எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, May 31, 2017

இயல் – 1 இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள்

இயல் – 1
இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள்
1.1.    முன்னுரை
எது இலக்கியம் என்பதற்குப் பல்வேறு விளக்கங்களும் கலந்துரையாடல்களும் விவாதங்களும் காலந்தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இலக்கியம் தோன்றிய வரலாற்றின் அடிப்படையில் வாய்மொழி இலக்கியம், எழுத்திலக்கியம் என இரண்டு நிலையுள்ளது. செயல் அடிப்படையில் அறிவியல் இலக்கியம், கலை இலக்கியம் என இரண்டு நிலையுள்ளது. கொள்கை அடிப்படையில் தன்னிச்சை இலக்கியம், சமூகளாவிய இலக்கியம் என இரண்டு நிலையுள்ளது. இத்தகைய நிலைகளைக் கடந்து பொதுவான வரையறையை வழங்க பல்வேறு அறிஞர்களும் அகராதிகளும் முயன்றிருக்கின்றனர். எது இலக்கியம் என்பதற்குத்  துல்லியமான வரையறை பெறுவதற்கான முயற்சி சமூக அறிவுச் செயல்பாடுகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இலக்கியம் என்பது மனிதர்களது வாழ்வியல் கருத்தாக்கங்கள் குறித்த ஒரு மொழியின் பண்பட்ட வெளிப்பாடாகும் என்பதாக இலக்கியத்தை வரையறுக்க முடிகின்றது. இவ்வரையறை குறித்து இலக்கிய அறிவியல் என்ற வசன இலக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், இலக்கியத்தை அணுகுவதற்குரிய 20 சுற்றிவளைக்கும் பார்வைகள் விவரிக்கப்பட்டுள்ளன. "1. மனிதவரலாற்றுப் படிநிலை 2.பண்பாட்டு உறவுகள் 3.இயற்கை வர்ணனைகள் 4.மொழி நேர்த்தி 5.சமூக ஏற்றத்தாழ்வுகள் 6.பாலின ஏற்றத்தாழ்வுகள் 7.சாதி மத பேதங்கள் 8.பேதமை கடந்த உடன்பாடுகள் 9.எதார்த்தம் மீதான இலட்சியம் 10.முற்போக்கின் எழுச்சி 11.அரசியல் நோக்கு 12.தன்னிச்சை வெளிப்பாடு 13.கொச்சை பாலுறவு குறியீடு 14.பொருளாதார ஒடுக்குமுறை 15.கருத்தாக்கக் கட்டமைப்பு 16.ஆழ்மனப் பிரதிபலிப்பு 17.சமூகளாவிய விமர்சனங்கள் 18.தாய்தலைமைசமூகம் 19.தந்தையதிகாரச் சமூகம் 20.குழந்தைகளின்சமூகஆக்கம்” (புதியவன்.https://www.amazon.in/dp/B09526SSCT).இலக்கிய அறிவியலில் விவரிக்கப்பட்டுள்ள இலக்கியம் குறித்த வரையறையே இவ்வாய்விற்கும் பொருந்துகின்றது. மேலும், இலக்கியம் பற்றிய அகராதிகள் மற்றும் அறிஞர்களது விளக்கங்களையும், இனவரைவியல் பற்றிய அறிஞர்களது விளக்கங்களையும், இரண்டிற்கும் இடையிலான உறவுநிலைகளையும், பழங்குடிகள் பற்றிய கருத்தாக்கங்களையும், தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப்புதினங்களின் சுருக்கங்களையும் இவ்வியலில் அறியலாம்.
1.2.    இலக்கியம் என்ற சொல்லிற்கு அகராதிகள் தரும் விளக்கங்கள்
இலக்கியம் என்பதற்கு இலக்கு அல்லது குறிக்கோள். மனித எண்ணங்களில் தோன்றியதே இலக்கியம் என்று வரையறை  செய்யப்பட்டுள்ளது. (வாழ்வியல் களஞ்சியம். தொகுதி 4)
செய்யுள் வழக்கிலும், உலகியல் வழக்கிலும் தொடுக்கப்பட்டு வருஞ்சொல், ஆன்றோரால் செய்யப்பட்ட நூல் என்று (தமிழ் சொல்லகராதி 1998:474) என்று இலக்கியம் என்ற சொல்லிற்கு விளக்கம் தருகின்றன.
மனித எண்ணங்களின் இலக்கு என்பதாகவும், இலக்கண விதிகளுக்கு உட்பட்டுப் படைக்கப்படும் நூல் என்பதாகவும், ஆன்றோர்களால் படைக்கப்படுவது என்பதாகவும்  இலக்கியம் என்பதற்கு அகராதிகள் விளக்கங்கள் தருகின்றன.
1.3.    இலக்கியம் என்பதற்கு அறிஞர்கள் தரும் விளக்கங்கள்
            இலக்கியம் என்பது சிறந்த கருத்துக்கள் அடங்கிய நூல் என்கிறார் எமர்சன். (புஷ்பா,கி.2012: 7). மனிதர்கள் வாழ்க்கையில் சிறப்பாகக் கண்டவை, அனுபவித்தவை எவையோ? நம்            எல்லோருக்கும் பன்னெடுங் காலத்திற்குப் பிறகும் கவர்ச்சி          ஊட்டுவன எவையோ? காலந்தோறும் நம் கவிஞர்கள் சிந்தித்து வருகின்றன எவையோ? உணர்ந்தவை எவையோ? அவற்றையெல்லாம் அறிவிக்கும் உயிர்த்துடிப்புடைய பதிவேடே இலக்கியமாகும் என்கிறார் ஹட்சன். (புஷ்பா,கி.2012: 7-8).
            இலக்கியம் என்பது மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது. மனிதனின் சிந்தனைக்கும், கற்பனைக்கும் விருந்தாக அமைவது; மனிதனது மொழியோடு தொடர்புடையது; சொற் கோலமாக விளங்குவதுகுறிப்பிட்ட ஒரு வடிவினை செய்யுளாலோ உரைநடையாலோ உடையது; கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும் இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது. இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது. என்று .. ஞானசம்பந்தன் வரையறை செய்துள்ளார். (புஷ்பா,கி.2012:8).
1.4.இலக்கியத்தின் இலக்கு
          இயற்கையின் அங்கமாகவே பரிணமித்த மனித இனம் தனது சமூகளாவியத் தேவையின் அடிப்படையிலான கூட்டுழைப்பாலும் சிந்தனையாலும் மொழியாலும் உருவாக்கிக்கொண்ட கலையே இலக்கியப் படைப்பாகும். இலக்கியம் தோன்றிய காலந்தொட்டு இன்று வரையில் எண்ணிலடங்கா இலக்கியங்கள் தோன்றினாலும் அவற்றின் உள்ளடக்கங்களும் வடிவங்களும் காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல மாறிவந்துள்ளது. அதாவது காதலையும் வீரத்தின் புகழையும் பாடுவது இலக்கியம் என்று செவ்விலக்கியலாளர்களும், அறம் உரைப்பதே இலக்கியம் என்று அறநெறியாளர்களும், சமய உண்மைகளை விளக்குவதே இலக்கியம் என்று சமய நெறியாளர்களும்தனக்குள் தோன்றிய எண்ணங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள உதவும் மொழிநடையே இலக்கியம் என மொழியியல் அறிஞர்களும் கூறுவதைக் காண முடிகின்றது. இலக்கியத்தின் பாடு பொருள் மாறுவதற்கு முக்கியக் காரணம் அந்தந்த இலக்கியம் தோன்றியகாலச்சூழலும்அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின்சமூகப் பண்பாட்டுக் கூறுகளும்ஆகும். எனவே பாடுபொருள் காலச்சூழல் பண்பாட்டுக் கூறுகளுக்கு ஏற்றார்போல உருப்பெற்றிருக்கும் இலக்கியங்களை இரண்டு வகை இலக்குகளுக்குள் வகைபிரித்துவிடலாம். அதாவது, சமூகளாவிய நிலையில் இலக்கியம் பற்றிக் கருதும்போது இலக்கியத்தின் இலக்குகளைச் சமூகளாவிய நிலையிலிருந்தே சிந்திக்க வேண்டியுள்ளது.எந்த ஓர் இலக்கியப் படைப்பும் இலக்கியப் படைப்பாளரின் இலக்கிலிருந்தே ஆக்கம் பெறுகின்றது. எனவே, இலக்கியத்தின் இலக்குகளை எல்லாக் காலக்கட்டங்களிலும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1.இலக்கியப் படைப்பாளரின் தன்னிச்சை இலக்கு, 2.இலக்கியப் படைப்பாளரின் சமூகளாவிய இலக்கு.
1.4.1.இலக்கியப் படைப்பாளரின் தன்னிச்சை இலக்கு
          இலக்கியப் படைப்பாளர் தனது சொந்தத் தேவையை மட்டுமே முதன்மையாகக் கொண்ட உணர்வு நிலையின் அடிப்படையில் இலக்கியத்தைப் படைப்பதாகும்.  தனது படைப்பு மனித சமூகத்தில் எத்தகைய விளைவுகளை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் இலக்கியத்தைப் படைப்பதாகும். உள்ளத்தில் சுமையாக இருக்கின்ற எண்ணங்களை இறக்கி வைப்பதற்கான அணுகுமுறையாக மட்டுமே இலக்கியத்தைப் படைப்பதாகும். இத்தகைய இலக்கியப் படைப்புகள் குறிப்பிடத் தகுந்த தனிச்சிறப்புகளின் காரணமாக சமூகளாவிய நிலையில் பரவலாக வாசிக்கப்பட்டாலும்கூட இவ்வகை இலக்கியம் இலக்கியப் படைப்பாளரின் தன்னிச்சை இலக்கிற்கு உட்பட்டு உருவாகிய இலக்கியமாகவே கருத முடியும்.
1.4.2.இலக்கியப் படைப்பாளரின் சமூகளாவிய இலக்கு
          இலக்கியப் படைப்பாளர் தனது சொந்தத் தேவைக்கும் மேலானதாகச் சமூகத்தின் தேவையை மட்டுமே முதன்மையாகக் கொண்ட உணர்வு நிலையின் அடிப்படையில் இலக்கியத்தைப் படைப்பதாகும். தனது இலக்கியப் படைப்பு மனித சமூகத்தில் எத்தகைய விளைவுகளை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் இலக்கியத்தைப் படைப்பதாகும். உள்ளத்தில் சுமையாக இருக்கின்ற எண்ணங்களைச் சமூகத்தின் தேவைகளுக்குப்  பங்களிக்கின்ற முறையில் இலக்கியத்தைப் படைப்பதாகும். இத்தகைய இலக்கியப் படைப்புகள் சமூகளாவிய நிலையில் பரவலான வாசிப்பிற்கு ஆட்படாவிட்டாலும்கூட இலக்கியப் படைப்பாளரின் சமூகளாவிய இலக்கிற்கு உட்பட்டு உருவாகிய இலக்கியமாகவே கருத முடியம்.
1.5.இலக்கிய வடிவங்களில் புதினம்
ஆங்கிலேய முதலாளித்துவத்தின் விளைவாக இந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் புதிதாக உருவான நடுத்தர வர்க்கச் சமூகத்திற்குரிய இலக்கிய வடிவமாகப் புதினம் உருவானது. ஆங்கிலேயக் கல்வி முறையின் வழியாகவே புதினம் என்றொரு இலக்கிய வடிவம் உருவெடுத்ததுபழைய செய்யுள் பாடல்களின் வடிவில் பழைய கதைகளை எழுதிய முறைகளிலிருந்து மாறுபட்டதாகப் புதின இலக்கியம் தோன்றியது. நெடுங்கதைகளைச் சொல்கின்ற காப்பிய வடிவிலான இலக்கியத்திற்கு மாற்றாக புதின இலக்கியங்கள் உருவெடுத்திருக்கின்றன. உரைநடை எனும் புதிய மொழிநடையில் புதிய நெடுங்கதைகளை எழுதுவதாக இவ்வகை இலக்கியங்கள் அமைகின்றன.
1.6.இனவரைவியல்
ஒரு குறிப்பிட்ட பண்பாட்டை உடைய இனத்தை முழுமையாக அறியும் துறைஇனவரைவியல்ஆகும். இது மானிடவியல் துறையில் உள்ள ஓர் உட்பிரிவாகும். எனவே இனவரைவியல் குறித்து ஆய்வதற்கு முன் மானிடவியல், மானிடவியல் வகை, சமூகப் பண்பாட்டு மானிடவியல் குறித்த செய்திகளைத் தொகுத்துரைப்பது அவசியமாகும்.
1.7.மானிடவியல்
மானிடவியல் என்பது கலை, அறிவியல் ஆகிய இரண்டு பண்புகளைக் கொண்ட ஒரு துறையாகும். மனித இனத்தைப் பற்றிய அறிவியல் தத்துவ நிலையிலிருந்து ஆராய்கின்றது.
அறிவுத் துறைகளிலேயே கலை, அறிவியல் இரண்டையுங் கொண்ட ஒரு பரந்த பயில்துறையாக மானிடவியல் விரிந்து நிற்கிறது. இது மனித குலத்தைச் சமூக-பண்பாட்டு நிலையிலும், உயிரியல் நிலையிலும், கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்து விரிந்த இலக்குடையதாக உள்ளது. (பக்தவத்சலபாரதி. 2005:x).
மனித இனத்தைப் பற்றிய ஆய்வு மானிடவியலாகும். (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் 2008 தொகுதி 3: 226) ஹோமோசேப்பியன்களிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்தி அறிய உதவும் சமுதாயப் பண்பாட்டுத் தனிச் சிறப்புகள் பற்றி மானிடவியலார் ஆராய்கின்றனர்.
மனிதனைப் பற்றிப் பேசக் கூடியது என்றும், மனிதனைப் பற்றிய அறிவியல் என்றும் குறிப்பிடப்படும் ஓர் ஆய்வுத்துறை மானிடவியல் ஆகும். (தனஞ்செயன் .2006:2)
மானிடவியல் என்பது அனைத்துத் துறைகளையும் (தொல்லியலாளர் வரலாற்றுக்கும் முந்தைய மானிட வரலாற்றையும், சமூகவியலாளர் மானிட சமூகத்தையும், உள்ளத்தியலாளர் மக்களின் நடத்தை முறைகளையும், மருத்துவவியலாளரும் உயிரியலாளரும் மானிட உடற்கூறுகள், செயற்பாடுகள் குறித்து ஒருசேர இணைத்து அனைத்துக் காலத்தையும் உள்ளடக்கி மானிடவியல் ஆராய்கின்றது. அதாவது மக்களின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஆராய்கிறது. இவ்வாறு மக்களின் உயிரியல் கூறுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் ஆராய்கிறது. (தகவல் களஞ்சியம் தொகுதி 13:797)
            மேற்கண்ட வரையறைகளின் வழியாக மானிடவியல் என்பது மக்களைப் பற்றி ஆராய்கின்ற முழுமை நோக்கிய அறிவியல் துறையாகும்.
1.7.1.மானிடவியல் வகைகள்
மானிடவியல் பல்வேறு நிலைகளில் மனிதர்களைப் பற்றி ஆராய்வதால் பல வகைப்பாடுகளை உள்ளடக்கியத் துறையாகும். மானிடவியலின் வகைகளை மானிடவியலாளர் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார். (பக்தவத்சல பாரதி 2003:68) அவை,
·         உடல்சார் மானிடவியல் (physical Anthropology)
·         தொல்லியல் சார் மானிடவியல் (Archealogical Anthropology)
·         மொழியியல் சார் மானிடவியல் (Linguistic Anthropology)
·         சமூகப்பண்பாட்டு மானிடவியல் (Socio-Cultural Anthropology)
மானிடவியல் பரந்த நிலையில் ஆராயும் துறையாக இருப்பதால் மேற்கூறிய ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன.
1.7.2.சமூகப் பண்பாட்டு மானிடவியல்
மானிடவியலின் ஒரு பிரிவான சமூகப் பண்பாட்டு மானிடவியல் இங்கிலாந்து நாட்டில் சமுதாய மானிடவியல் (Social Anthropology) என்றும், அமெரிக்க நாட்டில் பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthropology) என்றும் அழைக்கப்படுகின்றது.
            இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மானிடவியலாளர்கள் பழங்குடியினரையும், மேற்கத்தியர் அல்லாத மனித சமூக இனங்களைப் பற்றியும் 1960ம் ஆண்டுக்கு முன்புவரை ஆய்வு மேற்கொண்டனர். அமெரிக்க மானிடவியலாளர்களோ மக்களின் பண்பாட்டை மையமாகக் கொண்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். தொல்லியல், இனவரைவியல், செவிமரபியல், மொழியியல் ஆகிய துறைகளும் இத்துறைகளோடு தொடர்புள்ள துறைகளும் பயன்படுத்துகின்ற விதிமுறைகள், புள்ளிவிபரங்கள், கொள்கைகள் ஆகியவற்றைப் பண்பாட்டு மாளிடவியலாளர்கள் பயன்படுத்துகின்றார்கள். (பிரிட்டானிகா தகவல்களஞ்சியம் தொகுதி 2:805) இனவரைவியல் (Ethnography), இனவியல் (Ethnology)என இரண்டு வகையாக அமெரிக்க மானிடவியலார்  வகைப்படுத்தியுள்ளனர். சமுதாய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல் ஆகிய இரண்டும் 1960ம் ஆண்டு முதல் ஒன்றிணைந்து சமூகப் பண்பாட்டு மானிடவியல் என்பதாக இயங்கத் தொடங்கின.
1.8.இனவரைவியல் சொல் விளக்கம்
இனவரைவியல் என்னும் சொல் (Ethnography) எத்தினோகிராபி என்று ஆங்கிலத்தில்  அழைக்கப்படுகின்றது. Ethnography என்றும் ஆங்கில சொல்லின் மூல வடிவத்தை ஆராயும் மெக்ரியம் வெப்ஸ்டர் அகராதி இச்சொல்லின் மூலவடிவம் Ethnographie என்னும் பிரெஞ்சு மொழிச் சொல்லாகும். இச்சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட ஆண்டு கி.பி.1834 ஆகும். (அன்புச்செல்வன் 2010:26)
Ethnography என்னும் ஆங்கிலச் சொல் ‘Ethinos’ ‘Graphein’ என்னும் இரண்டு கிரேக்கச் சொற்களில் இருந்து தோன்றியது. (பக்தவத்சல பாரதி 2003:117)  Ethnos என்னும் ஆங்கிலச் சொல்லும் Graphein என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து Graphy என்ற ஆங்கிலச் சொல்லும் தோன்றின. Ethnos என்பது இனம் என்ற பொருளையும் Graphein என்பது எழுதுதல் அல்லது வரைதல் என்ற பொருளையும் உணர்த்துகின்றன. இரண்டு சொற்களையும் நோக்கும் போது குறிப்பிட்ட மக்களினத்தைப் பற்றி எழுதுவதே இனவரைவியல் என்பது உறுதியாகின்றது.
தமிழில் Ethnography என்னும் ஆங்கிலச் சொல்லைக் குறிக்க இனவரைவியல், இனக் குழுவியல், இனவரைவு, இன அமைப்பியல் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இனவரைவியல் என்ற சொல் பெரு வழக்காகப் பயன்படுத்தப்படுவதால் அச்சொல்லே இவ்வாய்வேட்டிலும் பயன்படுத்தப்படுகின்றது.
1.8.1.இனவரைவியல் ஆய்வின் தொடக்கம்
மானிடவியலார், இனவரைவியல் ஆய்வின் தொடக்கமானது கிரேக்கப் பயணியும் வரலாற்றியலின் தந்தையுமான ஹெரோடாட்டஸ் (Herodotus) முதலாகத் தொடங்குவர் (பக்தவத்சல பாரதி 2003:20). இவர் வாழ்ந்த காலம் 5ம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் அந்நூற்றாண்டின் பிற்பகுதி வரையாகும். இவர் கிழக்கு மேற்காக 1700 மைல்களும் தெற்கு வடக்காக 1600 மைல்களும் பயணம் செய்த பின்னர்பாரசீக போர்களின் வரலாறுஎன்ற நூலை எழுதினார். இவர் பல்வேறு மக்களினத்தைப் பற்றி ஆராய்ந்துள்ளார்.
            ஹெரோடாட்டஸ் (Herodotus) தம் நூலில் 50க்கும் மேற்பட்ட மக்களினத்தைப் பற்றி விவரித்துள்ளார். இவர் தம்முடைய நூலில் ஒவ்வொரு இனத்தவரும் வாழ்ந்த புவியியல் இயற்கைக்கூறு, அம்மக்கள் பேசிய மொழி, அம்மக்களின் உருவ அமைப்பு, பொருள் சார் பண்பாடு, திருமண முறை, மணவிலக்கு முறை, சமுதாய சட்ட முறைகள், அரசு, நீதிமுறைகள், போர், சமயம் போன்ற பல கூறுகளை விரிவாகக் கூறுகிறார். அதோடு குழந்தையைப் பெற்றெடுக்கும் பேறுகாலத்தின்போது மனைவி பெறும் துன்பங்களுக்கும் விலக்குகளுக்கும் ஈடாகக் கணவனும் அவ்வகையான சிரமங்களை ஏற்கும் பேறுகாலத் தனிமையை (couvade) முதன்முதலில் கண்டறிந்து எழுதினார். 50க்கும் மேற்பட்ட மனித இனங்களை அவர்களின் சூழ்நிலைகளைப் புரிந்து ஆராய்ந்து எழுதிய முதல் அறிஞர் இவரே ஆவர். இவருடைய காலத்தில் இனவரைவியல் என்னும் துறை தோன்றவில்லை என்றாலும் மானிடவியல் தொடர்பான செய்திகளைத் தொகுத்தார்.
            ஹெரோடாட்டஸைத் தொடர்ந்து கிறிஸ்துவப் பயணிகள், கிறிஸ்துவ மத போதகர்கள், சமயப் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோர் தாங்கள் சந்திக்க நேர்ந்த வெள்ளையர் அல்லாத மக்களைப்பற்றி எழுதிய குறிப்புகள் இனவரைவியல் பதிவுகளாகக் கிடைக்கின்றன. ஆயினும் இனவரைவியலை ஆய்வு நோக்கில் நிகழ்த்தியக் காலம் கி.பி.19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.
1.8.2.இனவரைவியல் ஆய்வின் வளர்ச்சி
இனவரைவியல் ஆய்வானது அன்று முதல் இன்று வரை அடைந்துள்ள வளர்ச்சி நிலைகளைப் பகுப்பதில் இனவியலாளர்கள் இடையே மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன. அவற்றுள் தனஞ்செயன், ஜேமிசன், பக்தவத்சலபாரதி ஆகியோரது கருத்துக்கள் குறிப்பிடத்தகுந்தன.
1.8.2.1.தனஞ்செயன் பகுப்பு
இனவரைவியல் ஆய்வின் வளர்ச்சி நிலைகள் இரண்டாகப் பகுக்கப்படுகிறது (தனஞ்செயன், .2006:3,4) அவை:
1.பழைய அல்லது மரபான இனவரைவியல் காலம்
2.புதிய இனவரைவியல் காலம்
1.8.2.1.1. பழைய அல்லது மரபான இனவரைவியல் காலம்
          19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் உலகப்போர் நடந்தக் காலம் வரை உள்ள காலப்பகுதி பழைய அல்லது மரபான இனவரைவியல் காலம் ஆகும். ஒரு குறிப்பிட்ட பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் குழுவின் வாழ்வியல் நடத்தைகளை இனவரைவியலார் எப்படிப் பார்க்கிறாரோ அநதப் பார்வை தளத்திலிருந்து அப்பண்பாட்டை நோக்கும் அணுகுமுறையைக் கொண்டது பழைய அல்லது மரபான இனவரைவியல் காலமாகும்.
1.8.1.1.2. புதிய இனவரைவியல் காலம்
          இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த காலம் முதல் இன்று வரை உள்ள காலப்பகுதி புதிய இனவரைவியல் காலம் ஆகும். ஒரு குறிப்பிட்டப் பண்பாட்டைச் சேர்ந்த தகவலாளி தன்னுடைய பண்பாட்டை எப்படிப் பார்க்கிறானோ, அந்தப் பார்வை தளத்திலிருந்து அப்பண்பாட்டை நோக்கும் அணுகுமுறையைக் கொண்டது புதிய இனவரைவியல் காலமாகும்.
1.8.1.2.3. பழைய & புதிய இனவரைவியல் காலம்
          பழைய இனவரைவியல் காலத்தில் நிகழ்த்தப்பட்ட இனவரைவியல் ஆய்வுகளில், ஆய்விற்கு உட்படும் மக்கள் பேசுகின்ற மொழியை அவர்களிடம் பேசுவதற்கு உதவுகின்ற கருவியாக மட்டும் கருதப்பட்டது. ஆனால் புதிய இனவரைவியல் காலத்தில் நிகழ்த்தப்பெற்ற ஆய்வுகளில் ஆய்விற்குரிய பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் பேசுகின்ற மொழியை ஆய்விற்குத் திரட்டப்படும் தரவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
            பழைய இனவரைவியல் காலத்தில் நிகழ்த்தப்பெற்ற இனவரைவியல் ஆய்வுகளில் ஆய்விற்குரிய பண்பாட்டைச் சேர்ந்த மக்களின் மொழி சாராத நடத்தைகள் பற்றி மானிடவியலாளர்கள் முன்பே செய்து வைத்திருந்த வகைப்பாடுகளை அப்படியே தன் ஆய்வில் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் புதிய இனவரைவியல் காலத்தில் நிகழ்த்தப்பெற்ற ஆய்வுகளில் ஆய்விற்குரிய பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் தங்களின் மொழிசாரா நடத்தைகள் பற்றி என்ன விளக்கங்களை எடுத்துரைக்கிறார்களோ அவற்றை ஆய்விற்கு வேண்டிய தரவுகளாகத் திரட்டிக் கொள்கின்றனர்.
            பழைய இனவரைவியல் காலத்தில் நிகழ்த்தப்பெற்ற ஆய்வுகளில் தரவுகளைத் திரட்ட ஆய்வாளர் கேட்கும் கேள்விகளுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும் பண்பாட்டைச் சேர்ந்த தகவலாளி தந்த பதில்களை மட்டும் பதிவு செய்வதோடு நின்றுவிடாமல் தகவலாளி அப்பதில்களை வெளிப்படுத்தக் காரணமாக அமைந்த தூண்டல்களையும்  கேள்விகளையும் பதிவு செய்வது அவசியம் எனக் கருதினர். இவ்வாறு திரட்டப்படும் தரவுகள் துல்லியத்தன்மை உடையதாக இருக்கும் என நம்புகின்றனர்.
            எனவே, தனஞ்செயன் இனவரைவியல் ஆய்வின் வளர்ச்சி நிலையை இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து இரு காலகட்டமாகப் பகுத்துள்ளார் என்பதையும் பழைய இனவரைவியல் காலத்தை விட புதிய இனவரைவியல் காலத்தில் செய்யப்படும் இனவரைவியல் ஆய்விற்கான தரவுகளைத் திரட்டுவதில் புதிய நுட்பம் கையாளப்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.
1.8.2.2.ஜேமிசன் பகுப்பு
ஜேமிசன் 1991ஆம் ஆண்டில் எழுதிய Post modernism or the cultural logic of late capitalism எனும் ஆய்வின் வளர்ச்சி நிலையை மூன்று காலக்கட்டங்களாகப் பகுத்துள்ளார். (பக்தவத்சலபாரதி 2005: 388,389) அவை, 1.எதார்த்த நிலைக்காலம், 2.நவீனத்துவம், உயர் நவீனத்துவக் காலம், 3.பின்னை நவீனத்துவம் தொடங்கி இன்று வரையிலான காலம் ஆகியன ஆகும்.
1.8.2.2.1.எதார்த்த நிலைக்காலம்
1860 ஆம் ஆண்டு முதல் 1920 ஆண்டு வரை உள்ள காலப்பகுதி இனவரைவியல் ஆய்வின் முதல் காலமாகிய எதார்த்த நிலைக்காலம் ஆகும். இக்காலக்கட்டத்தில் சந்தை, வட்டாரம் சார்ந்த குறிப்பிட்ட நோக்கம் உடைய இனவரைவியல் ஆய்வுகள் தோன்றின.
1.8.2.2.2.நவீனத்துவம் / உயர் நவீனத்துவம்
          இனவரைவியல் ஆய்வின் இரண்டாம் காலகட்டம் 1920 ஆம் ஆண்டு முதல் 1960ஆம் ஆண்டு வரை நீடித்தது. ஜேமிசன் இக்கால கட்டத்தை இனவரைவியல் ஆய்வின் பொற்காலம் எனக் குறிப்பிடுகிறார். இக்காலத்தில்தான் இனவரைவியல் ஆய்விற்கு முறைப்படுத்தப்பட்ட வரையறைகள் தோற்றம் பெற்றன. மேலும் முன்னுரிமை சார்ந்த உன்னதமான இனவரைவியல் ஆய்வுகள் இக்காலக்கட்டத்தில் தோன்றின.
1.8.2.2.3.பின்னை நவீனத்துவம் இனவரைவியலான காலம்
1960ஆம் ஆண்டு முதல் இன்றுவரையுள்ள காலப்பகுதி இனவரைவியல் அய்வின் மூன்றாம் காலகட்டம் ஆகும். இக்காலக்கட்டத்தில் இனவரைவியல் ஆய்வு அணுகுமுறையில் பல்வெறு வகைமைகள் தோன்றின. இவ்வாறு தோன்றிய இனவரைவியல் வகைமைகளைத் தெளிவற்ற வகைமைகள் என்று ஜேமிசன் குறிப்பிட்டுள்ளார்.
1.8.2.3.பக்தவத்சல பாரதி பகுப்பு
இனவரைவியல் ஆய்வின் வளர்ச்சி நிலை நான்கு படிநிலைகளாகப் பகுக்கப்படுகின்றது. (பக்தவத்சலபாரதி 2005:389,391) அவை 1.மரபான காலம், 2.நவீன காலம், 3.தெளிவற்ற வகைமைகள் காலம், 4.புதிய காலக்கட்டம் ஆகும். இலக்கிய மானிடவியல் என்ற நூலில் இனவரைவியல் வகைமைகளாக மூன்று முக்கியப் பகுப்புகளைச் செய்துள்ளார். 1.இயங்கியல் சார்ந்த இனவரைவியல், 2.காட்சி சார்ந்த இனவரைவியல், 3.கலைக் களஞ்சியம் சார்ந்த இனவரைவியல் ஆகும். இயங்கியல் சார்ந்த இனவரைவியல் ஆறு உட்பிரிவுகளைக் கொண்டிருப்பதாக விளக்குகிறார். 1. முழுமை சார்ந்தது, 2.தனிவகை சார்ந்தது, 3.தன்வரைவியல் சார்ந்தது, 4.விதிகளின் அமைப்பை ஆராய்வது சார்ந்தது, 5.வரலாறு சார்ந்தது, 6.அன்றாட வாழ்வியல் சார்ந்தது, காலமுறை சார்ந்தது ஆகும்.  (பக்தவத்சலபாரதி 2014:10-22)

1.8.2.3.1.மரபான காலம்
1900 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலகப்போர் வரையுள்ள காலப்பகுதி மரபான காலம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் இனவரைவியலாளர் விவரிப்பு முறையில் இனவரைவியல் ஆய்வை மேற்கொண்டனர். வெள்ளையர் அல்லாத சமூகத்தைப் பற்றி இக்காலக்கட்டத்தில் ஆராயப்பட்டது.
1.8.2.3.2.நவீன காலம்
இரண்டாம் உலகப்போர் முதல் 1960 ஆம் ஆண்டுவரை உள்ள காலப்பகுதி இனவரைவியல் ஆய்வின் நவீனக்காலம் ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் இனவரைவியலாளர் தமது ஆயவிற்கானத் தகவலைத் திரட்ட களப்பணியில் பல்வேறு உற்றுநோக்குதல் முறைகளைப் பின்பற்றினர். இனவரைவியலாளர் இந்தக் காலக்கட்டத்தில் சமூகத்தை விட்டு விலகல், சமூகத்தைக் கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகியச் சமூகச்செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்தனர்.
1.8.2.3.3.தெளிவற்ற வகைமைகள் காலம்
1970ஆம் ஆண்டு தொடங்கி 1986 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் தெளிவற்ற வகைமைகள் காலம் ஆகும். இக்காலகட்டத்தில் இனவரைவியல் ஆய்வை மேற்கொண்ட இனவரைவியலார் பல்வேறு வகையில் , பல்வேறு போக்கில், பல்வேறு அணுகுமுறையில்  ஆய்வு செய்தனர்.
1.8.2.3.4.புதிய காலகட்டம்
1980ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரையுள்ள  காலப்பகுதி புதிய காலகட்டம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் இனவரைவியல் ஆய்வில் எவற்றை முன்னிறுத்தி ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் இனவரைவியலாளர்களிடையே வேறுபட்ட கருத்துகள் நிலவின. அதனால் இந்தக் காலகட்டத்தில் கலப்புப் பனுவல்கள் தோன்றின.
      எனவே, ஜேமிசன், பக்தவத்சலபாரதி ஆகிய இருவரும் இனவரைவியல் ஆய்வுப்போக்கில்  ஏற்பட்டுள்ள மாறுதல்களை மையமாக வைத்து இனவரைவியல் ஆய்வின் வளர்ச்சி நிலைகளைப் பகுத்துள்ளனர். இனவரைவியலின் வகைகளைப் பக்தவத்சலபாரதி  (பக்தவத்சலபாரதி. 2014: 10-22) பின்வருமாறு விளக்குகிறார்.
1.8.2.3.5.இயங்கியல் இனவரைவியல்
            மனித சமூகமும் பண்பாடும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவை. இயக்கத்துடன் கூடிய அவற்றின் செயல்முறைகளையும் அமைப்பு முறைகளையும் விளக்குவதேஇயங்கியல் இனவரைவியல்ஆகும். இதில் பின்வரும் வகையினங்களாக இனவரைவியல் எழுதப்படுகின்றன.
1.8.2.3.5.1.முழுமை இனவரைவியல்
            ஒரு சமூகத்தின் அத்தனை விடயங்களையும் ஒரு தனிவரைவு நூலாக விவரிக்கும் அணுகுமுறையே முழுமைசார்ந்த இனவரைவியல் என்பதாக விளக்குகின்றார்.
1.8.2.3.5.2.தனித்துவம் சார்ந்த இனவரைவியல்
          ஆய்வு செய்யும் சமூகத்தின் அத்தனை விடயங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட விடயத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு ஆராய்வது தனித்துவம் சார்ந்த இனவரைவியல் என்கிறார். பகுதிகள் ஒன்று சேர்ந்தே முழுமையை உருவாக்குகின்றன. ஆதலின் பகுதிகளைத் தீவிரமாக ஆராய்தல் என்பது தனித்துவம் சார்ந்த இனவரைவியல் என்பதாக விளக்குகின்றார்.
1.8.2.3.5.3.தன்வரைவியல்
          பண்பாடு என்பது அனுபவத்தின் சேர்மமாக அமைகிறது. அனுபவங்களைத் தனிமனிதர்கள் குழுவாகச் சேர்ந்தும் பதிவு செய்யலாம். இப்பதிவினை ஆய்வாளர்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவ்வாறு சுயமாக ஓருவரால் பதிவு செய்யப்படும் அனுபவமேதன் இனவரைவியல்எனப்படுகின்றது. பண்பாட்டின் ஏதோ ஒரு அனுபவத்தைப் பற்றிய பதிவாக அது அமையலாம். அத்தகைய பதிவுகளும் இனவரைவியலின் ஒரு பகுதியாக அமையும். இனவரைவியல் என்பது ஓர் ஆசிரியர், ஆய்வாளர் மட்டுமே எழுத வேண்டியதில்லை. அதனுள் மற்றவர்கள் எழுதிய அனுபவங்களும் இடம்பெறலாம். அந்த வகையில் ஒரு பண்பாட்டுக்குரிய தனிநபர்கள் தங்கள் சொந்த அனுபவங்களைத் தானாகப் பதிவு செய்வனவற்றை இனவரைவியலில் கொண்டு வரலாம். இத்தகைய முயற்சியில் வாழ்க்கை வரலாறு சார்ந்த இனவரைவியல் குறிப்பிடத்தகுந்ததாகும். சமூகத்தின் குறைந்தபட்ச அடிப்படை அலகு தனிமனிதர்கள்தான். தனிமனிதர்கள் இணைந்து குடும்பம்; குடும்பங்கள் இணைந்து குலம்; குலங்கள் இணைந்து கிளைச்சாதி; கிளைச்சாதிகள் இணைந்து சாதி எனும் வரிசையில் தனிமனிதர்களை முன்னிலைப்படுத்தி அவர்களில் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி எழுதுவது இனவரைவியலில் ஒரு தனி வகையாகும்.
1.8.2.3.5.4.விதிகளின் அமைப்பை ஆராய்வது சார்ந்தது
ஒழுங்கமைப்பு சார் இனவரைவியல் என்ற தலைப்பில் இதனை விளக்குகிறார். ஒரு முழுமையில் பல பகுதிகள் அடங்கியிருக்கின்றன. இவையாவும் பரஸ்பரம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இவற்றின் செயல்பாடுகள் அம் முழுமையின் வாழ்வை வழிநடத்துகின்றன. இத்தகைய செயல்பாட்டில் விதிமுறைகள் ஓர் ஒழுங்குமுறைக்குள் கட்டுண்டு செயல்படுவனவாக உள்ளன. இந்த ஒழுங்குமுறைக்குள் செயல்படும் விதிகளின் அமைப்பை ஆராய்வது ஒழுங்கமைப்பு சார் இனவரைவியல் என்பதாக விளக்குகின்றார்.
1.8.2.3.5.5.வரலாற்று இனவரைவியல்
          சமூகப் பண்பாட்டு மானிடவியலில் அடிப்படையில் இரண்டு முதன்மையான அணுகுமுறைகள் உள்ளன. 1.தளப்பார்வை சார்ந்த ஆய்வுகள், 2.காலப்பார்வை சார்ந்த ஆய்வுகள் ஆகும். ஆய்வு செய்யும் காலத்தில் இருக்கக்கூடிய உறவு நிலைகளை மட்டும் கருத்தில் கொண்டு விளக்குவது தளப்பார்வை சார்ந்ததாகும். இத்தகு ஆய்வுகளில் வரலாற்றுத் தன்மை இருக்காது.பண்டைக் காலத்தில் உருவாக்கப்பட்ட முழுமையான இனவரைவியல்கள் அனைத்தும் தளப்பார்வை சார்ந்தவையாக இருந்தன. ஆனால் பிற்காலத்தில் வரலாற்றுப் பின்புலத்துடன் உருவாக்கும் இனவரைவியல்கள் ஏற்படத் தொடங்கின. அவற்றை வரலாற்று இனவரைவியல் என்றே இன்றைய அறிஞர்கள் வகைபடுத்துகிறார்கள்.
1.8.2.3.5.6.அன்றாட நிகழ்வுகள் சார்ந்த இனவரைவியல்
           ஒரு சமூகத்தை அல்லது பண்பாட்டை இனவரைவியல் நோக்கில் ஆராய்ந்து விளக்க வேண்டுமானால் அம்மக்களுடன் வாழ்ந்து, ஓர்ந்து விவரிக்க வேண்டும். அத்தகைய முயற்சியில் இனவரைவியலாளர் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளையும், ஒரு சுழற்சித்தளத்தில் காலவரிசைப்படி தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளையும் பங்கேற்று உற்றுநோக்கி ஆராய்ந்து விளக்குகின்ற எளிமையிலிருந்து சிக்கலை நோக்கி செல்லும் அணுகுமுறை என்பதாக விளக்குகின்றார்.
1.8.2.3.6.காட்சி சார் இனவரைவியல்
          எழுதுவதால் மட்டுமே ஒரு சமூகத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைத்துவிட முடியாது. எழுத்து ஊடகத்துக்கு அப்பால் சென்று சமூகத்தைக் காட்டுவதற்கு நிறைய வகைமைகள் உள்ளன. ஓரு பண்பாட்டில் உள்ள பொருட்களைக் கொண்டும் அப்பண்பாட்டை விளக்க இயலும். அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு காட்சிக் கூடமும் அங்குள்ள பொருட்களின் மூலம் ஏராளமான கருத்தக்களை எடுத்தரைக்கிறது. அவ்வாறே ஒரு சமூகத்தைப் பற்றிய நிழற்படங்களும், ஆவணப்படங்களும் பிற காட்சி சார்ந்த எடுத்துரைப்புகளும் பல்வேறு நிலைகளில் பொருள் கூறுபவையாக உள்ளன. எழுதப்படும் இனவரைவியல் பனுவல் மூலம் நூலாசிரியரின் கருத்துக்கள் மட்டுமே வாசகர்களக்கு கிடைக்கின்றன. ஆனால் காட்சி ஊடகமானது அதனால் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் பொருள் புரிய வைக்கிறது. காட்சி சார் இனவரைவியல் என்பது இனவரைவியல் வகைமைகளில் மிகவும் தனித்துவமானதாகும். மொழி அறியாதவரும் புரிந்துகொள்ள முடியும்.
1.8.2.3.7.கலைக்களஞ்சியம் முறை சார்ந்தது
          கலைக்களஞ்சியம் என்பதுஎல்லாவற்றையும் கொண்டதுஎன்று பொருளாகும். அதுபோலவே இனவரைவியலில் பொதுவாக இடம்பெறாத செய்திகளையும் இணைத்துக் கொடுக்கும்போது அது கலைக்களஞ்சிய வகையிலான இனவரைவியல் என்று பெயர் பெறுகிறது.
1.9.இனவரைவியல் வரையறைகள்
            இனவரைவியல் என்பது ஒரு குறிப்பிட்ட மானிட சமுதாயம் ஒன்றினைப் பற்றிய ஆராய்ச்சி விவரிப்பாகும் என்கிறது பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (புஷ்பா,கி.2012: 18). எனவே மானிடச் சமுதாயத்தை பற்றிய உண்மைகளை விவரித்து எழுதுவதே இனவரைவியல் என்பதை அறிய முடிகிறது. ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அல்லது வட்டாரத்தில் காணப்படும் அனைத்து வகையான மரபுகள் பற்றி நிகழ்த்தப்படும் விளக்கமுறை ஆய்வு இனவரைவியல் ஆகும் என்கிறார் புரூன். (புஷ்பா,கி.2012:18). ஏதேனும் ஒரு பண்பாட்டைப்பற்றி எழுதப்பட்ட வரைவு அல்லது விளக்கம் இனவரைவியல் ஆகும். என்கிறார் ஹெர்கோவிட்ஸ். (புஷ்பா,கி.2012:18). லெவிஸ்ட்ராஸ் பல்வேறுபட்ட இனக்குழுக்களின் தொலைநோக்குடைய வாழ்வியல் நெறிகளைக் கூடியவரையிலும் துல்லியமாகப் பதிவு செய்யும் குறிக்கோள் உடையது இனவரைவியல் ஆகும் என்கிறார். (புஷ்பா,கி.2012:19).
இனவரைவியல் என்பது ஒரு தனிப்பட்ட அல்லது குறிப்பிட்ட இனக்குழு மக்களைப் பற்றி எழுதுதல் மற்றும் முழுமையான கண்ணோட்ட ஆய்வு ஆகும். பண்பாட்டு ஆய்வுகளுக்கு இனவரைவியல் அடிப்படையாகும். ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை அல்லது பண்பாட்டை விளக்கும் கலை அல்லது அறிவியல் இனவரைவியல் என்று அழைக்கப்படும். (ஸ்டீபன் 2010:13)
ஒரு குழு அல்லது ஒரு பண்பாட்டைப் பற்றி விளக்கிக் கூறும் வர்ணனைக்கலை அறிவியல்தான் இனவரைவியல். இந்த வர்ணிப்பானது எங்கோ ஒரு நாட்டிலுள்ள சிறிய இனக்குழுவைப் பற்றியதாக இருக்கலாம் அல்லது ஒரு நடுத்தரமான நகரத்தில் உள்ள பள்ளிக்கூட சித்திரிப்பாகக்கூட இருக்கலாம் என்கிறார் பெடர்மென். (புஷ்பா,கி.2012:19).
எனவே இனவரைவியலானது வர்ணனைத் தன்மையும் அறிவியல் பண்பும் கொண்டதாகும் என்பதை இவ்வரையறையின் மூலம் அறிய இயலுகிறது.
ரோஜர் ஜான்ஸ் ஜெக் இனவரைவியல் என்னும் சொல்லானது இரட்டைப் பொருளுடையது. இனவரைவியல் என்பதே வெளிப்படையாகவும் (இனவரைவியல் பிரதிமானிடவியலாளர்களால் எழுதப்படும் கட்டுரை அல்லது நூல்கள்) செயல்பாடாகவும் (பங்கேற்று உற்றுநோக்கல், களப்பணி ஆகியவை) அமையும். (புஷ்பா,கி.2012: 19).
இனவரைவியல் என்பதுஒரு பயண எழுத்தாளரின் பயணக்கதை அல்லது புலனாய்வு அறிக்ககையைப் போன்றில்லாமல் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் மற்றும் விளக்கங்களை எப்படி முன்வைப்பார்களோ அப்படியே முன்வைப்பதாக அமைய வேண்டும்.
எழுத்தாளர் யாரைப் பற்றி எழுதுகிறானோ அந்த மக்களின் வாழ்க்கை முறைப் பற்றிய விளக்க உரைகள் விவர அறிக்கைகளை உருவாக்கக்கூடிய விசாரணைமுறை எழுத்து வடிவம் இனவரைவியல் ஆகும் என்கிறார் டென்சின். (புஷ்பா,கி.2012: 20).
 நமக்கு மிகவும் அன்னியமான பண்பாடுகளோடு போராடி அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கு  முக்கியத்துவம் அளிக்கக்கூடிய சமூக ஆய்வியல் முறையை இனவரைவியல் என்றோ நாட்டார் பார்வையிலான விவரிப்பு என்றோ அழைக்கின்றனர் என்கிறார் ஏகார். (புஷ்பா,கி.2012: 20).
எனவே இனவரைவியல் இரட்டைப் பரிணாமங்களைக் கொண்டது. ஓர் அய்வு முறையாகவும் எழுத்துப் பிரதியாகவும் சமூக ஆய்வு முறையாகவும் வரையறை செய்கின்றனர்.
ஒரு தனித்த சமூகத்தின் பண்பாட்டைப் பற்றி மானிடவியலாளர்கள் அச்சமூகத்தோடு நீண்ட காலம் ஒன்றி வாழ்ந்து ஆய்வு செய்து அதனை எழுத்தில் எழுதி அளிக்கும் தனிவரைவு நூலே இனவரைவியல் எனப்படும். (பக்தவத்சலபாரதி 2005: 887)
இனவரைவியல் என்பது களப்பணியை அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டமாகும். அதாவது மானிடவியலாளர் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அல்லது ஏதேனும்  ஒரு துணைப் பண்பாட்டைப் பற்றி அப்பண்பாட்டைக் கொண்டிருக்கும் மக்களோடு குறிப்பிட்ட காலம் வரை தங்கியிருந்து அவர்களோடு  வாழ்ந்து அவரது அன்றாட வாழ்க்கையில் பங்கேற்று ஆராய்ந்து வெளிப்படுவதாகும். (தனஞ்செயன், .2006: 2)
இனவரைவியல் என்பது ஒரு குறிப்பிட்ட மனித சமூகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற களப்பணி பண்பாட்டு ஆய்வு முறையாகவோ ஆய்வின் வெளிப்பாடாகவோ அமையக்கூடிய முடிவகளின் பிரதியாகவோ இருக்கலாம். இதன் மூலம் அம்மக்களின் பண்பாடு, சட்டநியதிகள், வழிகாட்டுமுறைகள், சடங்குகள், சமயநிலைகள், போன்றவை வெளிவுலகிற்குப் புலப்படுத்தப்படுகின்றன. இவ்வரையறையானது அன்புச்செல்வன் பதிவாக அன்பரசன் ஆய்வின் மூலம் அறிய முடிவதாக ஆய்வாளர் புஷ்பா விளக்குகிறார். (புஷ்பா,கி.2012:21).
களப்பணியில் ஈடுபட்டு மக்களின் பண்பாட்டு முறைகளைப் பதிவு செய்வதே இனவரைவியல் ஆகும். இவ்வாறாக மக்களின் அன்றாட வாழ்வியல் கூறுகளை ஆராய்ந்து எழுதப்படுவது இனவரைவியல் என்பதை அறிய முடிகின்றது.
இனவரைவியல் என்பது களப்பணி மூலம் தரவுகளைத் திரட்டும் ஆய்வு முறையாகும். மக்களின் பண்பாட்டுக் கூறுகளாக மொழி, சமயம், சடங்குகள், நம்பிக்கைகள், தொழில் போன்ற பண்பாடு சார்ந்த அனைத்துவிதமான வாழ்வியல் கூறுகளைப் பற்றியும் அறிய இனவரைவியல் ஆய்வு அணுகுமுறை இன்றியமையாததாகும்.
1.10.இந்தியாவில் இனவரைவியல் ஆய்வு
இந்தியாவில் இனவரைவியல் ஆய்வு முதன்முதலாக ஆங்கிலேயர்களால் செய்யப்பட்டது. இந்தியாவில் இனவரைவியல் ஆய்வு தொடங்கிய விதம் குறித்துப் பக்தவத்சல பாரதி அவர்கள் நரிக்குறவர் இனவரைவியல் எனும் நூலிற்கு வழங்கியுள்ள அணிந்துரையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். “இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முதல் பெருங்கிளர்ச்சி மே 10, 1857 இல் ஏற்பட்ட பின்னர்தான் இந்தியக் குடிகளைப் பற்றி நாம் பெரிதும் அறியாதவராய் உள்ளோம் என ஆங்கிலேயர்கள் எண்ணத் தொடங்கினர். இன்னும் சில நூற்றாண்டுகள் இந்திய மண்ணை ஆண்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் 1860களில் இந்திய மக்களைப் பற்றிய வட்டார ரீதியான தகவல்களைப் புள்ளிவிபரப்படி முறையாகத் தொகுக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.
            1862ல் ஒவ்வொரு மாவட்டத்திற்கென்றும் ஒரு தனிக் கையேடு உருவாக்குவது அவசியம் எனத் தீர்மானித்து விசாகப்பட்டினம் ஆட்சியராக இருந்த கார் மைக்கேல், மதுரை ஆட்சியராக இருந்த நெல்சன் ஆகிய இருவரும் கையேடுகள் தயாரிக்குமாறு பணிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தில் 1800 களின் முடிவில் அனைத்து மாவட்டங்களுக்கும் கையேடுகள் தயாரிக்கப்பட்டன. (பக்தவத்சலபாரதி 2004:5)
            எனவே இந்தியாவைப் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து ஆள வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வாழ்கின்ற சமூகம் குறித்து அறிந்துகொள்ள கையேடுகளைத் தயாரித்தனர். கையேடுகளைத் தயாரிக்க இந்திய சமூகங்கள் குறித்து ஆங்கிலேயர் செய்த ஆய்வுதான் இந்தியாவில் செய்யப்பட்ட முதல் இனவரைவியல் ஆய்வாக அறிய முடிகின்றது.
            இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்தபிறகு இந்தியர்களால் இனவரைவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியர்கள் செய்த இனவரைவியல் ஆய்வியல் கோட்பாட்டின் நுட்பம் இல்லாமல் விவரணப் போக்கு மட்டுமே பின்பற்றப்பட்டது.
1.11.இனவரைவியல் கூறுகள்

இனவரைவியல் என்பது பண்பாட்டை எழுதுவது ஆகும். பண்பாடு என்பது பல கூறுகளின் தொகுப்பு ஆகும். ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் பண்பாட்டை இனவரைவியல் நூலாக எழுத முற்படும் இனவரைவியலாளர் பின்வரும் கூறுகளை இனங்கண்டு விளக்குவர். அவை, 1.புவிச் சூழலியல் 2.சுற்றுச் சூழல், 3.காலநிலை 4. குடியிருப்பு முறை 5.பொருள்சார் பண்பாடு 6.குடும்ப அமைப்பு 7.உறைவிடமுறை 8.திருமணமுறை, 9. வாழ்வியல் சடங்குகள் 10,குழந்தை வளர்ப்பு முறை, 11.பண்பாட்டுவயமாக்க முறை12.மக்களின் உள்ளத்தியல் பாங்குகள், 13.மணக்குடை, 14.மணவிலக்குமுறை, 15. வாழ்க்கைப் பொருளாதாரம் 16.தொழிற்பகுப்பு 17.உற்பத்திமுறை, 18.நுகர்வு முறை, 19.பங்கீட்டு முறை, 20.பரிமாற்ற முறை, 21.கைவினைத் தொழில்கள், 22.அரசியல் முறை, 23.அதிகார உறவுகள், 24.சமூகக் கட்டுப்பாடு, 25.மரபுசார் சட்டங்கள், 26.சமய நம்பிக்கைகள், 27.சடங்குகள், 28.வழிபாட்டு முறைகள், 29.சூனியம், 30.வழக்காறுகள், 31.விழாக்கள், 32.இசை, 33.விளையாட்டுக்கள், 34.அழகியற் சிந்தனைகள், 35.வழக்காறுகள், 36.ஈமச்சடங்குகள் முதலியவை ஒரு தனிப்பட்டச்  சமூகத்தைப் பற்றியதாக இருப்பதால் இனவவைியல் நூல்கள் தனிவரைவு நூல்கள் என்றும் அழைக்கப்படும் என்கிறார் (பக்தவத்சல பாரதி 2003:118,119). இலக்கிய மானிடவியல் எனும் நூலில் 53 கூறுகளைச் சுட்டுகிறார். 1.நில அமைப்பு, 2.சுற்றுச்சூழல், 3.காலநிலை, 4.பருவகாலங்கள், 5.மழைவெப்பம், 6.தாவரங்கள், விலங்குகள், 7.வாழிடம், 8.குடியிருப்பு முறை, 9.புழங்கு பொருட்கள், 10.குடும்ப அமைப்பு, 11.திருமண முறைகள், 12.மணக்கொடை, 13.மணவிலக்கு, 14.மறுமண முறைகள், 15.உறவுமுறை, 16.உறைவிடமுறை, 17.வாழ்க்கை வட்டச் சடங்குகள், 18.குழந்தைவளர்ப்பு முறை, 19.பண்பாட்டுவயமாக்க முறை, 20.உளவியற் பாங்குகள், 21.நடத்தை முறைகள், 22.வாழ்க்கைப் பொருளாதாரம், 23.தொழிற் பகுப்பு, 24.பாலினப்பாகுபாடு, 25.உற்பத்தி முறைகள், 26.நுகர்வு முறைகள், 27.பங்கீட்டு முறைகள், 28.பரிமாற்ற முறைகள், 29.உணவுமுறை, 30.கைவினைத் தொழில்கள், 31.அரசியல் முறைகள், 32.அதிகார உறவுகள், 33.சமூகக் கட்டுப்பாடு, 34.மரபுகள், சட்டங்கள், 35.குற்றங்கள், தண்டனைகள், 36.சமய நம்பிக்கைகள், 37.தெய்வ கணங்கள், 38.வழிபாட்டு முறைகள், 39.மந்திரம், சூனியம், 40.விழாக்கள், 41.இசை மரபு, 42.நடனம், கூத்து, 43.விளையாட்டுகள், 44.அழகியற் சிந்தனைகள், 45.வாய்மொழி வழக்காறுகள், 46.மருத்துவமுறை, 47.போர், 48.அறிதிறன் முறைகள், 49.வகைப்பாட்டு முறைகள், 50.ஆடை அணிகளன்கள், 51.மரபுசார் அறிவு, 52.உலகப் பார்வை, 53.பிரபஞ்சம் பற்றிய அறிவு (பக்தவத்சலபாரதி.2014: 7-9). ஒரு சமூகத்தைப் பற்றித் தொகுக்கும் இனவரைவியல் செய்திகள் அனைத்தும் அச்சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் என்பது புலனாகின்றது.
...

இயல் – 1 இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள் 1

1 comment:

Sengai Podhuvan said...

எங்கெங்கோ படித்து நிரல் படுத்தித் தொகுத்துள்ளீர்கள். பயனுள்ள பாருவை.

அதிகம் படித்தவை