எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

அறிமுகம்




வணக்கம் நண்பர்களே... எல்லோரும் நலமா! சாப்டீங்களா? உங்களையும் நினைத்து உங்களுக்காகவும் சேர்த்து சாப்பிட்டுவிட்டு உற்சாகமாகப் பேச வந்திருக்கேன். நீங்களும் சாப்பிட்டிருப்பீங்கன்னு நம்புறேன். யாராவது சாப்பிடாமல் இருந்தீங்கன்னா எனக்கும் சேர்த்து சாப்பி்ட்டு வாங்க தலைவர்களே..
     சரி, எல்லோரும் உற்சாகமாக இருப்பதாக நம்புகிறேன். நான் பேச வந்த விசயத்திற்கு வருகிறேன். எமது சமூகவிஞ்ஞான இலட்சியங்களின் அடிப்படையிலான எனது படைப்புகளுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவை வலிமைப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்திலிருந்து எனது வலைதள பகுதியை உருவாக்கியுள்ளோம். puthiyavansiva.blogspot.in என்ற வலைதள பக்கத்திலிருந்து நாம் உறவாடப் போகிறோம் என்பதில் அளவற்ற மகிழ்ச்சி. நமது சமூக உரையாடல் தொடரும் என்று நம்புகிறேன். அமுரா ராஜவேல் உட்பட சில நண்பர்கள் இத்தகைய வலைதள பக்கத்தை உருவாக்குமாறு வழியுறுத்தியபோதெல்லாம் என்னால் உருவாக்க இயலவில்லை. இத்தகைய உருவாக்கம் பற்றிய தொழில்நுட்ப அறிவு எனக்கு இல்லை என்பது முக்கியக் காரணம். இந்நிலையில் அக்கறையோடு எனக்கான வலைதளப் பக்கத்தை உருவாக்கித்தந்த செந்தனல் புதுமை கோபி என்ற நண்பருக்கு நன்றி பாராட்டி மகிழ்கிறேன். (கணினி வீரர் செந்தனல் கோபி அவர்கள் எமது வலைதள பக்கத்தை தொடர்ந்து வடிவமைக்க உதவுவார். அவருக்கு எனது நேசமிக்க நன்றிகள் என்றும் தொடரும்!)

எனக்குத் தெரிந்த எனது எழுத்து முயற்சிகளைப் பற்றி சிறிதாக  அறிமுகம் செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.
      சமூகவிஞ்ஞானக் களங்களிலிருந்து இந்தச் சமூகத்திற்கு எவை தேவையென நான் உணர்ந்திருக்கிறேனோ, அவற்றில் எனது சக்தியால் எவற்றைச் செயல்படுத்த முடியுமென நான் அறிந்திருக்கிறேனோ அவற்றையேச் செயல்படுத்த முயன்றிருக்கிறேன். இத்தகைய அடிப்படையிலிருந்து மட்டுமே எனது எழுத்து முயற்சி தொடர்கின்றது.
     இந்த முயற்சி சமூகளாவிய நிலையில் பல்வேறு பரிமாணங்களில் விரிந்து பரவ வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த விருப்பமும் சமூகத் தேவையின் அடிப்படையிலேயே தோன்றியிருப்பதாக உணர்கிறேன்.
     நான் எத்தகையவர்களை வாசகர்களாகக் கருதி எழுத்து முயற்சியில் ஈடுபடுகிறேனோ அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட விமர்சனங்களைப் பெரும்பகுதி சேகரித்து தொடர்ந்து படிப்பினைப் பெற்றுவருகிறேன்.

     எத்தகைய வாசகர்களுக்காக நான் எழுதுகிறேன் என அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

     சமூகவிஞ்ஞானக் களங்களில் புதிதாக அறிமுகமாகிறவர்களுக்காக..

.    சமூக விஞ்ஞானிகள் அமைப்பாக்க விரும்புகின்ற வெகுமக்களுக்காக...
     எழுத்துக்களைப் படிப்பதன் மூலமாக சிந்தனையையும் செயலையும் உணர்வுகளையும் சமூகளாவிய நிலையில்  பக்குவப்படுத்த முடியுமா என்றக் கேள்வியுடன் படிக்க முயல்கின்ற படிக்கத் தெரிந்த மக்களுக்காக...
     படிக்கத் தெரியாத மக்களுக்குப் பேச்சிலும் செயலிலும் சமூக அறிவை ஊட்ட முயல்கின்ற சமூக அக்கறையுடையத் தோழர்களுக்காக...
     சமூக அக்கறை, சமூக அறிவு, சமூகப் பாதுகாப்பு இவை மூன்றும் சங்கமித்திருக்கின்ற சமூக விஞ்ஞானிகளின் புத்துலகை நோக்கி கவனம் பெறுகின்ற சகமனிதர்களுக்காக... என இவர்களுக்காகவே நான் எழுத முயல்கிறேன்.
     நான் எழுத்து வடிவில் பேசுவது உரியவர்களின் உணர்வுகளுக்குச் சரியாகப் பயணப்படுகிறது என்பதை இவர்களின் விமர்சனங்களிலிருந்து உணரமுடிகிறது. உதாரணத்திற்கு திண்டிவனம் விவசாயி மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக காவலாளி ஐ.ரவிச்சந்திரன் மற்றும் இளங்கலை ஆங்கிலத்துறை மாணவ நண்பர் அமுரா ராஜவேல் அவர்களது விமர்சனம்.  இவர்களது அங்கீகாரங்கள் எனக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தருகின்றன.





என்ற பகுதியில் விமர்சன தகவல்களை அறிய முடியும்.




நான் எத்தகையவர்களுக்காக எழுதியிருக்கிறேனோ அவர்களிடமிருந்து விலகியிருக்கக்கூடியவர்களுக்கும், எழுத்துக்களை பரிந்துரைப்பதன் மூலமாக சமூகஅறிவை சகமக்களிடம் விரிவுபடுத்துவதில் தெளிவான வேலைத்திட்டம் இல்லாதவர்களுக்கும் எமது எழுத்தை வாசிப்பது மிகவும் சிரமமான வேலையாகவே அமையும். அவர்களுக்கு இந்த எழுத்துக்கள் கூரிய கற்களாகவும், சகிக்க முடியாதவையாகவும், புரிந்துகொள்ள இயலாததாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும், முகம்திருப்பிச்செல்ல வைப்பவையாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு எழுத்தாளர் போப்பு அவர்களது விமர்சனம்.
     இவற்றையும் கடந்து எனக்குரிய வாசகர்களென நான் கருதாத இத்தகையவர்களிலும் எமது நோக்கத்தை அங்கீகரித்து எழுத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு எழுத்தாளர் சூரியதீபன் என்ற பா.செயப்பிரகாசம் அவர்களது விமர்சம்.

     எனது எழுத்துக்களை சமூகவிஞ்ஞான இலட்சியங்கள் நோக்கிய அறிவியல் கலை இலக்கியத்தின்  முக்கிய முயற்சியாக நம்புகிறேன். எது அறிவியல்? எது கலை? எது இலக்கியம்? இவை பற்றிய எமது துல்லியமான வரையறையை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.


எது அறிவியல்?
அறிவியல் என்பது சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்காக அவர்களது புலனறிவு நிலையில் உண்மையை உணர்த்துகின்ற ஒரு துறையின் விளக்கங்களாகும்.


எது கலை?
கலை என்பது சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்காக அவர்களது உணர்வுநிலையில் உந்துதல் ஏற்படுத்துகின்ற வாழ்வியல் படைப்பாகும்.

எது இலக்கியம்?
இலக்கியம் என்பது சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்காக அவர்களது உணர்வுநிலையில் உந்துதல் ஏற்படுத்துகின்ற மொழியின் படைப்பாகும்.

     அறிவியல் கலை இலக்கியத்தின் சமூகத்தேவைக்கும் உழைப்பால் உலக சமூகத்தை இயக்கிக்கொண்டிருக்கின்ற சக மக்களுக்கும் இடையிலான உறவை மதிப்பிட முயல்கிறேன்.

  வாசிப்பாற்றலும் படைப்பாற்றலும் வளர்ச்சிபெற வாய்ப்பில்லாத உழைக்கின்ற பலகோடி மக்கள் ஒருபுறம்!

     வாசிப்பும் படைப்பும் மட்டுமே வாழ்க்கை என வாழ்கின்ற அறிவுஜீவி குழுக்கள் மறுபுறம்!

     அவர்களின் படைப்புகள் இவர்களின் பலருக்கு மதிப்பற்றதாகத் தெரிகிறது…

     இவர்களின் படைப்புகள் அவர்களின் பலருக்கு அறிய முடியாத பிரமாண்டமாகத் தெரிகிறது…

     இரண்டுக்கும் இடையில் அறிவியல் கலை இலக்கியங்கள் இலக்குகளை எட்ட முடியாமல் தடுமாறுகின்றன…

     இந்தத் தடுமாற்றத்தை நீக்கும் முயற்சியாக எனது எழுத்துக்களின் உத்தி முறையை அமைத்திருக்கிறேன்.

     பறையிசைத் தலைவன் தனது இசையாட்டக் குழுவில் பலவீனமானவர்களையும் பலமானவர்களையும் ஒரே வரிசையில் சமமாக ஆடிவரச் செய்வாரே அதுபோல நமது படைப்புகள் அமைய வேண்டும்.

     நமது படைப்பாற்றல் உழைக்கின்ற மக்களின் இரசனைக்கும் உயிர்ப்புடையதாக வேண்டும், அறிவுஜீவிகளின் ரசனைக்கும் மதிப்புடையதாக வேண்டும்…

உழைக்கின்ற மக்களே அறிவுஜீவிகளாகவும்
அறிவுஜீவிகளே உழைக்கின்ற மக்களாகவும்
பக்குவம் பெற்றுவிட்டால்,
படைப்புலகம் எத்தகைய அறிவியல் கலை இலக்கியப் படைப்புகளை வெளிப்படுத்துமோ அத்தகைய வெளிப்பாடுகளை நான் துவக்க முயன்றிருக்கிறேன்.

     சகமக்களின் அறிவியல் கலை இலக்கிய உணர்வுகளை வளர்க்கும் கடமையிலிருந்து விலகி அறிவியல் கலை இலக்கியம் தனியாக வளர்ந்து பிரமாண்டமாகத் தெரிவதில் பிரயோசணம் இல்லை எனக் கருதுகிறேன். சகமக்களின் வளர்ச்சியையும் இணைத்துக்கொண்டு செயல்படுகின்ற அறிவியல் கலை இலக்கியத்தின் புதிய வடிவங்கள் தேவைப்படுவதாகக் கருதுகிறேன். இதனடிப்படையிலேயே எனது எழுத்துக்கள் அமைந்திருப்பதாக நம்புகிறேன்.
     வாசிப்பு முகாம்களை உருவாக்குதல் என்ற வடிவங்களிலிருந்து எனது முயற்சி விலக முடியாததாகும். ஏனெனில் இந்தியச் சமூக நிலைமைகளில் வாசிப்பு முகாம்களே  எழுத்துக்களிலிருந்து சமூகளாவியக் கருத்துக்களை விடுதலை செய்யும் ஆற்றலுடையவையாகும்.
     நமது சமூகத்தில் உருவாகும் எந்த ஆற்றலுள்ள படைப்பும் பறையிசை ஆடலின் தலைமைக் கலைஞனின் செயலுக்கு நிகராக அமைய வேண்டுமெனக் கருதுகிறேன். எனது எழுத்துக்களின் தன்மையையும் இவ்வாறே அமைத்திருப்பதாக உணர்கிறேன்.
     எனது முயற்சி நமது வளர்ச்சியாக பரிணமிக்கும் என்று நம்புகிறேன்.
நமது வளர்ச்சி சமூகவிஞ்ஞானக் களங்களின் இலக்குகளை சாதிப்பதற்காக அமைய வேண்டும்!
     சோதித்துப் பாருங்கள் சாதித்துக் காட்டுவோம்!
     நமது விருப்பு வெறுப்புகளைக் கடந்து வரலாறு நம்மை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது.
      
அறிவன்புடன்
puthiyavan1986gmail.com
8903509433 

No comments:

அதிகம் படித்தவை