எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, June 2, 2017

இயல் – 4 வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும் 2

4.10.உள்ளத்தியலும் கருத்தியலும் சிதைக்கப்படுதல்
சோளகர்களது அறிவு நிலை உணர்நிலையிலும், ஆழ்மன உணர்நிலையிலும் மிகவும் சுதந்திரமான அணுகுமுறையில் சமூக உறவுகளையும் வாழ்க்கை பற்றிய புரிதல்களையும் கற்று வளர்கின்ற வழக்கத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். அன்பு, பாசம், கோபம், வீரம், வருத்தம், அச்சம், அவமானம் போன்ற மனித உணர்ச்சிகளை எத்தகைய சூழல்களில் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை இயல்பான சமூக நடைமுறை அனுபவங்களிலிருந்து கற்றிருக்கிறார்கள். சோளகர்கள் தங்கள் வீட்டுப்பிள்ளைகளை ஒருபோதும் அடித்து வளர்ப்பதில்லை. ‘சோளகனுக்குச் சுதந்திரத்தைவிட வேறு என்னடா பெரிய சொத்து’(பாலமுருகன்,.2013:40) என்ற உணர்வுடையவர்களாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரத்தை அந்த அளவிற்கு உயர்ந்த பண்பாக கொண்டிருப்பவர்களை காவல்துறை போன்ற அந்நியர்கள் அடிமையைப்போல நடத்துகிறார்கள். காவல்துறையினரின் அநாகரிகமானத் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுகின்றபோது ஏதும் செய்ய இயலாதவர்களாய் நிற்கின்ற நிலைமையை எண்ணி மனதளவில் மிகவும் நொந்துபோயுள்ளார்கள்
            வேட்டைக்காரர்கள் தங்களது பெண்களின் முன்னால் வீரனாகக் காட்டிக்கொண்டு பெருமையடைவார்கள். ஒருபோதும் ஒரு கோழையைப்போலக் காட்டிக்கொள்வதை எந்தச் சோளகனும் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டான். அத்தகைய ஒரு நிலையை வனத்துறையும் காவல்துறையும் இணைந்து சோளகர்களுக்கு உருவாக்கியிருக்கின்றது. வனத்துறையினரிடமிருந்து சிக்குமாதாவை மீட்டுவந்தபோது அவன் அந்நியர்களால் அடிபட்டுக் கோழையைப்போல ஏதும் செய்யமுடியாமல் காயங்களுடன் வந்திருக்கிறான். ஊர்ப் பெண்கள் முன்பு  வெட்கப்படுகிறான். ஊர்ப் பெண்கள் முன்பு கோழைபோல நிற்பதாக கருதி அவமானப்படுகிறான். இந்த நிலையைவிட கரடிக்கே இரையாகி உயிரை விட்டிருக்கலாமே என்று வேதனைப்படுகிறான். (பாலமுருகன்,.2013:32).
            சோளகர்களது வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளிலும் அரணாக நின்று காப்பது மணிராசன் தெய்வம் என்பதாகச் கருதுகிறார்கள். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் கோல்காரன் மணிராசனுக்குப் பூசைகள் செய்கிறான். ஆனால் கோல்காரனின் மகனை அந்நியர்கள் அநீதியாக அடித்துச் சித்திரவதைகள் செய்தபோது மணிராசன் காப்பாற்றாதது ஏன் என்று கோபப்படுகிறான். மணிராசனுக்குப் பூசைகள் செய்யமாட்டேன் என்று சண்டைபோடுகிறான். (பாலமுருகன்,.2013:33). மணிராசன் என்ற கடவுள் சோளகர்களைக் கைவிடாமல் காப்பாற்றுவான் என்ற கருத்து சிதைக்கப்படுகின்றது.
            தலமலை காவல்துறை முகாமில் சோளகர்களுக்கும் கறி விருந்து ஏற்பாடாகியிருக்கிறது. கறியின் மசால் வாசனை அவர்களை எச்சில் ஊறச் செய்கிறது. அவர்களுக்குக் காவல் துறை மீதான பயமும் கறி விருந்து மீதான ஆசையும் ஒரே நேரத்தில் ஊடாடுகின்றன. அதிகாரி சோளகர்களிடம் வீரப்பனையோ அவனது ஆட்களையோ பார்த்தால் உடனே தகவல் தெரிவிக்கனும் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு  சாப்பிட அனுப்பிவிடுகிறான். அவர்கள் ஆர்வத்துடன் சாப்பிட அமர்கிறார்கள். இலையில் கறியுடன் சோறு பரிமாறப்படுகின்றது. சாப்பிட ஆரம்பித்ததும் முன் அறையில் சித்திரவதைக்கு ஆளாகின்ற மனிதர்களின் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். காவல்காரர்களின் அடியும் அவர்களது அலறலும் தொடர்ந்து கேட்கின்றன. சோளகர்களுக்கு அந்தச் சூழலில் உணவு உண்ண முடியாமல் பயத்தின் காரணமாக வாயில் எதையே திணிப்பது போல உணவைத் திணித்துக்கொண்டார்கள். ஜவணன் அருவெறுப்புத் தாங்காமல் வாந்தியெடுக்கிறான். (பாலமுருகன்,.2013:134-135). ஒற்றுமையுடன் பகி்ர்ந்து உண்ணும் வழக்கம் கொண்ட சோளகர்களுக்கு அந்தச் சூழல் பிரியமான இறைச்சி உணவை அருவெறுக்கும்படி செய்கின்றது. கறி விருந்தும் அந்தச் சூழலும் சோளகர்களுக்குக் காவல்துறை மீது நீக்க முடியாத அச்சத்தை உருவாக்கியிருந்தது. இறைச்சி உணவு பற்றிய புதிய கருத்தும் காவல்துறை பற்றிய அச்சமான மனநிலையும் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றன.
            போலீசுக்காரர்களின் ஜீப் சோளகர் தொட்டிக்கு முதன்முதலில் வந்துபோனபோது சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஜீப்பை வேடிக்கைப்பார்த்து மகிழ்ந்தார்கள். ஈரம்மாவின் மீதான வன்புணர்ச்சி வரை பல்வேறு சித்திரவதைகளை அறிந்துகொண்ட சிறுவர்கள் ஜீப் சத்தம் கேட்கும்போதெல்லாம் பயத்துடன் தங்களது பெரியோர்களின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள். பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு காடுகளுக்குள் சென்று ஒளிந்துகொள்கிறார்கள். (பாலமுருகன்,.2013:168,173). ஜீப் சத்தம் கேட்கும்போதெல்லாம் பய உணர்விற்கு ஆட்படுகிறார்கள்.
            புட்டன் என்பவனை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்கிறார்கள். வீரப்பனைப் பற்றி அவனுக்குத் தெரியாத தகவல்களைச் சொல்லும்படி வற்புறுத்துகிறார்கள். வலியும்  வேதனைகளும் நிறைந்த சித்திரவதைகளை எதிர்கொள்ள முடியாத அந்தச் சூழலில் அடி வாங்குவதிலிருந்து தற்சமயத்திற்காவது தப்பிப்பதற்காக வீரப்பனைத் தெரியும் என்று பொய் சொல்லி வீரப்பனைப்பற்றிப் பொய்யானத் தகவல்களைச் சொல்கிறான். ஒவ்வொரு முறையும் அவன் பொய் சொல்கிறான். (பாலமுருகன்,.2013:150-155). சோளகர் பழங்குடிகள் தாங்கள் செய்யாத குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தமான மனநிலைக்கு காவல்துறையினரின் சித்திரவதைகள் மூலமாக ஆளாகியிருக்கிறார்கள்.
            அரசு அதிகாரிகள் சாவித்திருமனிடம் பழங்களை எடுத்துவரும்படி கட்டளையிடுகிறார்கள். பழத்தைக் காசு கொடுத்து வாங்குபவர்கள்கூட செய்ய முடியாத அதிகாரத்தைச் செய்கிறார்கள். அதிகாரிகள் முன்னிலையில் மலையாளிகளுக்கு இருக்கும் பணிவை எப்போதும் நிலைநாட்டுவதற்காக இத்தகைய அணுகுமுறைகளை அரசதிகாரிகள் பயன்படுத்திவருகிறார்கள். அதிகாரிகள் கேட்கின்ற பழங்களைப் பறித்துக்கொடுத்ததும் அந்தப் பழங்களில் குறை காணாமலும் திருட்டுப் பழம் எடுத்து வந்திருக்காயா என்று தங்கள் மீது திருட்டுப்பழி சுமத்தாமலும் ஏற்றுக்கொண்டு செல்ல வேண்டும். மலையாளிகளுக்கு அதுவே பெரும் நிம்மதியாக இருக்கின்றது. (சின்னப்ப பாரதி,கு. 2008:11-12). அரச அதிகாரிகள் நினைத்தால் குற்றம் செய்யாதவர்களையும் குற்றம் சுமத்திச் சித்திரவதைகள் செய்ய முடியும் என்ற அச்சம் மலையாளிகளை வீரஉணர்வற்று வாழ்பவர்களாக உருவாக்கியிருக்கிறது. அரசு அதிகாரியின் குண்டாந்தடியும், விலங்குச் சங்கிலியும், துப்பாக்கிக் கட்டையும், மலையாளிகளது உடைமைகளை அநீதியான முறைகளில் அபகரித்துக்கொள்கின்றன. இத்தகைய அனுபவங்களின் விளைவாக மலைவாழ் மலையாளிகளின் ஆழ்மன உணர்நிலையிலும், உணர்நிலை அறிவிலும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு சார்ந்து நெருக்கமாக வாழும் சொத்ததிகாரம் உடையவர்களிடமும் நீங்காத அச்சஉணர்வு கட்டமைத்திருக்கின்றது.
            மரகதமலை ஹட்டியிலுள்ள படகர்கள் தங்களது விவசாய பூமியைப் பெரிதாக நேசிக்கிறார்கள். நிலத்தைத் தாயாகவும் பயிர்களைப் பிள்ளைகளாகவும் கருதுகிறார்கள். நிலத்தில் முள் எடுத்து உழைப்பதை மிகச் சிறந்த சீலமாகக் கருதுகிறார்கள். அவர்களது பிள்ளைகள் நவீன அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் படித்ததன் விளைவாக விவசாயத்தை மறக்கத் துணிந்திருக்கிறார்கள். சமூகத்தின் உணவுத் தேவையை நிறைவேற்றும் பொறுப்புடைய விவசாயம் செய்கின்ற பண்பை மறக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தொழிற்சாலைகளின் இலாப நோக்குடன் குமரியாற்று அணை கட்டுகின்ற திட்டத்தில் நிலம் கைவிட்டுப்போகும் சூழல் உருவாகியிருக்கின்றது. இந்தச் சூழல் நிலத்தில் உழைக்கின்ற தலைமுறையினருக்கும் படித்த தலைமுறையினருக்கும் இரு வேறு மனநிலைகளாகவும் கருத்துக்களாகவும் இருக்கின்றன. உழைக்கின்ற தலைமுறையினர் நில அபகரிப்பைப் பற்றி ஆழ்மன உணர்நிலையிலும் உணர்நிலை அறிவிலும் பெருந்துயரமாக உணர்கிறார்கள். தாயாகவும் பிள்ளையாகவும் உறவு கொண்டிருந்த நிலத்தை, சமூகத்திற்குத் தேவையான உணவுப் பயிர்களை உருவாக்கித் தருகின்ற நிலத்தை எப்படி தங்களிடமிருந்து அபகரிக்கப்படுவதை ஏற்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக உணவு தருகின்ற நிலத்தை எப்படி பணத்திற்கு ஈடாகக் கொடுக்க முடியும் என அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் படித்த தலைமுறையினர் அனைத்தையும் பணத்திற்கு உட்பட்டதாக உணர்கிறார்கள். நிலத்தை இழப்பதற்காக ஈடாகக் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்கள். தொழிற்சாலை உபயோகத்திற்காகவும் மின்சார வசதிகளைப் பெறுவதற்காகவும் உழைக்கும் தலைமுறையைச் சேர்ந்த தங்களது பெரியோர்கள் விவசாய நில உரிமையை சொற்ப பணத்திற்கு விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும் என்பதாகக் கருதுகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001:364-365). படித்த தலைமுறையினர் வருங்கால வருவாய் முறையிலான தொழிற்சாலை வேலைமுறைகளுக்காக ஆழ்மன உணர்நிலையிலும் உணர்நிலை அறிவிலும் தங்களது மூத்த தலைமுறையினர் நில இழப்பிற்கு ஈடாகப் பணம் பெறுதல் என்பதைச் சரியான நடைமுறையாக ஏற்றுக்கொள்கிறார்கள்.      தாணிக்கண்டி  இருளர்களை மரம் கடத்துகின்ற வியாபாரம் செய்பவர்கள் முறைகேடாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இருளர்கள் படிப்பறிவு இல்லாத அப்பாவிகள் என்பதனால் அவர்களை எளிமையாக ஏமாற்றி விபரீதமான வழக்குகளில் சிக்க வைத்துவிடுகிறார்கள். மரக்கடத்தல் போன்ற எந்தக் குற்றங்களிலும் ஈடுபடாத இருளர்கள் பொய் வழக்குகளில் சிக்கிக்கொண்டு நீதிமன்றங்களை எதிர்கொள்ள முடியாமல் மன அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள். பலர் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்கள். (ஆட்டனத்தி.2010:71) 
            தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருளர்கள் உட்பட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்களில் வாழும் மக்களது ஆழ்மன உணர் நிலையிலும் உணர் நிலை அறிவிலும் வனங்களில் வாழும் விலங்குகளை விட அரசு அதிகாரிகள் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள். “இந்த மலை மக்கள் யானை, கரடி, புலி, சிறுத்தை, நரிகளைக் கண்டு அஞ்சவில்லை. மலைப்பாம்புகளும் நச்சுத்தன்மை படைத்தவைகளும் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. அதைவிட கொடூரமானவர்களாக வருவாய்த்துறை, வனத்துறை, காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இம்மக்களின் கண்களுக்குப் பட்டனர்.” (நஞ்சப்பன்,.2007:141)
4.11.சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுதல்
வேட்டைக்குச் சென்ற சிக்குமாதா என்ற சோளகன் தற்காப்பின் அவசியத்தால் ஒரு கரடியை வேட்டையாடினான். அவனது வீரத்தைப் பாரட்டிய தொட்டி மக்கள் கரடியின் இறைச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள். கரடி வேட்டையை அறிந்த வனத்துறையினர் சிக்குமாதாவை நொய்தலாபுரம் என்ற வன பங்களாவிற்கு இழுத்துச் சென்று நடக்க முடியாத அளவிற்கு அடித்துச் சித்திரவதை செய்கிறார்கள். (பாலமுருகன்,.2013:28-31).
            பேதனின் சீர்காட்டு நிலத்தைத் துரையன் என்பவன் ஆக்கிரமிக்கிறான். மணியகாரின் அதிகார பலத்தைப் பயன்படுத்தி வட்டாச்சியர் மூலமாக சீர்காட்டின் மீதான பட்டா உரிமையையும் பெற்றுக்கொள்கிறான். பேதன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சண்டையிடுகிறான். பேதனை அடக்குவதற்கு மணியகாரர் உதவியுடன் துரையன் காவல்துறையைப் பயன்படுத்துகிறான். காவல் துறையினர் பேதனையும் அவனது மகன் சிவண்ணாவையும் சிறையிலடைத்துத் சித்திரவதைச் செய்கின்றனர். லத்திக்கம்பால் சரமாரியாக அடிக்கின்றார்கள். பூட்சுகால்களால் உதைத்துச் சதைகள் சிதையும்படித் தாக்குகிறார்கள். சீர்காட்டை உரிமை கொண்டாடிப் பிரச்சனைகள் செய்தால் சந்தனக்கட்டைக் கடத்தல் வழக்கில் சேர்த்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். (பாலமுருகன்,.2013:62).
            சோளகர் தொட்டியருகில் முகாமிட்டுள்ள கர்நாடக காவல்துறையினர் சோளகர்களை இரவு முழுதும் தூங்க விடாமல் கட்டாயக் காவல் பணி செய்வதற்கு நிர்பந்திக்கிறார்கள். முகாமைச் சுற்றிலும் மூங்கில் சத்தம் கேட்கும்படி தரையில் தட்டிக்கொண்டு வலம் வரும்படிச் செய்கிறார்கள். வராதவர்களை இரத்தம் கொட்டும்படி அடித்துச் சித்திரவதை செய்கிறார்கள். (பாலமுருகன்,.2013:127).
            தேநீர்க்கடை வைத்திருந்த தொட்டபந்தையன் என்ற லிங்காயத்தையும் அவனது மகன் பசுவராஜையும் விசாரணைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். வீரப்பனுக்கு அரிசிக் கொடுத்தியா என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே அவர்களைத் தடியால் சரமாரியாக அடிக்கிறார்கள். ஓய்வின்றி தொடர்ந்து அடித்ததால் தடியின் வேகம் குறைந்ததை அதிகாரி கவனிக்கிறான். அடிப்பவனை நிறுத்தும்படி சொல்கிறார். பசுவராஜீவின் கையில் தடியைக் கொடுத்து அவனது அப்பனை அடிக்கும்படி கட்டளையிடுகிறான். அடிக்க மறுத்ததாலும் அடியை மெதுவாக அடித்ததாலும் அதிகாரியின் கையிலுள்ள தடி பசுவராஜீவின் மீது பயங்கரமாகத் தாக்குகின்றது. பசுவராஜீன் அடியால் தந்தை தொட்டபந்தையன் சரிந்து விழுகிறான். தொட்டபந்தயனை எழுப்பி அவனது கையில் தடியைக் கொடுத்து அவனது மகனை அடிக்கும்படி கட்டளையிடுகிறான். தன்னால் அடிக்க முடியாது என்னைக் கொன்றுவிடுங்கள் என்று அழுதவனைக் கட்டாயப்படுத்தி மகனை அடிக்கும்படிச் செய்கிறான். அடி பொறுக்க முடியாமல் பசுவராஜ் மயங்கி விழுகிறான். (பாலமுருகன்,.2013:133-136). இதே நிலைக்கு மாதியின் அண்ணன் கெஞ்சனும் ஜீருண்டையும் ஆளாகினார்கள். ஒரேயொரு வித்தாயாசம் மட்டும் இருக்கின்றது. அவர்கள் கையில் தடிக்குப் பதிலாகத் தோல்செருப்பு இருக்கின்றது. அண்ணன் வீட்டிற்கு வந்திருந்த மாதியைத் தேடிவந்த காவல்துறையினர் கெஞ்சனின் வீட்டைப்பற்றி கெஞ்சனிடமே விசாரிக்கிறார்கள். கெஞ்சன் தெரியாது என்று பொய் சொல்லி தப்பிச் செல்கிறான். ஆனால் காவல் அதிகாரி மற்றவர்களிடம் விசாரித்து கெஞ்சனை அறிந்துகொள்கிறான். கெஞ்சனின் வீட்டு வாசலில் மாதியையும் அவளது மகள் சித்தியையும் சிறைபிடிக்கிறார்கள். காவல் அதிகாரி ஒரு பெரியவரின் காலிலிருந்த தோல் செருப்பைக் கழட்டும்படி கட்டளையிடுகிறான். கெஞ்சனையும் ஜீருண்டையையும் செருப்பை எடுக்கும்படி கட்டளையிடுகிறான். அப்பனை மகனும் மகனை அப்பனும் அடிக்கும்படி நிர்பந்திக்கிறான். சித்திரவதைகளுக்கு ஆளானவர்கள் வேறு வழியின்றி செருப்பால் அடித்துக்கொள்கிறார்கள். இறுதியில் மாதியையும் சித்தியையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு  செல்கிறார்கள். (பாலமுருகன்,.2013:197-198).
            சிங்கப்பன் என்ற காவல் அதிகாரி சிக்கையதம்பிடி என்பவனைத் தேடி குன்றியூரிலுள்ள அவனது மகள் மல்லியையும் அவளது கணவனையும் கைது செய்கிறான். ஜுப்பில் அழைத்துச் செல்லும்போதே மல்லியின் மார்பை அவளது கணவனின் கண்முன்பே வலிக்கும்படி பிடித்து அழுத்துகிறான். கரும்புக் காட்டில் ஜீப்பை நிறுத்தி மல்லியை மண்ணில் விழச்செய்து பாலியல் வன்புணர்ச்சி செய்கிறான். சிங்கப்பனிடமிருந்து வேறொரு அதிகாரியிடம் விசாரணை என்ற பெயரில் விடப்படுகிறார்கள். அவனும் மல்லியை வன்புணர்கிறான். புட்டன் என்பவனைத் தேடிச்செல்வதாக நாடகமாடி அவனது வீட்டிற்குச் செல்கிறார்கள். வீட்டில் அவனது மனைவி ஈரம்மாளும் அவளது குழந்தையும் மட்டும் இருக்கிறார்கள். மூன்று காவலர்களும் அவளை வன்புணர்கிறார்கள். அவள் ஆறுமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். ஆனாலும் அவளைச் சித்திரவதை செய்து வன்புணர்கிறார்கள். (பாலமுருகன்,.2013:142,147,149,169-170).
            பாலப்படுகை தொட்டியிலிருந்து புட்டன் என்பவனை விசாரனைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். உயரதிகாரியும் மற்ற காவலர்களும் புட்டனைச் சுற்றிலும் நின்று தடியுடன் தயாராக இருக்கிறார்கள். “வீரப்பன் இப்போ எங்கேடா இருப்பான்?” என்று மிரட்டும் தொனியில் உயரதிகாரி கேட்கிறான். அவனது கையிலிருந்தத் தடியை உற்றுப்பார்த்த புட்டன் எதையேனும் சொன்னால்தான் அடிவாங்காமல் தப்பிக்க முடியும் என்று முடிவெடுக்கிறான். ஒரு பொய்யை உண்மையைப்போலச் சொல்லி தப்பிக்க முயற்சி செய்கிறான். அதிகபட்சம் அவனது பதில்கள் தடியடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் தன்னைக் கொலை செய்வதற்கான சந்தர்பத்தைத் தள்ளிபோடுவதற்காகவும் உரிய முயற்சிகளாகவே அமைகின்றனவீரப்பனும் இவனும் ஒன்றாக இருந்து ஒரே தட்டில் சோறு சாப்பிட்டவர்களைப்போல பதில் சொல்கிறான். “நாளைக்கு இராகி மாவு கொண்டுக்கிட்டு திருகல்வனம் வரச்சொன்னானுங்க. அநேகமா குன்றி பக்கம் திருகல்வனத்திலேதான் இருப்பான்என்கிறான். உயரதிகாரி அனைவரையும் அழைத்துக்கொண்டு திருகல்வனத்திற்குச் சென்றான். அங்கு வீரப்பன் நடமாடுவதற்கான எந்தத் தடயங்களும் இல்லாததால் அதிகாரி கோபமடைகிறான். எங்கேடா வீரப்பன் என்று புட்டனை விசாரிக்கிறான். புட்டன் தன்னைச் சுற்றி நின்ற காவலர்களையும் தடிகளையும் பார்த்துவிட்டு பழையபடி தப்பிப்பதற்காக பொய் சொல்கிறான். “சாமி, ஒரு வேளை அவன் கேர்மாளம் பக்கமிருக்கிற கரடி மடுவிலே தங்கியிருப்பான். போனா, அதிகாலையிலே புடிச்சுடலாம்.” என்றான். (பாலமுருகன்,.2013:152-155). புட்டன் அடிவாங்கத் தொடங்காவிட்டாலும் அவனது மனநிலையில் உருவாகியிருந்த அச்சமானது சோளகர்களின் மனநிலையைக் காவல்துறையினரின் சித்திரவதை வடிவங்கள் எத்தனை அழுத்தமாக சிதைத்திருக்கின்றன என்ற உண்மையை அறிவிக்கின்றன.
            சித்திரவதை முகாம்களில் ஒர்க்சாப் என்று அழைக்கப்படுகின்ற ஒரு அறை இருக்கின்றது. அந்த அறையில் மெக்கர் பெட்டி ஒன்று இருக்கின்றது. அதில் கைப்பிடியுள்ள சுற்றுக் கருவி பொருந்தியிருக்கின்றது. அந்தப் பெட்டியில் ஒரு கருப்புப் பித்தான் இருக்கின்றதுகிளிப்களுடன் கூடிய வயர்கள் இணைந்திருக்கின்றன. இந்தக் கருவியை நவீன சித்திரவதைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். விசாரணை என்ற பெயரில் சித்திரவதைக்கு ஆளாகும் நபர்களின் உடலில் உதடு, காதுமடல், விரல்கள், ஆண்களுக்கு ஆண்குறி, பெண்களுக்கு மார்புக் காம்பும் பிறப்புறுப்பும் என அத்தனை உறுப்புகளிலும் வயர் கிளிப்புகளை மாட்டுகிறார்கள். மெக்கர் பெட்டியிலுள்ள கைப்பிடியைச் சுற்றுகிறார்கள். ஒவ்வொரு சுற்றிலும் மின்சாரம் உற்பத்தியாகின்றது. இறுதியாக கருப்பு பொத்தானை அழுத்துகிறார்கள். மின்சாரம் ஆட்களின்மீது பாய்கிறது. மின்சாரத்தால் சித்திரவதைக்கு ஆளாகும் மனிதர் அந்த அறையெங்கும் கதறியபடி ஓடி உருளுகின்றார். அந்த அலறல் சத்தம் பலமாகக் கேட்கின்றது. உடல் முழுவதும் வெந்துபோகின்றன. பெண்களுக்கு பலமுறை இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல் மிகவும் பலவீனமடைகிறார்கள். கெம்பன் என்பவன் அலறியடித்து மயங்கி விழுகிறான். அவன் நடிக்கிறானா என்பதைச் சோதிப்பதற்காக ஒரு காவலன் ஒரு பட்டையான தோல் வாரினை எடுத்துவருகிறான்அந்த வாரில் நூற்றுக்கணக்கான சிறு ஆணிகள் பொருந்தியிருக்கின்றன. அதனைத் தண்ணீரில் நனைத்துக் கெம்பனின் முதுகில் ஓங்கியடிக்கிறான். அவன் அய்யோ என்று கத்தி நெளிகிறான். அவனது இரத்தம் அறை முழுவதும் தெரிக்கின்றது. வேதனை தாங்காமல் அவனது காலோடு மலம் வழிந்து சிதறிவிடுகின்றன. அறையில் மலம் போய்விட்டாயா என்று கோபத்துடன் போலீசுக்காரன் பீயைத் தின்னுடா என்று கட்டளையிடுகிறான். அவன் பயத்தில் பீயை அள்ளி வாயில் போட்டு முழுங்குகிறான். கெம்பனின் சுண்டு விரலின் நுனியை உருளையான கம்பால் நசுக்கி இழுத்தார்கள். அவனது நகம் பிய்ந்து இரத்தம் தெரிக்கின்றது. (பாலமுருகன்,.2013:202-206,213). இவ்வாறாக சோளகர் பழங்குடிகள் மீதான அதிரடிப்படையினரின் சித்திரவதை முறைகள் மிகப் பயங்கரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
            வெள்ளையன் என்ற மலையாளியிடம் தவணைப் பணத்தை வசூலிப்பதற்காக கந்துவட்டிக்காரனது கையாளாகிய சுக்கிரபள்ளன் வருகிறான். வெள்ளையன் தவணைப்பணம் கொடுப்பதற்கு வழியின்றி தயங்கி நிற்கிறான். ஒரு குழந்தைக்குத் தாயாகிய அவனது மனைவி கருமாயியைக் கவனிக்கிறான். அவளைத் தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கட்டளையிடுகிறான். பணத்தைக் கொடுத்துவிட்டு மனைவியை அழைத்துச்செல்லுமாறு அதிகாரம் செய்கிறான். வெள்ளையன் எல்லா மலையாளிகளைப் போலவும் ஏதும் செய்து மனைவியைக் காப்பாற்ற இயலாதவனாக நிற்கிறான். கருமாயி தன்னை விட்டுவிடும்படி கதறி அழுகிறாள். வெள்ளையன் தன் மனைவியை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான். “மச்சா! பச்சப் புள்ளத் தாச்சி! உனக்கொரு தங்கச்சியா நெனச்சுப்பாரு!” என்று காப்பாற்ற முயற்சி செய்கிறான். “ஊரெல்லாம் தங்கச்சியாவும் மாரெல்லாம் சந்தனமுமா நின்னா குடுத்தக் கடனுக்குக் கோடித் துணி வாங்கிப் போட்டுட வேண்டியதுதான்என்று பதில்கூறி கருமாயியை அழைக்கிறான். கருமாயி கையிலிருந்த குழந்தையை வலுக்கட்டாயமாகப் பறித்து வெள்ளையனிடம் கொடுத்துவிட்டு கருமாயியை இழுத்துச்செல்கிறான். (சின்னப்ப பாரதி,கு. 2008:125-130). சிலோன் சீரங்கன் வழிகாட்டுதல்படி காவல்துறையில் சென்று புகார் செய்கிறான். “கந்துக்கடை அஜீஸ் சாயபும் அவனது அடியாளும் தனது மனைவியைப் பலாத்காரம் செய்து காணாமல் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள்என்பதாகப் புகார் பதிவு செய்யப்படுகின்றது. புகார் எழுதுவதற்காக காவல் நிலைய எழுத்தர் இருபத்தைந்து ரூபாய் வாங்கிக்கொண்டார். காவல்துறையினர் பணம் பெற்றுக்கொண்டதால் மனைவியைக் காப்பாற்றி ஒப்படைப்பார்கள் என்பதாக வெள்ளையன் நம்புகிறான். இந்த வழக்கு விசயமாக காவல்துறையினர் வெள்ளையனுக்கு அழைப்பு கொடுத்தார்கள். வெள்ளையன் தனக்கு நீதி கிடைக்கப்போவதாக நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செல்கிறான். சீரங்கனையும் உடன் அழைத்துச் செல்கிறான். காவல் நிலையத்தில் துணை ஆய்வாளருக்கு இணையாக கந்துவட்டிக்கார சாயபு அமர்ந்திருக்கிறான். வெள்ளையன் நம்பிக்கையிழக்கத் தொடங்கினான். அபாயத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான். சீரங்கன் வழிகாட்டுதலால்தான் புகார் செய்திருக்கிறான் என்பதை அறிந்துகொண்டதும் சீரங்கனை அடிக்கிறான். மலையாளிகளது பண்பாட்டை இழிவாகப் பேசுகிறான். வெள்ளையனை அடித்துச் சித்திரவதை செய்கிறான். வெள்ளையன் சாயபுவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறான். காவல் அதிகாரியிடம் குற்றப்பணத்தைக் கொடுத்துவிட்டு தப்பித்துக்கொள் என்பதாக சாயபு அறிவுறுத்துகிறான். காவல்துறை அதிகாரி குற்றப்பணமாக இருநூறு ரூபாயைக் கேட்கிறான். அந்த இருநூறு ரூபாயையும் சாயபுவிடமே கடனாகப் பெற்றுக் குற்றப்பணத்தைச் செலுத்திவிட்டு வதைபட்ட உடம்புடன் திரும்பிவருகிறான். அடிபட்ட சித்திரவதைகளைவிட மீண்டும் இருநூறு ரூபாய் கடனுக்கு ஆளாகியிருக்கிறோமே என்ற எண்ணமே அவனை மிகுந்த சித்திரவதைக்கு ஆளாக்குகிறது. (சின்னப்ப பாரதி,கு. 2008:157-167).
            தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருளர்கள் உட்பட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்கள் முழுவதும் பண்ணையார்கள், ஜமீன்தார்கள் போன்ற ஆதிக்க சக்திகளின் அதிகாரத்தில் அமைந்திருக்கின்றன. வனத்துறை, காவல்துறை, வருவாய்துறை ஆகிய அனைத்தும் ஆதிக்க சக்திகளின் சேவை கருவிகளாகவே செயல்படுகின்றன. (நஞ்சப்பன்,. 2007:123,127,130). ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற மரங்களை வனத்திலிருந்து கொள்ளையடித்து ஆதிக்க சக்திகள் வியாபாரம் செய்கின்றன. வனத்திலிருந்து மரங்களைக் கொள்ளையடிப்பவர்களையும் யானைகளைக் கொன்று தந்தம் கடத்துபவர்களையும் எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் மீது சந்தனமரம் கடத்தல் போன்ற பொய்யான வழக்கைப் பதிந்து நாசமாக்குகிறார்கள். மரம் கடத்தல், தந்தம் கடத்தல் போன்ற தகவல்களை மேலிடத்திற்குக் காட்டிக்கொடுப்பவர்கள் வனக்கொள்ளையர்களால் துன்புறுத்தப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். வனத்துறை அதிகாரிகள் அவனைப் பழிவாங்குகிறார்கள். மேலதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தவர்களை அதிகபட்சமாக அடித்தே கொன்றுவிடுகிறார்கள். இறந்தவனின் சடலத்தைக் காட்டில் வீசிவிடுகிறார்கள். பூபன் என்பவன் இவ்வாறான முறையில் கொல்லப்பட்டிருக்கிறான். (நஞ்சப்பன்,.2007:135) வனத்துறை, காவல்துறை மற்றும்  பண்ணையார் போன்ற ஆதிக்க நிலையிலுள்ளவர்களை எதிர்த்துச் செங்கொடி இயக்கங்களுடன் இணைந்து போராடுபவர்களை நக்சலைட்கள் என்பதாகப் பொய்வழக்கு பதிந்து சிறையிலடைக்கிறார்கள். சிறையிலிருப்பவர்களை ஆடைகளைக் களைத்து நிர்வாணமாக்குகிறார்கள். அவர்களின் உயிர் நாடியைத் தடி கொண்டு தாக்குகிறார்கள். உள்ளங்கால் பாதங்களில் தடியைக் கொண்டு தாக்குகிறார்கள். உள்ளங்காலில் அடிபட்டவர்களை மேலும் துயரடையச் செய்வதற்காக குதிக்கச்சொல்லி அடித்து கட்டாயப்படுத்துகிறார்கள். சிலரை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிக்கிறார்கள். மிளகாய் புகையை மூக்கில் ஏறச் செய்கிறார்கள். தடியால் அடிவயிற்றைப் பார்த்து ஓங்கிக் குத்துகிறார்கள். மின்சாரக் கருவியைப் பயன்படுத்தி அவற்றின் ஒயர்களைக் கைதிகளின் கைகளிலும் உயிர்நிலையிலும் இணைக்கிறார்கள். மின்சாரம் பாய்வதற்கான பொத்தானை அழுத்துகிறார்கள். மின்சாரம் பாய்ந்து அலறித்துடிக்கின்ற கைதிகள் இறுதியாக மயங்கி விழுகிறார்கள். கைதிகளின் ஆசன வாயிலில் நீண்ட கம்பியை செருகி துன்புறுத்துகின்றனர். இவ்வாறாக ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எழுச்சி பெற்ற தேன்கனிக்கோட்டை தாலுகாவில் இருளர்கள் உட்பட்ட மலையடிவாரத்திலுள்ள வன கிராமத்து மக்கள் ஏராளமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். (நஞ்சப்பன்,. 2007:213,220-223).
            படகர்கள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினத்தில் ஆதிக்கச் சக்திகளினால் சித்திரவதைகளுக்கு ஆளாகின்ற நிலைமைகள் பற்றிய செறிவானத் தகவல்கள் இடம்பெறவில்லை.
4.12.இயல் முடிவுகள்
இந்த இயலில் ஆய்விற்குரிய ஐந்து புதினங்களிலிருந்து சோளகர்கள், மலையாளிகள், படுகர்கள், இருளர்கள் ஆகிய பழங்குடி மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும் ஆராயப்பெற்றிருக்கின்றன. சமூகப் பொருளுற்பத்தி பாதித்தல், இயற்கையை எதிர்கொள்ளுதல், அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்படுதல், நவீன அரசுகளின் அதிகாரத்திற்கு ஆட்படுதல், இயற்கையின் பகை முரணுக்கு ஆளாக்கப்படுதல், வனம் பணமாதல், கடன் சுமைக்கு ஆளாகுதல், விழுமியங்கள் சிதைக்கப்படுதல், உள்ளத்தியலும் கருத்தியலும் சிதைக்கப்படுதல், சித்திரவதைகளுக்கு ஆளாகுதல் ஆகிய தலைப்புகளில் பண்பாட்டு அசைவியக்கங்களை விளக்குவதாக  நான்காம் இயல் அமைக்கப் பெற்றிருக்கின்றது.

            அரசு மேற்கொள்கின்ற வனம் சார்ந்த எதிர்மறையானப் பொருளாதரக் கொள்கைகள் தமிழகப் பழங்குடிமக்களுக்கு முதன்மையான வாழ்வியல் நெருக்கடிகளாக உருவாகியிருக்கின்றன. மனித சமூகம் தொடர்ந்து இயற்கையின் அங்கமாக ஒத்திசைந்து நிலைபெறுவதற்கு இயற்கையுடன் பகை முரண் பாராட்டாது பண்பாட்டைப் பக்குவப்படுத்திக்கொள்வது இன்றியமையாத சமூகத் தேவையாக இருக்கின்றது. வனங்களை இயற்கையின் வளமாகவும், பல்லுயிரினங்களின் வாழ்வாதாரமாகவும், பழங்குடி மக்களின் இயற்கையோடு ஒத்திசைந்த உரிமைகளாகவும் கருதுகின்ற முறையில் அரசின் வனக்கொள்கைகள் அமையவில்லை. இயற்கையின் அங்கமாக வாழ்கின்ற பழங்குடி மக்களை மனித இனத்தின் முன்னோர்களாக மதிக்க வேண்டியது வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது. வனங்களுடனும் வனங்களில் வாழும் வன உயிரினங்களுடனும் ஒத்திசைந்து வாழ்கின்ற பண்புடையவர்களாக வாழ்கின்ற வாழ்வியல் பண்பாட்டைப் பழங்குடி மக்கள் பெற்றிருக்கிறார்கள். வன உயிரினங்களின் ஓர் அங்கமாக பழங்குடிமக்களைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது. இதற்கு மாறாக வனங்களிலிருந்து பழங்குடிகளைக் கட்டாயத்தின் அடிப்படையில் வெளியேற நிர்பந்திக்கின்ற முயற்சிகள் அனைத்தும் இயற்கையுடன் பகை முரண்களைக் கூர்மைப்படுத்துகின்ற முயற்சிகளாகவே அமைகின்றன. அரசு இயந்திரத் தொடர்புகளால் உருவாக்கப்படுகின்ற முதன்மை நெருக்கடிகளே தமிழகப் பழங்குடிகளின் பண்பாட்டு அசைவியக்கங்களுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.

... 

முடிவுரை

No comments:

அதிகம் படித்தவை