எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, May 31, 2017

முன்னுரை 1

முன்னுரை

அறிமுகம்
          தமிழகப் பழங்குடிகள் பற்றி உருவாகியுள்ள தமிழ்ப் புதினங்களை இனவரைவியல் நோக்கில் ஆராய்வதாக இந்த ஆய்வேடு அமைகிறது. சமகால மக்களின் வாழ்வுநிலை எத்தகைய பழைய வரலாற்று உண்மைகளை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது? இதற்குரிய அறிவியல் முறையிலான விடைகளிலேயே சகமக்களின் உலகப் பார்வையிலுள்ள குழப்பங்களையும் தெளிவின்மைகளையும் சரி செய்ய முடியும். வரலாற்று உணர்வை வலிமைப்படுத்துவதற்கு இத்தகைய சமூக அறிவு இன்றியமையாதது. இத்தகைய சமூகத் தேவையை இலட்சியமாகக் கொண்டே அனைத்துத் துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய ஆய்வுகளில் இந்த ஆய்வேடும் ஒரு பகுதியாக அமையும்.
 எதைப் பற்றிய சமூக அறிவை அடைவதற்கும் பல்துறை நோக்கு அடிப்படையாகும். இது இலக்கியவியல், மானிடவியல், சமூகவியல் உள்ளிட்ட பிறதுறை அறிஞர்களால் உறுதியாக அங்கீகரிக்கப்படுகிறது.
என்னைப் பொறுத்தவரையில், இன்றைய நிலையில் நாம் புனைகதை ஆராய்ச்சியிற் செலுத்த வேண்டிய முக்கிய கவனம் அதனை அழகியல் நிலைப்பட்ட ஆக்கத்தொகையாகப் பார்க்காது அதன் சமூகவியல் அமிசங்களை வலியுறுத்துவதாகவே இருத்தல் வேண்டும். இதற்குப் பின்னணியாக இலக்கியத்துக்கும், சமூகவியல், மானிடவியல், வரலாறு (சிறப்பாக சமூக வரலாறு), வெகுசனத் தொடர்பியல் ஆகிய துறைகளுக்குமுள்ள பிரிக்கப்பட முடியா உறவுகளை வற்புறுத்துதல் அவசியமாகின்றது. அவ்வாறு செய்யும் பொழுதுதான் புனைகதைகள் பற்றிய செப்பமானஉலக நோக்குப் புலனாகும். அத்தகைய உலக நோக்கு இல்லாத ஆராய்ச்சிகள் தற்காலிக வலுவைத்தானும் பெற முடியாது போய்விடும்என்கிறார் கா. சிவத்தம்பி (சிவத்தம்பி,.1988:  vi,vii ).
தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை ஆராயும்போது பழங்குடிச் சமூகங்களை இலக்கியம், தொல்லியல், சமயம் வாயிலாகவும் அறிய வேண்டியுள்ளது. தமிழ்ச் சூழலில் மானிடவியல் ஆய்வுகளுக்குக் குறிப்பாக, பூர்வ குடிகள் பற்றிய ஆய்வுக்கு இலக்கியம், தொல்லியல் இரண்டும் துணை செய்யும் இன்றியமையாத ஆய்வுக் களங்களாகும்என்கிறார் பக்தவத்சல பாரதி ( பக்தவத்சலபாரதி. 2013: ix).
எனவே சமகால ஆய்வுகள் ஆழமாகவும் அகலமாகவும் பரவலாகவும் விரிவானதாகவும் அமைய முயல்கின்றன. இந்த ஆய்வு இலக்கிய மானிடவியலை ஆய்வுப்பரப்பாக கொண்டமைகிறது.
            பண்டைய இலக்கியங்களிலிருந்து சமகால இலக்கியங்கள் வரையிலான ஆய்வுகள் இலக்கியவியல் துறையில் நிகழ்கின்றன. தொல்லியல், மானிடவியல், மொழியியல் போன்ற பல துறைகளின் ஒத்திசைவுடன் இவ்வாய்வுப் புலம் வலிமை பெற்று வருகின்றது.
            தொல்குடி வாழ்வியலிலிருந்து உயர் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்வியல் வரையிலான மனிதர்களைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் மானிடவியல் துறையில் நிகழ்கின்றன.
மனித சமூகத்தின் நடத்தை முறைகளை ஒழுங்கமைக்கும் உலகளாவிய விதிகளைக் காண்பதும், அந்தந்தச் சமூகத்திற்குரிய விதிமுறைகளைக் காண்பதும் மானிடவியலர்களின் முக்கிய முயற்சியாக இருந்து வருகிறது. மானிடவியலர்களாகிய நாங்கள் இத்தகு முயற்சியினைப் பழங்குடி மக்களிடமிருந்து தொடங்குகிறோம். காரணம் இத்தகு பூர்வகுடிச் சமூகங்கள்தான் மனித சமூகத்தில் தோன்றிய ஆரம்பகால சமூக நிறுவனங்களைக் கொண்டுள்ளனஎன்கிறார் பக்தவத்சல பாரதி ( பக்தவத்சலபாரதி. 2013: vii).
            தொன்மை உலகிலிருந்து அறுபடாமல் சமகாலத்திலும் தொடர்கின்ற தொல்குடி மக்களை மானிடவியலாளர்கள் பண்டைய இலக்கியங்களில் உற்று நோக்குகிறார்கள். பண்டைய இலக்கியங்களைப் புரிந்துணர இலக்கியவியலாளர்கள் தொல்குடி மக்களைப் பற்றிய மானிடவியல் புல அறிவை நாடுகிறார்கள். இவற்றிற்கிடையில் கலை இலக்கிய எழுத்தாளர்கள் தொல்குடிகள் பற்றிய படைப்புகளை நிகழ்த்துகிறார்கள். கவிதைகளிலும் கதைகளிலும் புதினங்களிலும் தொல்குடிகள் பதிவாகிறார்கள். இந்தத் தளத்தில்தான் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொல்குடிகள் பற்றிப் படைக்கப்பட்டுள்ள தமிழ்ப் புதின இலக்கியங்களை இனவரைவியல் முறையில் ஆராய்வதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொல்குடி, பூர்வகுடி, முதுகுடி, ஆதிவாசி போன்ற சொல்லாடல்கள் நீங்க `பழங்குடி´ என்ற சொல்லே இவ்வாய்வில் பயன்படுத்தப்படுகிறது. நாவல், நவீனம், வசனகாவியம் போன்ற சொல்லாடல்கள் நீங்க `புதினம்´ என்ற சொல்லே இவ்வாய்வில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்பிருந்தே தமிழக மலைக்காடுகளில் வாழ்ந்து வருகின்ற பழங்குடிகளைப் பற்றிய புதினப் பதிவுகளிலேயே இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
ஆய்வுத்தலைப்பு
            இவ்வாய்வுதமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்குஎனும் தலைப்பில் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்திய அளவில் குடிமதிப்பு அளவீடுகளின் அடிப்படையில் எட்டு சதவிகித பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். தமிழகத்தில் பழங்குடி மக்களின் விகிதம் மிகக்குறைவே.
            “1991 ஆம் ஆண்டு குடிமதிப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள்    தொகை 840.6 மில்லியன். இதில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 67.8 மில்லியன். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில்             8.08% ஆகும். தமிழகத்தில் 2001 குடிமதிப்பின்படி மொத்த மக்கள்     தொகை 62,405,679. இதில் 36 பழங்குடிகளின் மொத்த       எண்ணிக்கை 651,321 ஆகும். இது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 1.0% மட்டுமே” (பக்தவத்சலபாரதி. 2013: 60).
ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்பிருந்தே தமிழக மலைக்காடுகளில் வாழ்ந்து வருகின்ற பழங்குடிகளைத் தமிழ்ப் புதினங்கள் பதிவு செய்துள்ள முறையை இனவரைவியல் நோக்கில் ஆராயவிருப்பதால் இதன் தலைப்புதமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள் இனவரைவியல் நோக்குஎன்பதாக அமைகிறது.
ஆய்வுப் பொருள்
            இந்த ஆய்வு இலக்கிய மானிடவியலைத் தளமாகக் கொண்டு அமைகிறது. இலக்கிய அறிவியலின் அடிப்படையில் சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்கான அவர்களது மொழியின் படைப்பாக்கமே இலக்கியம் ஆகும். மேலும், இலக்கியம் ஒரு பண்பாட்டு உருவாக்கமும் ஆகும். பண்பாட்டு மானிடவியலும் இலக்கியமும் இணைகின்ற களமாக இவ்வாய்வை அறியலாம். இதன் பொருண்மையை விளங்குவதற்கு இதிலிருந்து பிரிக்க முடியாத விடயங்களைப் பற்றிய நோக்குத் தேவைப்படுகிறதுஇந்த வகையில் இலக்கியம், மானிடவியல், சமூகஅறிவியல் பற்றிய விளக்கங்களின் ஊடாக இவ்வாய்வின் பொருண்மை அமைகிறது.
            இலக்கியம் என்பது அதன் மொழிக்குரிய மக்களின் அறிவையும் உணர்வையும் தலைமுறை கடந்து பாதுகாக்கும் பெட்டகமாக இயங்கி வந்திருக்கிறது. இலக்கியத்தில் காலத்தால் முந்தியது வாய்மொழி இலக்கியம். காலத்தால் இளையது எழுத்திலக்கியம். இவ்வுண்மையைச் சமூக அறிவியல் அறிஞர்களால் விவரிக்கப்படுகின்ற மனித குல வரலாறு நிரூபிக்கிறது.
            “தனக்கென ஓர் இலக்கியம் இல்லாத சமூகம் உண்மையான    கருத்தில் ஒழுங்கமைப்பு பெற்றுவிட்டதாகக் கூற முடியாது.            இலக்கியம் என்பது எழுதப்பட வேண்டியதில்லை. அது             அடிப்படையில் வாய்மொழி நிலைப்பட்டதே எனும் உண்மையை       இக்கட்டத்திலே நினைவுறுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்” (சிவத்தம்பி, கா. 1998:15).
எழுத்திலக்கியமாக பரிணமிப்பதற்கு முன்புவரை இலக்கியத் தோற்றத்தில் தனிமனிதப் படைப்பாளுமை முதன்மை பெறவில்லை. வாய்மொழி இலக்கியமானது உழைக்கும் மக்களின் கலை இலக்கிய வெளிப்பாடாகவே வளர்ந்திருக்கிறது.
             “கலையின் தோற்றம் பற்றிக் கடந்த நூறு ஆண்டுகளாக          மானிடவியலாரின் ஆய்வுகள் பெரும் பயன் விளைவித்துள்ளன.   பண்டைய கிரேக்கப் புனைகதைகள், சடங்குகள், சமய வழிபாடுகள்             இவற்றைச் சமுதாய வளர்ச்சி நிலையோடு பொருத்திக் காட்டும்          ஆய்வுகளை ஜார்ஜ் தாம்சன் வியக்கத்தக்க அறிவுத் திறனோடு             செய்துள்ளார் . கவிதையின் தோற்றம் பற்றி கிறிஸ்தபர்             கால்டுவெல்லின் ஆய்வுகள் முக்கியமானவை. இனக்குழு மக்களின்    தொழிலின் விளைவாகத் தோன்றிய மந்திர உச்சரிப்புகள், அங்க     அசைவுகளோடு, நடனமாகவும் கவிதையாகவும் தோற்றமெடுத்தன   என்று அவருடைய மாயையும் உண்மையும் என்ற நூலில்         குறிப்பிடுகிறார்” (வானமாமலை, நா. 2009:126-127).
எழுத்து தோன்றிய பிறகு இலக்கியத் தோற்றத்தில் தனிமனித ஆளுமை முதன்மை பெறுகிறது. எந்த எழுத்திலக்கியமும் அவ்விலக்கியத்தை எழுதிய ஆசிரியரை முதன்மைப்படுத்துகிறது. இலக்கிய ஆசிரியர் எழுத்திலக்கியத்தைத் திட்டமிட்டுச் செய்கிறார். இதன் காரணமாகவே இலக்கிய ஆரோக்கியம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்களில் இலக்கிய ஆசிரியரின் ஆரோக்கியம் பேசப்படுகிறது.
            “முற்பட்ட காலங்களில் இலக்கணம், தருக்கம், சாஸ்திரம் முதலாய      உறவுடைய சில துறைகளில் பயிற்சியுடையவர்கள்          புலமையுடையோராய் கணிக்கப் பெற்றனர். இலக்கியக் கல்வியே             இலக்கியக் கல்விக்குப் போதுமான அடித்தளமாயிருந்தது. ஆனால்,   இக்காலத்தில் இலக்கிய கர்த்தா ஒருவர் விவேகத்துடனும்   ஆற்றலுடனும் செயல்பட வேண்டுமாயின், கணிசமான உலகியல்             அறிவும் அநுபவமும் பெற்றிருக்க வேண்டுவதன்றி, சமுதாயத்தின்      இயக்கவியல் பற்றிய ஞானமும் வாய்க்கப் பெற்றிருத்தல்           அவசியமாகும்” (கைலாசபதி,. 2009 (2002): 5).
            ‘தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்குஎன்ற தலைப்பு கலை இலக்கிய வடிவமாகிய புதினத்தை முதன்மைப்படுத்துகிறது. இந்த முதன்மையின் வழியாகப் பழங்குடிமக்களின் தனித்தன்மைகளை விவரிப்பதையே இலட்சியமாகக் கொண்டிருக்கிறது. இங்கு இலக்கியத்தின் வழியாக மக்களின் வாழ்க்கையை அறிய வேண்டியிருக்கிறது. அதாவது, கலை இலக்கியம் ஒரு வரலாற்று ஆவணமாக அங்கீகாரம் பெறுகிறது.
            இங்கு இலக்கியம் பற்றிய இரு அறிஞர்களின் கருத்துக்களைக் குறிப்பிடுவது பொருந்தும்.
“1.சமூகத்திலுள்ள எல்லாப் பிரச்சனைகளும் இலக்கியத்தில் இடம்பெறுவதில்லை.
2.அன்றாட வாழ்க்கையிலே தொழிற்படும் சமூக சக்திகளை இனங்கண்டறிந்து இலக்கியத்துள் புகுத்துவது எல்லா இலக்கியக்காரராலும் செய்யப்படக் கூடிய ஒன்றன்று. முன்னோடிகள் பெரும்பாலும் மேதைகளே.
3.இலக்கியம் என்பது வெறும் கருத்துக் கோவையன்று. அது அழகுணர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது. கருத்தாழமற்ற, ஆனால் கலையழகுள்ள ஓர் ஆக்கம் இலக்கியமாகக் கருதப்படலாம். ஆனால், கலையழகற்ற கருத்தாழமுள்ள ஆக்கம் இலக்கியமாகாது.
இவற்றைத் தொகுத்துஇலக்கிய ஆக்கம் என்பது ஒரு சமூக நிகழ்வுஆகும் என்று கூறலாம்” (சிவத்தம்பி,கா. 2011: 12).
            “ஒரு சமுதாய உண்மை, அதன் நிலையில் அவ்வாறே கலைப் பயனை விளைவிக்க இயலாது. ஆனால், அவ்வாறு அமைய வேண்டும் என்பது தேவையில்லை. ஆயினும் உட்செறிவு, இசைவுஇணைவு போன்ற கலைப் பயன்களை அது பெருக்க முடியும். சமுதாயத்தோடு பொருத்தம் உடையனவும் சற்றும் பொருத்தமில்லாதனவும் ஆன இலக்கியப் படைப்புகள் தோன்றியுள்ளன. சமுதாயத்தைக் காட்டி நிற்பதுதான் இலக்கியம் என்று ஒரு வரையறை கூறினால் அது இலக்கிய வகைகள் பலவற்றை வரையறையின் எல்லையில் இருந்து அகற்றிவிடும் என்று சொல்ல வேண்டியதில்லை.
            சமூகவியலுக்கோ, அரசியலுக்கோ இலக்கியம் மாற்று அல்ல. அதற்குரிய நியதியும் நோக்கமும் தனியானவை” (வானமாமலை,நா.2009: 127).
இலக்கியம் பற்றிய இத்தகைய சமூகவியல் நோக்கு சமூகவிஞ்ஞானத்தின் வளர்ச்சியால் உருவெடுத்ததாகும். சமூகவிஞ்ஞானம் என்பது சமூகஅறிவியலின் மற்றொரு பெயராகும். சமூகவிஞ்ஞான நோக்கில் இலக்கிய ஆய்வை முன்னெடுத்தவர்களில் கா.சிவத்தம்பி, .கைலாசபதி, நா.வானமாமலை, கோ.கேசவன், .சிவசுப்பிரமணியன் போன்றோர் முதன்மையான முன்மாதிரிகள் ஆவர்.
             விஞ்ஞானங்கள் அடிப்படையில் இரண்டு வகைப்படும். 1.இயற்கை விஞ்ஞானம், 2.சமூக விஞ்ஞானம். இயற்கை, மனிதன், சமூகம், சிந்தனை என்ற பிரபஞ்ச வடிவில் இரண்டு விஞ்ஞானங்களும் மனித சிந்தனையால் வளர்ச்சி கண்டுள்ளது. சமூக விஞ்ஞானத் தத்துவப் பேராசிரியர்கள் இவ்விரண்டு விஞ்ஞானங்களையும் மார்க்சியத் தத்துவம் என்று குறிப்பிடுகிறார்கள். “வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மார்க்சியம் லெனினியத்தின் பிரிக்க முடியாத பகுதி. இயக்கவியல் பொருள்முதல் வாதக் கொள்கையை வரலாற்றின் இயக்கத்திற்குப் பயன்படுத்திக் காண்பது வரலாற்றியல் பொருள்முதல் வாதமாகும்” (வானமாமலை.2009: 33). இயற்கை விஞ்ஞானம் என்பதுஇயக்கவியல் பொருள் முதல் வாதம்ஆகும். சமூக விஞ்ஞானம் என்பதுவரலாற்றுப் பொருள் முதல் வாதம்ஆகும். இவ்விரண்டையும் சாராம்சம் மாறாமல் ஐந்தாகப் பிரித்து விளங்கிக்கொள்ள முடியும்.
“1.இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல்
            2.பொருளையும் கருத்தையும் உணர்தல்
            3.வரலாற்றை உணர்தல்
            4.பொதுத்தன்மையையும் தனித்தன்மையையும் உணர்தல்
            5.நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல்” (புதியவன்.2014: 14).
பன்னெடுங்காலமாகவே எழுத்தாளருக்கு மனித சமூகத்தைப் பற்றிய அக்கறை இருந்த போதிலும், நவீன சமூகவியல் அதாவதுவிஞ்ஞானப்பூர்வமானசமூகவியல் ஐரோப்பாவிலே பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகியது எனலாம். அதற்கேற்ற சூழலும் அக்காலப் பகுதியில் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே விஞ்ஞானமானது சமயம் இயற்கைதீதம் இவற்றிலிருந்து விடுபட்டுத் தரவுகள் ஆய்வுகள் முடிவுகள் என்ற ஆராய்ச்சி நிலைக்கு வந்தது. “விஞ்ஞானத்தின் இந்த வெற்றிகரமான பீடுநடையின் மூன்று மேலோங்கிய முன்னேற்றங்கள், உயிரணுவின் கண்டுபிடிப்பு, ஆற்றலின் அழியா நிலை பற்றியும் நிலைமாற்றம் பற்றியும் உள்ள விதியின் கண்டுபிடிப்பு, டார்வினிஸம்என்று எங்கெல்ஸ் எடுத்துக் காட்டியுள்ளார். குறிப்பாக , சார்லஸ் டார்வின் (1809-82) தமது அடிப்படைப் படைப்பான இயற்கைத் தேர்வின் மூலம் இன வகைகளின் தோற்றம் என்னும் நூலை வெளியிட்டமை, இயற்கையின் இயக்கவியல் இயல்பை உறுதிப்படுத்தவும் பிரசித்தப்படுத்தவும் உதவியது. இச்சூழலிலேயே சமூகவிஞ்ஞானமும் இயற்கை விஞ்ஞானம் போன்று காலத்துக்கு ஏற்றதாய் அமைதல் வேண்டும் எனச் சில ஆய்வாளர் கருதினர்.” (கைலாசபதி,. 2009 (2002): 11-12).
            சமூகவிஞ்ஞான உலகப்பார்வையில் சமூகவியல் என்பது அடிக்கட்டுமானமாகவும், மேல்கட்டுமானமாகவும் இயங்குகிறது. அடிக்கட்டுமானம் என்பது சமூகப் பொருளியலாகவும் மேல்கட்டுமானம் என்பது சமூகப் பொருளுற்பத்தி அல்லாத மற்ற எல்லாத் துறைகளாகவும் இருக்கின்றது. ஒரு சமூகத்தின் மனிதர்கள் சமூகப் பயன்பாட்டிற்கானப் பொருட்களை எத்தகைய உழைப்பின் அனுபவங்களுடன், எத்தகைய இயற்கை ஆதாரங்களில் (நிலம்,கடல்), எத்தகைய கருவிகளைக் கொண்டு உற்பத்தி செய்கிறார்கள்? உற்பத்தியான பொருட்களைத் தங்களுக்குள் எத்தகைய முறையில் பகிர்ந்துகொள்கிறார்கள்? இதன் விடைகளே அடிக்கட்டுமானம் ஆகும். இது சமூக உற்பத்தி முறையியல்’ என்றும் வழங்கப்பெறும்.
சமூகப் பொருளுற்பத்தி அல்லாத அனைத்துத் துறைகளும் மேற்கட்டுமானம் ஆகும். மேற்கட்டுமானம் ஏழு பிரிவுகளாக விளக்கம் பெறும். 1.சமூக வாழ்வியல், 2.சமூக உள்ளத்தியல், 3.சமூகக் கருத்தியல், 4.தனிமனிதக் கருத்து நிலைப்பாடு, 5.தனிமனித உலகப்பார்வை, 6.தத்துவ அடிப்படை, 7.சமூகப் பண்பாட்டியல் ஆகியனவாகும். திருமணம், குடும்பம், சமயம், கல்வி, தத்துவம், இலக்கியம், சிந்தனை, உள்ளத்தியல், அரசு, இராணுவம், சிறை, நீதித்துறை உட்பட அனைத்து நிறுவனங்களும் மேற்கட்டுமானத்தில் அடங்கும். (புதியவன்.2015:45-49). அடிக் கட்டுமானமும் மேற்கட்டுமானமும் இணைந்ததுதான் சமூக இயக்கம் ஆகும். சமூக இயக்கம் பற்றிய அறிவே சமூகஅறிவாகும். மேற்கட்டுமானத்தில் இயங்குகின்ற இலக்கியம் பற்றிய அறிவிற்குச் சமூக இயக்கம் பற்றிய சமூக அறிவியலும் இன்றியமையாததாகும்.
சமுதாயம் வளரும் நிலைக்கு இலக்கியம் சில வேளை வளராமல் போகலாம். சில வேளை இலக்கிய உணர்ச்சி சமுதாய அரசியல் உணர்ச்சிக்கு மேலும் வளரலாம்” (வானமாமலை,நா.2009: 126).
இலக்கியம் எந்த அளவு சமூகத்தைச் சார்ந்துள்ளது என்ற வினாவிற்கு மார்க்சியக் கொள்கை விடையளிக்கவில்லை. இச்சிக்கல்கள் ஆராய்ச்சிக்குள்ளாக்கப்படுகின்றன. இலக்கியக் கருத்துக்களும் அடிப்படை நோக்கங்களும் சமுதாயச் சூழ்நிலைகளைச் சார்ந்து அமையலாம். ஆனால் இலக்கிய வடிவங்கள் ஒவ்வொன்றும் எந்தச் சமுதாய நிலையில் இருந்து தோன்றியவை என்று கூற முடியாது.”(வானமாமலை,நா.2009: 124).
சமூகவியல் நோக்கில் இலக்கியம் என்பது பண்பாட்டின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கின்றது. இலக்கியம் என்பது பண்பாட்டைப் பதிவு செய்கின்ற ஆவணமாகவும் இருக்கின்றது, பண்பாட்டை உருவாக்குகின்ற ஆக்கமாகவும் இருக்கின்றது.
இலக்கியத்தினை இயந்திரத் தன்மையுள்ளதான ஒருபிரதிபலிப்புக் கொள்கைக்கு உட்படுத்தாது, சற்று அகண்ட நிலையில் அதனை (இலக்கியத்தை) ஒரு பண்பாட்டு உற்பத்திப் பொருளாகக் கொண்டு (Cultural Product), அந்தப் பண்பாட்டு உருவாக்கத்துக்கான கருப்பொருட்களும் (நிலவுகின்ற நிலையில் உள்ளவைஉணவு, தெய்வ நம்பிக்கை, பொருளாதார நடவடிக்கை ஆகியன) கருத்துநிலைக் கூறுகளும் (Ideological aspects) எவ்வாறு இலக்கியத்துள்ளே ஓடியாடித் திரிகின்றன என்று பார்க்க வேண்டும்” (சிவத்தம்பி,கா.2011: 1).
            பண்பாடு (Culture) என்பது மனித நடவடிக்கைகளின் மொத்தம் ஆகும். மனிதன் பண்படுத்திய வரலாறே பண்பாடாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்தில் மனிதத் தோற்றத்திற்கு முன்பு பண்பாடே கிடையாது. தான்தோன்றித்தனமான இயக்கவிதியின் அடிப்படையிலேயே இயற்கையின் இயக்கம் அமைந்திருக்கின்றது. இயற்கையின் உறுப்பாக மனித இனம் தோன்றுவதற்கு முன்பு வரையிலும் திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதே இயற்கையில் கிடையாதுதிட்டம் என்பது கருத்தினை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. கருத்து என்பது மனித மூளையை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. மனித மூதாதைகள் இயற்கைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டு வந்திருக்கின்றன. மனிதர்கள் மட்டுமே தமக்கு ஏற்றபடி இயற்கையை மாற்றி வந்திருக்கிறார்கள். உழைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கின்ற இத்தகைய மாற்றங்களே பண்பாடாக இருக்கின்றது. மனித நடவடிக்கைகள் இயற்கையையும் மனிதனையும் சமூகத்தையும் சிந்தனையையும் வாழ்வியலுக்கு ஏற்றபடி பண்படுத்தி வந்திருப்பதே பண்பாட்டின் இயக்கமாகும். பண்பாடு என்பது சமூகத்தின் தனித்த நிறுவனமல்ல. ஏனெனில், மனிதரின் பண்படுத்தலுக்கு உட்படாத எந்தப் பொருண்மையும் சமூகத்தில் இல்லை.
பண்பாடு என்பது நமது வாழ்க்கை முறைமையில் ஒட்டுமொத்தமான ஒருமித்த நிலையை, மிகமிகச் சாதாரணமான விசயங்களிலிருந்து மிக உயர்ந்தது என்று சொல்கின்ற விசயங்கள் வரையிலான எல்லாவற்றையும் ஒருங்கு தரித்தவை.” (சிவத்தம்பி,கா.2011: 3).
பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தமான வாழ்க்கை முறைமையைக் குறிப்பிடும். ஒட்டு மொத்தமான வாழ்க்கை முறைமை எனும் பொழுது அதற்குள் மனித உறவுமுறை, விவாகம், உணவு, உடை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், அச்சமூகத்தின் கலை வெளிப்பாடுகள் ஆகியன யாவுமே உள்ளடங்கும்” (சிவத்தம்பி,கா.2011:viii).
எனவே இலக்கியம் என்பது அடிப்படையில் பண்பாட்டிற்கு உட்பட்ட இயக்கமாகவே இருக்கின்றது. மொழியைப் பேசுகின்ற மக்களின் அறிவுணர்வையும், அவர்களது கருத்துக்களின் குறியீடாகச் சொற்களையும், எழுத்துக்களையும் கொண்டு இலக்கியம் கட்டமைகிறது. எனவே இலக்கியமானது பண்பாட்டளவில் கருத்தியல் சாதனமாகச் செயல்படுகிறது.
பண்பாட்டின் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் Ideology (கருத்துநிலை) என்றால் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். Culture ஏன் முக்கியமாகிறது என்று சொன்னால், அந்த Cultureக்குள்தான்  Ideology ஏதோ வகையில் இருக்கிறது. அதிலிருந்து பிரிந்து போக முடியாது. இதைப் பார்க்கிறபோதுதான் பண்பாடு என்பதனை நம்முடைய வாழ்க்கை முழுவதினதும் ஒட்டுமொத்தமான ஒரு முழுமையாகக் கொள்ள வேண்டும்” (சிவத்தம்பி,கா.2011: 4-5).
ஒரு பொருள் பற்றிய பல்வேறு கருத்துக்கள் சமூகத்தில் இயங்கி வருகின்றன. இத்தகைய கருத்தியல்களில் இலக்கிய ஆசிரியர் எத்தகைய உலகப்பார்வையுடன் இலக்கியம் படைக்கிறார். எத்தகைய கருத்தைக் கொண்டு இலக்கியம் கட்டமைந்திருக்கிறது என்பதே கருத்து நிலைப்பாடு (Ideology) ஆகும். எத்தகைய கருத்துநிலைப் பாட்டிற்கும் தத்துவ அடிப்படை உண்டு. உலகளாவியத் தத்துவங்கள் இரு வகைப்படும். 1.அறிவெதிர் தத்துவம், 2.அறிவியல் தத்துவம். அறிவெதிர் தத்துவம் என்பது இயங்காவியலும் கருத்துமுதல்வாதமும் ஆகும். அறிவியல் தத்துவம் என்பது இயங்கியலும் பொருள்முதல்வாதமும் ஆகும். (புதியவன்.2015:49).
            இயங்காவியல் என்பது இயக்கத்தை மறுக்கின்ற உலகப்பார்வையாகும். இயக்கவியல் என்பது இயக்கத்தை அங்கீகரிக்கின்ற உலகப்பார்வை ஆகும்.
 கருத்து முதல் வாதம் என்பதுபிரபஞ்சம் முழுவதும் நிகழ்ந்து வருகின்ற பொருளார்ந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் முதன்மையானதாக மனித எண்ணங்களின் கருத்துக்களே இருக்கின்றனஎன்பதாகும். பொருள் என்பது உண்மையல்ல, மாயை. பொருள்உருவமுடையது, கருத்துஉருவமற்றது. பொருள் என்று கருதப்படுவது அனைத்தும் கருத்துக்களை முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. பொருள்கள் இருப்பதாக மனிதருக்குக் கருத்துக்கள் இருப்பதனாலேயே பொருளும் இருக்கின்றது. பொருள் என்பது மனித எண்ணமே தவிர புறநிலை எதார்த்தம் அல்ல. கருத்துமுதல்வாத உலகப்பார்வையில் கருத்தை முதன்மையாகக் கொண்டே பொருள்கள் தோன்றியுள்ளன.
            பொருள் முதல் வாதம் என்பதுபுறவய எதார்த்தமாகப் பொருள்கள் இருக்கின்றனஎன்பதாகும். (புறவய எதார்த்தம்வெளியில் இருந்துக்கொண்டிருப்பவை) மனித மூளையில் எழும் அத்தனைக் கருத்துக்களுக்கும் பொருளார்ந்த நிகழ்வுகளே முதன்மையாக இருக்கின்றன. கருத்துக்களுக்கு அடிப்படையாகிய எண்ணங்கள் உருவாகின்ற இடமாக மனித மூளை இயங்குகின்றது. மனித மூளை என்பது அடிப்படையில் ஒரு பொருளாக, புறவய எதார்த்தமாக இருக்கின்றது. கருத்துக்கள் இரண்டாம்பட்சமாக இருக்கின்றன. பொருள்முதல்வாத உலகப்பார்வையில் பொருளை முதன்மையாகக் கொண்டே கருத்துக்கள் தோன்றியுள்ளன.
            பண்பாட்டின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு குறிப்பிட்ட பண்பாட்டில் எத்தகைய கருத்துக்கள் அதிகாரம் செலுத்துகின்றன, எத்தகைய  கருத்துக்கள் ஒடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய பார்வை அடிப்படையாகும். இத்தகைய பார்வைக்குக் கருத்தியல்களின் அடித்தளமாகிய தத்துவம் பற்றிய தெளிவு மிகவும் இன்றியமையாததாகும்.
            ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் வழியாக, மனிதர்களின் வாழ்வியல் வரலாற்றைப் பெறுவதற்கு முன்நிலை ஒன்று இருக்கிறது. அது, அக்குறிப்பிட்ட இலக்கியம் தோன்றிய வரலாற்றை எழுதியிருத்தலாகும்.
இலக்கிய வழி வரலாறு ஆனது இலக்கியத்தின் வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதென்பது நிச்சயமாகின்றது. ஆயினும் இக்கட்டத்திலே முக்கியமான ஓர் உண்மையினை வலியுறுத்தல் வேண்டும். நாம் இங்கு எடுத்துக்கூறும் இலக்கிய வரலாற்றினை அறிவதற்கு அத்திவாரமாக இலக்கியத்தின் வரலாறு எழுதப்பட்டிருத்தல் வேண்டும்” (சிவத்தம்பி, கா. 1998: 6).
ஆயினும் இலக்கியம் தோன்றிய வரலாறு எழுதப்படாத தமிழ்ப் புதினங்களில் இருந்து பழங்குடிகள் பற்றிய இனவரைவியல் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இலக்கியப் படைப்பாகிய குறிப்பிட்ட ஒரு புதினம் தோன்றிய வரலாறு எழுதப்படுவதற்காகக் காத்திராமல் சமூகஅறிவின் கவனத்தோடு அவ்விலக்கியத்தை அணுகுதல் வழியாக வரலாற்றை அறிவதற்கான முயற்சியாக இவ்வாய்வு அமைகின்றது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் புதினம் என்பது மரபிலிருந்து மாறிவந்த இலக்கிய வடிவமல்ல. ஐரோப்பிய இலக்கிய உலகில் தோன்றிய நாவல் என்பதே இங்குப் புதினம் ஆனது. இது முதலாளித்துவ சமூகத் தோற்றத்தின் விளைவு. ஐரோப்பிய உலகில் புதிதாகத் தோன்றிய நடுத்தரவர்க்கமும், அதன் யதார்த்தவாத உலகப்பார்வையும் அவர்களுக்கே உரிய நாவல் இலக்கியத்தைத் தோற்றுவித்தது. தமிழ்ப் புதினமோ தமிழகச் சூழலில் தோன்றிய நடுத்தர வர்க்கத்தின் இலக்கியத் தோற்றமாகும். ஆனால் ஐரோப்பிய நடுத்தர வர்க்கத்தைப் போன்ற யதார்த்தவாத உலகப்பார்வையை இவ்வர்க்கமும் கொண்டிருந்தது என்று சொல்வதற்கில்லை.
மேனாட்டு நாவலாசிரியர்களுக்கு அனுகூலமாகவிருந்த          மெய்யியல் யதார்த்தவாதம் போன்ற அறிவு சார்ந்த துணைக்        காரணங்கள் எமது மத்தியதர வர்க்கத்திற்கு இருக்கவில்லை.   அது அவ்வர்க்கத்தினரின் தத்துவ வரட்சியையே வெளிப்படுத்துகிறது” (கைலாசபதி, . 1987: 36).
நமது நவீன இலக்கியத்தை நோக்கினால் பல உண்மைகள்     புலனாகும். பூர்ஷ்வா சமூகவியல் வாதிகளைப் போலவே நமது          பெரும்பாலான எழுத்தாளரும் ஒன்றிணைக்கப்பட்ட      தத்துவார்த்த             நோக்கின்றித் தமது சின்னஞ்சிறு உலகங்களைப்            பற்றி எழுதிக்             கொண்டிருக்கின்றனர். எவ்வாறு பூர்ஷ்வா    சமூகவியல் வாதிகள்            மனித சமுதாயத்தில் முழுமையான            வளர்ச்சிப் போக்கு, வர்க்க         வேறுபாடுகள், உற்பத்தி  உறவுகள்           முதலிய அடிப்படைகளை             மனங்கொள்ளாமல், வர்க்க             வித்தியாசங்களைக் கடந்தவராகக்            கருதப்படும் மாணவர்கள்,             இளைய தலைமுறையினர், கார்ச்   சாரதிகள், விபசாரிகள்,        நாடோடிகள், புலம் பெயர்வோர்கள் முதலிய     சிறுசிறு           குழுக்களைப் பற்றிச் சமூகவியல் ஆய்வுகள் நடத்தி             வந்துள்ளனரோ, அவ்வாறே நமது எழுத்தாளரும்            வர்க்கங்களை            மறந்து தனிமனிதர்களைப் பற்றியும், சிறுசிறு       குழுக்களைப்             பற்றியும் சிறப்பாக எழுதி வந்துள்ளனர்.             பூர்ஷ்வா சமூகவியலாளர்    ‘பூர்விகக் குடிகள்குறித்தும்,          புராதன மக்கள் கூட்டம் பற்றியும்             சுவையான மானிடவியல்    ஆய்வுகள் நடத்தி வந்திருப்பதைப்             போலவே நமது             எழுத்தாளரும் பழங்காலத்து ராஜா ராணிக்          கதைகளையும்           பழங்குடி மக்கள் வாழ்க்கையையும்     சுவாரஸ்யமான        சிறுகதைகளையும்  நெடுங்கதைகளையும்            உற்பத்தி செய்து             வந்திருக்கின்றனர்” (கைலாசபதி,. 2009 (2002):            27).
அதாவது முதல் பிரிவினர் (பூர்ஷ்வா- ஆய்வாளர் குறிப்பு) பிரச்சனைகள் இருப்பதையே எழுத்தில் பிரதிபலிக்கவில்லை; அதனால் அப்பிரச்சனை இலக்கியத்திற்கு உகந்தஉரிய- பொருள்கள் அல்ல என்னும் கருத்தை கொண்டவராய் உள்ளனர். இரண்டாவது பிரிவினரோ (நடுத்தர வர்க்கத்தினர்- ஆய்வாளர் குறிப்பு) இதற்கு மாறாக, சமுதாயப் பிரச்சனைகள் இலக்கியத்தில் இடம் பெறுவதை ஏற்றுக்கொள்கின்றனர். எனினும், தமது கடமை அல்லது பொறுப்பு அவற்றைத் தத்ரூபமாகச் சித்தரித்து விடுவதே என்று கருதுகின்றனர். காலப்போக்கில் சமுதாயம் திருந்தும் என்ற நம்பிக்கை இவர்களுக்குண்டு” (கைலாசபதி,. 2009 (2002): 32).
            நல்ல ஊதியத்திற்குப் பணியில் அமர்ந்தவர்களும், இத்தகைய பணிக்குச் செல்வதையே இலக்காகக் கொண்டு முயல்பவர்களும், நடுத்தர வர்க்கத்தினராக உள்ளனர். இவர்கள் எத்தகைய உலகப்பார்வையில் இருந்து உலக நிகழ்வுகளையும் தன்னையும் புரிந்து கொண்டார்களோ அவைகளையே புதினங்களாக உருவாக்கினர். இவ்வகை இலக்கியத்திற்கு வசனகாவியம், புதினம், நவீனம், நாவல் என்று பல பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் நாவல் என்பதே பெரும்பான்மையோரால் வழங்கப்பட்டு வருகின்றது. இங்கு இவ்விலக்கிய வகை புதினம் என்றே குறிப்பிடப்படும். இவ்வாய்வில் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்பிருந்தே மலைக்காடுகளில் வாழ்ந்து வருகின்ற பழைய மக்களைப் பற்றிய புதினங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
            மனிதகுலம் இன்றைய நவீன உலகைப் பெற பல வளர்ச்சி நிலைகளைக் கடந்துள்ளது. இதன் குழந்தைப்பருவ வளர்ச்சி நிலைகளைப் பிரதிபலிக்கின்ற மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்த பழமையான வாழ்க்கை முறையைத் தொடர்பவர்கள்; இயற்கையைத் தெய்வங்களாகவும் தோழர்களாகவும் மதிப்பவர்கள்; காடுகளையும், மலைகளையும் ஆறுகளையும் விலங்குகளையும் பறவைகளையும் காற்றையும் சுற்றுச்சூழல் முழுமையையும் நேசிப்பவர்கள்; இவற்றின் பாதுகாப்பிலேயே தங்களது வாழ்வையும் பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள்; இவர்கள்தான் பழங்குடிகள். பழங்குடி மக்களின் வாழ்வியலைச் சிலாகித்துப் பேசியுள்ள எல்வின் அவர்களது கருத்து இங்குக் குறிப்பிடத் தகுந்ததாகும்.
            “நான் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொண்ட முக்கியமான அனைத்துக் கருத்துக்களும் பழங்குடி மக்களுடன் பழகியபோது உருவானவைதாம். நான் அவர்களை மாற்றியதைவிட அவர்கள் என்னை மாற்றியதே அதிகம். மகிழ்ச்சியின் இன்றியமையாமை, எளிமையின் தேவை ஆகிய பண்புகளை நான் அவர்களிடையே கற்றுக்கொண்டேன். வண்ணம், இசை, பாட்டு, ஆட்டம் ஆகிய கலை வெளிப்பாடுகளில் அவர்கள் கண்டு பிடித்திருக்கும் நிறங்களும் சந்தங்களும் அசைவுகளும் லயங்களும் அவர்களின் அழகியல், கலையியல், படைப்பாற்றலைப் பறைசாற்றுபவை. இவற்றில் அவர்கள் காட்டிய ஈடுபாடும் இடையறாத பங்கேற்பும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. போர் என்பது வாழ்வை நிராகரிக்கும் தீய சக்தி என்பதல்லாமல் வாழ்வை பாதிக்கும் வசதிகளைப் பறிக்கும் நடவடிக்கை என்பதை அவர்களிடமே கண்டறிந்தேன்.
            நவீன நாகரிக சமுதாயத்தின் சுயநலமிக்க மதிப்பீடுகளைவிட பழங்குடி மக்களின் விழுமியங்கள் மனிதத் தன்மையும் மானிட நேயமும் இரண்டறக் கலந்தவை. அறிவியல் ரீதியில் உயர்ந்தவை” ’எல்வின் கண்ட பழங்குடி உலகம்என்ற நூலிலிருந்து… (சித்ரா,.2006).
இத்தகைய பழங்குடி மக்களை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் புதினங்களை இனவரைவியல் நோக்கில் ஆராய்கின்ற பணி இங்கு மேற்கொள்ளப்படுகின்றது.   
          இனவரைவியல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அகவய நிலையிலும் புறவய நிலையிலும் (emic & etic) விவரித்தலாகும். இது மானிடவியலின் குறிப்பிடத்தகுந்த பிரிவு. மானிடவியலாளர்கள் பல்வேறு மக்களிடமுள்ள தனித்தன்மைகளை அறிந்து உலகளாவிய பொதுமைப்பாடுகளோடும் அதற்கேயுரிய தனித்துவங்களோடும் விவரிக்கிறார்கள். இந்த அணுகுமுறையே இனவரைவியலாக விளங்குகிறது.
இனவரைவியல் என்பது ஒரு தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி எழுதுதல் என்னும் பொருளை உணர்த்துகிறது. ஒரு இனக்குழுவைப் பற்றி எழுதுதுல் என்னும் பொருளை உணர்த்துகிறது. ஒரு இனக்குழுவைப் பற்றிய முழுமையான படிப்பு என்னும் வகையில் இப்பிரிவைஇனக்குழுவியல்என்றும் கூறலாம். இனக்குழுவியல் என்பது ஒரு தனிப்பட்ட சமூகத்தின் பண்பாட்டை முழுமையாகப் புரிந்துகொண்டு அவற்றை முறையாகத் தொகுத்து வழங்குதலாகும்.” (பக்தவத்சலபாரதி.2003(1990):117-118.)
            இனவரைவியல், என்பது குறிப்பிட்ட மக்கள் இனத்தை விவரித்தல் ஆகும்குறிப்பிட்ட மக்கள் இனத்தை விவரித்தல் என்பது எத்தகைய செயல்முறை எனில் விவரிக்கப்படுகின்ற இன மக்களிடமிருந்து பிரிக்க முடியாத பிணைவை முதன்மையாகக் கொண்டிருப்பதாகும். விவரிக்கப்படும் இனத்தை தாயினமாகக் கொண்டவர், விவரிக்கப்படும் இனத்திற்கு வெளியிலுள்ள மற்றொரு நபர், இனவரைவியலை இவர்களில் யாரால் செய்ய முடியும்? சமூக அறிவியல் விதிப்படி இந்த இருவரில் எவரையும் விலக்க இயலாது. இவர்கள் மானிடவியலாளர்களாக இயங்கும் பட்சத்தில் இருவருமே இனவரைவியலில் ஈடுபட முடியும். ஏனெனில், ஒரு மக்களினத்தைச் சரியாக விவரிக்கின்ற வலிமை மானிடவியல் அறிஞனுக்கே இருக்கின்றது.
            ஒரு குறிப்பிட்ட மனிதஇனம் பற்றிய உண்மைகளை விவரிக்கின்றவர் அவ்வினத்தைச் சார்ந்தவரா அந்நியரா என்பது பிரச்சனையல்ல. ஏனெனில், இவர் துல்லியமாக விவரிக்கத் துவங்கியதுமே மானிடவியலாளராக மாறிவிடுகிறார்.
            மானிடவியல் என்பது மனிதகுலத்தைப் பற்றிய அறிவியல்துறை. மானிடவியல் துறை இரண்டு முக்கியப் பிரிவாக அமைகின்றது. 1.உடல்சார் மானிடவியல், 2.சமூக-பண்பாடுசார் மானிடவியல். இவ்வாய்வு சமூக-பண்பாடு சார் மானிடவியலின் அடிப்படையில் அமைகின்றது.
 “கைத்தொழில் மயமான ஏகாதிபத்திய நாடுகளில் வாழ்ந்த பெரும்பாலான ஆய்வறிவாளரும் ஏகாதிபத்தியச் சிந்தனை வட்டத்திற்குள்ளே இயங்கினர். இதன் விளைவுகள் பல. பெரும்பாலான காலணிகளில் வாழ்ந்த மக்கள் பின்தங்கிய -புராதான- பண்பாட்டையுடையவர்கள் என்றும், அவற்றை ஆய்வதே மானிடவியலின் பிரதான நோக்கம் என்றும்  சமூகவியல் வாதிகள் கருதலானார்கள். அதன் உடனிகழ்ச்சியாக மனித இனப்பிரிவு சார்ந்த வகையில் மானிடவியலும் சமூகவியலும் வளரலாயின. காலணிகளில் வாழ்ந்த மக்களிடையே இனவாதம், வகுப்புவாதம், மதப்பூசல்கள் முதலியன மூண்டெழுதற்கு இத்தகைய கருத்துப் பரவல்கள் ஓரளவு காரணிகளாய் அமைந்தன. நுணுக்கமாகப் பார்த்தால் இந்தியாவிலேயே கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கற்றோரையும் மற்றோரையும் பிடித்தாட்டிவரும் ஆரிய-திராவிடப் பிரச்சனைகூட மேலைத்தேய மானிடவியலாளரதுஇனப்பிரிவு சார்ந்தகலாச்சார ஆய்வுகளின் தருக்கரீதியான விளைவு எனக் கருதுவதில் தவறிருக்காது. ஏகாதிபத்திய வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியும் இதில் ஓர் அமிசமாய் இருந்தது.” (கைலாசபதி,. 2009 (2002): 23-24).
அறிவியல் விதி நின்று மனிதர்களது இயங்கு முறையை அறிந்து மனிதர்களுக்கு விளக்குகின்ற துறையே மானிடவியலாகும். சமூக இலட்சியங்களை நோக்கி மனிதர்களை இயக்குவதற்கு இத்துறையின் பங்கும் பிரமாண்டமாக வளர்ந்து வந்திருக்கின்றது. மனிதர்களை அறிந்து மனிதர்களுக்கு விளக்குபவனே மானிடவியல் அறிஞன்.
            விவரிக்கப்படும் இன மக்களில் ஒருவனாக நீண்ட காலம் இணைந்து வாழ்ந்து, வாழ்வியல் அனுபவம் பெற்று, அவர்களுடைய உலகப்பார்வையையும், அவர்களுடைய அனைத்துவித தனித்தன்மைகளையும் உற்றுநோக்கிக் கண்டறிந்து, அறிந்தவற்றை விவரித்து எழுதுவதே இனவரைவியல் ஆகும். ஒரு மானிடவியல் அறிஞனுக்கு இனவரைவியல் பணி இப்படித்தான் இருக்க முடியும்.
இனவரைவியல் என்பது எழுத்து வடிவம் பெறுவதனாலேயே எழுத்திலக்கியத்தில் இடம் பெற்று விடுகின்றது. அதாவது. கலை இலக்கிய வடிவிலோ, அறிவியல் இலக்கிய வடிவிலோ இடம் பெற்றுவிடுகின்றதுஎழுத்திலக்கிய படைப்பிலுள்ள இவ்விரு பிரிவுகளும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றன.
அறிவியலறிஞன் புறநிலை யதார்த்தத்தின் வெளிப்புற உலக நிகழ்வுகளை ஆராய்கிறான்; கலைஞன் அகநிலைப்பட்ட யதார்த்தத்தின் உட்புற உலக நிகழ்வுகளை ஆராய்கிறான்.” “அறிவியல் அறிஞன் அகநிலை யதார்த்த உலகினின்றும் கலைஞன் புறநிலை யதார்த்த உலகினின்றும் தப்பிவிட முடியாது” (ஜார்ஜ் தாம்சன் (தமிழில் கோ. கேசவன்). 2002: 137,138).
ஒரு குறிப்பிட்ட மக்களினம் பற்றிய சிறுகதையையோ, நாவலையோ படைக்கின்ற கலை இலக்கியப் படைப்பாளி, அறிவியல் இலக்கியத்திலுள்ள இனவரைவியல் தகவல்களைப் பயன்படுத்துகிறார். மாறாக, அறிவியல் இலக்கியப் படைப்பாளி கலை இலக்கியத்திலுள்ள இனவரைவியல் தகவல்களைப் பயன்படுத்துகிறார்.
இலக்கியவியலாளர்கள் மானிடவியலைத் தெரிந்து கொள்வதும், மானிடவியலர்கள் இலக்கியவியலைப் புரிந்துகொள்வதும் தவிர்க்க முடியாதவை” (பக்தவத்சலபாரதி. 2013: x).
            இருளர், சோளகர், மலையாளி, படுகர் ஆகிய பழங்குடிகளைப் பற்றிய புதினங்கள் இவ்வாய்விற்குரியதாக அமைகின்றன. தமிழக அரசு படுகர்களைப் பழங்குடிகளாக அங்கீகரிக்கவில்லை. ஆயினும் இவ்வாய்வின் வரையறைப்படி படுகர்களும் பழங்குடிகளே. ஏனெனில், ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்பிருந்தே படுகர்கள் நீலகிரி மலைப் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களிடம் பூர்வகுடித் தன்மை உள்ளது. எனவே இனவரைவியல் நோக்கில் அமைகின்ற இவ்வாய்வில் குறிஞ்சித்தேன் என்ற  புதினமும் இடம் பெறுகின்றது.
... 

முன்னுரை 2

No comments:

அதிகம் படித்தவை