எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

மனசுக்குள் ஆயிரம் சன்னல்



மனசுக்குள் ஆயிரம் சன்னல்

புதியவன்

வாழ்க்கை வலுவிழந்துக் கொண்டே போகின்றது. நெருக்கடிகள் இறுகிக் கொண்டே வருகின்றன. பாதுகாப்பிற்கு உத்திரவாதமற்ற வீடுகள். இலட்சம் மக்களுக்கு வீடுகளே இல்லை என்பதும் நினைவிருக்கிறது.
தாளிட்ட அந்த வீட்டிற்குள் தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகின்றது. செய்தி பார்ப்பவர் இதயம் வெடித்துச் சாகலாம். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எந்த மனிதருக்கும் இந்த விபரீதம் நிகழக் கூடாது. இதற்காகத்தான் ஊடகக் கோமாளிகளின் பொழுதழிப்பு நிகழ்ச்சிகள். சமூக அறிவிற்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுகின்றன. ஆனால், சமூக அக்கறையுடன் செயல்படுவதாக ஊடக முதலாளிகள் பெருமிதப்படலாம். நமக்கும் கோபம் வரலாம்.
ஊடகத் திரைகள் உண்மைகளை மறைக்கின்றன. எனினும் நம் வாழ்வியல் உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. மறுக்க முடியாத உண்மைகளை உணர்ந்து வருகிறோம். நெருக்கடிகள் இறுகிக் கொண்டே போகின்றன.
நம் மக்கள் உண்மைகளை நேசிப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். உண்மையுடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால் உண்மையாக நடந்து கொள்ள மறுக்கிறார்கள். ஒழுங்கற்றச் சமூக வாழ்க்கையை உதாரணத்திற்கு உணர வேண்டுமா?
ஊர்த் தெருக்களில் நடந்து பாருங்கள். ஒழுங்கின்றி சிதறி நிற்கும் வாகனங்கள். குப்பைத் தொட்டிகளைச் சுற்றிலும் குவிந்திருக்கின்றன குப்பைகள். வீட்டின் சுத்தம் காக்க ஊரைக் குப்பையாக்குகிறார்கள். சாக்கடையில் வீசப்பட்ட அழுகிப்போன மாமிசங்கள். அதுபோலவே குடிகார மனிதர்கள். பாதையில் போதையேறி விழுந்திருக்கிறார்கள். நிர்வாணம் அசிங்கமாக எட்டிப்பார்க்கின்றது. அனாவசியமான வாகனச் சத்தங்கள். பொறுமையே இல்லாத மனிதர்கள். உதவாக்கரை இலட்சியங்களுடன் அவசரமாக நகர்கின்ற மனிதக் கூட்டம்.
இந்த ஒழுங்கற்றச் சமூகத்தை இதன் மனிதர்கள் ஒழுங்கின்றி கண்டிக்கிறார்கள். இவர்கள் சமூக அறிவுடன் சமூகத்தைச் சரி செய்கின்ற சமூக விஞ்ஞான மருத்துவர்கள் அல்ல. வெறும் புலம்பல் வியாதிகள். மன நோயாளிகள். இவர்கள் உபதேசங்களைச் சொல்வார்கள். உபதேசங்கள் ஊருக்குத்தான், தனக்கென்றால் தடுமாறுவார்கள். சமூகத்தைச் சரி செய்கின்ற முயற்சி தன்னைச் சரி செய்வதிலிருந்து பிரிக்க முடியாதது. இந்த உண்மையை இவர்கள் உணர்வதே இல்லை. சில பேராசிரியர்களே இப்படித்தான். பின் சாதாரண மனிதர்களை என்ன சொல்வது.
இந்தக் காலை நேரம் எத்தனை அதிவேகம். பிள்ளைகளை நேரத்திற்குள் பள்ளிகளில் திணிக்க வேண்டும். இதற்காகத்தான் இப்படி ஆர்ப்பாட்டம். உண்மையில் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நமது கல்வி நிறுவனங்களுக்கும் சமூக அறிவிற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. எதிர்காலத்தில் நம் பிள்ளைகள் சமூகத்தின் எந்தத் துறையில் உழைக்க விரும்புகிறார்கள். அந்த விருப்பத்திற்காகத்தான் உயர் கல்வி பயில்கிறார்கள். ஆனால் வேலைவாய்ப்பிற்கானச் சமூக சூழ்நிலை என்னவாக இருக்கின்றது? இந்த அடிப்படையான சமூக அறிவைக்கூட கல்வி நிறுவனங்கள் வழங்குவதில்லை. மாறாக, கல்வியை வியாபாரம் செய்கின்றன.
கல்விக்கும் வாழ்க்கைக்கும் ஒட்ட முடியாத தூரங்கள். ஆடித் தள்ளுபடியில் பிள்ளைகளைச் சேர்க்கலாம்! விளம்பரங்கள் உருவானாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. கல்வி நிறுவனங்கள் எத்தகைய ஏட்டுச் சுரைக்காய்களாக செயல்படுகின்றன. இந்த நிலைமைகள் நமது சமூக அறிவின்மையால் எப்படியெல்லாம் வளர்ந்திருக்கின்றன. இந்த உண்மைகளை உணர்வதற்காகவே நம் பிள்ளைகளை கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியாக வேண்டும்.
மனித அறிவு என்பது ஆறு பண்புகளின் தொடர் வட்ட இயக்கமாக இருக்கின்றது. அதாவது, 1.எழுத்து – 2.வாசிப்பு – 3.உரையாடல் – 4.சிந்தனை – 5.கருத்து – 6.செயல் – 1.எழுத்து... என்பவற்றின் தொடர்ச்சியான இயக்கம். அறிவின் இத்தகைய இயக்கம் சமகால அரசியலிலிருந்து பின்னோக்கியும் முன்னோக்கியும் இருக்கின்றது. அதாவது, சமகாலத்திலிருந்து பிரபஞ்சத் தோற்றத்தின் இயக்கம் வரை அறிந்திருப்பது பின்னோக்கிய அறிவாகும். சமூக மாற்றங்களின் எதிர்கால லட்சியங்கள் வரை அறிந்திருப்பது முன்னோக்கிய அறிவாகும். இதுவே அறிவின் சாராம்சம் ஆகும். நமது கல்வி நிறுவனங்களில் நிகழும் வேலைத்திட்டங்களின் நுட்பங்களை எண்ணிப்பாருங்கள். அறிவை வளர்ப்பதற்கான முயற்சிகளுக்கும், அறிவின் சாராம்சத்திற்கும் தொடர்பே இல்லை.
உண்மையை அறிவதற்கான வழி ஆய்வு செய்தலாகும். ஆய்வு என்பது அறிவியல் ஒளியின் வழியே உண்மையைத் தேடுதல் ஆகும். நமது சமூகத்தில் ஏராளமான ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில் சமூக ஆய்வுகளாக வளர்ந்து வெற்றி பெற்றவையும் இருக்கின்றன. இவைகளின் வெற்றிக்கு பிரிக்க முடியாத மூன்று அறிவு பயன்பட்டிருக்கின்றது. 1.தகவல்களின் அறிவு, 2.துறை சார்ந்த அறிவு, 3.சமூக அறிவு. முதல் இரண்டும் சமூக அறிவில் அடங்கிவிடும்.  இந்த மூன்றில் ஒன்று விலகினாலும் ஆய்வின் நேர்மையும் உண்மையிலிருந்து விலகிவிடும். இந்த உண்மையை உணராமலேயே எத்தனையோ முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன.
எல்லாத் துறைகளின் அறிவிற்கும் தத்துவம் அடிப்படையாக இருக்கின்றது. உலகளாவிய தத்துவங்கள் இரு வகைப்படும். 1.அறிவெதிர் தத்துவம், 2.அறிவியல் தத்துவம். அறிவெதிர் தத்துவம் என்பது இயங்காவியலும் கருத்து முதல் வாதமும். அறிவியல் தத்துவம் என்பது இயங்கியலும் பொருள் முதல் வாதமும். ஆய்விற்கு அறிவியல் தத்துவம் அடிப்படையாக இருக்கின்றது.
ஆய்வாளருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதருக்கும் உலகப் பார்வை இருக்கின்றது. உலகப் பார்வைக்கு அடிப்படையாக எந்தத் தத்துவம் இருக்கின்றது என்பதுதான் பிரச்சனை. அறிவெதிர் தத்துவங்களுக்கு எதிராக அறிவியல் தத்துவம் தவிர்க்க முடியாதத் தகுதியுடன் வளர்ந்திருக்கிறது. அறிவியல் தத்துவத்தை மக்கள் தத்துவமாக உருமாற்றும் முயற்சியில் சமூக விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகிறார்கள். இது சாதாரண மனிதர்களைச் சமூக விஞ்ஞானிகளாக உருமாற்றுகின்ற முயற்சியாகும். ஆனால், கல்வி நிறுவனங்களின் ஆய்வாளர்களைக் கவனியுங்கள்.
சமூக அறிவிற்கான எந்த முயற்சியும் நிகழ்வதில்லை. 1. சமூக உற்பத்தி முறையியல் 2. சமூக வாழ்வியல் 3. சமூக உள்ளத்தியல் 4. சமூகக் கருத்தியல் 5. தனிமனிதக் கருத்து நிலைப்பாடு 6. தனிமனித உலகப்பார்வை 7. தத்துவ அடிப்படை 8. சமூகப் பண்பாட்டியல் ஆகிய எட்டும் சமூக அறிவிற்கான அடிப்படைகள். இத்தகைய அடிப்படைகள் பற்றிய எத்தகைய கலந்துரையாடல்களும் நிகழ்வதில்லை. ஏனெனில் நமது கல்வி நிறுவனங்கள் சமூக அக்கறைக்கானக் களங்கள் அல்ல.
அறிவியல் தத்துவத்தில் பயிற்சி வழங்காமலேயே ஆய்வாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆய்வாளர்களுக்கே இந்த நிலையென்றால் மாணவர்களை என்னவென்பது. தகவல்களை வாந்தியெடுப்பதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஆய்வாளராக்குகிறார்கள். எப்படியோ! வியாபாரம் நிகழ்ந்தால் கல்வி நிறுவனங்களுக்குப் போதுமானது. சமூகமாவது! அறிவாவது! இதுதான் எண்ணம். இது மாணவர்களுக்கும் மக்களுக்கும் நிகழ்கின்ற மிகப்பெரிய சமூகத் துரோகம்.
சமூகத்தில் ஏராளமான துரோகங்கள் நிகழ்கின்றன. சமூகத் துரோகங்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்களும் வெடிக்கின்றன.
கல்வியை வியாபாரம் செய்கிறார்கள். கட்டாய நன்கொடை பெறுகிறார்கள். அதிகக் கல்விக் கட்டணம் பெறுகிறார்கள். குற்றப் பணமாக பல ஆயிரங்களைப் பிடுங்குகிறார்கள். பிடுங்குவதில் குரங்குகளை மிஞ்சிவிடுகிறார்கள். கல்வி உதவித்தொகை வழங்குவதில்லை. இது போன்ற பல காரணங்களுக்காக மாணவர்கள் போராடுகிறார்கள்.
விவசாய நிலங்களைப் பறிக்கிறார்கள். இலாப வெறிபிடித்த நிறுவனங்களை அனுமதிக்கிறார்கள். சுற்றுச் சூழலைக் கொன்றொழிக்கும் பெரு நிறுவனங்களைச் செயல்படுத்துகிறார்கள். உள்ளூர் வியாபாரங்களைக் கொன்றொழிக்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் வழங்குவதில்லை. ஆன்லைன் மற்றும் ஊக வணிகத்தை அனுமதித்து விலைவாசியைக் கண்டபடி உயர்த்துகிறார்கள். வேலை நேரத்தையும், வேலை சுமையையும் உயர்த்துகிறார்கள். வேலையின் அடிப்படையிலோ, தேவையின் அடிப்படையிலோ கூலியை உயர்த்துவதே இல்லை. மருத்துவத்தை வியாபாரம் செய்கிறார்கள். உயிர் வாழும் உரிமையைப் பறிக்கிறார்கள். பெண் பிள்ளைகளை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறார்கள். சாதி, மத, இனக் கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்கள். தலித் மக்களின் வாழ்க்கையை அபகரிக்கிறார்கள். சொந்த மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் துரத்துகிறார்கள். இது போன்ற ஏராளமான சமூகத் துரோகங்கள் நிகழ்கின்றன. இவைகளுக்கு எதிரான போராட்டங்களும் நிகழ்கின்றன.
ஒற்றுமைக்கு நாதியற்ற மக்கள் பிரச்சனைகளால் ஒன்றிணைகிறார்கள். இந்த ஒற்றுமையைப் பற்றி மக்களின் துரோகிகளுக்குச் சில கருத்துக்கள் இருக்கின்றன.
“இந்த ஒற்றுமை தற்காலிகமானது. நீடித்து நிற்காது. பலமான தடியடிகள் கொடுத்தால் ஓடிவிடுவார்கள். பழத்தைக் கேட்டால் தோலைக் கொடுக்கலாம், கலைந்துவிடுவார்கள். ஒன்றிரண்டு தலைவர்கள் துள்ளிக் கொண்டு இருப்பார்கள். பணத்தால் வாயடைத்தால் அமைதியாகி விடுவார்கள். கலகம் செய்வதற்காக ஒன்றிணைந்தவர்கள் அல்ல. மாறாக, கலைந்து செல்வதற்காகவே ஒன்றிணைந்தவர்கள். மற்றபடி அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. அநாவசியமானவர்கள். மதிப்பதற்கு அவசியமில்லை.
            இவர்களது கருத்துக்களை உதாசினம் செய்ய முடியாது. ஏனெனில் நம்மைப் பற்றி அவர்கள் கற்ற பாடமிது. நமது ஒற்றுமை சுயப் பாதுகாப்பையோ, தற்காலிகச் சமூகப் பாதுகாப்பையோ மட்டும் நோக்கமாகக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இத்தகையக் குறுகிய நோக்கத்தில் உருவான ஒற்றுமை விரைவில் கலைந்துவிடும்.
நம்மிடம் உருவான ஒற்றுமையை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். ஒற்றுமையின் வளர்ச்சிப் பாதையில் சமூக அக்கறையும், சமூக அறிவும், சமூகப் பாதுகாப்பும் பிரிக்க முடியாத பிணைவைப் பெற்றிருக்க வேண்டும். நமது ஒற்றுமை சமூக அக்கறையுடன் தொடர்ந்து செயல்படுவதற்கானக் களங்களாக உருவெடுக்க வேண்டும். சமூக அறிவை இடைவிடாது வளர்க்கின்ற திட்டமிட்டச் சந்திப்புகளாக செயலாற்ற வேண்டும். சமூகப் பாதுகாப்பை வலிமைப் படுத்துவதற்காகத் தொடர்ந்து போராட வேண்டும். நமது சுயநலனும் குடும்ப நலனும் சமூக நலனிலிருந்து பிரிக்க முடியாதவையாகப் பக்குவப்பட வேண்டும். இது தனிமனித மாற்றம் அல்ல. திட்டமிட்டச் சமூக மாற்றத்தின் அங்கம். இத்தகைய மாற்றம் தவிர்க்க முடியாதது. இன்றியமையாத சமூகத் தேவையிலிருந்து நிகழ்கிறது.
நமது இறுக்கமான வாழ்வியல் நெகிழ வேண்டுமல்லவா!
நெருக்கடியானச் சூழ்நிலைகளைக் கடக்க வேண்டுமல்லவா!
நம் சந்ததிகளுக்குப் பொன்னுலகம் கிடைக்க வேண்டுமல்லவா!
நல்லுலகம் நாம் படைக்க முயல வேண்டுமல்லவா!
இதற்காகத்தான் சமூக விஞ்ஞானிகள் விரும்பிக் கேட்கிறார்கள். நமது வாழ்வானது நல்லுலகம் உருவாக்கப்படுவதற்கான முயற்சியாக நிகழ வேண்டும். மகிழ்ச்சியாகச் செயல்படுவோம். ஒன்றி உழைப்பதைவிட வேறு வழியில்லை. நமது வாழ்வியலை கவிதை போன்று நான்கு வரியில் சொல்ல முடியும்.
நீ சகமக்களின் சிறு துளி
நம் குடும்பம் ஒரு குட்டிச் சமூகம்
மானிடச் சமூகம் நம் மொத்த உருவம்
இதுவே மனித வாழ்வின் எதார்த்தம்
எனவேதான் சமூகவிஞ்ஞானிகள் உறுதியாகச் சொல்கிறார்கள். நல் வாழ்விற்கான கனவு தனிமனிதக் கனவு அல்ல. நனவாக வேண்டிய சமூக நிகழ்வு. விரும்பினாலும் விரும்பா விட்டாலும், நாம் சமூக நிலைமைகளை எதிர்கொள்ளக் கடமைப்பட்டவர்கள்.

மக்களின் ஒற்றுமை சிதறிவிடக் கூடாது. இலட்சியங்கள் நம்மை வலிமைப் படுத்தட்டும். திட்டமிடப்படாத நிகழ்வுகளுக்கு இடையில் திட்டமிட்டுச் செயல்படுவோம். நல்லுலகைப் படைக்கும் முயற்சி பொன்னுலகை உருவாக்கட்டும். வெற்றியின் திரைக்குப் பின்னால் மன்னர்களின் வரலாறு தோல்விகளையேக் காட்டுகிறது. வரலாற்று நதிகளில் மக்களே நீந்தியிருக்கிறார்கள். வெற்றி  மக்களால் மட்டுமே நிமிர்த்தப்பட்டு வந்திருக்கிறது. வரலாறு பொய் சொல்லவில்லை. தெய்வத்தால் ஆகாது. எனினும் முயற்சி கூலி தரும். மக்கள் வெல்லட்டும். நல்லுலகம் மலரட்டும்.

வெளிவந்த விபரம்
நற்றிணை, ஜன-மார்ச் 2015 (பக்கம் 18 - 21)
புதிய கோடாங்கி செப். 2014 (பக்கம் 26 - 28)



No comments:

அதிகம் படித்தவை