் சாராயம் குடித்திருந்தது. சரசம்மா வீட்டு வாசலிலேயே பூஜையை ஆரம்பித்தாள். வெறும் கையாலேயே வெளுத்து வாங்கினாள். சுற்றி இருந்தவர்கள் வாய் பிளந்து நின்றார்கள். செத்துரப்போறாண்டி! விட்டுருடியாத்தா! என்று சில கிழவிகள் பதறினார்கள். பெண்களுக்கெல்லாம் உள்ளுக்குள் மகிழ்ச்சி. இப்படி யாராவது துணிஞ்சாத்தான் வீட்டு ஆம்பளைங்க சரிபடுவானுங்கன்னு பூரித்தார்கள்.
            இவர்களில் பேச்சியும் ஒருத்தி. சரசம்மாளைச் சமாதானப்படுத்தி அவள் புருசனைக் காப்பாற்றியது இவள்தான். பயல் அடிப்பட்ட கரப்பான்பூச்சி போல கிடந்தான். நிதானத்திற்கு வந்தவன் அவமானம் தாங்காமல் விசம் குடித்துச் செத்தான். விசயம் அறிந்ததும் ஊரே அதிர்ச்சியானது. பயங்கரமானக் குற்றத்தைச் செய்துவிட்டதாகச் சரசம்மா நடுங்கினாள். ஊர்மக்கள் நிதானிப்பதற்குள் அடுத்த அதிர்ச்சி. மரத்தில் முந்தானையைக் கட்டித் தொங்கிக்கொண்டிருந்தது சரசம்மாவின் சடலம்.
            பெண்களின் உள்ளத்தில் வீராப்பை ஏற்படுத்தியவளுக்கு இந்த கதியா!.. ஊர் பெண்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்கள். இதன் விளைவாக சாராயக் கடைக்கு எதிரான சரசம்மா இயக்கம் தோன்றியது.  சரசம்மா விதையானாள். பேச்சி, முதல் இலையாகத் துளிர்த்தாள். இரண்டு மாதத்தில் இந்த  இயக்கம் உயர்ந்த நிலையில் பக்குவம் அடைந்தது. இயக்கத்தில் இல்லாத ஊர்ப் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சாராயக்கடைக்கு எதிரான சரசம்மா இயக்கத்தில் எல்லாப் பெண்களும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இயக்கம் வலிமையானப் போரை நிகழ்த்தியது. கரடியிடம் சிக்கிய தேன்கூட்டைப்போல சாராயக்கடை கந்தலாகிப் போனது.
சாராயக்கடை முதலாளி ஒரு பயங்கரமானக் கந்துவட்டிக்காரன். இவனது அடியாட்கள் பெண்களின் கால்களால் மிதிபட்டு ஓடினார்கள். முதலாளி மட்டும் தப்பித்து ஓடாமல் நல்ல பாம்பாக சீறினான். மேலும் மேலும் சீறினால் சும்மா விடுவார்களா! வேறு வழியில்லாமல் பாம்பு கொல்லப்பட்டது. இதன் பிறகு பூங்காவனம் போதை நீங்கி மகிழ்ந்தது. பெண்களின் இலட்சியத்திற்கு ஆண்கள் தோழரானார்கள். இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று ஊருக்குள் ஒரு டாஸ்மாக் முளைத்திருக்கிறது. இதனால் சாராயக்கடைக்கு எதிரான சரசம்மா இயக்கம் புத்தெழுச்சி பெறத் துவங்கியுள்ளது. பூங்காவனத்தின் இரசிகர்கள் ஆர்வமாய் காத்திருக்கிறார்கள். டாஸ்மாக் முதலாளிக்கும் அதே நிலை ஏற்படலாம்.
இங்கு சரசம்மா இயக்கத்தைக் கவனியுங்கள். பேச்சி என்ற முதல் பெண்ணிடமிருந்து இயக்கம் துவங்குகிறது. பேச்சி ஒரே நாளில் நான்கு பெண்களை இயக்கமாக்கினார். நான்கு பெண்கள் நாற்பது பெண்களை இயக்கமாக்கினார்கள். நாற்பது பெண்கள் நானூறு பெண்களை இயக்கமாக்கினார்கள். இங்கு இயக்கம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஆனால் முந்தைய நிலையைவிட உயர்ந்த நிலையை உணர முடியும். நான்கு பெண்கள் என்பதும், நாற்பது பெண்கள் என்பதும், நானூறு பெண்கள் என்பதும், நாலாயிரம் பெண்கள் என்பதும் பேச்சி என்ற ஒரு பெண்ணின் முந்தைய நிலையைவிட உயர்ந்த நிலையாகும். இயக்கத்தின் ஆயிரம் உறுப்பினர்கள் வழியாக சரசம்மா என்ற ஒரு விதை ஆயிரம் பேச்சிகளாக மாறியுள்ளது.
·         முட்டை குஞ்சாகி குஞ்சு பறவையாகி பறவை 10 முட்டையிட்டு 10 முட்டை 10 குஞ்சாகி 10 குஞ்சு 10 பறவையாகி 10 பறவை 100 முட்டையிட்டு...
·         ஒரு நாய் 10 குட்டிப்போட்டு 10 குட்டி 10 நாயாகி 10 நாய் 100 குட்டி போட்டு...

இப்படியே உயர்ந்த நிலையைக் கணக்கிட ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கண்டறிய முடியும். இயங்குதலின் நான்கு தன்மைகளை இந்த அளவில் நிறுத்தி இரண்டாம் வழிமுறைக்குச் செல்வோம்.


No comments:

அதிகம் படித்தவை