எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

மக்களும்புனிதர்கள்அல்ல




மக்களும் புனிதர்கள் அல்ல
-புதியவன்

மூன்று சாதி வெறியர்
முடித்துச் சென்றனர்

சந்தையிலிருந்து சாலைக்கு வந்த
இளம் காதலர்களை பத்தே நிமிடத்தில்
முடித்துச் சென்றனர்

ஐந்நூறு மனிதர்கள் அதிர்ச்சியடைய
இரத்தம் படிந்த ஆயுதங்களுடன்
சாதிப் பெருமை முகத்தில் சிரிக்க
நிதானமாக முடித்துச் சென்றனர்

ஐம்பது மனிதர்கள் வளைத்திருந்தாலும்
சாதி வெறியர்களுக்கு பாடம் நிகழ்ந்திருக்கும்
ஐந்நூறு மனிதர்களும் அசமந்தமாய் நிற்க
புதிதாய் பூத்த காதல் தம்பதிகள்
வெட்டுபட்டு மாண்டு போயினர்

அவனது காதலியின் செல்லத் தந்தை
கொலை மிரட்டல் செய்தாராம்

சந்தை கூட்டம்
மனிதர்களின் நடமாட்டம்
சாதி வெறியர் வெட்ட வந்தால்
மக்கள் வெள்ளம் சும்மாவா நிற்கும்!
அற்ப நம்பிக்கையில் சந்தைக்கும் வந்தார்கள்

சாதி வெறியர்களுக்குத் தெரியும்
பொதுமக்கள் வெறும் மனித மந்தைகள்!
பத்தே நிமிடத்தில் நிரூபித்துச் சென்றனர்
சாதி வெறியை இணையத்திலும் பகிர்ந்தனர்

சன்னலோரத்தில் வரிசைகட்டிச் சென்ற
கருப்பு எறும்புகளை வெட்டிப் பிடித்தது வெட்டுக்கிளி
ஒற்றை எறும்பை உண்டு முடிப்பதற்குள்
ஒரு நூறு எறும்புகள் வளைத்து தாக்கின
எறும்பை உணவாக்கிய வெட்டுக்கிளி
எறும்புகளுக்கு உணவானது

மக்களிடமிருந்த தற்காப்பு ஒற்றுமை
எறும்பெனும் மூதாதையிடம் மட்டுமே மிச்சமிருக்கிறது!


நேற்றைப் போலவே இன்றும் நாளையும்
விவாத மேடைகளுக்கு விறுவிறுப்பான கொலைகள்
கிடைக்கத்தான் செய்கின்றன!

காதலித்தவர்களை கண்டிப்போருக்கும் ஓட்டு நிச்சயம்
கவுரவக் கொலைகளைக் கண்டிப்போருக்கும் ஓட்டு நிச்சயம்

ஓட்டுக்காகவும் வியாபார இலாபத்திற்காகவும்
இத்தகைய கண்டிப்புகள் தொடரத்தான் செய்கின்றன

நம் பேச்சு ஓட்டுக்கானதல்ல
சமூகவிஞ்ஞானிகளின் புத்துலக படைப்பிற்கானது!

நம் கண்டிப்புக்கு உரியவர்கள்
காதலித்தவர்களோ
சாதிவெறிக் கொலையாளிகளோ அல்ல
சலனமின்றி வேடிக்கைப் பார்த்த மக்களுக்கு உரியது

ஐந்நூறு மனிதர்களை சுட்டிக்காட்டி
நம்மை மறைத்துக் கொள்வதற்கல்ல
கண்டிப்பு நம்மை நோக்கியும் நீள்கிறது!

அந்த ஐந்நூறு மனிதர்களில்
நாம் நின்றிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்

மற்றவர்களுக்குச் செய்தியானது
ஐந்நூறு மனிதர்களைப் போல
நமக்கும் நேரடி காட்சியாகியிருக்கும்…

பதட்டத்தில் பயந்திருப்போம் புலம்பியிருப்போம்
நான்கு சொட்டாவது கண்ணீர் சிந்தியிருப்போம்!
மற்றபடி எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்திருக்கும்

நம் சகமனித அக்கறையற்ற
மனநிலை மாற வேண்டும்

நம் சமூக அக்கறையற்ற
வாழ்க்கை முறை மாற வேண்டும்

ஒவ்வொரு தனிமனிதரும் சமுதாயத்தில் சகமனிதர்கள்
என்றொரு உணர்வு நிலை மலர வேண்டும்



படைப்பாற்றலுக்கான ஒற்றுமையும்
தற்காப்பிற்கான ஒற்றுமையம்
நம்மில் கிளர்ந்து எழாது போனால்
நம்மோடு மனித இனம்
மண்ணோடு வீழ்ந்து விடும்!

அடிமைத்தனமற்ற பொன்னுலகம்
கனவாகவே மடிந்து விடும்!

நம் மனநிலை தெளிந்து
சமூகவிஞ்ஞான முயற்சிகள் படர்ந்தால்
நல்லுலகம் படைப்பதற்கான புதிய ஒற்றுமையை
கொண்டாட முடியும்!

கொடுமைகளுக்கு எதிரான போர்களை
திட்டமிட்டு நிகழ்த்தலாம்…

சாதி வெறியர்கள்
மத வெறியர்கள்
இன வெறியர்கள்…
மிகவும் ஆபத்தான மன நோயாளிகள்!

நிகழ்கால போருலகில்
முடிக்கப்பட வேண்டியவர்கள்!

நாம் படைக்கவிருக்கும் நல்லுலகில்
தப்பிப் பிழைத்த மனநோயாளிகளுக்கு மருத்தகம் இருக்கும்
மிச்சமிருக்கும் வெறியர்களை குணப்படுத்தி வெல்லலாம்!

சலனமற்ற மக்களே
சமூகவிஞ்ஞானக் களங்களில் சங்கமிக்கத் தொடங்கலாம்!…


வெளிவந்த விபரம்

புதுப்புனல், ஏப்.2016. (பக். 36 - 37)

No comments:

அதிகம் படித்தவை