எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, June 2, 2017

இயல் – 4 வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும் 1

4.5.நவீன அரசுகளின் அதிகாரத்திற்கு ஆட்படுதல்
பல தலைமுறைகளாக சோளகர்கள் தங்களது பூமியில் இராகி போன்ற தானியங்களை விவசாயம் செய்து வருகிறார்கள். எந்த அதிகாரத்திற்கும் உட்படாமல் சுதந்திரமாக உழைத்து விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுவருகிறார்கள். மணியகாரன் இந்த பூமியை தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று துரையன் பெயருக்குப் பட்டா ரசீது வாங்கிவருகிறான். சோளகர்கள் தலைமுறை கடந்து உரிமை கொண்டாடும் விவசாய பூமியை அரசாங்கப் பட்டா மூலமாக துரையன் அபகரித்துக்கொள்கிறான். இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்ந்து உழைத்துப் பெற்ற நில உரிமையைச் சொத்ததிகாரர்களின் அரசாங்கப் பட்டா எளிதாக மறுத்துவிடுகின்றது. அரசதிகாரம் கொடுக்கின்ற பட்டா மூலமாக சோளகர்களின் பாரம்பரிய நிலஉரிமையைச் சொத்ததிகாரம் உடையவர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள். சோளகர்களின் வன  உரிமைகள் அனைத்தையும் நவீன அரசதிகாரம் உட்செரித்துவிடுகின்றது.
            கொல்லி மலை மலையாளிகள் தங்களது தர்மகர்த்தா தலைமையில் நடைபெறுகின்ற பஞ்சாயத்திற்கும் அதனது வழக்கமான முறையியலுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு வாழ்கின்ற வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்திய பிரதேசம் ஆங்கிலேய காலனிய அதிகாரத்தின் பிடியிலிருந்து தனது அரசியல் சுதந்திரத்தைக் கைப்பற்றியப் பிறகும்  பழைய காலனியத்தின் வழிமாதிரி வடிவங்களாக நிலவுகின்ற அரசாங்க நிறுவனங்களுக்குக் கட்டுபடுகின்ற வழக்கத்திற்கு மலையாளிப் பழங்குடிகள் ஆட்பட்டிருக்கிறார்கள். மலையாளிகளின் பிரச்சனைகளுக்கு விசாரணை செய்து நீதி வழங்குகின்ற தர்மகர்த்தா தனக்காக ஒரு வழக்கறிஞரை நியமித்துக்கொண்டு ஒரு வழக்கிற்கு நீதி வேண்டி நவீன அரசின் அதிகாரமாகிய நீதிமன்றத்தை நாடுகிறார். வழக்கிற்குத் தேவையான பொய்சாட்சியாகத் தனது சக மலையாளியான சாவித்திருமனை அழைத்துச் செல்கிறார். (சின்னப்ப பாரதி,கு. 2008: 74). மலையாளிகள் தங்களது வன உரிமையின் அடிப்படையில் ஆடு மாடு மேய்த்த குற்றத்திற்காக வனத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் குற்றப்பணத்தை தீர்மானிக்கிறார்கள். மலையாளிகள் பணிந்து குற்றப்பணத்தைச் செலுத்திவிட்டுக் கால்நடைகளை மீட்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 176-178). இவ்வாறாகக் கொல்லிமலை மலையாளிகள் நவீன அரசதிகாரமாகிய காவல்துறை, வனத்துறை, நீதித்துறை போன்ற வடிவங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறார்கள். வனங்களில் ஆடுமாடுகளை மேய்த்ததற்காக குற்றப்பணம் கொடுக்கும்படி வனத்துறை காவலர்கள் அதிகாரம் செய்கிறார்கள். ஊர் தர்மகர்த்தா உட்பட அனைவரும் பணிகிறார்கள். சிலோன் சீரங்கன் மட்டும் பணிய மறுக்கிறான். வனத்துறைக்கு கட்டுப்பாடில்லாத பொது இடத்தில் ஆடு மாடுகளை ஓட்டிச் சென்றவர்களை வழிமறித்து குற்றப்பணம் செலுத்துவது நியாயமில்லை என்பதாக அவனது வாதம் அமைந்திருக்கின்றது. வனத்துறையை எதிர்த்துப் பேசியதற்காக வனத்துறையினரின் பழிவாங்கும் முயற்சி அமைகின்றது. குற்றப்பணம் கட்ட மறுப்பவர்களைக் காவல்நிலையத்திற்கு இழுத்துச்செல்கின்றனர்பெரியசாமி என்பவனை மட்டும் இரண்டு நாட்கள் துன்புறுத்திவிட்டு விடுதலை செய்கிறார்கள். சீரங்கனும் சடையனும் பொய் வழக்குச் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். அவர்கள் மரம் கடத்தியதாகவும் தடுக்க முயன்ற வனத்துறையினரைக் கொலை செய்யும் முயற்சியுடன் தாக்கியதாகவும் பொய் வழக்கு தொடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 182).
            குமரியாற்று அணைத்திட்டத்தில் படகர்கள் நிலங்களை இழக்கின்ற அவல நிலைக்கு ஆளாகிறார்கள். ஜோகி என்ற படகர் குமரியாற்றுத் திட்டத்திலிருந்து தனது நிலத்தை மீட்பதற்காக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப்பேச முயற்சி செய்கிறான். குமரியாற்று அணைத்திட்டத்தில் இளம் பொறியாளராக பணியாற்றுகின்ற நஞ்சனிடம் அவனது தாய் நிலத்தைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள்எப்படியாவது மாவட்ட ஆட்சியரிடம் பேசி நிலத்தை அபகரிக்க வேண்டாம் என்பதைச் சொல்லும்படி வேண்டுகிறாள். உணவு தரும் நிலத்தை இழந்து நாம் என்ன செய்ய முடியும் என்பதாக நொந்துகொள்கிறாள். அரசு அதிகாரத்தின் அங்கமாகிய மாவட்ட ஆட்சியரைச் சார்ந்துதான் நிலம் மீட்கப்பட முடியும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது.
            நிலம் இழப்பவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டு ரங்கக் கவுடர் என்ற படகர் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார். குமரியாற்று அணைக்கான தொழிற்சாலைகளில் பணி செய்வதற்காக வெளியூரிலிருந்து ஏராளமானவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது ஊதிய உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுகிறார்கள். நிலஅபகரிப்புக்கு எதிராகவும் ஊதிய உரிமைக்காகவும் நிகழும் கிளர்ச்சிகளைச் செங்கொடி இயக்கக்காரர்கள் வழிநடத்துகிறார்கள். இரண்டு போராட்டங்களையும் அரசு தனது காவல் படைகளைப் பயன்படுத்தி ஒடுக்குகின்றது. (ராஜம் கிருஷ்ணன். 2001: 397-399).
            தாணிக்கண்டி இருளர்கள் தங்களது பூர்வீக வனங்களை வனத்துறையினருக்குச் சொந்தமானதாக ஏற்றுக்கொள்கிறார்கள். வனத்திலுள்ள மரங்களை வெட்டிக் கடத்துபவர்களை வனத்துறையிடம் ஒப்படைத்து வனத்தைக் காக்கும் கடமையுடையவர்களாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். தாணிக்கண்டி இருளர்களில்  சிலரை மரக்கொள்ளையர்கள் பணத்திற்குப் பணிய செய்வதன் மூலமாக மரங்களை வெட்டிக் கடத்திச்செல்கிறார்கள். வனத்துறையினர் கடத்தல் மரங்களைக் கைப்பற்றியதும் வழக்கு தொடுக்கிறார்கள். மரக்கடத்தலை தொழிலாகச் செய்கின்ற முதலாளிகள் பற்றிய தகவல்களும் அவர்கள் மீதான நடவடிக்கைகளைப் பற்றியும் உரிய தகவல்கள் புதினத்திலும் இடம்பெறவில்லை. கூலிக்கு வேலைசெய்த இருளர்கள் வழக்கு, சிறை, தண்டனை போன்ற அரசின் அதிகார நடவடிக்கைகளுக்கு ஆளாகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 71).
            தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருளர்கள் உட்பட்ட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலுமாக நவீன அரசுகளின் அதிகாரத்திற்கு ஆட்பட்டதாக அமைந்திருக்கின்றன. நீதித்துறை, வனத்துறை, காவல்துறை, மாவட்ட ஆட்சியர் போன்ற அரசின் நிறுவன வடிவிலான அதிகாரங்களுக்கு உட்பட்டு வாழ்வதாகவே அவர்களது வாழ்க்கைமுறை அமைந்திருக்கின்றன.

4.6.இயற்கையின் பகை முரணுக்கு ஆளாக்கப்படுதல்
பழங்குடிகள் இயற்கையின் அங்கமாக வனங்களில் ஒத்திசைந்து வாழ்வதால் தங்களது அத்தியாவசியத் தேவைகளை வனங்களிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள். காய், கனி, கிழங்கு, தேன், மூங்கில், வேட்டைக்கான உயிரினங்கள், எளிமையான விவசாயப் பயன்பாட்டிற்கான நிலங்கள் ஆகியவற்றை வாழ்வின் ஆதாரத் தேவைகளுக்காக எடுத்துக்கொள்கிறார்கள். வன உயிரினங்களில் ஒன்றாகப் பல தலைமுறைகள்  ஒத்திசைந்து வாழ்ந்ததின் விளைவாக இவர்களுக்கு இயற்கையிலிருந்து இத்தகைய உரிமைகள் உருவாகியிருக்கின்றன. இவர்கள் காடுகளை அழிக்கும் நோக்கத்தில் இத்தகைய உரிமைகளைப் பயன்படுத்த மறுப்பவர்களாக வாழ்கிறார்கள். வனச் சூழல்களை எதிர்கொண்டு வாழ்கின்ற இவர்களது வாழ்க்கை முறைமைகள் இயற்கையுடன் நட்புமுரண் பாராட்டுவதாகவே அமைந்திருக்கின்றன. இலாப நோக்கத்தோடு பணம் சம்பாதிக்கின்றக் களமாக வனத்தைப் பயன்படுத்துகின்ற தொழிற்சாலைகளும், அரசின் அதிகார நிறுவனங்களும், வனக்கொள்ளையர்களும் மூங்கில் மரங்களையும் சந்தன மரங்களையும் அழித்து வனங்களைப் பாதிப்படையச் செய்கின்றனர். வனத்தின் மீதான இவர்களின் அதிகாரச் செயல்பாடுகள் இயற்கையுடனான பகைமுரணாக அமைந்திருக்கின்றன. பணத்திற்காக வனத்தை அழித்தல் எனும் கோட்பாட்டில் இயங்குகின்ற நாகரிக மனிதச் சமூகத்தால் உருவாக்கப்படுகின்ற இயற்கையின் பகைமுரண்கள் மனிதசமுதாயத்திற்கு வாழும் முன்னோர்களாகத் திகழ்கின்ற பழங்குடி மக்களையே நேரடியாகப் பாதிக்கின்றன. வனஉயிரினங்களால் பழங்குடி மக்களும் அவர்களின் சமூகப் பொருளுற்பத்திகளும் பெரிதளவும் அழிக்கப்படுகின்றன.
4.6.1.பகை முரண்சாலி அதிகாரி என்பவர் கோயம்புத்தூரிலிருந்து பொழுதுபோக்கிற்காகப் புலி வேட்டையாட சோளகர்களின் வனத்திற்கு வருகிறார். கொத்தல்லியை அழைத்துக்கொண்டு புலி வேட்டைக்குச்  செல்கிறார். கொத்தல்லியின் ஒத்துழைப்புடன் புலியை வேட்டையாடியதும் புலியின் அருகே அமர்ந்துப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். (பாலமுருகன்,.2013: 13). தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள நாற்றாம்பாளையம் வனப்பகுதியில் காட்டுக்கொள்ளையர்கள் யானைகளைக் கூட்டமாக அழித்து அவற்றின் தந்தங்களைக் கடத்துகிறார்கள். புலி, சிறுத்தை, கரடிகளை சுட்டு அவற்றின் உடலை வனத்திலேயே வீசிவிட்டு தோல்களையும் நகங்களையும் வெட்டி எடுத்துக்கொண்டு பணத்திற்கு விற்கிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 125-126). பொழுது போக்கிற்காக வேட்டையாடுதல் என்பதும் இலாப நோக்கத்திற்காக வேட்டையாடுதல் என்பதும் இயற்கையுடன் பகை முரண் பாராட்டுதலாக அமைகின்றன.
            சோளகர்களின் பூமியை அபகரித்த சொத்ததிகாரம் உடையவர்கள் விளைச்சல்களை வன உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்வேலியை அமைத்திருக்கிறார்கள். இரவு நேரங்களில் வேலியில் அடிபட்டு மான், பன்றி போன்ற வனஉயிரினங்கள் இறந்துபோகின்றன. (பாலமுருகன்,.2013: 66). விவசாய இலாப நோக்கங்களுக்காக வன உயிரினங்களின் இயற்கையான வாழ்வியல் சூழலை அழித்தல் என்பது இயற்கையுடன் பகை முரண் பாராட்டுதலாக அமைகின்றன.
            வனங்களில் இயற்கையோடு ஒத்திசைந்து உருவாகியிருக்கின்ற வனத்தோட்டங்களையும் மரங்களையும் அழித்துத் தைல மரங்களை நடுவதற்கு வனத்துறையினர் திட்டமிடுகிறார்கள். வனத்தோடும் வன உயிரினங்களோடும் ஒத்திசைந்து தலைமுறை கடந்து வாழ்ந்து வனத்தின் மீதான உரிமையை உருவாக்கிக்கொண்டுள்ள மலையாளிகளிடமிருந்து நில உரிமையை வனத்துறையினர் அபகரிக்கிறார்கள். வனத்திலுள்ள இயற்கை வளங்களாகிய மரங்களை அழித்துப் பணப் பயிராகிய தைல மரங்களை நடுதல் என்பது பழங்குடிகளுக்கு மட்டுமல்ல வனத்திற்கும் வன வாழ் உயிரினங்களுக்கும் எதிரான செயலாக இருக்கின்றது. எனவே வனத்துறையினரின் இத்தகைய முயற்சி இயற்கையுடன் பகை முரண் பாராட்டுதலாக அமைகின்றது.
            தொழிற்சாலைகளின் இலாப நோக்கத்திற்காக வனத்தில் ஓடுகின்ற குமரியாற்றைத் தடுத்து அணைகட்டி மின்சாரம் தயாரிக்கின்ற முயற்சி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் பணியாட்களாக நியமிக்கப்பட்டு வனங்களையும் பாறைகளையும் அழித்து அணைகட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 333-334). இலாப இலக்கை முதன்மை நோக்கமாகக் கொண்டமைகின்ற தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக குமரியாற்றின் மீதான மின்சார உற்பத்தி முயற்சியானது இயற்கையுடன் பகைமுரண் பாராட்டுதலாக அமைகின்றது.
            மரகத மலையில் மண்ணுக்கு அந்நியமாகிய பணப்பயிர்களாகிய தேயிலை, காபி போன்ற பயிர்களை விளைவிப்பதற்காக வனங்களை ஆக்கிரமிக்கிறார்கள். வனங்களில் வன உயிரினங்களுக்கும் பழங்குடிகளுக்கும் வாழ்வியல் பயன்களை  விளைவித்த ஏராளமான மரங்களையும் செடி கொடிகளையும் அழித்து எரித்துத் தேயிலை தோட்டமாக உருமாற்றியிருக்கிறார்கள். பணம் அடைவதற்கான இலாப இலக்குடன் உருவாகின்ற தேயிலை தோட்ட உற்பத்தி என்பது அடிப்படையில் இயற்கையான வனங்களின் மீதான அழித்தல் சார்ந்த முயற்சியாகும். தேயிலைத் தோட்ட உற்பத்தி முயற்சியானது இயற்கையுடன் பகைமுரண் பாராட்டுதலாக அமைகின்றது.
            வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளில் வனங்களிலுள்ள யானைகள் பல தலைமுறைகளாகத் தங்களது உணவு, நீர் ஆதார வாழ்விற்காக ஒரு குறிப்பிட்ட பாதை முறையைப் பின்பற்றிக் குடும்பம் குடும்பமாகப் பயணம் செய்கின்றன. யானைகள் தமது பயணங்களுக்காக இயற்கையோடு ஒத்திசைந்து உருவாக்கிக்கொண்ட பாதைகளை வலசைப் பாதை என்கிறார்கள். பழங்குடி மக்கள் தங்களது வாழ்விடங்களையும் வாழ்க்கை முறைகளையும் இத்தகைய பாதைகளுக்கு இடையூறாக அமையாமல்  உருவாக்கிக்கொண்டிருந்தனர். வனத்துறையின் கட்டுப்பாடுகளுக்குள் வனங்கள் உள்வாங்கப்பட்டதும் பல வடிவங்களில் வலசைப் பாதைகள் அழிவுக்கு உள்ளாகின்றன. ஈசா யோகா போன்ற ஆன்மீக நிறுவனங்கள் வலசைப் பாதைகளில் நவீன கட்டிடங்களைக் கட்டிக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுகின்றன. இத்தகைய நிறுவனங்கள் யானை போன்ற வனவிலங்குகள் நுழையாமல் இருப்பதற்காக மின்வேலிகளைப் பயன்படுத்துகின்றன. மின்கம்பங்கள் அருகருகே இருக்கின்றன. யானைகள் தமது இயற்கையான வன உரிமைகளின் அடிப்படையில் வலசைப் பாதைகளில் செல்ல முயல்கின்றபோது மின்சாரம் தாக்கி இறந்துவிடுகின்றன. (ஆட்டனத்தி. 2010: 89). யானைகளின் வலசைப் பாதைகள் மீதான ஆக்கிரமிப்புகள் அனைத்தும் இயற்கையுடன் பகைமுரண் பாராட்டுதலாக அமைகின்றன.
            தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள வனங்களிலிருந்து ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலையுயர்ந்த மரங்களை வனத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மரக்கொள்ளையர்கள் கடத்திச் செல்கிறார்கள். ஏராளமான யானைகளை அவற்றின் தந்தங்களுக்காக  வேட்டையாடுகிறார்கள். அவற்றின் தந்தங்களை வனத்துறையினரின் ஒத்துழைப்புடன் அறுத்துச் செல்கிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 130). வனங்கள் அழிக்கப்படுவதும் தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுதலும் இயற்கையுடன் பகைமுரண் பாராட்டுகின்ற முயற்சிகளாகும்.
4.6.2.பகைமுரண்களை எதிர்கொள்ளுதல்யானைகளின் உணவாகிய மூங்கில்கள் முற்றிலுமாக வனங்களிலிருந்து அழிக்கப்படுவதனால் உணவிற்கு வழியின்றி பழங்குடிகளது விவசாய பூமியையும், தானிய பாதுகாப்பு வடிவமாகிய குத்தாரியையும் அழித்துத் தானியங்களை உண்பதற்காகச் சோளகர்கள் போன்ற பழங்குடிகளது எளிமையான வேலிகளை உடைத்துக்கொண்டு யானைகள் நுழைந்துவிடுகின்றன. மேலும் வலசைப் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளால் தாக்கப்பட்டு யானைகள் கொல்லப்படுவதாலும், தந்தங்களுக்காக மனிதர்களால் வேட்டையாடப்படுவதாலும் யானைகளது ஆழ்மன உணர்நிலையிலும் உணர்நிலை அறிவிலும் மனிதர்களைப் பகைவர்களாக உணரத்தொடங்கியிருக்கின்றன. இதனால் மனிதர்களைக் கண்டால் மிரட்சி கொண்டு தாக்குதலில் ஈடுபடுகின்றன. வலசைப் பாதைகளின் இடையூறுகளுக்கு அருகில் இருக்கின்ற தாணிக்கண்டி போன்ற இருளர்கள், பிற எளிய மனிதர்கள் யானைகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தங்களுக்கு ஆளாகின்றனர்.
4.7.வனம் பணமாக்கப்படுதல்
4.7.1.மரம் கடத்தப்படுதல் - பழங்குடிகள் வாழ்கின்ற வனப்பகுதிகளில் மூங்கில் மரங்கள் ஏராளமாக வளர்ந்திருக்கின்றன. இந்த மூங்கில்கள் வனங்களில் வாழ்கின்ற யானைகளுக்கு மிக முக்கிய உணவாதாரமாகத் திகழ்கின்றன. வன உயிரினங்களின் அங்கமாக வாழ்கின்ற பழங்குடிகள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு மூங்கில்களைப் பயன்படுத்தப்படுத்திக் கொள்கிறார்கள். உறைவிடமாகிய குடிசைகளையமைக்கவும், வன மிருகங்களிடமிருந்து வாழ்விடங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக வேலியமைக்கவும், விளைச்சல் தானியங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகக் குத்தாரியமைக்கவும் மூங்கில்களைப் பயன்படுத்திவருகிறார்கள். வனங்களோடு உறவில்லாத அந்நியர்கள் காகிதத் தொழிற்சாலைகளின் இலாப உற்பத்திற்க்குத் தேவையான மூங்கில்களை வனங்களிலிருந்து அழித்தெடுத்து லாரிலாரியாக ஏற்றிச் செல்கிறார்கள். தொழிற்சாலைகளின் இலாப நோக்கத்திற்குப் பயன்படுகின்ற தைலம் போன்ற பணம் தரும் மரங்களைக் காடுகளில் பரப்புவதற்காக வனங்களை அழிக்கிறார்கள். இயற்கையாகப் பல உயிரினங்களும் பயன்பெறும்படி ஒத்திசைந்து வளர்ந்துள்ள மரங்களையெல்லாம் அழிக்கிறார்கள்.
            சோளகர்களது வனங்களிலிருந்து மூங்கில் மரங்களை அழித்தெடுத்து லாரிகளில் கூப்பு கூப்பாக ஏற்றிச் செல்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 8).
            கொல்லிமலைக் காடுகளில் இரவு நேரங்களில் மரங்களை வெட்டிக் கீழ்நாட்டிற்குக் கடத்துகிறார்கள். மரக்கொள்ளையர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் வனத்துறையினர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதியளிக்கிறார்கள். மரம் அறுக்க ஆள் கிடைக்காவிட்டால் வனத்துறையினர் மலைமக்களைப் பிடித்துக்கொடுக்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 175). வெட்டப்படுகின்ற மரங்கள் லாரிகளில் இரகசியமாக ஏற்றிச் செல்லப்படுகின்றன.
            தொழிற்சாலைகளின் இலாப நோக்கத்திற்காகத் தாணிக்கண்டி வனப்பகுதியிலுள்ள ஈட்டிமரங்கள் வெட்டப்பட்டு லாரிகளில் கடத்தப்படுகின்றன. (ஆட்டனத்தி. 2010: 71).
            தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள வனங்களிலிருந்து ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலையுயர்ந்த மரங்களை வெட்டிக் காட்டை அழிக்கிறார்கள்வனத்துறையினரின் ஒத்துழைப்புடனும் பண்ணையார்களின் அதிகாரத்துடனும் இத்தகைய அநீதிகள் செயல்படுத்தப்படுகின்றன. (நஞ்சப்பன்,. 2007: 127).
4.7.2.தந்தம் கடத்தப்படுதல் - வனங்களில் வாழ்கின்ற முக்கிய உயிரினமாகிய யானைகளை வனக்கொள்ளையர்கள் தந்தங்களுக்காக வேட்டையாடுகிறார்கள். தந்தங்களை விற்றுப் பணம் சம்பாதிக்கின்ற இரகசிய கும்பல் தக்க பாதுகாப்புளுடன் கூலியாட்களை நியமித்துக் கொள்ளைத் தொழிலில் ஈடுபடுகின்றது. இந்தக் கும்பல் பற்றிய வெளிப்படையானத் தகவல்கள் புதினங்களிலும் இடம்பெறவில்லை. கொம்பன் யானைகளை வேட்டையாடி அவற்றின் தந்தங்களை வெட்டி எடுத்துக்கொண்டு உடலை விலங்குகள் திண்ணும்படி கிழித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
            சோளகர்கள் படகல் மாதேஸ்வரன் கோயிலுக்குச் செல்லும் வழியில் கொம்பன் யானை ஒன்று வேறொரு இடத்தில் குண்டடிபட்டு உயிர் தப்பி ஓடிவந்து  படகல் பகுதியில் இறந்திருக்கின்றது. அந்த யானையை அழைத்துச் செல்ல மற்ற யானைகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக சோளகனையிலுள்ள சோளகர்கள் விளக்குகிறார்கள். இறுதியாக வனத்துறையினர் ஜீப்பில் வந்து யானையின் தந்தங்களை வெட்டி எடுத்துக்கொண்டு உடலை வனவிலங்குகளுக்கு உணவாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 73).
            தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள வனங்களிலிருந்து ஏராளமான யானைகளைத் தந்தங்களுக்காக வேட்டையாடுகிறார்கள். தந்தங்கள் வெட்டியெடுக்கப்பட்ட இறந்துபோன யானைகளை வன விலங்குகளும் மலைக் கழுகுகளும் உண்கின்றன. இறைச்சியை உண்டக் கழுகுகள் யானைகளின் வயிற்றுக்குள்ளிருந்து வெளிவந்து வட்டமிடுகின்றன. (நஞ்சப்பன்,. 2007: 124-125).
4.7.3.பணப்பயிர் நடப்படுதல்கொல்லி மலை மலையாளிகளின் வனங்களிலுள்ள பலா, வாழை, அன்னாச்சி, மிளகு, பப்பாளி போன்ற பல பயன்தரும் மரங்கள் மலையாளிப் பழங்குடிகளுக்கும் வன உயிரினங்களின் வாழ்க்கைக்கும் பயன்படுகின்றன. இத்தகைய இயற்கையான வளங்களாகிய வனத்தோட்டங்களை அழித்துப் பண இலக்கிற்கு பயன்தரக்கூடியத் தைல மரங்களை நடுவதற்காக வனத்துறையினர் முயற்சிச் செய்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 333). அரசின் வனப்பாதுகாப்புக் கொள்கை பணம் தரு முறையில் வனத்தைப் உருவாக்குவதாக அமைகின்றது.
            மரகதமலையிலுள்ளவர்கள் இராகி, சாமை, தினை, கிழங்கு போன்ற உணவுப் பயிர்களை விளைவிக்கும் முயற்சியைப் படிப்படியாக கைவிடத் தொடங்கிவிட்டார்கள். சக மனிதர்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றுகின்ற பொறுப்புக்களை கைவிடத் தொடங்கிவிட்டார்கள். விவசாயம் என்பது பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என்ற புதியக் கோட்பாடு வாழ்க்கை முறையாக மாறியிருக்கின்றது. பணப்பயிர்களை விளைவித்துப் பணம் சம்பாதிப்பதற்காக மரகத மலைக் குன்றுகளையும் வனங்களையும் அழிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
4.8.கடன் சுமைக்கு ஆளாக்கப்படுதல்
கரடி வேட்டையாடியக் காரணத்திற்காக வனத்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ள சிக்குமாதாவைத் தொட்டி மக்கள் காப்பாற்றி அழைத்துவர முயற்சி செய்கிறார்கள். உதவி செய்வதாக உடன் வந்திருந்த மணியக்கார மாதப்பாவின் கையாள் அறுநூறு ரூபாய் கொடுத்து மீட்பதாகக் கூறுகிறான். தொட்டியினர் கைவசம் இருந்த தொன்னூற்றாறு ரூபாயைக் கொடுத்து மீதி ஐநூறு ரூபாய்க்குத் துரையனிடம் கடன்பட்டுச் சிக்குமாதாவை மீட்டு வருகின்றார்கள். தொட்டியினர் அனைவரும் ஒன்று பட்டுக் கடனை அடைப்பதாக உறுதிகொள்கிறார்கள். பருவ மழை பொய்த்த நிலைமையில் கடனை அடைக்க அவகாசம் தேவைப்படுகின்றது. சொத்ததிகாரமுடைய மணியக்கார மாதப்பாவின் உதவியுடன் பஞ்சாயத்து செய்து வட்டியுடன் எழுநூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். (பாலமுருகன்,.2013: 38-39).
            மலையாளிகளது பொருளாதார வாழ்வில் சந்தையிலுள்ள கந்து வட்டிக்காரர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். சந்தையின் அதிகாரம் முழுவதும் இவர்களிடம் இருக்கின்றது. மலையாளிகளது உற்பத்திப் பொருட்களை இவர்களது சந்தையில் அடிமட்ட விலைக்கு வியாபாரிகள் அபகரித்துக்கொள்கிறார்கள்மலையாளிகள் தங்களது வாழ்க்கையின் அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வனம் சார்ந்த உற்பத்தியைச் சந்தை பயன்பாட்டிற்குக் கொண்டுசெல்தல் என்பது போதாமையாகவே அமைகின்றது. இந்தப் போதமையிலிருந்து விடுபடுவதற்கான மாற்றுப்பொருளாதாரமாகச் சொத்ததிகாரர்களிடம் அதிக வட்டிக்குக் கடன் பெறுதல் மட்டுமே சாதகமாக அமைகின்றதுமலையாளிகளுக்கு அதிக வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் தவணைமுறை தவறாமல் வட்டியை வசூல் செய்கிறார்கள். உரிய தவணை நாளில் வட்டியைக் கொடுக்காதவர்களுக்கு கந்துவட்டிக்காரர்கள் கடுமையான தண்டனைகளை வழங்குகிறார்கள். தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்காகத் தவணை வட்டியைக் கட்ட வாய்ப்பில்லாதவர்கள் வேறு யாரிடமாவது கடன் வாங்கி வட்டியைக் கொடுத்துத் தப்பித்துக்கொள்ள முயல்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 115-124).
            படகர்கள் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்கிறார்கள். ஹட்டிச் சிறுவர்களின் ஆடு மாடு மேய்க்கின்ற வழக்கம் மறைந்து போய்விட்டது. பால் கறக்கும் புனித சடங்குகளில் சிறுவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. பள்ளிப் படிப்பை முடிக்கின்ற சிறுவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக நகரங்களில் இருக்கின்ற கல்லூரிகளுக்குச் சென்று படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பிள்ளைகளின் உயர் கல்வி இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காகப் பெற்றோர்கள் கடன் வாங்குகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 319).
            வேட்டையாடியதற்காகவும் வனத்திலிருந்து பொருட்களைச் சேகரித்ததற்காகவும் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருளர்கள் உட்பட்ட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்களில் வாழும் மக்களிடம் ஆயிரக் கணக்கில் குற்றப் பணத்தை வசூலிக்கின்றனர். குற்றப் பணத்தைக் கட்டி விடுதலையடைவதற்காகவும் பட்டா உரிமைக்காக அதிகாரிகள் கேட்கின்ற பொருட்களை வழங்குவதற்காகவும் பெருந்தொகையைக் கடன் பெற்று வாழ்கிறார்கள். கந்து வட்டிக்காரர்களிடம் பெருந்தொகையைக் கடன் பெற்று வட்டி கட்ட முடியாமல் துயரடைகிறார்கள். வட்டி பலவிதமாகப் பெருகி முதலைவிட அதிகரித்துச் சொத்துக்களை இழந்ததினால் தற்கொலை செய்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 86).
          தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினத்தில் கடன் சுமைக்கு ஆளாகுதல் பற்றிய செறிவான தகவல்கள் இடம்பெறவில்லை.
4.9.விழுமியங்கள் சிதைக்கப்படுதல்
பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வில் உயர்ந்த மதிப்புடையதாக உருவாக்கிக்கொண்டுள்ள தெய்வங்கள், முக்கியமான மனிதர்கள் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் அந்நியர்களின் அதிகாரங்களால் உதாசீனம் செய்யப்படுகின்றன, துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன.
            சோளகர்களது மணிராசன் கோயில் விழாவிற்காகப் பாலப்படுகையிலிருந்து உறவினர்கள் வருகிறார்கள். அவர்கள் மத்தளம் பீனாச்சி போன்ற இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு வருகிறார்கள். சோளகர் தொட்டியின் அருகே முகாமிட்டிருக்கின்ற கர்நாடக காவல்துறையினர் அவர்களை வழிமறித்து அடித்து உதைக்கிறார்கள். இசைக் கருவிகளை உடைத்தெறிகிறார்கள். எங்கேடா திருவிழா என்று ஏளனமாகப் பேசுகிறார்கள். (பாலமுருகன்,.2013: 123). சோளகர் தொட்டியிலிருந்தவர்கள் தங்களது உறவினர்களைக் காப்பாற்றுவதற்காக ஓடி வருகிறார்கள். அடிக்க வேண்டாமென்று கெஞ்சுகிறார்கள். அவர்களது கண்முன்னால் உறவினர்கள் அடிபட்ட அவலத்தைப் பொறுக்க முடியாமல் மணிராசன் திருவிழாவை நடத்துகின்ற முறையையே கைவிட்டுவிடுகிறார்கள். காவல்துறையின் அநாகரிகமான ஒடுக்குமுறையால் சோளகர்களின் மணிராசன் கோயில் திருவிழா உதாசீனம்செய்யப்பட்டுத் தடைபடுகின்றது.
            கார்நாடக காவல்துறையினர்கள் சோளகர் தொட்டியிலுள்ள ஆண்கள் அனைவரையும் தங்களது முகாமிற்கு வரச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். முகாமிற்குச் சென்ற சோளகர்களைப் புதிதாக வந்துள்ள ஒசியூரப்பா என்ற அதிகாரி விசாரிக்கிறான். தொட்டி மக்களது தலைவனாகிய கொத்தல்லியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவீரப்பனைத் தெரியுமாடாஎன்று விசாரிக்கிறான். (பாலமுருகன்,.2013: 123). தொட்டியினர் அனைவரும் பேரதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தொட்டியிலுள்ள அனைவரையும் இப்படி அடித்திருந்தால்கூட இத்தனை அவமானமாக உணர்ந்திருக்க மாட்டார்கள். தொட்டியினரின் மரியாதைக்குரிய பொறுப்பிலுள்ள கொத்தல்லியைக் கர்நாடக போலீஸ் அதிகாரி மிகவும் உதாசீனமாக நடத்துகிறான்.
            கர்நாடக காவல்துறை முகாமிற்குச் சோளகர் தொட்டி ஆண்கள் அனைவரும் கட்டாய இரவு பாதுகாப்பிற்கு வரச்சொல்லி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். கோல்காரன் தனது மனைவிக்கு உடல் நலமில்லாத நிலையில் உதவுவதற்காக குடிசையில் தங்கிவிடுகிறான். கோல்காரளைத்தவிர மற்றவர்கள் அனைவரும் இரவு முழுதும் தூங்காமல் மூங்கில்களைத் தட்டிக்கொண்டு காவல் செய்தார்கள். காவலை முடித்துத் தொட்டிக்குக் கிளம்பும்போது போலீசுக்காரர்கள் கோல்காரனை வீட்டிலிருந்து இழுத்துவந்து விசாரணைக்காக முகாமில் நிறுத்தியிருக்கிறார்கள். ஒசியூரப்பா தூக்கம் முடித்து வெளியே வருகிறான். கரியனை போலீசுக்காரர்களுடன் சுற்றிநின்று மூங்கில் கம்புகள் முறிபடும்வரை அடிக்கிறார்கள். “இவங்க எங்க குலத்தோட முக்கிய மனுசங்க. எங்கள மாதிரி ஆளுங்களை அடிச்சாக்கூடப் பரவாயில்லை. இவங்க மாதிரி ஆட்களை அடிச்சா சரியில்லைங்க, பாவங்க” (பாலமுருகன்,.2013:127) என்று சிவண்ணா காப்பாற்ற முயற்சி செய்தான். கரியன் உடல்முழுதும் இரத்தம் சொட்டிக்கிடக்கிறான்அவனைக் காப்பாற்ற குரல் கொடுத்தவர்கள் அனைவரும் அடித்துத் தாக்கப்படுகிறார்கள். மணிராசன் திருவிழாவில் முன்னோர்களது ஆவியை உடலில் தாங்கி அடக்கமுடியாதவனாக குதித்து ஆடும் கோல்காரன் தன் குலத்தார் அனைவரது முன்பாகவும் அடிபட்டு இழிவானவனாகக் கிடந்தான். மணிராசன் தெய்வத்திற்கு பூசை செய்யும் உரிமையும் மதயானையின் பலம்கொண்ட ஆவியைத் தன்னுடலில் தாங்கும் வலிமையும் உடைய கோல்காரனை கர்நாடக காவல்துறையினர்கள் அடித்துச் சித்திரவதை செய்து உதாசீனம் செய்திருக்கிறார்கள்.
            சிவண்ணாவின் மனைவி மாதியும் அவளது மகள் சித்தியும் சிறையில் காவல்துறையினர்களால் பல விதமான சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள். சிறை சென்ற முதல் நாள் இரவில் ஒரு காவலன் அழைக்கிறான். இன்று வந்த பெண்களெல்லாம் வெளியே வாங்க என்று மாதி, சித்தி, சரசு என்று பெயர்சொல்லி அழைக்கிறான். மூவரும் ஏழு காவல்துறை அதிகாரிகளால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள்தன்னையும் தன் மகளையும் காப்பாற்றிக்கொள்ள முடியாத மாதி பிணம்போலக் கிடக்கிறாள். அவள் கண்ணில் அவளுக்குப் பழக்கப்பட்ட ஒற்றை நட்சத்திரம் தெரிகின்றது. அந்த நட்சத்திரத்தைப்பார்த்துநான் ஒரு பிணம்என்று சொல்லிக்கொள்கிறாள். சிறிய மௌனத்திற்குப் பிறகுநீயும் கூடத்தான் மாதேஸ்வராஎன்று சொல்கிறாள். மாதேஸ்வர தெய்வத்தைப் பிணம் என்று நொந்து கொள்கிறாள். (பாலமுருகன்,.2013: 208).  காவல்துறையினரின் அநாகரிகமான ஒடுக்குமுறையால் தெய்வம் பற்றிய உயர்வான நம்பிக்கை சிதைக்கப்படுகின்றது.          
            தர்மகர்த்தா என்பவர் மலையாளிகளின் முக்கிய மனிதராகத் திகழ்கிறார். தர்மகர்த்தா மலையாளிகளது ஊர் தலைவர் ஆவார். அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர விசாரித்து நீதி சொல்கின்ற பஞ்சாயத்துத் தலைவர் ஆவார். வனத்துறையினரும் காவல்துறையினரும் கந்துவட்டிக்காரர்களும் மலையாளிகளை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை என்பதை அவர்களது பல்வேறு அணுகுமுறைகள் விளக்குகின்றன. தர்மகர்த்தா மீதான அவர்களது அணுகுமுறை மிக முக்கியமான சான்றாக அமைகின்றது. தர்மகர்த்தா அவர்களிடம் ஒரு அடிமையைப் போல பணிந்து நடந்துகொள்கிறார்ஊரின் சலவைக்கல் மைதானத்தில் தலைவராகக் கம்பீரமாக அமர்ந்திருக்கின்ற தர்மகர்த்தா அவர்களுக்கு முன்பாக இருக்கின்றபோது அடிமையைப் போல அடங்கி ஒடுங்கி நடந்துகொள்கிறார். ஆடு மாடு மேய்த்தவர்களுக்குக் குற்றப்பணம் விதிக்கின்ற சூழலில் காவல் அதிகாரி ஊர் தர்மகர்த்தாவைத் தனது காலடியில் அமரச்சொல்லிப் பணிக்கிறார். தர்மகர்த்தா அவனது காலடியில் கெஞ்சுதலுடன் அமர்கிறார். (சின்னப்ப பாரதி,கு. 2008: 174). மலையாளிகளின் மிக முக்கியமான விழுமியமாகத் திகழ்கின்ற தர்மகர்த்தாவின் சுயமரியாதையை உதாசீனம் செய்வதன் மூலமாக ஒட்டுமொத்த மலையாளிகளின் மரியாதையையும் அதிகாரிகள் உதாசீனம் செய்கிறார்கள்.
            தேன்கனிக்கோட்டை வட்டம் நாற்றாம்பாளையத்திலுள்ள தேவர்காடு என்ற வனப்பகுதியைத் தெய்வம் உறைந்திருக்கின்ற வனமாகக் கருதுகிறார்கள். இருளர்கள் உட்பட்ட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்களில் வாழும் மக்கள் தேவர்காட்டில் வேட்டையாடுதலோ பிறச் செடிக் கொடி மரங்களுக்குத் தீங்கு செய்தலோ கூடாது என்று கருதுகிறார்கள். தேவர்காட்டை வழிபாட்டிற்குரிய பகுதியாகக் கருதுகிறார்கள். இந்தக் காட்டில் யாரேனும் வேட்டையாட முயன்றால்கூட அவர்களது ஆயுதங்களால் உயிரினங்கள் இறக்காது என்பதாக நம்புகிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 128). மக்களின் உயர்ந்த மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய இடமாகக் கருதப்படுகின்ற தேவர்காட்டை மரக்கொள்ளையர்களும் தந்தத்திற்காக வேட்டையாடுபவர்களும் உதாசீனம் செய்கிறார்கள். அவர்களது அன்றாட வனக்கொள்ளைக்கான களமாகத் தேவர்காடு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

            படகர்கள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினத்தில் விழுமியங்கள் சிதைக்கப்படுதல் பற்றிய செறிவானத் தகவல்கள் இடம்பெறவில்லை.

... 

இயல் – 4 வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும் 2

No comments:

அதிகம் படித்தவை