எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

அறிவியல் தத்துவப் பார்வையில் ஔவைக்குறள்



அறிவியல் தத்துவப் பார்வையில் ஔவைக்குறள்
புதியவன்

முன்னுரை
ஔவைக்குறள் என்ற இந்நூல் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. 1.வீட்டுப்பால், 2.திருஅருட்பால், 3.தன்பால். முதல் இரு பாலிலும் பத்து இயல்கள் அமைந்துள்ளன. மூன்றாம் பாலில் மட்டும் பதினொரு இயல்கள் அமைந்துள்ளன. இயல்கள் ஒவ்வொன்றும் பத்துக்குறட்பாக்களை கொண்டுள்ளன. மொத்தம் முப்பத்தொன்று இயல்களில் 310 குறட்பாக்களுடன் ஔவைக்குறள் அமைந்துள்ளது.இயல்கள் ஒவ்வொன்றிலும் எத்தகையக் கருத்துக்கள் எடுத்தியம்பப்படுகின்றன? எத்தகைய தத்துவ அடிப்படையில் ஔவைக் குறளின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன? அறிவியல் தத்துவ அடிப்படையில் ஔவைக்குறள் எத்தகைய சமூகமதிப்பீட்டை அடைகின்றது என்பவற்றை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

பிறப்பின் நிலை
      மனித உடல் ஆண் விந்துவிலிருந்து தோன்றுகின்றது என்ற கருத்தை இலக்காகக் கொண்டமைகிறது முதல் இயலாகிய பிறப்பின் நிலை. ஆண் விந்து என்பது பிரபஞ்ச ஆற்றல்களில் எவையெல்லாம் ஒன்றிணைந்து உருவெடுப்பதாகும் என்ற விவரிப்புகளாகவும் அமைகின்றது.
பஞ்சபூதங்களின் இணைவு. ஆசைக்கு அடித்தளமாகிய ஓசை, பரிசம், உருவம், நாற்றம் ஆகியவற்றின் விளைவு. தருமம், பொருள், ஆசை, வீடுபேறு ஆகிய நான்கும் உருப்பெற்ற உருவங்களுக்கு பயனாக அமைதல். ஐந்து நிலம், நான்கு நீர், மூன்று நெருப்பு, இரண்டு வாயு, ஆகாயம் ஒன்று ஆகிய ஐந்தும் ஒன்றிணைந்திருத்தல். மாயன், பிரமன், உருத்திரம், மகேசன், சிவமூர்த்தி ஆகிய ஐந்து மூர்த்திகளும் அருளுதல். மால், அயன், அங்கி, இரவி, மதி, உமை ஆகிய ஆறு சக்திகளின் ஆற்றல். தொக்கு, உதிரம், ஊன், மூளை, நிணம், என்பு, சுக்கிலம்  ஆகிய ஏழு தாதுகளின் இணைவு. மண், நீர், அங்கி, மதி, காற்று, இரவி, விண், எச்ச மூர்த்தி ஆகிய எட்டு மூர்த்திகளின் ஒத்திசைவு. இவையெல்லாம் ஒன்றி உருவானதுதான் உடல் ஆகும். உடலை உருவாக்குவதற்கு தேவையான மேற்கண்ட எல்லாவற்றையும் உருவாக்கிய ஆற்றல்தான் விந்து. விந்து என்பது ஆண்பால் அடையாளம் ஆகும். பிறப்பின் நிலையானது உடலில் இருந்து உலகம் வரை ஆணின் விந்துவால் பிறப்படைந்தன என்பதாக விளக்குகின்றது. (ஔவையார்.2006:1-5)
இவையெல்லாம் கூடி உடம்பாய ஒன்றின்
அவையெல்லாம் ஆனது விந்து (குறள்-10)

உடம்பின் பயன்
      உடலின் பயன் பற்றிய கருத்துக்கள் இரண்டாம் இயலில் அமைகின்றன. உடல் பிறந்ததற்கு பயன் எதுவெனில் உலக இன்பங்ளை எல்லாம் துறப்பதாகும். எல்லாவற்றையும் துறந்த தூய உடலே ஈசனின்  அருளைப் பெற முடியும். ஈசனை அறிவதற்காகவே உடல் பயன்பட வேண்டும்.
உடல் என்ற பொருள் முதன்மையாக இருந்தால் மட்டுமே உணர்வு என்ற ஆற்றல் இருக்கும். உடம்பு இல்லாவிட்டால் உணர்வு என்பது இல்லை. இறைவனை அறிவதற்கும் உணர்வதற்கும் உடலைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இறைவனை உணர்ந்தால் மட்டுமே வீடுபேற்றை அடைய முடியும். எனவே இறைவனை உணர்வதே உடம்பின் பயனாகும். (ஔவையார்.2006:5-9)
உடம்பினால் பெற்ற பயனாவது எல்லாம்
திடம்பட ஈசனைத் தேடு (குறள்-19)

உள்ளுடம்பின் நிலைமை
      உள்ளுடம்பு என்பது உடம்பின் உள்ளே இருக்கின்றது. இந்த உள்ளுடம்பு அருவ வடிவில் இருக்கின்றது. பொன் போன்றும் வெள்ளி போன்றும் பிரகாசிக்கின்ற  ஒளியாக இருக்கின்றது. அருவமாகிய இந்த உள்ளுடம்பே உருவ வடிவிலுள்ள உடலை இயக்குகின்றது.
இந்த உள்ளுடம்பு உடம்பிலிருந்து வெளிப்பட்டு அலைந்து திரிந்து எல்லா அனுபவங்களையும் பெற்று உடம்பிற்குத் திரும்பி  வருகிறது. உடம்பு அழிந்தாலும் உள்ளுடம்பிற்கு அழிவு கிடையாது. அழியாத உண்மையாகிய அருவ வடிவிலான உள்ளுடம்பு அழிந்துவிடக்கூடிய பொய்யான உடம்பிற்கு ஆதாரமாக இருக்கின்றது.
உடம்பின் நவ துவாரங்களையும் அடைத்து அருவ உடம்பு வெளியேறாமல் உடலில் நிலைநிறுத்தினால் உருவ உடம்பானது பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெற முடியும். நவதுவாரம் என்பது கண் இரண்டு, காது இரண்டு, மூக்கில் இரண்டு, வாய், சிறுநீர் குழாய், மலக்குழாய் ஆகிய ஒன்பதும் ஆகும்.
பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு நவ துவாரங்களை அடைத்து அருவ உடம்பைக் காத்து சிவனை தியானித்தால் பிறவியிலிருந்து விடுபட்டு சிவபெருமானை அடையலாம் என்பது விளக்கம். (ஔவையார்.2006:9-13)
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தக்கால்
அன்பதில் ஒன்றாம் அரன் (குறள் 30)

நாடிதாரணை
      உடலின் நரம்பு மண்டலம் பற்றிய குறட்பாக்கள்  இவ்வியலில் அமைகின்றன. நாடி என்பது நரம்பாகும். எழுபத்திரண்டாயிரம் நாடிகளில் பத்து நாடிகளே முதன்மையானதாக அமைந்திருக்கின்றன. அனைத்து நாடிகளும் வயிற்றையே ஆதாரமாகக் கொண்டு இயங்குகின்றன. நாடிகளில் அருவமாகச் சிவபெருமான் கலந்திருக்கின்றார். அத்தகைய கடவுளை உணர்ந்தால் வீடுபேற்றைப் பெற முடியும். (ஔவையார்.2006:14-17)
அறிந்தடங்கி நிற்கும் அந் நாடிகள் தோறும்
செறிந்தடங்கி நிற்கும் சிவம் (குறள்-40)

வாயுதாரணை
      வாயுவானது மூலாதாரத்தில் தோன்றுகிறது. இந்த வாயுவை வலது நாசியிலும் இடது நாசியிலும் உள்ளிழுத்துக் கொண்டால் சிவபெருமானின் திருவருளைப் பெற முடியும்.
விரல்களின் உதவியோடு வாயுவை முறையான நேர அளவில் உள்ளிழுத்துக் கொண்டும், வெளியேற்றாமல் அடக்கிக் கொண்டும்,  பிறகு வெளியேற்றிக் கொண்டும்  பயிற்சி செய்தால் சிவபெருமானுடைய திருவருளை பெறலாம்.
உடல் என்பது வாயுவின் ஒன்றிணைவால் உண்டானதாகும். வாயுவை வீணாக்காமல் பாதுகாத்தால் உடலின் ஆயுளை நீட்டிக்க முடியும். மயிர்க்கால் வழியாகக் கூட  வாயு வெளியேறாமல் பாதுகாக்க வேண்டும். உடலிலிருந்து வீணாகாமல் வாயுவினை அடக்கிக் காத்தால் சிவபெருமானை அடையும் அற்றலைப் பெற முடியும். (ஔவையார்.2006:17-22)
போகின்ற வாயு பொருந்தில் சிவம்ஒக்கும்
தாழ்கின்ற வாயு அடக்கு (குறள்-50)

அங்கிதாரணை
     அந்தத்தில் அங்கி அழல்போலத் தானோக்கில்
பந்தப் பிறப்பறுக்க லாம் (குறள் 51)
      அங்கி என்பது அக்கினி அல்லது நெருப்பு ஆகும். நெருப்பை உடலில் உருவாக்கிக் கொண்டு வழிபடுதலும் வெளியில் தூண்டப்படும் சுடரை வழிபடுதலும் ஆகும்.
ஆணின் இனப்பெருக்கத் திரவமாகிய விந்துவை வெளியேறாது காத்து தவம் செய்து உந்தியில் இறுகச் செய்ய வேண்டும். இறுகிய விந்து மூலாக்கினி அல்லது குண்டலிங்கம் எனப்படும்.
மூலாக்கினியின் வெப்ப ஒளியை வளரச் செய்து புருவ மையத்தில் கொண்டுவந்து தரிசித்தால் மறுபிறவியைத் தவிர்க்க முடியும். தூண்டப்படுகின்ற விளக்கின் சுடரை அசையாமல் தரிசித்தால் அனைத்துக் குறைகளிலிருந்தும் விடுதலை பெறுவார்கள்.
அண்டத்தில் உள்ளவையே உடல் பிண்டத்திலும் இருக்கின்றன. உடல் பிண்டத்தில் உள்ளவையே அண்டத்திலும் இருக்கின்றன. உடலின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் பொருள் அக்கினி ஒன்றே  என்பதை அறிபவர்களால் மரணத்தை வெல்ல முடியும். (ஔவையார்.2006:22-26)

வீடுபேறு அடைதல்
      வீடுபேறை அடைதல் என்பது மறுபிறவியிலிருந்து விடுபடுதல் ஆகும். உலக  வாழ்வியலிலிருந்து விடுபடுதல் ஆகும். வாழ்வின் எதார்த்தங்களிலிருந்து விடுபடுதல் ஆகும். இறந்தால்தானே மறுபிறவி எனவே,  மறுபிறவியைத் துறப்பதற்கு மரணத்தை துறத்தல் வேண்டும்.
மறுபிறவியைத் தவிர்தலும்  மரணத்தைத் தவிர்த்தலும் வீடுபேறு அடைதலாக அமையும். வீடுபேறை அடைவதற்கு முதலில் சிவபெருமானை அடைய வேண்டும். உடல், ஆன்மா, நாடி நரம்புகள், மூச்சு, வெப்பம், சுவை அனைத்திலும் சிவனை கண்டடைவது அவசியம்.
அமுததாரணை என்ற இயலில் 14 கலைகளிலும் நிறைந்த உடலினது நாவில் சுரக்கின்ற அமிர்தத்தை பருகினால் சிவயோகி ஆகிவிடலாம். சிவயோகியாக உருமாறியவர் மறுபிறவியையும் வெல்லலாம், மரணத்தையும் வெல்லலாம் என்பதாக விளக்கம் பெற்றுள்ளது.
அர்ச்சனை என்ற இயலில் சிவபெருமானை எப்படியெல்லாம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதாகக் கருத்துக்கள் அமைந்துள்ளன. தொடர்ச்சியான கடுந்தவத்தினை மேற்கொண்டால் மட்டுமே சிவபெருமானைக் கலக்கின்ற உணர்வு கிட்டும் என்பதாக உள்ளுணர்தல் என்ற இயலில் விளக்கப்படுகிறது.
பக்தியுடைமை எனும் முதல் பகுதியின் இறுதி இயலில் இறைவனை அடைந்தால் மட்டுமே வீடுபேறு அடைய முடியும் என விளக்கப்படுகின்றது. எனவே, இறைவனை அடைவதற்கு பக்திமார்க்கமேஅடிப்படையாகும். பக்தியால் மட்டுமே வீடுபேறாகிய முக்தி கிட்டும் என்பதாக வீட்டின்பால் என்ற முதல் பகுதி நிறைவடைகின்றது. (ஔவையார்.2006:27-42)
மந்திரங்கள் எல்லாம் மயங்காமல் உள்நினைந்து
முந்தரனை அர்ச்சிக்கும் ஆறு (குறள்-78)

திருவருட்பால்
மாசற்ற கொள்கை மதிபோலத் தான்தோன்றும்
ஈசன் அருள்பெற்றக் கால் (குறள்-108)
      அறிவு என்பது உடலகத்தின் புறத்திலிருந்து தோன்றுவதல்ல. இறைவனது திருவருளால் மட்டுமே அறிவு தோன்றுகிறது. எனவே அறிவைப் பெற முயல்வோர் திருவருளைப் பெற முயல்வது இன்றியமையாததாகும்.
திருவருளினால் அறிவைப் பெற்றுவிட்டால் மரணத்தை வெல்லலாம்.
 ‘அருளினாலன்றி யகத்தறி வில்லை 
அருளின் மலமறுக்க லாம்’.(குறள்-101)
சகல குணங்களிலும் கலந்திருக்கின்ற பொருள் சிவமென்று தெளிய வேண்டும்.
 உண்டென்றும் இல்லையென்றும் சொல்லப்படுகின்ற சிவமென்னும் பொருளை காண இயலாததும் உண்டு. சர்வ பிராணிகளுக்கும் ஒரே இறைவனாக சிவனே நிறைந்திருக்கிறான்.
அறம் பொருள் இன்பம் மூன்றையும் விட்டவர்கள் மறுபிறவியை ஒழித்தவர்கள் ஆவர். மூச்சை உள்ளிழுத்து இடைவிடாது நிறுத்தினால் சிவனருளை பெற்றுவிடலாம். எள்ளிற்குள் எண்ணையைப் போலவும், பாலில் நெய்யைப் போலவும் சிவபெருமான் எல்லாவற்றிலும் கலந்திருக்கின்றான் என்பதை அறிய வேண்டும்.
உருவமும் உணர்வும் இல்லாத பொருளாகிய அருவத்தை நாடினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பதை அறிய வேண்டும். தூக்கம், உணர்ச்சி, பசி ஆகியவற்றை இழந்தால் மறுபிறப்பிலிருந்து விடுபடலாம்.
உருவ வாழ்வை அருவமாக மாற்றிக் கொண்டால் மறுபிறப்பிலிருந்து விடுபடலாம். உருவங்களை இழந்து அருவமே மெய்யானது என  ஏற்று ஒழுகல் வேண்டும். நினைப்புமின்றி மறப்புமின்றி வெற்றிடமாய் நின்றால் மறு பிறப்பை தவிர்க்கலாம்.
தன்னை அறியும் அறிவைப் பெற்றுவிட்டால் முக்தி கிட்டும். தன்னைப் பற்றிய அறிவு என்பது சிவத்தைப் பற்றிய அறிவாகவே கருதப்படுகின்றது. அருவ வடிவாகிய இறைவனை தூய ஒளியாக அறிய வேண்டும். பத்து திசையும் கடல் சூழ்ந்த உலகும் சிவனே ஆகும்.
பிறக்கவிருக்கும் உயிர்களும் பிறப்பிக்கப் போகின்ற பிறப்புறுப்புகளும் (யோனிகள்) சிவமே ஆகும். இவ்வாறு அனைத்துமாக இருக்கின்ற உண்மைப் பொருளாகிய சிவனின் திருவருளை பெறுகின்ற வழிமுறைகள் இரண்டாம் பகுதியில் விரவிக்கிடக்கின்றன. (ஔவையார்.2006:43-84)

தன்பால்
      குருவினுடைய வழிகாட்டுதலுக்கு அடிபணிந்தால் மட்டுமே சிவனருளைப் பெற முடியும்.  எனவே முக்தியடைய விரும்புவோர் ஒரு குருவிடம் நெறிப்பட்டு வாழ்வது அவசியம்.
‘குருவி னடிபணிந்து கூடுவ தெல்லால் 
கருவமாய் நிற்கும் சிவம்’.(குறள்-203)
இறைவன் ஒவ்வொரு ஆன்மாவிலும் கலந்திருக்கிறான் என்ற உண்மையை அறிபவர்கள் கையிலுள்ள நெல்லிக்கனியை சுவைத்து உணர்தல் போல இறைவனையும் உணர முடியும்.
வாக்கு மணம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டுள்ள இறைவனை அறிந்தவர்களுக்கு மரணமே கிடையாது.  மரணமில்லா வாழ்வைப் பெறுவதற்கு இறைவனை அறிவது அவசியம்.
புருவத்தின் இடையில் இறைவனை தரிசித்தால் உடல் அரூபமாக மாறிவிடும். சூனிய காலமறிதல் என்ற இயலில் உடல் அழியாதிருப்பதற்கான வழிகளாக இறையறிவு திகழ்கின்றது என்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.  
சிவயோக நிலை என்ற இயலில் சிவயோகத்தை அடைவதற்காக உடல் செய்ய வேண்டிய முயற்சிகளாக  மூச்சுப் பயிற்சிகள் விவரிக்கப்படுகின்றன. இறைவனை அடைதல் என்பது சொல்லி நிகழாதது ஆகும்.
இறைவனை அடைதலுக்கான முயற்சியை அவரவர் மேற்கொண்டால் மட்டுமே உணர முடியும். அறுபத்தாறு ஆண்டுகள் தொடர்ந்து முயற்சித்தால் இறையருளை உறுதியாக உணர முடியும்.  ‘அறுபதொ டாறு வருட மிதனை 
உறதி யதாக வுணர்’. (குறள்-289)
அண்டத்தி லிருப்பதெல்லாம் பிண்டத்திலும் இருப்பதாக அறிய வேண்டும்.
கல்லாத மூடர்களாயினும் உருவத்தைக் கடந்து அருவத்தை அடைந்துவிட்டால் எல்லாச் செயல்களையும் செய்துவிட முடியும். இவ்வாறெல்லாம் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்பவர்கள் பரம்பொருள் எழுந்தருளியிருக்கின்ற வீடுபேற்றை அடைய முடியும் என்பதாக மூன்றாம் பகுதி முடிவடைகின்றது. (ஔவையார்.2006:85-131)

அறிவியல் தத்துவம் அறிமுகம்
      உலகளாவியத் தத்துவங்கள் இரண்டு வகைப்படும். 1.அறிவெதிர் தத்துவம், 2.அறிவியல் தத்துவம். தத்துவம் என்பது மனிதர்களின் சிந்தனைக்கும் செயல்களுக்கும் அடிப்படையாகும். சமூகளாவிய நிறுவனங்கள் அனைத்திற்கும் பொதுவாகப் பொருந்தக் கூடிய விதிகளாகும்.
அஞ்ஞானங்களுக்கு அஞ்ஞானங்களாகவும், விஞ்ஞானங்களுக்கு விஞ்ஞானமாகவும் தத்துவம் விளங்குகின்றது.  
அறிவியல் தத்துவம் என்பது பிரபஞ்சம் முழுமையையும் பொருட்களின் இயக்கங்களாக அறிந்துகொள்ளுதலாகும். எல்லாக் கருத்துக்களுக்கும் முதன்மையாகப் பொருளார்ந்த வாழ்க்கை இருப்பதாக அறிந்து கொள்ளுதல் ஆகும். எல்லாவற்றையும் மாற்றங்களுக்கு இடைப்பட்டதாக அறிந்துகொள்ளுதல் ஆகும். எல்லாக் கருத்துக்களையும் சமூக வாழ்வியல் காரணங்களுக்கு உரியதாக அறிந்துகொள்ளுதல் ஆகும். அனைத்து அறிவும் செயல்களுக்கு உரிமையானதாக அறிந்துகொள்ளுதல் ஆகும். சமூகவிஞ்ஞானக் களத்தில் பங்கேற்பதன் வாயிலாக அறிவியல் தத்துவத்தை சமூக நடைமுறைகளுடன் பயிற்சி பெற முடியும். (புதியவன்.24.10.2019)

அறிவியல் தத்துவமும் இலக்கியமும்
      அறிவியல் தத்துவ உலகப்பார்வையில் இலக்கியம் என்பதை சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்கான அவர்களது மொழியின் படைப்பாகும் என்பதாக வரையறுக்க முடிகின்றது.
அறிவியல் தத்துவமானது இலக்கியத்தை ஒரு படைப்பாகவும் சமூக நிகழ்வாகவும் அணுகுகிறது.மனிதரின் மொழி சார்ந்த படைப்பாக இலக்கியத்தை ஏற்றுக்கொள்கின்றது. ஓர் இலக்கியமானது படைப்பாளரின் தன்னிச்சை இலக்கிலிருந்து படைக்கப்பட்டுள்ளதா சமூகளாவிய இலக்கிலிருந்து படைக்கப்பட்டுள்ளதா என்பதை மதிப்பிடுகின்றது.
இலக்கியப் படைப்பாளரின் தத்துவ அடிப்படையிலான உலகப்பார்வை வாழ்வியல் எதார்த்தங்களுக்கான கற்பனைகளையும் இலட்சியங்களையும் கொண்டு அமைகின்றதா அல்லது எதார்த்தங்களைப் புறக்கணிப்பதாக அமைகின்றதா  என்பதை மதிப்பிடுகின்றது.
இலக்கியத்தின் மூலமாக இலக்கியப் படைப்பாளியையும் இலக்கியத்தில் பதிவாகியுள்ள மக்களின் சமூக வாழ்வியலையும் ஒருங்கே மதிப்பிடுகின்றது.
கடந்தகால இலக்கியங்களை சமகாலக் கருத்தியல் தேவைகளுக்கான ஆதாரங்களாகவும் வரலாற்றை கண்டறிய உதவும் ஆவணங்களாகவும் மதிப்பிடுகின்றது.
இறுதியாகச் சமகாலச் சமூகத்தின் எத்தகைய தேவைகளில் பங்கேற்பதாக ஓர் இலக்கியம் அமைகின்றது என்பதை மதிப்பிடுகின்றது. இலக்கியத்தை சமூக மேன்மையின் கருவியாக அணுகுவதற்குரிய அவசியத்தை  அறிவியல் தத்துவத்தின் அடிப்படையிலான சமூகவிஞ்ஞான முயற்சிகள் நன்கு உணர்த்திவருகின்றன. (புதியவன்.24.10.2019)

ஔவைக் குறள் மதிப்பீடு
      ஔவைக் குறள் என்ற இலக்கியம் உடல் பற்றிய அறிமுகத்திலிருந்து தொடங்குகிறது. உடல் இல்லாவிட்டால் உணர்வென்பது கிடையாது என்ற புரிதலை பாடும்போது பொருளே முதன்மைஎன்ற அறிவியல் தத்துவக் கொள்கை வெளிப்படுகின்றது.  ஆனால் உடல் உருவாக்கத்தில் சில தெய்வங்களும் கலந்திருப்பதாகச் சொல்கின்றது. பிரபஞ்சப் பொருட்களும் சிலவகை தெய்வங்களும் ஒன்றுகூடி உருவெடுத்த விந்துவிலிருந்து உடல் முதல் உலகம் வரை தோன்றியதாக விளக்கப்படுகின்றது.
ஆண் அதிகார உணர்வால் உடலைப் பெற்றெடுக்கும் யோனி இரண்டாந்தரமானதாக விளக்கம் பெறுகிறது. 
எண்ணங்கள், கற்பனைகள். சிந்தனைகள், கருத்துக்கள், உணர்ச்சிகள் அனைத்திற்கும் உடலின் உறுப்பாகிய மூளையும் அதனது பிரபஞ்ச உறவாடல்களும் முதன்மையானது என்ற அறிவியல் தத்துவப் புரிதல் வெளிப்படுவதாகத் தோன்றினாலும், உடல் தோன்றியதன் காரணம் பற்றியக் கருத்தில் கொள்கை முரண் வெளிப்படுகின்றது.
அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் சகல உயிரினங்களுக்கும் முதல்வனாகிய சிவபெருமானின் அருளைப் பெறுவதற்காகவே உடல் தோன்றியதாக விளக்கம் பெறுகின்றபோது அறிவெதிர் தத்துவ நிலைப்பாட்டிலிருந்தே ஔவைக்குறள் படைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது.
      சிவனை அடைவதற்காக வழிகாட்டப்படுகின்ற முயற்சிகள் அனைத்தும் உலக வாழ்வியல் எதார்த்தங்களிலிருந்து விலகுவதற்கான முயற்சிகளாகவே அமைகின்றன. உடலானது உலகத் தேவைகளைத் துறந்து, உழைப்பைத் துறந்து, கற்பனை உலகை உருவாக்கிக் கொண்டு வாழ்வதற்கான முயற்சிகளாக மட்டுமே அமைகின்றது.  
இறைவனது அருளைப் பெறுவதற்காகச் செய்யப்படுகின்ற முயற்சிகள் அனைத்தும் கற்பனை உலகில் வாழ்க்கையைப் பயணிக்கச் செய்வதற்கு ஏற்ப உடலைப் பக்குவப்படுத்துகின்ற முயற்சிகளாகின்றன. எதார்த்தங்களைத் துறந்து கற்பனைகளின் வாயிலாக இறைவனை உருவாக்குகின்ற முயற்சியில் ஈடுபடுவதால்  இறைவனது அருளைப் பெற்று வீடுபேற்றை அடைய முடியும் என வழியுறுத்தப்படுகின்றது.
      மனித வாழ்வின் இயற்கை என்பது சகமனிதர்களோடு ஒன்றி உழைத்து, சமூகப் பொருளுற்பத்தியில் ஈடுபட்டு, சமூக எதார்த்தங்களிலுள்ள  தேவைகளை உணர்ந்து, இலக்குகளைத் திட்டமிட்டுக்கொண்டு, இலக்கு நோக்கிய கற்பனைகளை உருவாக்கிக்கொண்டு வாழ்வை அமைத்துக்கொண்டு முயல்வதாகும். ஆனால், ஔவைக்குறளினது கருத்தாக்கங்களோ இத்தகைய சமூக வளர்ச்சியின் எதார்த்தங்களை கவனப்படுத்தாத வகையிலேயே அமைந்திருக்கின்றன.
      ஔவைக்குறள் எடுத்தியம்புகின்ற வீடுபேறானது  உடலினது உலக அனுபவங்களைத் துறப்பதிலிருந்துத் தொடங்கி மரணமில்லா வாழ்வு அல்லது மறு பிறவியின்மை என்ற நம்பிக்கையிலே முடிவடைகின்றது. இத்தகைய நம்பிக்கையை உயர்ந்த கொள்கையாக ஏற்று வாழ்வில் வெற்றி பெறுவதற்காக  கற்பனை உலகை உருவாக்குகின்ற உழைப்பில் 66 ஆண்டுகள் ஈடுபடுமாறு ஔவைக்குறள் அறிவுறுத்துகின்றது. வாழ்க்கையை அடித்தளமாக்கிக்கொண்டு நம்பிக்கையை உருவாக்குவதற்கு மாறாக நம்பிக்கையின் அடித்தளத்தில் வாழ்வை உருவாக்குகின்ற தலைகீழ் முயற்சியை மேற்கொள்ளச் சொல்கின்றது.

முடிவுரை
      சமகால மக்களின் வாழ்வியலில் அறிவியல் தொழில்நுட்பங்கள் பரவியுள்ள வளர்ச்சியில் பாதியளவைக்கூட அறிவியல் தத்துவ உலகப்பார்வை எட்டவில்லை. மக்களின் உலகப்பார்வையை அறிவியல் தத்துவ உலகப்பார்வையாகப் பக்குவப்படுத்துவதற்குச் சமகால அறிவியல் கலை இலக்கியப் பயிற்சிகள் பொறுப்பேற்க வேண்டிய சமூகத் தேவை இருக்கின்றது. இத்தகையத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுகின்ற ஆற்றலுடன்  ஔவைக்குறள் போன்ற இலக்கியப் படைப்பாக்கங்கள் அமையவில்லை.
அனைத்து சமய இலக்கியங்களின் அடிப்படை நோக்கமான புனிதகடவுள் கொள்கைக்கு உட்பட்டதாகவே ஔவைக்குறள் அமைந்திருக்கிறது. அதாவது, சிவன் என்ற கடவுளை நம்பக்கூடிய மனிதர்களின் கடவுள் கொள்கையை வலிமைப்படுத்துவதற்கு மட்டுமே ஔவைக்குறள் பயன்பட முடியும்.  மாறாக, சமூகளாவிய நிலையில் சமூக அரசியல் பண்பாட்டு நிலைமைகளும் மக்களின் சமூகப் பொருளுற்பத்தி நடவடிக்கைகளும் சமூக மேன்மை இலட்சியங்களை நோக்கி வலிமைப்படுத்துவதற்கு ஔவைக்குறள் போன்ற நூல் கருவியாதல் என்பது நிச்சயமாக முடியாது.

துணைசெய்தவை
   
          1.       ஔவையார். 2006. ஔவைக்குறள். சென்னை: சாரதா               பதிப்பகம். 
2.       ஷாலினி. பிப்.2018. கடவுளை விமர்சிக்கக் கூடாதா? https://www.youtube.com/watch?v=yJhDhV_lkWc
3.       சிவத்தம்பி,கா. 1988. தமிழ் இலக்கிய வரலாறு வரலாறெழுதியல் ஆய்வு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
4.       சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். https://puthiyavansiva.blogspot.com/2016/10/blog-post_79.html
5.       சிவக்குமார்,கே. மார்ச் 2014. ஆக்கமும் பெண்ணாலே. புதிய கோடாங்கி. பக். 36-38. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_33.html
6.       புதியவன். ஜுலை 2017. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள். புதியகோடாங்கி. பக்.30-33. https://puthiyavansiva.blogspot.com/2017/06/blog-post_89.html
7.       புதியவன். 2014. நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம். கோயம்புத்தூர்: முகம் பதிப்பகம். https://puthiyavansiva.blogspot.com/2018/11/blog-post.html
8.       புதியவன். நவ. 2019. புராதனம் முதல் பொதுவுடைமைவரை. 'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5473:2019-11-03-14-08-15&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
     9.       புதியவன். அக். 24.10.2019. இலக்கிய அறிவியல். 'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

    10.   புதியவன். அக். 2019. இந்தியாவில் சாதிகளின் சதி. 'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5435:2019-10-19-12-03-36&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
11.   புதியவன். அக். 2019. காதல் வரலாறு. 'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்.
12.   புதியவன். டிசம்பர் 2016. காதலிலிருந்து கடவுள்வரை. புதிய கோடாங்கி. பக். 29-37. https://puthiyavansiva.blogspot.com/2016/11/blog-post.html
13.   புதியவன். அக். 2019. கடவுள் வரலாறு. 'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5393:2019-10-07-13-46-30&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
14.   புதியவன்.மார்ச் 2015. அறிவெனும் பெரும்பசி. ஊடாட்டம் சமூக பண்பாடு அரசியல் பொருளாதார ஆய்விதழ். பக்.40-49. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_4.html
15.   புதியவன்.ஜுன் 2015. அறிவெனும் பெரும்பசி. புதிய கோடாங்கி. பக். 30-37. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_4.html
16.   ஜார்ஜ்தாம்சம். 2005. மனித சாரம். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
17.   ஸ்டாலின்,ஜே.வி.2013. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல் வாதமும். சென்னை: கீழைக்காற்று.




No comments:

அதிகம் படித்தவை