எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

அநாதை உலகமும் அன்னை தெரசாவும்


அநாதை உலகமும் அன்னை தெரசாவும்

புதியவன்


     மனிதர்களால் படைக்கப்பட்டச் சமூகம் அநாதையாக நின்றுகொண்டிருந்தது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களின் பரி்தாப முகத்துடன் விழித்துக் கொண்டிருந்தது. நியாயம் காக்கவும் நலம் விசாரிக்கவும் எந்த மனிதரும் வரவில்லை. சுவாசிப்பதற்கே சுவாசம் இல்லை. ஆதலால், கேட்பாரற்றக் கோரமான வாழ்க்கையை அநாதையுலகம் வாழ்ந்துகொண்டிருந்தது. விரக்தியடைந்தச் சோகக் கண்களைச் சிமிட்டிக்கொண்டு அதன் மொழியில் பரிதாபமாகப் புலம்பிக்கொண்டிருந்தது.

ஏமாறுபவர்களே ஏமாற்றுகிறார்களாம்...

ஏமாற்றுபவர்களே ஏமாறுகிறார்களாம்...

உயிர் பிழைக்கும் எந்த முயற்சியும்

இந்த எல்லைகளைக் கடப்பதில்லையாம்...

பிழைப்பதற்காகவே வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்களாம்...

வாழ்ந்து பார்க்க யாருமே முன்வர மாட்டார்களோ! என்று ஏங்கிப் புலம்பியது அநாதையுலகம்..

     அநாதைகள் பிச்சை எடுக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால், அநாதையுலகம் பிச்சை எடுக்கவில்லை. உரியவர்களால் அரவணைக்கப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தது.

     அநாதையுலகில் எண்ணற்ற  பிச்சைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அநாதை உலகம் ஒவ்வொன்றாகக் கவனித்துக்கொண்டிருந்தது.

தேர்தல் நாடகங்களில் பங்கேற்பதற்காக இலாப வெறி பிடித்த நிறுவனங்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தன ஓட்டுக் கட்சிகள்...

சாதி வெறியை வளர்ப்பதற்காக சாதி சனங்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தன சாதிக்கட்சிகள்...

மதவெறியை வளர்ப்பதற்காக பக்த கோடிகளிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தன மத நிறுவனங்கள்...

ஆடம்பர ஆசைக்கு லஞ்ச வெறியுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள் அரசு அதிகாரிகள்...

குலம் முழுதும் அழிந்துகொண்டிருப்பது பற்றிய சமூகஅறிவு குலத்துக்கும் இல்லை, குலசாமிக்கும் இல்லை. ஆனாலும் குலம் காக்கும் குலசாமிக்கு விழா நடத்த குலமக்களிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள் குலக்குழுவினர்...

சில குடிகாரர்கள் பாட்டிலுக்கான காசு சேர்வதற்காகப் பொறுமையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள்...

     அநாதையுலகம் சோகக் கண்களால் முறைத்துக்கொண்டிருந்தது!



புராதணக் கலைகளுக்குச் சொந்தக்காரர்கள் அழிந்து கொண்டிருக்கும் தங்களது கலைகளைச் சொல்லி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள்...

ஆங்காங்கே பல முதியவர்களும், பெண்களும், சிறுவன்களும், சிறுமிகளும், குழுந்தைகளும், ஊனமுற்றவர்களும் வெவ்வேறு திசையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள். வயிற்றுத் தேவைக்காகவும், மருத்துவத் தேவைக்காகவும் அவர்கள் ஓயாமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

பல மாணவர்கள் படிப்பதற்காகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். பிச்சையின் போதாமையால் பல பெண்கள் பாலுறவு சுகத்தை விற்பவர்களாகவும் மாறியிருந்தார்கள்...

     அநாதையுலகின் கண்களில் பரிதாபம் எட்டிப்பார்த்தது!



காட்டையே அதிரச் செய்யும் கம்பீரமான யானைகள் அடக்கம் ஒடுக்கமாய் ஆடி நடந்து பாகன்களுக்காகவும் சேர்த்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தன. சாமர்த்தியமான பாகன்கள்! குரங்கு, குதிரை, கழுதை எதையும் விட்டுவைக்கவில்லை.

சில நாட்டுமிராண்டிகளால் கடத்திவரப்பட்ட குழந்தைகள் பரிதாபமாகப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள்...

     அநாதையுலகத்திற்கு கண்ணீர் கோடிட்டது. உதடு கீழிறங்கியது. கதறி அழுதிட நினைத்தது. பிச்சைக்கார உலகம் என்று உள்ளம் குமுறியது. உள்ளம் குமுறிக்கொண்டிருந்தபோது ஒரு பிச்சைக்காரரின் உரத்தக்குரல் உள்ளத்தில் செருகியது. அந்தக் குரல் ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது. அவள் சமூகவிஞ்ஞானிகளின் சார்பாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். சமூக அக்கறையை வளர்ப்பதற்காக சகமனிதர்களிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். அவளது குரலில் நேர்மை தவழ்ந்தது. நேர்மையின் கவர்ச்சியால் அநாதையுலகம் கவர்ந்திழுக்கப்பட்டது.

     சோகக் கண்களின் விரக்தியை, கோபத்தை, அழுகையை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு அந்தப் பெண்ணை அருகில் வந்து கவனித்தது. அவள் ஒரு பேருந்துநிலையத்தில் குழுவாகப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். அந்தக் குழுவில் ஒன்பது நபர்கள் இருந்தார்கள். ஐந்து பெண்கள், நான்கு ஆண்கள்.

     இந்தக் குழுவினர் சமூகத்தைச் சரி செய்கின்ற கடமையுணர்வுடன் மக்களிடம் மனம் விட்டுப் பேச வந்திருக்கிறார்கள். சமூக அக்கறையுடன் வாழ்வதற்காகத் துண்டறிக்கைக் கொடுத்து அழைக்க வந்திருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு நிகழ்விற்கு பணம் பெறுவதற்காக வந்திருக்கிறார்கள். சமூக அக்கறையுடன் வாழ்வதற்காக எந்தச் சமூகவிஞ்ஞான அமைப்பைச் சார்ந்திருக்கிறார்கள் என்ற பெயரட்டையை சட்டையில் மாட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களது அடையாளச் சின்னம் நிதியுண்டியலை மேலும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

     இந்தக் குழு மூன்று குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டது. இரண்டு குழுவில் ஒரு ஆண், இரண்டு பெண். ஒரு குழுவில் ஒரு பெண், இரண்டு ஆண். அந்தப் பெண் இரண்டு ஆண்களை வழிநடத்திக்கொண்டிருந்தாள். அவள் பேருந்தில் ஏறி மக்களிடம் பேசினாள். வணக்கத்துடன் ஆரம்பித்தாள். தங்களைப் பள்ளி கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டாள். இவள் பேசத் தொடங்கியதும் ஒருவன் மக்களிடம் துண்டறிக்கையைக் கொடுத்துக்கொண்டிருந்தான். அவள் பேசிக்கொண்டிருந்தாள்.

நாங்கள் உங்கள் பிள்ளைகள். உங்கள் தோள்களில் அமர்ந்து உலகைப் பார்ப்பவர்கள். உங்களுக்குத் தெரியாதவைகளும் எங்களுக்குத் தெரிகின்றன. நாம் எவ்வளவோ பிரச்சனைகளை வாழ்வில் சந்தித்து வருகிறோம். இயற்கைவளங்கள் அழிக்கப்படுகிறது... சுற்றுச் சூழல் மோசமாச்சு...  உணவு விசமாயாச்சு... கல்வி வியாபாரமாச்சு... மருத்துவம் காசாச்சு... வேலையின்மை பெருகியாச்சு... வருமானம் போதவில்லை... விலைவாசி பெருகியாச்சு... பெண்பிள்ளைகள் மீது  பலாத்காரங்கள் ஓயல... சாதிவெறி படுகொலைகளும் மதவெறி படுகொலைகளும் பெருகியாச்சு... எண்ணற்ற ஏற்றத்தாழ்வுகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன... இப்படி ஏராளமானப் பிரச்சனைகள். ஆனால் பிரச்சனைகள் பற்றிய தெளிவானப் பார்வை சிறிதும் இல்லை! எந்தக் கேள்விகளும் இல்லை! உரிய பதில்களும் இல்லை!  சகிப்புத்தனமாக வாழ்கிறோம்! இந்த வாழ்க்கை உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அடுத்தத் தலைமுறைகளுக்கும் அழிவையே தரும். நிச்சயம் விடுதலையைத் தரப்போவதில்லை. எனவே சமூக அக்கறையுடன் வாழ அழைக்கிறோம். எங்கள் முயற்சியில் மாதந்தோறும் சமூகவிஞ்ஞானச் சிறுபத்திரிக்கை வெளிவந்திருக்கிறது. மாணவர்களையும் மக்களையும் சமூகவிஞ்ஞானிகளாகப் பக்குவப்படுத்துகின்ற முயற்சியில் வெளியிடுகிறோம். நாங்கள் எந்த முதலாளிகளையும் பெரிய நிறுவனங்களையும் சார்ந்து இயங்குவதில்லை. நோட்டிஸ், போஸ்டர், சிற்றிதழ், சமூக அறிவிற்கான வகுப்புகள், போராட்டம், சட்ட உதவிகள் அனைத்திற்கும் மக்களிடமே நிதியைப் பெற்று நிகழ்த்தி வருகிறோம்! எங்கள் இதழை வெளியிட நிதியுதவி தேவைப்படுகிறது. நண்பர் உண்டியல் ஏந்தி வருவார். உங்கள் பங்களிப்பாக முடிந்த நிதியைக் கொடுத்து உதவுங்கள்.

   நன்றி சொன்ன உதடு புன்னகை பூத்தது. உண்டியலைக் குலுக்கியபடி ஒருவன் மக்களிடம் சென்றான். சில்லரைகளும் ரூபாய் நோட்டுகளும் நிரம்பிக்கொண்டிருந்தன. அவளது நேசமிக்க வார்த்தைகளில் அநாதையுலகம் பூரித்து நின்றது. அதன் உள் மனது அடித்துச் சொல்லிக்கொண்டது. நம்மை அரவணைக்க சமூகவிஞ்ஞானிகள் இருக்கிறார்கள்.  நாம் அநாதையுலகம் அல்ல என்பதை நினைத்து மகிழ்ந்தது.

   ஒரு பெரியவர் குறுக்கிட்டு பேசினார். அவரது சத்தமானப் பேச்சில் அக்கறை கலந்திருந்தது.

உங்களப்போல பேசுற ஒரு பையன் எங்கள் ஊரில் இருக்கான். அவனைக் கண்காணித்துக்கொண்டே வந்திருந்த சிலர் எங்களூரில் நடமாடினார்கள். விசாரித்தபோது போலிசுக்காரங்கன்னு சொன்னானுங்க. எங்க மக்களிடம் அந்தப் பையனைப்பற்றி மாவோயிஸ்ட் தீவிரவாதின்னு சொல்லிட்டானுங்க. ஊரே அந்தப் பையனை தீவிரவாதின்னு ஒதுக்கிடுச்சம்மா! நீ பொம்பளப்பிள்ள... பாத்து நடந்துக்கோம்மா...

   நேசமான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரி மக்களின் கண்களைப் பார்த்து வலிமையாகப் பேசினாள்..

நாங்கள் சமூகவிஞ்ஞானக் களத்தில் செயல்படும் மாணவர்கள். இந்த அரசு சமூக அக்கறையுடன் செயல்படும் மாணவர்கள் இளைஞர்கள் மீது அவநம்பிக்கைகளை உருவாக்க முயல்கிறது. மாவோயிஸ்ட்,  பயங்கரவாதி, தீவிரவாதி இன்னும் என்னென்ன ஒப்பாரிகளை வைக்க முடியுமோ வைக்கட்டும், எங்களுக்குக் கவலையில்லை. இதெல்லாம் சமூகத்திலிருந்து சமூக அக்கறையுடன் வாழ்பவர்களைத் தனிமைப்படுத்துகின்ற முயற்சி. ஒரு சகமனிதர் மீது அரசு நிகழ்த்துகின்ற அரசபயங்கரவாதத்தின் பல்வேறு வடிவங்களில் இதுவும் ஒன்று. நாம் அரச பயங்கரவாதத்தை ஒன்றுபட்டு கண்டிக்க வேண்டும்.

காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நீங்க யாராவது நம்புகிறீர்களா?

   ஒரு இளைஞன் ஆவேசமாக பதில் சொன்னான்.

பொருக்கியிலும் பொருக்கி ஒன்னாம் நம்பர் பொருக்கி போலீசு பொருக்கிதான்! பொதுமக்கள எப்பவாச்சும் மரியாதையா பேசிருக்கானுங்களா? ‘அடா போடாமல் போலீசுக்காரங்களுக்கு வார்த்தையே வராது. லஞ்சம், ரவுடித்தனம், பொம்பளைகள பலாத்காரம் பண்றது, பொய் கேசுல உள்ள தள்றது, அடிச்சு சித்ரவத பண்றது, கொலை செய்றது... எல்லா தப்புதண்டாவும் காக்கிச்சட்டையே போட்டுக்கிட்டே செய்யுறானுங்க!

   அவள் பேச்சைத் தொடர்ந்தாள்..

காவல்துறை பொதுமக்களுக்கு விரோதி என்பதை மூடிமறைப்பதற்காக ‘காவல்துறை உங்கள் நண்பன் என்று அரசு பொய் சொல்கிறது. அதுபோல, சமூக அக்கறையுடைய நேர்மையான மனிதர்களை மூடிமறைப்பதற்காக ‘தீவிரவாதி, மாவோயிஸ்ட்... என்றெல்லாம் சொல்கிறது. இந்தப் பொய்சொல்லி அரசின் பயத்தைக் கவனித்தால் ஒருவேளை தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் என்பவற்றிற்கு அர்த்தம் “சமூக அக்கறையுடையவர்கள் என்பதாகவும் இருக்கலாம். நாம் ஆராய்ந்து பேசினால் உண்மைகள் புலப்படலாம். எப்படியிருப்பினும், சமூகத்தை நேர்மையாக நேசிப்பவர்கள் மீது அரசு சுமத்துகின்ற அத்தனை அடக்குமுறைகளையும் பொதுமக்கள்தான் ஒன்றுபட்டு உடைத்தெறிய வேண்டும்!

நன்கொடை கொடுத்த மக்களுக்காக நன்றி சொல்லிவிட்டு இறுதியாக  பேருந்திலிருந்து இறங்கினாள். பேருந்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த கூட்டம் அவளையே கவனித்துக்கொண்டிருந்தது. ஒரு முதியவள்  வழிமறித்தாள். அவள் ஊர்க்காரப் பெண்மணி.  தடித்த நாக்கைச் சுழற்றிக்கொண்டு வெடுக்கென்று கேட்டாள்!

‘ஏண்டி... இப்படி பிச்சை எடுக்கவா

உங்க அப்பன் படிக்க வைக்கிறான்!...

   கவனித்தவர்கள் முகம் சுளித்தார்கள். அவளது சுயமரியாதை உடைந்து நொறுங்கியதோ எனப் பதறிப்போனது அநாதையுலகம்...

   அவள் புன்னகையுடன் பதில் சொன்னாள்.

ஆமாம் ஆத்தா! நாங்க பிச்சைதான் எடுக்கறோம்!

அன்னை தெரசா எடுத்தது பிச்சைன்னா

நாங்க எடுக்குறதும் பிச்சைதான்...

அந்த வெள்ளாடைக் கிழவி அனாதை குழந்தைகளுக்காகப் பிச்சை எடுத்தாள்!

நாங்க இந்த அநாதையுலகத்துக்காகப் பிச்சை எடுக்கறோம்!

அவள் பிச்சை எடுத்தப்ப எச்சிய துப்பினாங்க!

துடைத்துக்கொண்டு பொறுமையாகப் பிச்சை கேட்டாள்...

எச்சி எனக்குப் போதும், இந்த அநாதைக் குழந்தைகளுக்கு எதாவது கொடுங்கன்னு கேட்டாள், அந்தப் பெரிய மனுசி!

நாங்களும் இந்த அநாதை உலகிற்காக

உங்க எச்சிகளையும் ஏச்சுகளையும்

துடைத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

   பதிலைச் சொன்னவள் முகம் திருப்பி நடந்தாள். முகம் சுளித்த கூட்டம் முகம் மலர்ந்தது. புன்னகைப் பூக்கக் குழுவினரை மனதார அங்கீகரித்தனர். சிலர் அந்த மாணவர்களை அழைத்து உண்டியலில் பணம் இட்டனர். அவர்களும் துண்டறிக்கையைக் கொடுத்துவிட்டு வீராப்பாக நடந்தார்கள். அடுத்தப் பேருந்து காத்திருந்தது. அவர்கள் ஏறினார்கள். அவள் பேசினாள். துண்டறிக்கை பரவியது. உண்டியல் குலுங்கியது.



சில்லரைகளும் ரூபாய் நோட்டுகளும் சத்தமிட்டன...

அந்தச் சத்தம் உயிரோட்டமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது!

அன்னை தெரசாவின் சிரிப்பொலி போல...

அநாதையுலகமும் அன்னை தெரசாவும் சிரித்துப் பேசி மகிழ்வதைப்போல...

உண்டியல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது!

   அந்த வெள்ளாடைக் கிழவியின் பிச்சையைச் சமூகவிஞ்ஞான செயல்வீரர்கள் உச்சத்தில் கொண்டு வாழ்கிறார்கள். 


வெளிவந்த விபரம்


புதிய கோடாங்கி, மே 2015, (பக் 37 - 39)

No comments:

அதிகம் படித்தவை