எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Tuesday, May 23, 2017

மார்க்சிய வெங்காயக் குழம்பு

மார்க்சிய வெங்காயக் குழம்பு
இனி சமூகவிஞ்ஞானப் பயிற்சிக்குத் தயாராவோம். இதற்கு நாம் செய்ய வேண்டியது இவைதான். நம்மையும் நமது சிந்தனைமுறையையும் சரிபடுத்தும் ஆற்றல் சமூகவிஞ்ஞானிகளுக்கு மட்டுமே இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தாக வேண்டும். நமது உலகப்பார்வையை சமூகவிஞ்ஞானத்தால் மட்டுமே சரிபடுத்த முடியும் என்ற உண்மையில் உறுதிகொள்ள வேண்டும். நமது உலகப்பார்வையை சரிசெய்ய சமூகவிஞ்ஞானிகளோடு நம்மை உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும். சமூகவிஞ்ஞானிகளின் பல்வேறு களங்களில் ஏதேனும் ஒன்றிலாவது நாம் செயல்பட வேண்டும்.
செயலிலிருந்து சிந்தித்தலும், சிந்தனையிலிருந்து செயல்படுதலும் மனித இயற்கை. இந்த இயற்கைக்கு வலிமையூட்ட உற்றுநோக்குதலும் பரிசோதித்தலும் அவசியமானவை. நமது செயல்கள் சமூகவிஞ்ஞான இலட்சியங்களைப் பின்பற்றுகிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். நமது சிந்தனையில் ஐந்து வழிமுறைகளும் கலந்திருக்கிறதா என்பதை தொடர்ந்து உற்றுநோக்க வேண்டும். சமூகவிஞ்ஞானிகளின் உதவியுடன் நாமும் சமூகவிஞ்ஞானிகளாக மலர்ந்துவிட வேண்டும். சமூகவிஞ்ஞானக் களத்தில் நமக்கு உருவாகின்ற நட்பின் வலிமையே இதைச் சாதித்துக்காட்டும். இந்த நட்பு மிக அற்புதமானது. இதன் பயன் மிக வலிமையானது. இந்தச் சமூகவிஞ்ஞானப் பயிற்சியில் நாம் வலிமை பெற்றால், சிந்திப்பதே நமக்கு கொண்டாட்டந்தான். கொண்டாட்டம் இல்லாவிட்டால் உழைப்பு ஏது? வாழ்க்கை ஏது? கொண்டாட்டத்தின் வழியாக மாபெரும் மாற்றத்தை நாம் சாதிக்கப் போகிறோம்.
சகமக்களிடத்தில் மூளை உழைப்பும், உடல் உழைப்பும் பிரிக்க முடியாத காதலர்களாக இணைந்திருந்தன. இது மனித குலத்தின் குழந்தைப் பருவம். ஆனால், வரலாறு இவர்களைப் பிரித்து வைத்து வேடிக்கைப் பார்த்தது. மூளை உழைப்பு தனது அன்பானக் காதலியை தாழ்வாக நினைத்து அடிமைப்படுத்தியது. உடல் உழைப்பும் அதற்கு அடங்கிப்போனது. நமது சமூகவிஞ்ஞானப் பயிற்சியில் இந்த இணையர்கள் ஒன்றுகலக்கப் போகிறார்கள். உடல் உழைப்பு மூளை உழைப்பை முத்தமிடப்போகிறது. மூளை உழைப்பு உடல் உழைப்பைக் கட்டி தழுவப் போகிறது. அன்பிலும் பண்பிலும் இக்காதலர்கள் இணைபிரியாத இணையாளர்களாக சமூகத்தின் மேன்மையை அலங்கரிக்கப் போகிறார்கள். உடல் உழைப்பாளர்கள் அறிவு ஜீவிகளாகவும், அறிவு ஜீவிகள் உடல் உழைப்பாளர்களாகவும் பிரகாசிக்கப்போகிறார்கள். நமது சமூகவிஞ்ஞானப் பயிற்சியின் இலட்சியமே இதனைச் சாதிக்கப் போகிறது.
சரி, இதுவரை நாம் அறிந்தது சமூகவிஞ்ஞானத்தின் சாராம்சம் மட்டுமே. அதாவது, குழந்தைகள் சோறு பொங்கி விளையாடுவார்களே, அதைப்போல சமூகவிஞ்ஞானத்தை விளையாடி முடித்திருக்கிறோம். நாம் முழுமையை நோக்கி வளர வேண்டும்.  நமக்கு கற்றுத்தர சமூகவிஞ்ஞானிகள் பல்வேறு களங்களில் காத்திருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து அதிகம் கற்க வேண்டும். மற்றபடி நமக்கு அனைத்தும் முதல் படியே!
இங்கு மார்க்சியம் வெங்காயக் குழம்பாக இருக்கிறது. வெங்காயக் குழம்பின் சுவை பற்றிய அனுபவங்களைப் பேசியுள்ளோம். வெங்காயக் குழம்பிற்காகப் பயன்படும் பொருள்களைப் பட்டியலிட்டுள்ளோம். பட்டியலிட்டுள்ள பொருள்களைக் கொண்டு வெங்காயக் குழம்பு செய்யும் முறையைப் பேசியுள்ளோம்.  ஆனால் வெங்காயக் குழம்பை அவரவர்கள் செய்துபார்க்க வேண்டும். குழம்பின் சுவையிலிருந்தே அது வெங்காயக் குழம்பா, வேறொன்றா என்பதை முடிவு செய்ய முடியும்.
வெங்காயக்குழம்பைப் பலமுறை செய்து தேர்ச்சி கண்ட சிஷ்யர்கள் குருவை வென்ற மேதைகளாகப் புகழப்படலாம். இவர்தான் பெரிய வெங்காயம் என்று பலராலும் பெருமைப் படுத்தப்படலாம். உங்கள் வெங்காயக் குழம்பே என் நாக்கிற்கு உயிர் தந்தது என்று பலராலும் பாராட்டப்படலாம். பலர் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் சாமானிய மக்கள் விரும்பும் எளிமையான உணவு வெங்காயக் குழம்பு. வெங்காயக் குழம்பின் சுவைபோல மார்க்சியத்தின் சுவையும் அவர்களைச் சேர வேண்டும். மார்க்சிய சமூகவிஞ்ஞானிகளும், பொதுவுடைமை இயக்கங்களும் இதைச் சாதிக்க வேண்டும். சமூகவிஞ்ஞானக் களங்கள் இதனைச் சாதித்து வருகின்றன என்ற உறுதியுடன்
சமூகவிஞ்ஞானப் பயிற்சியில் உங்களோடு பங்கேற்கின்ற

புதியவன்


... 

சமூகவிஞ்ஞானக் களங்களில் சிந்தனைப் பயிற்சி

No comments:

அதிகம் படித்தவை