எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, July 28, 2017

காதல் பத்துமா?

காதல் பத்துமா?

புதியவன்
(சமூக விஞ்ஞானத்தில் பங்கேற்கின்ற காதலர்களுக்கும் அவளுக்கும் சமர்ப்பணம்)

கண் கூசும் வெளிச்சத்தில் பிடிபட்ட முயல்போல  துடித்துச் சாகிறது மனசு. நான் அவளிடம் அப்படி நடந்திருக்கவே கூடாது. என் செல்லக் காதலியிடம் இப்படியா செய்வது? என்னைப் பற்றிய அவள் எண்ணம் என்னவாகத் திரிந்ததோஎன் உணர்வுகள் அவளிடம் கரைபட்டுப் போனதோ!
கையைப் பற்றிக் கொண்ட தருணம்.
விரலை முத்தமிட்டத் தருணம்.
பிரிந்து எட்டி நின்ற தருணம்.
என்னவெல்லாம் நினைத்திருப்பாள்!
குற்ற உணர்வு இரவெல்லாம் நிரம்பி நிரம்பி வலிந்தது. எதைப்பற்றியும் மனமின்றி காதல் கனத்து வலித்தது. எப்படி ஆனது என் புத்தி இப்படி. சலனப் புத்தியால் சரிந்துவிட்டேனோ? இணையர் உரிமையை உறுதிபடுத்த முயன்றேனோ!
மதிய நேரம். உணவு நேரத்தில் எதிர்பாராமல் சந்தித்தோம். பழக்கமான உற்சாகம். கைபற்றி நட்பானோம். அவளும் நானும் பக்கத்தில் அமர்ந்திருந்தோம். பக்கத்தில் என்றால் பத்தாம் பொருத்த இடைவெளி. அதாவது ஒன்றுக்கும் முட்டைக்கும் இடைப்பட்ட தூரந்தான். நெடுமாதம் கழித்து இப்படி ஓர் அமர்வு. எங்கள் தடைப்பட்ட கதைகளோடு உணவையும் பகிர்ந்துகொண்டோம். நாங்கள் புதைத்திருந்த காதல் கனல் புகையும்படி ஆனது. அவளால் கிளறப்பட்ட திருமணக்கதை புகைக்கும்படி செய்தது.
எனக்கு மனைவியாக வந்தவள் பற்றி அறிவதில் அவளுக்கு அப்படி ஓர் ஆர்வம். கேள்விக்கு மேல் கேள்வி. விளக்கத்திற்கு மேல் விளக்கம். வெளிப்படையாகப் பற்றாத எங்கள் காதல் கனல் விளக்க விளக்கப் புகைந்தது.
என் திருமண வாழ்வின் பொருத்தமின்மைகளை வேதனையுடன் விவரித்தேன். வேதனையான வாழ்க்கை என் விவேகப் பண்பை மறைத்தது. அவளிடம் மீண்டும் நினைவுபடுத்தினேன். என் உணர்வுகளுக்குப் பொருத்தமானவள் நீ. நாம் இணைசேரும் உரிமையை விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்காதல்லவா!
அவள் என் மனைவிக்காக வாதாட முயற்சித்தாள். தண்ணிக்கு வாழ்க்கப்பட்டா உப்பு கரையாம இருக்குமா. சீக்கிமாக மாறிடுவாங்க. அறிவும், அழகும், அக்கறையும் உங்களுக்கு இணையாக வந்துடும்னு வார்த்தைக்காகச் சொல்லி வைத்தாள். சொன்னதோடு முடிக்காமல் பொருத்தமற்ற மனநிலையைத் துல்லியமாக விசாரித்தாள்.
எங்கள் பொருத்தமின்மைக்கு உடல் அழகா காரணம்! நிச்சயம் இல்லை. அவளுக்கு விளக்க முயன்றேன். அழகால் வசீகரிக்கின்ற மனிதரிடம் வெறுக்கத்தக்க பண்புகள் நிறைந்திருந்தால் என்னவாகும்? இவரை விட அசிங்கமானவர் உலகில் உண்டா என்று எண்ணத் தோன்றும். அசிங்கமான மனிதரிடம் விரும்பத்தக்க பண்புகள் நிறைந்திருந்தால் என்னவாகும்? விரும்பத்தக்க பண்புகள் அவரை ரசிக்கும்படி மாற்றும். உலகின் ஒப்பற்ற அழகராக கருதும் நிலை தோன்றும். ஏனெனில் அழகு என்பது மனித மனதின் எண்ணங்களாக அமைவதுதான்.
இணையராக வாழ்பவர்கள் ஒருவரையொருவர் அழகாக உணரும்படி ஒத்திசைய வேண்டும். இணையர்களின் எல்லா முரண்பாடுகளும் இத்தகைய ஒத்திசைவிற்குள் பக்குவப்பட வேண்டும். இருவரும் முயன்றால் வாழ்க்கை ருசிக்கும். ஒருவர் மறுத்தாலும் வாழ்க்கை கசக்கும், உணர்வு சலிக்கும், உறவு முறியும். உடல் அழகின் விருப்பமானது ஆறே மாதத்தில் முடிந்துவிடும். வாழ்க்கை முழுதும் அழகு நீடிக்க ஒத்திசைவுப் பண்பே உயிர் கொடுக்கும்.
என் வார்த்தைகளை நிறுத்தி அவள் கண்களைக் கவனித்தேன். அவளது சிமிட்டும் விழிகள் என் உணர்வுகளைச் செதுக்கிக் கொண்டிருந்தன. அவள் பேரழகிற்கு அவசியப்படாத கண்ணின் மை என் வார்த்தைகளுக்கு வண்ணமிட்டுக் கொண்டிருந்தது.
மௌனத்தின் இடைவெளியில் என் விளக்கத்தை அவள் வியந்து சொன்னாள். சரியாகச் சொல்றீங்க. அழகு என்பது நிரந்தரம் இல்லாதது. முப்பது வயசுக்கு மேல் அழகுன்னு சொல்வதற்கு அன்பு, கருணை தவிர வேறு இருக்க முடியாது. ஒருத்தருக்கொருத்தர் சரியா புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை அழகாயிடும்னு சொன்னவள் பாவப்படுவதைப்போல உதட்டை சாய்வாக அசைத்தாள். உதிர்க்கப்படாத வார்த்தைகள் சரிந்து சரிந்து ஆடின. என்னை மேலும் விளக்கும்படி தூண்டின.
புரிந்துகொள்வதால் வாழ முடியும். ஆனால் வாழ்க்கை அழகாகிவிடாது. வாழ்க்கை என்பது வெறும் அறிவு மட்டுமல்ல. அது செயல்களின் ஆக்கம்.
வெறும் புரிதல் என்பது திருமண வாழ்விற்கு ஒத்துப்போகலாம். ஆனால் இணையர் வாழ்விற்கு சரிப்படாது. திருமணம் என்பது அடிப்படையில் இணையர் வாழ்விற்கு எதிரானது. அது ஆண் பெண் சரிசமத்தை மறுக்கிறது. பெண்ணை ஆணுக்குச் சொத்தாக்குகிறது. ஆணை பெண்ணுக்கு எஜமானாக்குகிறது. ஆண் சமூகத்தின் சொத்தாதிக்க நலன்களுக்காக அடங்கி வாழச் சொல்கிறது. சொத்ததிகாரமே திருமணத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது. பெண்ணின் சமூக ஆற்றலுக்குரிய தனித்துவங்களை கணவரின் குடும்ப மேன்மைக்காக தியாகம் செய்யுமாறு நிர்பந்திக்கிறது. திருமண வாழ்வில் எல்லா செயல்களும் ஆண்களின் முடிவையேச் சார்ந்திருக்கிறது. பெண் என்பவள் ஆணின் ஊன்றுகோள் மட்டுமே.
இந்தத் திருமண வாழ்வில் புரிதல் என்பது சமாளித்துக் கொள்வதற்காகப் பயன்படுகிறது. பாரம்பரிய குடும்பக் கடமைகளை முடிப்பதற்காக, உற்றார் உறவினர்களின் மரியாதைக்காக, குழந்தைகளின் நலமான வளர்ச்சிக்காக இன்னும் எதுவெதுக்காகவோ. விருப்பம் இல்லாவிட்டாலும், இன்பம் இல்லாவிட்டாலும் சலிப்புத்தனமாகவாவது வாழ்ந்து முடிக்க புரிதல் அவசியப்படுகிறது.
திருமண பாரம்பரியத்திற்கு எதிரானது இணையர் வாழ்க்கை. பாரபட்சமற்ற நட்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
நான் உன்னிடம் இணையராக வாழ விருப்பம் தெரிவித்தேன். நீயும் விருப்பம் சொன்னாய். நட்பு நமக்கு அடித்தளமாய் இருந்தது. இருவரும் இணையராக வாழ ஆசைப்பட்டோம். நம் ஆசை நிறைவேறியதாகக் கற்பனை செய்து பார். நம் இணையர் வாழ்வு எப்படி இருக்குமென எண்ண முடிகிறதா! இருவரின் தனித்துவங்களும் தடைபடாமல் சுதந்திரமாக முன்னேறும். தனித்துவங்கள் மீதான நம் ஒத்துழைப்பும் ஊக்கமும் சமூக ஆற்றலாக மேன்மை பெறும். சமூகவிஞ்ஞான அரவணைப்பில் நம் குடும்பம் சிறக்கும். நம் குழந்தைகள் மக்களின் மேன்மைக்கு உதாரணமாக விளங்குவர்.
நமக்கு காதல் வந்த கதையை  எண்ணிப்பார். இருவரும் அழகின் வயப்பட்டு காதலரானோம் என்பது முதன்மையல்ல. உன் அழகின் முன்னால் என் அழகு வியக்கும்படி இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அழகு ஓர் அங்கமாக இருந்தது. எனினும் அழகு மட்டுமே நமக்கு காதலாக மாறிவிடவில்லை. ஆர்வமும் அக்கறையும்தான் காதலாக மலர்ந்தது.
நாம் ஒருவர் மீது ஒருவர் எப்படியெல்லாம் ஆர்வம் காட்டுகிறோம்.
நீ எப்போதும் என் எழுத்துக்களை வியக்கிறாய். என் கவிதைகளை ரசிக்கிறாய். முயற்சிகளைப் பாராட்டுகிறாய். என் சிந்தனைகளோடு உரையாடுகிறாய். தவறுகளைக் களைந்தெடுக்கிறாய். சமூகவிஞ்ஞான லட்சியங்களில் என்னை உற்சாகப்படுத்துகிறாய். என் செயல்களை மேன்மைப்படுத்த ஆர்வம் காட்டுகிறாய். இத்தனைக்கும் இடையில்தான் காதலிக்கிறாய்.
உன் நேசத்திற்கு ஈடானது நான் கொண்ட நேசம். உன் தலைசிறந்த பண்புகளை எனக்கு முன்மாதிரியாக ஒப்புக்கொண்டேன். நான் உன்னை பேச்சாளர் என்றே வியக்கின்றேன். உன் பேச்சிற்கு நான் ஒப்பற்ற ரசிகன். உன் பேரழகிற்கு நிகரான பேரறிவை சிலாகித்துப் பேசுகின்றேன். சமூகத்தேவைகளை நோக்கி உன் முயற்சிகளைப் பக்குவப்படுத்த முயல்கிறேன். நீ சமூகவிஞ்ஞானப் பேச்சாளராக மக்களிடம் பெருமையடைவாய் என்று உறுதியாக நம்புகிறேன். உன் மேன்மையானப் பண்புகளையும் வியக்கத்தக்க அறிவாற்றலையும் எப்போதும் பாராட்டுகிறேன். உன் செயல்களில் தவறறிந்தால் சுட்டிக்காட்டுகிறேன். பிரச்சனைகளை விவாதிக்கிறேன். நான் புதியவன் என்றால் நீ புதியவள் என்பதாக உற்சாகப்படுகிறேன். எல்லாவற்றோடும் சேர்த்து கூடுதலாகக் காதலிக்கிறேன்.
நான் உணர்ந்தவரை நமக்குள் சண்டைகளே தோன்றியதில்லை. சண்டைகளுக்கான வாய்ப்புகளை நாம் எதிர்கொண்ட விதங்கள் நம் உணர்வுகளின் பக்குவத்தைப் பறைசாற்றுகின்றன. சவால்கள் நிறைந்த வாழ்வில் நமது இணையர் வாழ்க்கை மகிழ்வையும் மேன்மையையும் நிச்சயிக்கும் என்பதை உறுதியாக உணர்கிறோம். நமது காதல் இத்தகைய பிரமாண்டமானத் தனித்துவங்களால் நிறைந்திருப்பதால் சமூகம், குடும்பம், குழந்தைகள், கடமைகள், வருமானம், செலவுகள், அனுபவங்கள், பொறுப்புக்கள் என வாழ்க்கை மகிழ்ச்சியாக சுழன்றிருக்கும். சமூக அக்கறையுடைய முன்மாதிரியானக் குடும்பமாக மேன்மை பெற்றிருப்போம். இணையர்களின் வாழ்க்கை என்பது இப்படியாகத்தான் இருக்க முடியும்.
சரிதான் என்பதை ஒப்புக்கொள்வதுபோல உதட்டிற்குள் ஒரு “ச்“ கொட்டினாள். இச்சுக்கு இடையில் அவளது பிரகாசமான பற்களின் வழக்கமான புன்னகை மின்னியது. மேலும் கீழுமாக தலையை சிலமுறை ஆட்டிக்கொண்டிருந்தாள். அவளது இந்த அசைவுகளுக்கு அர்த்தம் எனக்கு மட்டுமே புரியும். அதாவது ஏற்கனவே என்னிடம் பேசிப் புரிந்த உண்மைகளை மீண்டும் ஒரு சூழலில் உணர்ந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றாள்.
நான் அவளிடம் மேலும் விளக்கினேன். இணையர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் இருவரின் விருப்பத்தை ஒத்திருக்கும். இருவரின் முடிவுகள் ஒன்றிணைந்து எல்லா செயலையும் வழிநடத்தும். இணைந்து முடிவெடுத்து வாழ்தல் வாழ்வின் பெரும்பகுதியாக இருக்க வேண்டும். ஒத்துவராத முடிவுகளில் விட்டுக்கொடுத்து வாழ்தல் சிறுபகுதியாக இருக்கலாம். ஒத்தே வராது விட்டுவிடு, இதில் நீ வேறு நான் வேறு என்பது துளியளவு இருக்கலாம். இந்நிலை தலைகீழாக இருந்தால் ஏமாற்றம், வெறுப்பு, வஞ்சம், குரூரம் போன்றவையே எஞ்சும். தப்பித்துப் பிரிவதோ அல்லது தனித்துவங்களை இழந்து நடை பிணமாக முடங்குவதோ நிகழும். ஒருவருக்கொருவர் விட்டு ஓடும்படி ஆகிவிடும் வாழ்க்கை! ஓடவிடாதபடி சுற்றம் சிறைபடுத்தும். எனினும், ஓடினால் மட்டுந்தான் வாழ்க்கை. எங்களில் யாரோ ஓடிக்கொண்டிருக்கிறோம். அவள் திருமண உறவை முறித்துக்கொள்ளும் சூழ்நிலை நெருங்கி வருவதைப்போல உணர்கிறேன்.
அவள் குறுக்கிட்டாள். அப்படி சொல்லாதீர்கள். இருவரின் இந்நிலைக்கு நீங்களும்தானே காரணம். இப்போது ஒத்துவராது என்கிறீர்கள். பிறகு எதற்காக ஏற்றுக்கொண்டீர்கள். இப்போது விலகி வந்தால் அவள் பாவம் இல்லையா! கோபத்தில் வார்த்தைகளை வீசுவதுபோல காட்டிக்கொண்டாள். நடிப்புக் கலையில் என்னளவிற்கு பயிற்சி இல்லாதவள். பாவம்! கோபம் முயற்சியளவிலேயே முடிந்துபோனது.
நான் அவளுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கினேன். கோபத்துடன் பேச முயன்றதாக நினைவு. ஆனால் உறுதி இல்லை. உண்மையில் கெஞ்சுவது போலத்தான் பேசியிருக்கிறேன். என்னை கோபிக்காதேயடி செல்லமே! என்பது போல. கெஞ்சுதல் இருந்தால் கோபத்திற்கு ஏது மதிப்பு. எனக்கு அவளளவிற்குகூட நடிக்கத் தெரியவில்லை.
நான் அவள் கண்களைப் பாரத்துப் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு மனைவியானவளைச் சமாளிக்க முடியாதபோதெல்லாம் உன் மீதுதான் கோபம் வருகிறது. என் நிலைக்கு நீயும்தான் காரணம். உன் குடும்பத்திற்காக நம் விருப்பத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நிலைக்கு ஆளாகாமல் இருந்திருப்பேனல்லவா!
அவள் பாவமாகப் பார்த்தாள். அந்தப் பார்வை எனக்கு பரிதாபமாகப் பட்டது. என்னால் என்ன முடியும் என்று நொந்துகொள்வது போல பாவித்தாள். என் கண்களை விட்டு அவள் பார்வையை எங்கோ அகற்றினாள். சில நொடிகள்கூட அவள் விழிகளால் விலக முடியவில்லை. மீண்டும் சேர்ந்தன என் கண்களை. நான் பேசிக்கொண்டிருந்தேன்.
பெண் பார்க்கும் சடங்கிற்கு முன்பாகவே சம்மதம் தெரிவித்தவள் அவள்தான். என் குடும்பத்தினர் சதி செய்தால் எதார்த்தம். இவள் ஏன் சதி செய்கிறாள்? எனக்குப் புரியவில்லை. எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்ற அவளது பட்டியலில் ஒரு இடத்திலும் நான் பொருந்தவில்லை. ஆனாலும் என்னைப் பிடித்திருப்பதாக அறிவித்துவிட்டாள். இத்தனைக்கும் என் காதல் பற்றிய உண்மைகளையும் சொல்லியிருக்கிறேன்.
பெண் பார்த்தச் சடங்கில் வெளிப்படையாகப் பேசினேன். நான் சமூகவிஞ்ஞான வாழ்க்கையில் இருப்பவன் என்றேன். அவள் கழுத்தை கேள்விக்குறிபோல வளைத்துக் கேட்டாள்.
“அப்படின்னா?”
அவளுக்கு விளக்கத் தொடங்கினேன். என்ன ஆச்சரியம். எனது சமூகவிஞ்ஞான அனுபவத்தில் நிகழாத சம்பவம் முதன்முதலாக நிகழ்ந்தது. ஆம்! ஒரே வாக்கியத்தில் விடையளித்தேன். அதாவது சமூக அக்கறையுடைய குடும்பமாக வாழ்வது. அந்தப் பெண் சிரித்தாள். நானும் சிரித்துக்கொண்டே சொன்னேன். இந்த லட்சியத்திற்கு ஏற்றபடி உங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ள சம்மதமென்றால் இணையராகலாம் என்று கூறினேன். குடும்ப நிர்பந்தங்களுக்கு இடையில் இவ்வளவு பேசியதே எனக்குப் பெரிதாகப் பட்டது. அவளும் சம்மதம் தெரிவித்துவிட்டாள்.
அந்தப் பெண்ணின் சம்மதத்தைப் பற்றிக்கொண்டுதான் வாழ்வைத் தொடர்ந்தேன். ஆனால் திருமணம் முடிந்து இன்று வரை வாயிலேயே வடை சுடுபவள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். போலித்தனமான கற்பனைகள் நிறைந்த சினிமாத்தனமான வாழ்க்கையை லட்சியமாக கொண்டிருக்கிறாள். எதார்த்தமான வாழ்க்கை நிலைமைகளைக் கற்றுக்கொள்ள தயார் இல்லை. சக்திக்கேற்ற வாழ்க்கையில் நிம்மதியடைகின்ற மேன்மையானப் பண்பும் இல்லை. எந்த விசயத்திலும் இணைந்து பேசி முடிவெடுத்து செயல்படுவதில் ஒத்துழைப்பதில்லை.
தவறுகளைத் திருத்திக்கொள்ள ஒப்புக்கொள்கிறார். ஆனால் முயல்வதில்லை. ஒப்புக்கொண்ட தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார். பழையபடியே அ.. ஆ.. விலிருந்து பேச வேண்டியதாகிறது. அழுதும் அடம்பிடித்தும் சாதிப்பதே அவளுக்கு வழக்கமாக இருக்கின்றது. கட்டாயப்படுத்துவதும் நிர்பந்தப்படுத்துவதும் உயர்ந்த பண்பாக இருக்கின்றது. மொத்தத்தில் எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதி பகைமுரண்களால் நிரம்பியிருக்கின்றன.
அவளது சுயநலத்தின் அடிப்படையில் வசதிக்கேற்றபடி முடிவெடுக்கிறாள். மாற்றி மாற்றிப் பேசுகிறாள். சின்ன சின்ன விசயங்களைப் பலூனளவிற்கு ஊதி பெரிதாக வெடிக்கிறாள். ஒன்றை நூறாக்கி கற்பனையில் திரித்து பேசுகிறாள். நான் பேசுவதை மனம் கொடுத்து சிறிதும் கேட்பதில்லை. ஆனால், என்னை மட்டும் கேட்கச் சொல்லி வளவளவென்று பேசுகிறாள். எல்லா பிரச்சனைகளையும் அவளே ஆரம்பிக்கிறாள். நிறைவு விழாவை என் தலையில் சுமத்துகிறாள். அப்பப்பா! அவளோடு வாழ்வது பெரும்பாடு. என் எல்லா தனித்துவங்களையும் சிறைபடுத்திவிட்டாள். குறுகிய காலத்தில் எவ்வளவு சண்டைகள் போட்டாயிற்று. இன்னும் முடிந்தபாடில்லை. நாங்கள் சண்டைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம்.
என் மனைவியைப் பற்றிய கதைகளுக்கு இடையில் அவள் குறுக்கிட்டாள். இறக்கமான குரலில் கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி, மற்ற விரல்களைச் சுருட்டிக்கொண்டு ஆட்டியபடி கேட்டாள். “அய்யய்யோ! ஏன் இப்படி?”. அவள் வார்த்தைகள் முடிவதற்குள் புருவத்தின் கீழுள்ள கண்களால் சரியாகச் சொன்னாள். “நீங்கள் சண்டை வளர்க்கின்ற ஆளே கிடையாதே!”.
அவள் பார்வைக்கு பதில் சொல்லத் தொடங்கினேன். பெண்களை அடிப்பது அநாகரிகமான செயல். நான் அடிக்க முயன்றால் சமூகவிஞ்ஞானிகளின் கண்டனத்திற்கு ஆளாகி விடுவேன். எனவே சண்டையில் தற்காத்துக்கொள்வதோடு சரி. அடிப்பதெல்லாம் அவள் வசம். எனது சமூகவிஞ்ஞானப் பண்பை அவள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். எங்களது இந்த சூழ்நிலை எத்தனைக் காலம் நீடிக்க முடியும். விட்டுக்கொடுப்பது எல்லை மீறினால் விட்டுப்போவதே வழியாகும். இது என் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட ஓர் உண்மை. அவள் போக்கு என்னைப் பிரிவதில்தான் முடியப்போகிறது.
நான் வார்த்தைகளை நிறுத்தி மௌனம் காத்தேன். அவளுக்கு வாயாட வார்த்தை வரவில்லை. வருத்தத்துடன் வாசலைக் கவனித்துக் கொண்டிருந்தாள். பிரச்சனைகளை மறந்து நட்பாட முயற்சித்தாள். ஒரு உதவிக்கு அழைத்தாள். அவள் தயாரித்திருந்த கட்டுரையை தட்டச்சு செய்யச் சொன்னாள். நானும் கட்டுரையில் ஆர்வம் காட்டத் தொடங்கினேன். மனது ஒத்துழைக்கவில்லை. மனைவிக்கும் இணைளுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தேன்.
அவள் இதழ்கள் எழுத்துக்களை உச்சரித்தன. என் விரல்கள் கணினியைத் தட்டித்தடுமாறி பதிந்தன. என் எண்ணங்கள் மட்டும் அலைந்துகொண்டிருந்தன. அவளிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுவிடும்படி தூண்டின. திடீரென்று தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு அழைத்தேன். அவள் விழிகளும் இதழ்களும் என்னைத் தழுவின. நான் அவள் கண்களைப் பார்த்துக் கேட்டேன். உன் வீட்டில் நமக்கு நெருக்கடி ஏற்படாமல் இருந்திருந்தால், எனக்கும் திருமணம் ஆகாமல் இருந்திருந்தால், நாம் இணையராக வாழ வாய்ப்பிருக்கும்தானே.
அவள் மறுவார்த்தை உதிர்த்தாள். “நிச்சயமாக! ஆனால் என் வீட்டை சமாளிப்பதற்குத்தான் இன்றும் விடை தெரியவில்லை.”
சற்றும் யோசிக்காமல் மறுமொழி கேட்டேன். என் மனைவி விலகிவிட்டாள் ஏற்றுக்கொள்வாயா என்னை? அதற்கும் மறுவார்த்தை உதிர்த்தாள். “நிச்சயமாக! எனக்குத் தடையில்லை. ஆனால் நீங்கள்தான் வீட்டிற்கு வந்து பேசனும்.
அவள் வார்த்தைகள் என்னுள்ளே ஏதேதோ செய்தன. எனக்குள் ஒரு பெருவெடிப்பு வண்ணமயமாகத் தொடங்கிற்று. சொல்ல முயாத மகிழ்ச்சி பேரெழுச்சியாய் பொங்கிற்று. மொத்தத்தில் கிறுக்கு பிடித்துக் கொண்டிருந்தது. அதோடு விட்டிருக்கலாம். ஆனால், அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அய்யோ! நான் செய்யக் கூடாத ஒரு தவறை செய்துவிட்டேன். அவள் அனுமதியின்றி கரங்களைப் பற்றி முத்தமிட்டுவிட்டேன். என் உதட்டில் அவள் விரல்களின் வெப்பம் இன்னும் கனன்றுகொண்டே இருக்கின்றது.
அந்த நொடிகூட முடியவில்லை. என்னை விட்டு ஒதுங்கி நின்றாள். வெட்கத்தாள் படபடத்தாள். எனக்கு இதயம் உருண்டு உருண்டு துடித்தது. உதவியை முடிக்காமலேயே கிளம்பி ஓடினேன். கிளம்பும் முன்பு உறுதி சொன்னேன். மாலை நேரம் விரைவில் வந்து கட்டுரையை முடித்துத் தருகிறேன். அவள் கண்ணசைவில் ஒப்புக்கொண்டாள்.
அவளைப் பிரிந்து சென்ற பிறகும்கூட உடலில் பதட்டம் தொடர்ந்தது. எண்ணமெல்லாம் அவள் நினைவுகளாக சுழன்று சுழன்று அடித்தன. உதவியைக்கூட முடிக்காமல் ஓடி வந்ததற்காக வெட்கப்பட்டேன். அவளைப் புகழ்ந்து எழுதிய காதல் கவிதைகளை மீண்டும் படிக்கத் தொடங்கினேன். அவள் விரும்பி ரசித்த வரிகள் எல்லாம் கவிதை எழுதும்படி பணித்தன. எனக்குள் ஓர் ஆசை பிறந்தது. மீண்டும் அவளிடம் ஒரு காதல் கவிதையுடன் செல்ல விரும்பினேன்.

அடியே செல்லக் காதலி
உன் அழகும் அறிவும்
உன்னிடம்
மாறி மாறி போட்டியிடுகின்றன
இருவரில் யார் பெரிதென்று…
அவைகளிடம் சொல்லடி

என் மீதான
அன்பனின் காதல்
உங்கள் இருவரை விடவும்
பெரிதென்று!

கவிதையுடன் விரைந்து சென்றேன். அவள் இருக்கை வெற்றிடமாக இருந்தது. அலைபேசியில் அழைத்தேன். சந்திக்க நேரமில்லை என்று மறுத்துவிட்டாள். நான் குற்ற உணர்வில் குறுகிப் போனேன். மன்னிக்கவும் என்ற குறிப்புடன் அவள் இருக்கையில் வைத்துவிட்டு விடைபெற்றேன்.
அவளை முகம் பார்த்துப் பேச அச்சமாக இருந்தது. முகம் பாராமலேயே விலகி விலகி ஓடினேன். நாட்கள் கடந்தன. எங்கள் அறிவார்ந்த காதல் உரைகள் நினைவில் சுழன்றபடி இருந்தன. விவசாயிகளின் வாழ்வு தற்கொலையில் முடிகின்ற அவலம். தொழிலாளர்கள் மீதான நிறுவனங்களின் ஏய்ப்புக்கள். அன்றாடம் உயரும் பொருட்களின் விலைவாசி. நாடெங்கும் அரங்கேறும் பாலுறவு வன்முறைகள். சாதி மத வெறியர்களின் பயங்கரங்கள். காதலர்கள் மீதான ஆணவப் படுகொலைகள். கல்வி வியாபாரத்தின் கொடுமைகள். பட்டப் படிப்பு முடித்திருந்தும் வேலையில்லாத நிலைமைகள். எல்லாவற்றுக்கும் காரணமான அரச பயங்கரவாதம். சாராயக் கடைகளுக்கு எதிராக பெண்களின் வெற்றிகள். இலக்கியம் வரலாறு குறித்த அறிவார்ந்த சிந்தனைகள். சமூக விடுதலைக்கான லட்சியங்கள். சாதிக்கும் கடமையில் சமூகவிஞ்ஞானக் களங்கள். இன்னும் இன்னும் எதார்த்தங்கள் என்னன்னவோ…
நாங்கள் பேசிக் காதலித்த தருணங்கள் ஏராளம். அவளுக்கு பெண்களுக்கான சமூகவிஞ்ஞானக் களத்தை அறிமுகம் செய்து வைக்க நினைத்திருந்தேன். அதற்கான நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். அதற்குள் இப்படியாகும்படி செய்தேனே! என் மீதான கோபத்தை சொல்லி மாள முடியாது.
எதிர்பாராமல் இணையும்படி மீண்டும் ஒரு சந்தர்ப்பம். பேருந்து காத்திருப்பில் அவளும் நின்றுகொண்டிருந்தாள். எனக்கு ஓடிவிடலாமா என்ற எண்ணம். எண்ணம் முடிவதற்குள் என்னைக் கவனித்துக்கொண்டாள். அவள் கண்களில் சிரிப்பு. உண்மையா என்பதை நிதானித்தேன். கற்பனையல்ல. அவள் பற்களால் சிரித்து வரவேற்பதுபோல் பாவித்தாள். புன்னகையுடன் அவளருகில் குழந்தைபோல சென்றேன். தள்ளி தள்ளி வைத்தாலும் தத்தி வரும்  குழந்தைபோல. என் மனதின் எல்லாக் காயங்களுக்கும் புன்னகையால் மருந்திட்டாள்.
சற்று நிதானித்து வாயெடுத்துப் பேசினாள். அவள் பேச்சு நேரடியாகத் தொடங்கியது. உங்கள் மனைவியைவிட்டு நீங்கள் விலகக் கூடாது. அவராக விலகினால் நடப்பது நடக்கட்டும். நானும் உங்களுடன் இணைவதற்கான சூழலில் இருப்பேன் என்பது உறுதியல்ல. சூழல் இருந்தால் புதியவள் புதியவனுடன்தான் வாழ்வாள். அதற்காக அப்படி ஒரு நாளைக் கருதிக்கொண்டிருக்க அவசியமில்லை. நம் நட்பும் காதலும் வலிமையானது. உங்கள் மனதுதான் பலவீனம் செய்கிறது. உங்கள் வேதனைகளுக்கு மருந்து உங்களிடம்தானே இருக்கிறது. ஏன் நொந்து கொள்கிறீர்கள் என்று வினவினாள்.
நான் பதில் கூறாமல் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்து கொண்டிருந்தேன். அவள் வார்த்தைகள் என்னை இயல்பாக்கிக்கொண்டிருந்தன. என்னை கருணையோடு அணைத்த புன்னகையை என்னவென்று வியப்பது. எனக்கு இணையர் வாழ்வின் மீது தன்னம்பிக்கை உருவெடுத்தது. ஆனாலும் பதில் கூறாமல் நின்றிருந்தேன். அவள் காத்திருந்தாள். நான் புரியாமல் முழித்தேன். என்னால் என்ன முடியுமென்று மீண்டும் நொந்துகொண்டேன்.
அந்தப் பேரழகி என் வார்த்தைகளை என்னிடமே உச்சரித்தாள்.

எதிர்பார்ப்பு அல்ல வாழ்க்கை
எதிர்கொள்தலே வாழ்க்கை
வெற்றி மீது பிரதான நம்பிக்கையிருந்தால்
வாழ்க்கை என்பது
எதிர்வெல்தல் எனலாம்!
எதிர்வெல்தல் பற்றி பேசிய புதியவனா நொந்து கொள்வது. அவள் பேரறிவு படைத்தவள். என் வார்த்தைகளுக்கு இடையில் என்னை சிக்க வைத்தாள்.
            என் கரங்களைப் பற்றிக் கொண்டாள். அவள் கண்கள் என்னை நிமிர்த்தின. அவள் புன்னகையுடன் விளக்கினாள். உங்கள் வார்த்தைகள் வெறும் வார்த்தையல்ல. அவை உணரப்பட வேண்டிய வாழ்க்கை. உணரும் பொறுப்பு எங்களுக்கு மட்டுமா? உங்களுக்கும் சேர்த்துதான். முதலில் எல்லாவற்றையும் எதிர்கொள்ளுங்கள் என்று புன்னகைத்தாள்.
            என் கரங்களை அவளது விரல்கள் அணைத்திருந்தன. மனதளவில் நாம் இணையர்கள்தான் என்பதை அழுத்திச் சொல்வதுபோலத் தோன்றியது. பேருந்து வந்தது. மீண்டும் பத்தாம் பொருத்த இடைவெளிதான். அருகருகே அமர்ந்தோம். எங்கள் முன்னால் ஒரு பெண். என் மனைவியைப் போல இருந்தார். என்னைப் போல ஒருவர் எங்கள் பின்னே அமர்ந்தார்.
            பேருந்து புறப்படத் தொடங்கியது. நாங்கள் வேடிக்கை பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தோம். வேடிக்கையென்றால் சன்னல் வழியல்ல, முன்னும் பின்னுமாக. நாங்கள் அந்த இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தோம். அந்த இருவரின் பேச்சும் எங்களை கவனிக்கும்படி நிர்பந்தித்தது. இருவர் என்றால் அந்த இருவர் அல்ல. இருவரின் எதிர்முனையில் வேறுயாரோ. வேறுயாரோ என்றால் வேறுயாரோ அல்ல. அவரவருடைய வாழ்க்கைத்துணை. அவர்களது அலைபேசி பேச்சு வெளிப்படையாகவே உணர்த்தியது.
            உண்மையில் அவர்கள் பேசிக்கொள்வதாகத் தெரியவில்லை. சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள். எதிர்முனையில் பேசுபவரின் சுயமரியாதையைக் கிழித்துத் தொங்கப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களது வார்த்தைகள் எதிர்முனையாளரின் ரத்த உறவுகளையும் வாழ்க்கைத் தேவைகளையும் நடைபிணமாக்குவதற்கு முயற்சித்தன. எனக்கு நினைவெல்லாம் மனைவியைப் பற்றிய வருத்தங்களாக உருவெடுத்தன. மனதளவில் நொந்து கொண்டிருந்தேன்.
            அவள் பின்னும் முன்னுமாகத் திரும்பி திரும்பிப் பார்த்தாள். என்னையும் பார்த்துக்கொண்டாள். கையைப் பற்றிக்கொண்டு புன்னகைத்தாள். மீண்டும் ஆரம்பித்துவிட்டீர்களா என்பதைப் போல அந்தப் புன்னகை கெஞ்சியது.
            நான் அவளுக்கு இறுதியாகச் சொல்ல முயன்றேன். ஒரு ஆணும் பெண்ணும் இணை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
            அவள் “ஆம்!” என்பதுபோலத் தலையசைத்தாள். நான் விட்டதிலிருந்து தொடர்ந்தேன்.  அவ்வளவுக்குமேல் பலமடங்கு கஷ்டம் எதுவென்று சொல்லட்டுமா?
            அவள் ஆர்வமிகுதியுடன் தலையசைத்தாள்.
            நான் சொன்னேன். ‘இணையின்றி வாழ்பவரைவிட பொருத்தமில்லாத நபருடன் இணையராக வாழ்வது பல மடங்கு கஷ்டம்.
          அவள் மௌனமானாள். இறங்கும் இடம் வந்தது. பேருந்தும் நின்றது. கைகளைப் பிரித்துக்கொண்டு விடைபெற்றாள். நான் புன்னகைத்தேன். பேருந்து நிறுத்தம் எங்களைப் பிரியும்படி நிர்பந்தித்தது. மனது பாறைபோல் கனக்கத் தொடங்கியது. பேருந்து என்னை இழுத்துக்கொண்டு சென்றது. நாங்கள் மறையும் மட்டும் கண்களால் தழுவிக்கொண்டோம். பயணம் மறைத்தது. நாங்கள் கண்கொத்திப் பறவைகள். ஒருவரையொருவர் கண்களால் பறித்துக் கொண்டு செல்கிறோம்.
நான் அவளது கண்களைப் பற்றிக் கொண்டு பேசுகிறேன். திருமண அவலங்கள் அடையாளமின்றி அழிவதற்குரிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குள் இணையேற்பு விழா எனும் சமூகவிஞ்ஞானப் பண்பாடு இயல்பானதாக நிலைக்கும். அன்று எல்லாக் குடும்பங்களும் சமூக மேன்மையின் ஆற்றல்களாகத் திகழும். அன்றைய இணையர்கள் புதியவள்களும் புதியவன்களுமாகவே திகழ்ந்துகொண்டு இருப்பார்கள். அவர்களின் மகிழ்ச்சியில் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருப்போம். எமது இணையளின் பிரிவால் கனத்துப்போன இதயத்தை வருங்காலத் தலைமுறை கரைத்துக்கொண்டு இருக்கும். அந்தக் கரைதலின் இன்பத்தை சிலாகித்து மகிழ்கிறேன்.

இந்த மகிழ்வோடு என் இதயம் துடிக்க மறந்தால் நலமாவேன்.  


வெளிவந்த விபரம்

புதிய கோடாங்கி,
ஆகஸ்டு 2017.

பக்கம் (46 – 52)

No comments:

அதிகம் படித்தவை