எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

நரிக்குறவர்களது தெய்வ வழிபாடு பற்றிய கதைகள்





நரிக்குறவர்களது தெய்வ வழிபாடு பற்றிய கதைகள்
நரிக்குறவர்கள் இடத்திற்கு நான்குதின பயணம்
-கே. சிவக்குமார்


            
                புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வாளராக நான் இணைந்த பிறகு பழங்குடி மக்களுடன் பழக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நரிக்குறவர் சமூகம் பற்றிய ஆய்விற்கான குழுவில் பதினொரு நபர்கள் இடம் பெற்றிருந்தோம். இரு நாளுக்கு ஒரு கார். நான்கு தின பயணத்திற்கு இரண்டு கார்கள் பயன்படுத்தப்பட்டன.
                1 நரிக்குறவர் சமூகத்திற்கும் ஆய்வாளர்களுக்கும் நல்ல பாலமாக திகழ்ந்தார், பண்பாளர் ராஜா. 2 பொறுப்பான ஓட்டுநர் குமரேசன், 3 ஆய்வாளராகவும் திகழ்ந்தார் ஓட்டுநர் பாண்டியன், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்களாகிய 4 சுரேஷ;குமார்.சௌ 5 பத்மபாரதி 6 கே.சிவக்குமார். புதுவை பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை ஆய்வாளர்களாகிய 7 சியாமளா கௌரி 8 செல்வக்குமார். சென்னையிலிருந்து வந்திருந்த புகைப்படக் கலைஞர்கள் 9 அர்ச்சனா 10 வினோத் 11 எங்கள் அனைவரையும் சிறப்பாக வழி நடத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர். பக்தவத்சலபாரதி அய்யா அவர்கள்.
                எங்கள் பயணத்தில் இடம்பெற்ற இடங்கள். பண்ருட்டி, வடலூர், ஸ்ரீமுஷ;ணம், செஞ்சி, திண்டிவனம், தௌ;ளாறு, குருவிமலை, மானாம்பதி.
                நாங்கள் பணியின் பொறுப்போடு பயணத்தை தொடர்ந்து நிறைவேற்றினோம்.
                நரிக்குறவர் சமூகத்தின் கடவுள்கள் பற்றிய கதைகளை உள்வாங்கி பதிவது என் பொறுப்பு. இந்த நோக்கில் நான் சந்தித்த நபர்களிடம் தகவல்களை சேகரிக்க முயற்சித்தேன். இதன் விளைவாக எனது சக்திக்கு ஏழு கதைகளை பதிவு செய்கிறேன். இக்கதைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டமைகிறது.
                மனிதர்கள் பல்வேறு காரணங்களால் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இப்பிரிவின மக்கள் சமூக பொருளாதாரத்திலும் பண்பாட்டு நிலையிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது. மற்ற இன பிரிவினரை விட நாங்கள் உயர்ந்தவர்கள். இதை நிறுவ 'ஏதேனும் சில கதைகளை ஒவ்வொரு பிரிவும் வைத்திருக்கிறது. இத்தகைய கதை ஒன்று நரிக்குறவர்களிடமிருந்து கிடைத்தது. இது உலகத்தோற்றம் பற்றிய கதையாகவும் உள்ளது.
               
                ஆதியில் உலகம் தோன்றுவதற்கு முன்பு கடல் மட்டுமே இருந்தது. கடலில் சுரக்குடுவை ஒன்று மிதந்து வந்தது. அதிலிருந்துதான் உலகம் ஆரம்பமாகப் போகிறது. ஆம் மிதந்து வந்த சுரக்குடுவை இரண்டாக உடைந்தது. உடைந்த குடுவையின் ஒரு பகுதியில் அண்ணனும், மறுபகுதியில் தம்பியும் தோன்றினார்கள். இவர்கள்தான் உலகில் முதல் மனிதர்கள். அண்ணன் காட்டுக்கு ராஜா. தம்பி வீட்டுக்கு ராஜா. அண்ணனது காட்டில் தம்பி ஒரு மானை வேட்டையாடி சொத்தாக எடுத்தார். தம்பியின் சொத்தை அண்ணன் சூடுகாட்டி உண்டுவிட்டார். எங்கே எனது மான் என தம ;பி கேட்டார். இதோ உன் பங்கு என அண்ணன் சுட்டினார். அண்ணன் சுட்டிய திசையில் ஒரு தலை, நான்கு கால், கொஞ்சம் குடல் இருந்தது. இதுதான் தம்பியின் பங்காக அண்ணன் விட்டுவைத்திருந்த மான். 'நல்ல கறி எல்லாம் உனக்கு, நொந்த கறி மட்டும் எனக்கா!' என்று தம்பி கோபித்தார். தம்பியை சமாதானம் செய்ய அண்ணன் பெருந்தன்மையுடன் விரைந்தார். 'கோபிக்காதே தம்பி! உனக்காக நாடு, வீடு, மாளிகை, அரண்மனை அனைத்தையும் விட்டுத்தருகிறேன். நீயே எடுத்துக்கொள். எனக்கு காடு மட்டுமே போதும்.' அன்றிலிருந்து அண்ணன் காட்டுக்கு ராஜாவானார். தம்பி வீட்டுக்கு ராஜாவானார். காட்டின் ராஜாவாகிய அண்ணனது வழியில் வந்தவர்கள்தான் நரிக்குறவர்களும் ஒட்டன், கொம்பன், வில்லன் போன்றவர்களும். இவர்களது விட்டுக்கொடுத்தலின் விளைவாக வாழ்வு பெற்ற வீட்டுக்கு ராஜாவாகிய தம்பியின் வழியில் வந்தவர்கள்தான் அய்யர், நாடார், கவுண்டர், தேவர், செட்டியார், நாயக்கர் போன்றவர்கள்.

                இந்தக் கதையைக் கொண்டு இவர்கள் யாருக்கு எதை கூற விரும்புகிறார்கள்? தங்கள் கதை சொல்லும் வரலாறுபடி, தங்களை உயர்ந்தவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் அனைவரும் எங்களுக்கு தம்பிகளே. அவர்களுக்கு நாங்கள் அண்ணன்கள் என்ற வழியில் நாங்களே உயர்ந்தவர்கள். இதுதான் இக்கதை வழியில் இவர்கள் உணர்த்துவது.

                நரிக்குறவர்;களுள் காளியை வழிபடுவோர், மீனாட்சியை வழிபடுவோர் போன்ற பிரிவுகள் உண்டு. காளியை வழிபடும் பிரிவினர் பெருமாள் வழிபாட்டிற்கு பின்பே காளியை வழிபடுகின்றனர். பெருமாளுக்கும் காளிக்கும் என்ன தொடர்பு?

                'அய்யனாரு பெருமாளு ரெண்டும் ஒன்னுதான். பிரகிருதியும், ஈஸ்வரியும் வண்டி ஓட்டுறதுக்காக பெருமாள வச்சுக்கிட்டாங்க.' எங்க காளியிடம் பெருமாள் டிரைவர் வேலை பார்த்தவராக்கும் என்பதுபோல சொல்கிறார், பன்ருட்டியைச் சேர்ந்த முதியவர்;. ஸ்ரீமுஷ்ணம் ராமசாமி அவர்களது பெருமாள் கதை வேறு தன்மையது.
               
                எல்லா சாமிக்கும் பெரிய கடவுள் பெருமாள்தான். ஆனால் அந்த பெருமாளையே காளி ஏச்சுட்ட. பெருமாள் ஒரு நாள் ஒவ்வொரு பெண் தெய்வமாக பிடித்து இரும்புக்கோட்டைக்குள் அடைத்தார். காளியை மட்டும் சிறைபடுத்த பெருமாளுக்கு சக்தி இல்லை. காளி சிறைபடவில்லை ஆனாலும் இரும்புக்கோட்டைக்குள் நுழைந்தாள், ஒரு எறும்பாக. சிறையிலிருந்து ஒவ்வொரு தெய்வமாக விடுவித்துக் கொணர்ந்தாள். இறுதியில் இரும்புக்கோட்டைக்குள் ஒருவரும் இல்லை. காளியின் திறம் அறிந்த பெருமாளின் கர்வம் அழிந்தது. காளி பெருமாளிடம் இப்படி சொன்னாள். 'உனக்கு ஒரு நாள் முந்தி, எனக்கு ஒரு நாள் பிந்தி.' இந்த வார்த்தைகளின் விளக்கமாகத்தான் நரிக்குறவர்களுள் காளி வழிபாட்டுப்பிரிவினரின் விழா எடுப்புமுறை அமைகிறது. எருமைகெடா பலியிடப்பட்டு காளியை கும்பிடுகிறார்களெனில் முதல் நாளே பெருமாளை கும்பிட்டுவிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால் பெருமாளுக்கு பலியிடுவது எருமையல்ல, ஆட்டுகெடா. வெள்ளாட்டு கெடாவே பெருமாளுக்கு உகந்ததாம். இனி காளியின் கதைக்கு வருவோம்.

                பெரியகாளி, ஊரைச் சுற்றிவர சொன்னது. இரண்டு காளியும் போனார்கள். (ஒவ்வொருவருக்கும் தனிப்பெயர் அல்லாமல் குழுவிலுள்ள அனைவரும் ஒரே பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம்.) ஆற்று நீர் நிதானமாக ஓடியது. அழகான பழங்களும் மிதந்து வந்தன. சுவைத்து பார்த்தனர் அவ்வளவு சுவை! இத்தகைய பழங்களை ஆறு எங்கிருந்து சுமந்தது? பழம் பிறந்த இடம் எது? தேடி ஓடினர் இருவரும். அழகான தோப்பு. விரிந்து கிடக்கிறது மரங்கள். தேடி வந்த பழங்கள் கொத்துக் கொத்தாய் குலுங்கின. ஆங்காங்கே அசை போட்டு திரிந்தன எருமைகள். எருமைகளுக்கெல்லாம் தலைமையாக முரட்டு எருமை ஒன்றும் இருக்கிறது. எந்த எருமையும் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. காளி இருவரும் காரியத்தில் இறங்கினார்கள். மரத்தில் ஏறி பழங்களைக் குலுக்கி மூட்டைக்கட்டி புறப்படத் தயாரானார்கள்;. அந்நியர்கள் பழங்களை மூட்டைக் கட்டிக்கொண்டு செல்வதா! எருமைகள் ஒன்றுகூடி மூர்க்கமாக தாக்கின. காளிகளின் சூலத்தால் எருமைகள் இரத்தம் கொட்டி இறந்தன. காளிகள் பழங்களோடு புறப்பட்டனர். ஒரு எருமை தப்பித்து பெரிய எருமையிடம் சொன்னது. வெறி கொண்ட பெரிய எருமை காளிகளைத் துரத்தியது. காளிகள் பெரிய காளியிடம் சேர்ந்தனர். ஆற்றைக் கவனித் பெரிய காளி வந்தவர்களிடம் கேட்டது. ஆறெல்லாம் ஏன் இரத்தம்? நடந்ததைச் சொல்வதற்குள் பெரிய எருமை நெருங்கிவிட்டது. பெரிய காளியின் சூலம் கண்டு அதிர்ச்சியடைந்து நின்றது. காளிகளை எருமை விரட்டுவதா! கோபத்துடன் பாய்ந்தாள்  பெரியகாளி. எருமை உயிர் பிழைக்க தோப்பு நோக்கி ஓடியது. காளி தோப்பிற்குள் நுழைந்தாள். தோப்பு போர்களமானது. மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தாள். ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு விரட்டி ஓடினாள். மூலை விட்டு மூலைக்கு தாவிக்குதித்து  ஓடியது, பெரிய எருமை. காளி விடாது விரட்டினாள். ஏரி நீருள் விழுந்தது எருமை. காளி ஏரி முழுதையும் குடித்து ஏப்பம் விட்டாள். எருமை நிற்காமல் ஓடிக்கொண்டே சொன்னது. எமது கூட்டம் செத்த இடத்திற்கே சென்று நானும் உயிர்விடுவேன் என்றது. காளி தொடர எருமை தோப்பிற்குள் நுழைந்தது. இறந்த எருமைகளின் மத்தியிலே காளியின் சூலத்திற்கு பலியானது. பெரிய எருமை இறந்ததும் இறந்த எருமைகள் உயிருடன் எழுந்தன. எழுந்த எருமைகளை காளி மீண்டும் வீழ்த்தினாள். உடனே பெரிய எருமை மீண்டும் உயிர்த்தது. இது நிகழ்ந்தால் அதுவும், அது நிகழ்ந்தால் இதுவும் என ஒன்று மாறி ஒன்றாக காளியைத் தொந்தரவு செய்தன. காளியிடம் கடவுள் சொன்னது. 'உன் சக்தியால் இதை சரி செய்ய முடியாது. மேலிருந்து பெரிய கடவுளை கூப்பிடு. ஒரு மலர் வரும். மலரை நீயும் எருமையும் கசக்கி தேய்த்தால் ஏழு பாம்பு வரும். ஏழு பாம்பையும்; உன் வயிற்றில் கட்டு. பெரிய எருமை தானே முன்வந்து தலை கொடுக்கும்'. காளியும் அவ்வாறே செய்தாள். பெரிய எருமை தானே தலை கொடுத்தது. காளி எருமையின் தலையை வெட்டித் திண்றாள்.

                இது மனிதர்கள் தோன்றாத காலத்தில் கடவுளர்களுக்குள் நிகழ்ந்த கதை. இந்த கதையால் எருமையின் இனமே மிகவும் குறுகிவிட்டது. காளியின் வேட்டைக்கு எருமையே கிடைக்கவில்லை. எருமையை அடிக்க பலமுறை முயன்றும் மறந்தே போனாள். காலங்கள் நீளமாக ஓடின. காளியை நரிக்குறவர்கள் வழிபட்டு வந்தார்கள். செவ்வண்ணம் கலந்த பூசணியையே பலியிட்டார்கள். காளியும் இதனையே இரத்தமென்று ருசித்தாள். இப்படியே நரிக்குறவர்களிடம் பத்து தலைமுறை கடந்தது. ஹாஜா, போஜா என்ற சகோதரர்களின் தலைமுறையில்தான் எருமைகள் மீண்டும் கிடைத்தன. அன்றிலிருந்து காளிக்கு எருமையைப் பலியிடுதல் தொடர்ந்து நிகழ்கிறது. ஹாஜா, போஜாவின் கதையைக் காண்க.

                எருமையின் மீதான சூதாட்டத்தில் நவாபிற்கு  வெற்றியே தொடர்ந்திருக்கிறது. நவாப் ராஜாவின் எருமையைப் பற்றி பேசாத ஆட்களே கிடையாது. பந்தயத்;தில் தோற்று இறந்தவர்களின் உறவினர்கள் உறவினர்கள் கோபத்தில் பேசுவார்கள். தோற்றும் பிழைத்தவர்கள் பயத்தில் முனங்குவார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இத்தகைய பேச்சுக்கள் ஏராளமாக எதிரொலிக்கிறது. இந்த எருமைக்கு முடிவுகட்டும் துணிச்சலும் வேகமும் எவருக்கும் இல்லை. நவாபும் விடுவதாக இல்லை.  கொட்டு மேளங்களுடன் செல்வான். யாரையாவது மடக்கி பந்தயம் கட்டுவான். எருமையிடம் மோதி இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டிருந்தது. நரிக்குறவர்களின் காளி துணிந்தது. எருமைக்கும் நவாபிற்கும்  முடிவுகட்ட நினைத்தது. அதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தது.

                மானியகுருவின் அண்ணன் பாத்யகுரு. இருவரும் நரிக்குறவர்கள். ஒவ்வொருவருக்கும் பன்னிரு பிள்ளைகள். அண்ணனுக்கு அனைத்தும் பெண்கள். தம்பிக்கு அனைத்தும் ஆண்கள். பன்னிரு பெண்களில் ஒருத்திதான் நீடித்தாள். பெயர் பார்பதன். பன்னிரு ஆண்களில் இருவர்தான் நீடித்தனர். மூத்தவர் ஹாஜா, இளையவர் போஜா. நீடித்தவர்களைத்தவிர மற்ற பிள்ளைகள்  இறந்துவிட்டனர். மானியகுருவும் இறந்தாயிற்று. ஹாஜாவும் போஜாவும் இணைபிரியாத சகோதரர்கள். இருவரும் தனிமையில் திரிந்தனர். பெரியப்பாவையும் அக்காவையும் பார்க்கும் ஆசையில் சந்திக்க விரைந்தனர்;. பார்பதன் எவ்வளவோ முயற்சித்தும் தந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. தந்தையுடன் திரிந்து கொண்டிருந்த பார்பதன் தனிமைத் துயருக்கு தள்ளப்பட்டாள். காற்றுடனும் பறவையுடனும் மன்றாடிப் புலம்பினாள். இதுதான் இயற்கையென சமாதானம் செய்துகொண்டாள். இறுதியில் அப்பனின் உடலை தீயிட்டு சாம்பலெடுத்தாள். ஆலமரத்தடியில் சமர்பித்தாள். தன் தனிமைக்கு முடிவுகட்ட  சேட்டு கூட்டத்துடன் இணைந்தாள். இந்நிலையில் பெரியப்பாவையும் பார்பதியையும் தேடிவந்த சகோதரர்கள் களைத்துப் போனார்கள்.
                ஹாஜாவை காத்திருக்கச் சொல்லி உணவெடுக்கப் போனான் போஜா. வெகு நேரம் காத்திருந்தும் போனவன் திரும்பவில்லை. ஹாஜா காத்திருக்க முடியாமல் தவித்தான். வானம் அதிர கூவினான். 'தம்பி... உன் பெயரை  நான் மூன்று முறை கூவுவேன். அதற்குள்  உன் பதில் எனக்கு எட்டாவிட்டால், கத்தியால்  என்னைக் குத்தி சாவேன்! போஜா... தம்பி போஜா... தம்..' அண்ணனின் குரலை இடைமறித்தது  தம்பியின் குரல். 'அண்ணா... இதோ வந்துவிட்டேன்!' சற்று நேரத்தில் வந்து நின்றான் போஜா. உணவுடன் செய்தியையும் பகிர்ந்து கொண்டார்கள். பெரியப்பா மரணத்தையும் பார்பதியின் பிரிவையும் போஜாவுக்கு உணர்த்தியிருந்தது ஆலமரம். அவர்களின் அடுத்த திட்டப்படி மரத்தடிக்கு விரைந்தார்கள். அவர்களுக்கு முன்பே கொட்டு மேளம் முழங்க எருமையுடன் வந்திருந்தார் நவாப்.நவாபின் எருமைக்கு முடிவுகட்டும் சந்தர்ப்பம் நெருங்கிவிட்டது. காளி எதிர்பார்த்திருந்த தருணம் வந்துவிட்டது. ஹாஜ, போஜாவிடம் காளி கூறினாள். 'நவாப்  உங்களிடம் பந்தயம் கட்டுவான். ஒத்துக்கொள்ளுங்கள். பந்தயத்தில் துணிந்து இறங்குங்கள். அஞ்சாதீர்! உங்கள் உயிருக்கு நான் பொறுப்பு. 25ரூபாய் 25பைசா 3கவுரு வாங்கி, என் பெயரைச் சொல்லி எருமையின் தலையில் ஓங்கி அறை. அந்த நொடியில் எருமையை வீழ்த்தி இரத்தம் சுவைப்பேன்!' என உறுதியாக முழங்கினாள் காளி.
                ஹாஜாவும் போஜாவும் பந்தயத்திற்கு தயாரானார்கள். காளி சொன்னபடியே பந்தயம் துவங்கியது. நவாபை பார்த்து காளி சொன்னாள். 'இனி மக்கள் உன்னிடம் ஏமாறமாட்டார்கள். பந்தயத்திற்கு பலியாகமாட்டார்கள். பலரது உயிரை பறித்த உனது எருமையின் உயிர் இன்றோடு அடங்கும். அதை நான் இரத்தப்பலி பெறப்போவது உறுதி' என்றாள். நகைச்சுவையை இரசித்ததுபோல் சிரித்து முடித்த நவாப் உறுதியுடன் சொன்னான். 'உன்னால் மட்டுமல்ல, என் எருமையை அழிக்க எவராலும் முடியாது காளி!' பந்தயம் துவங்கியது. சகோதரர்கள் இருவரும் காளியின் அருளுடன் களமிறங்கினார்கள். பந்தய எருமை பயங்கரமாக ஆடியது. கழுத்தை நெளித்தும் உயரே குதித்தும் கொம்பை செருக முன்னே பாய்ந்தது. காளி சொற்படி இருவரும் செய்தனர். காளியின் பெயர் சொல்லி எருமையின் தலையை ஓங்கி அறைந்தனர். காலடியில் சரிந்து விழுந்தது எருமை. தோல்வியை ஒப்புக்கொண்டு நவாப்; ஓடினார். காளி எருமையின் இரத்தம் சுவைத்து மகிழ்ந்தாள்.
                காளிக்கு எருமை பலியிடும் முறை இங்கிருந்துதான் துவங்குகிறது. குறவர்களின் இரத்தப் பலியிடும் வழிபாட்டு முறையை, சாந்திடி என்ற நவாபின் தெய்வம் இதிலிருந்துதான் விரும்பியது. இந்த விருப்பமே சாந்திடியை நரிக்குறவர்களின் தெய்வமாகவும் மாற்றியது. இனி சாந்திடியின் கதைக்கு வருவோம்.
                மான்ஜியின் கணவர் இறந்துவிட்டார். ஐந்து மகன்களுக்கும் தனித்தனி வீடு. ஐந்து வீட்டின் மாடுகளை ஓர் அநாதைக் குறவன் மேய்க்கிறான். வேட்டைக்கு போகின்ற சகோதரர்கள் ஐவரும் மனைவிடம் மட்டுமன்றி தாயிடமும் வேட்டைப் பொருள்களை வழங்குவார்கள். ஐவருக்கும் இது வழக்கம். காடை, கௌதாரி என விதவிதமாக சுவைத்தார் நவாப் தான்யராஜா. கறியின் ஆசை வரும்போதெல்லாம் மான்ஜியின் நினைவும் வந்துவிடும். மகன்களிடம் பெறும் வேட்டைப்பொருளை நவாபிற்கு தவறாது விற்பவள் மான்ஜி. சில நாட்களாக மான்ஜியைக் காணவில்லை. நவாப், கறியின் ஆசையால் துடித்தார். மான்ஜியை வரச்சொல்லி கட்டளை அனுப்பினார். வந்தவர்கள் மான்ஜியின் நிலையை தெரியப்படுத்தினார்கள். அவள் நோயால் சாகக்கிடந்தாள். நவாப் மனம் இறங்கவில்லை. தன் கட்டளையில் கறாராக இருந்தார். நவாபின் மனிதாபிமானமற்ற உணர்விற்கு எதிராக அவனது தெய்வம் மான்ஜியிடம் விரைந்தது. மாடு மேய்ப்பவன்  சகதியால் ரொட்டி செய்து விளையாடிக்கொண்டிருந்தான். அவனது உடலில் அமர்ந்தது நவாபின் தெய்வம். தெய்வம் ஏறிய உணர்வில் ஆட்டம் போட்டு மாடுகளோடு இடம்சார்ந்தான். ஐந்து வீட்டு மாடுகளும் வீட்டருகில் சத்தமிட்டன. மான்ஜியை  குணமாக்கி சென்றது நவாபின் தெய்வம். சாகக்கிடந்தவள் எப்படி குணமானாள் என நவாப் கேட்டான். பெருமையுடன் சொன்னார்கள். நரிக்குறவர்களின் தெய்வம் காப்பாற்றியது நரிக்குறவர்களின் தெய்வபலம் என்ன? அயோக்கியத்தனமான சோதனைக்கு அடிவைத்தான் நவாப். நரிக்குறவர்கள் விருந்திற்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களின் வருகைக்கான குறுகிய பாதையில் ஆழ, அகல பள்ளத்தில் நெருப்பிடப்பட்டது. குறவர்களின் தெய்வத்திற்கு பலமிருந்தால் அவர்களைக் காப்பாற்றட்டும். இதுதான் நவாப் ராஜாவின் எண்ணம். நவாபின் தெய்வம் நினைத்தது. இவனொருவனின் விளையாட்டிற்கு அத்தனைக் குறவர்களும் பலியாவதா! அநிதிக்கு எதிராக அவனது தெய்வமே குறவர்களைக் காப்பாற்றியது. சாந்திடியின் அருள் நரிக்குறவர்களுக்கு தொடர்ந்தது. ஆம், நவாபின் தெய்வத்திற்கு சாந்திn என்பது பெயர். இது ஓர் ஆண்தெய்வம். பீருஅல்லா என்ற மற்றொரு பெயரும் உண்டு.
                இஸ்லாமியர்களிடம் இருப்பதைவிட்டு சாந்திடி நரிக்குறவர்களிடம் இணைய விரும்புகிறது. இது நவாப் தான்யா ராஜாவை அதீத வருத்தத்திற்கு ஆளாக்கியது. சாந்திடியின் விருப்பத்திற்கு காரணம் குறவர்களின் வழிபாட்டுமுறை. இரத்தப்பலியுடன் காளியை வழிபடுதல் நரிக்குறவர்களுக்கு முறைபாகிவிட்டது. சாந்திடிக்கு இஸ்லாமியரது இரத்தபலியற்ற வழிபாட்டுமுறை கசந்துவிட்டது. இதனால் சாந்திடியின் கவனம் குறவர்களிடம் திரும்பியது. நரிக்குறவர்களே முன்வந்து, தன்னை ஏற்று வணங்குவதற்கான வாய்;ப்புகளை எதிர்பார்த்திருந்தது.
                குரு தினாவத் என்ற நரிக்குறவர்க்கு பாரியபாரதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவருக்கு தாய் தந்தை இல்லை. ஒரு மனைவியும் மகனும் உள்ளனர். மனைவியின் பெயர்கருமாகாங்கிலி. மகனின் பெயர் கம்மாகுரு. பெரிய மூக்குகளைக் கொண்ட அழகிய நாரைகள் காக்கிரியாத்தலாவ் என்ற ஊரியை அழகு செய்தன. தினாவத் நாரைகளுக்கு  கண்ணி வைத்துக்கொண்டிருந்தார். 'நாரை கண்ணியில் சிக்காவிட்டால் உன்னுடன் இருப்பேன். கண்ணியில் சிக்கிவிட்டால் குறவர்களிடம் சென்றுவிடுவேன்.' இப்படியொரு முடிவை சாந்திடி நவாபிடம் சொன்னது. நவாப் ஒத்துக்கொள்ளவில்லை. அவன் நரிக்குறவர்கள் மீதும் இரத்தபலி ஏற்கின்ற காளியின் மீதும் எரிச்சல் கொண்டிருந்தான். இறுதியாக சொன்னான்  முதலில் நான் வைக்கும் போட்டிகளில் அவன் வெல்லட்டும். பிறகு ஒப்புக்கொள்கிறேன் உன் முடிவை. சாந்திடி இசைந்தது. நவாபிடம் இருந்துகொண்டே சாந்திடி தினாவத்திற்கு உதவியது. சாந்திடி தினாவத்திற்கு  அறிவுறுத்தியது. 'நவாப் உன்னை பலி செய்யப் பார்க்கிறேன். நான்  சொல்லும்படி செய் தினாவத்! நான் உன்னைக் காப்பாற்றுவேன்' என்றது. தாய் தந்தையற்ற என்னை, எல்லாம் இருக்கின்ற நவாப் பலிப்பதா! உணர்ச்சிவசப்பட்டவன் உறுதியாகச் சொன்னான். உன் சொல்லிற்கு பணிவேன் என்றான். தினாவத் உதிர்த்த வார்த்தைகளில் தெளிவை கண்டது சாந்திடி. தன் விருப்பம் நிறைவடையும் தருணம் நெருங்கிவிட்டதாக மகிழ்ந்தது. குருதினாவத்திற்கு ஆர்வத்தோடு உதவியது.
                நவாப் தாயப்போட்டியைத் தொடங்கினான். முதலில் காய் உருட்ட தினாவத்தைப் பணித்தான். நவாபின் கண்களைப் பார்த்து உறுதியாகச் சொன்னான் தினாவத். 'நீ நவாப், நான் ஏழை. நீ 12 வருசம், நான் 6 வருசம். ஆக, நீ முதலில் தாயம் உருட்டு' என்றான். சாந்திடி தினாவத்திற்கு ரகசியமாக இப்படி சொல்லியிருந்தது. நவாப் உருட்டும்போது உன் இடது உள்ளங்காலை பூமியில் அழுத்து. நவாப் மூன்று முறை உருட்டினான். தினாவத் மூன்று முறை அழுத்தினான்.  மூன்று முறையும் தினாவத்திற்கு சாதகமாகவே தாயம் அமைந்தது.நவாபிற்கு வெறி தலைக்கேறியது. சில ஆட்களை அனுப்பி தினாவத்தை திவாலாக்க முடிவு செய்தான். இருபது ஆட்கள் போயிருப்பார்கள். ஒருவர்கூட திரும்பவில்லை. சாந்திடி அனைவரின் எழும்புகளையும் முறித்திருந்தது. நவாபின் கண்ணுக்கு நேராக வந்து நின்றான் தினாவத்.  அடுத்த போட்டி என்ன? என்று முறைப்பது போல் பட்டது நவாபிற்கு. ஆழமாக பள்ளம் தோண்டி ஒன்பது வண்டி சந்தனக்கட்டைகளில் ஒன்பது டின் நெய் ஊற்றி ஆக்ரோசமாக எரியும்படி நெருப்பு மூட்டினான், நவாப். தீயில் தள்ளி தினாவத்தின் கதை முடிப்பதே திட்டம். பள்ள நெருப்பில் விழுந்து எழுவதுதான் போட்டியென அறிவித்தான். சாந்திடி தினாவத்திற்கு துணிச்சல் ஊட்டியது. தினாவத் நவாபிடம் விளையாடிப் பார்த்தான். 'நீ நவாப், நான் ஏழை. நீ 12 வருசம், நான் 6 வருசம். ஆக, நீ முதலில் விழு!' நவாபிற்கு பயம் அடிவயிற்றைப் பற்றிக்கொண்டது. இந்த கதையெல்லாம் என்னிடம் வேண்டாம். உன் தெய்வம் சக்தி மிகுந்தது. உன்னை உயிரோடு காப்பாற்றும் என்று நீ நம்பினால் முதலில் நீ விழு. பயமாக இருந்தால் தோல்வியை ஒப்புக்கொண்டு ஓடிவிடு. நவாபின் கண்களைப் பார்த்து தினாவத் கர்ஜித்தான். 'நவாப்! நான் விழுவேன்;;. நிச்சயம் எழுவேன். ஆனால் நீ... விழமாட்டாய் விழுந்தால் எழ மாட்டாய்.' மலர் மாலையணிந்து பொலிவுடன் நின்ற தினாவத் தீக்குழியில் மூழ்கினான். தீர்ந்தான் தினாவத்;. சாம்பல் கூட மிஞ்சாமல் முடிந்திருக்கும் அவன் கதை.  நவாப் மகிழ்ச்சியில் துள்ளினான். ஒரு மணி நேரத்திற்கு பின் நவாபின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அகிலமே  அதிசயிக்கும்படி எழுந்து நின்றான் தினாவத்.  பூவும் மாலையும் சிறிதும் பொசுங்கவில்லை. தினாவத் பிரகாசமாக மின்னினான். நவாபிற்கு அச்சத்தால் தொண்டை அடைத்தது. நீ விழு நவாப்! என்ற வார்த்தை பிறப்பதற்குள் நவாப்  முந்திக்கொண்டான். தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தான். தினாவத் வழியாக சாந்திடி நரிக்குறவர்களுக்கு தெய்வமானது. தினாவத் செய்த சாந்திடியின் வெள்ளி உருவ சிலைக்கு ஒன்பது ஆடுகள் இரத்தபலி கொடுக்கப்பட்டு நரிக்குறவர்களின் வழிபாடு துவங்கியது.
                நரிக்குறவர்களில் இரு பிரிவினர்  குரு தினாவத் பற்றிய கதை சொல்கின்றனர். சாந்திடியின் கதைக்குள் வரும் தினாவத் வேறு. மீனாட்சியை வழிபடுவோர் கூறும் தினாவத் வேறு.
                தன் மனைவி மகனுடன் மதுரை பக்கம் வந்தார் தினாவத். இவர்கள் நரிக்குறவர்கள். பயணத்தின் ஒவ்வொரு அடியும் களைப்பின் காரணமாக கனக்கத்துவங்கியிருந்தது. ஆறு நோக்கி நடக்கும் போதே மகன் தண்ணீர் கேட்டான். இதோ ஆற்றை  நெருங்கிவிட்டோம். ரம்மியமான சூழல். நதியின் நடையில் சலசலக்கும் ஓசை. விதவிதமான பறவைகள். விரிந்து பறக்கும் சிறகுகளால் வானம் சிரித்தது. தாகம் தணிந்தவர்கள் பறவைகளை பிடித்துச் சென்றனர். அரண்மனை சிப்பாய்களைச் சந்திக்க நேர்ந்தது. ராஜா சந்தித்து பறவை கொடுத்தால், நல்ல பரிசுகள் கிடைக்கும். சிப்பாய்கள் வழிகாட்டிச் சென்றனர். ராஜாவை சந்தித்தார் தினாவத். பறவைகளைப் பெற்றுக்கொண்ட ராஜா மகிழ்வுடன் மடி திறந்தார். குவிந்து கிடந்தன செல்வங்கள். ராஜா கனமான குரலில் சொன்னார். உன்னால் முடிந்ததை அள்ளிக்கொள் என்றார்.  அந்த சூழல் தினாவத்திற்கு உருத்தலான மனநிலையை ஏற்படுத்தியது. தினாவத் முடிவு செய்தான். அதிகம் எடுப்பது நல்லதல்ல. கைக்கு  இரண்டு நாணயங்கள் மட்டும் எடுத்தான். விடைபெற்று வெளியேறினார்கள். கிடைத்த நாணயங்களை செலவிட்டு நெய், சூடம், நெருப்பு  போன்ற பூஜைப் பொருட்களை வாங்கினார்கள். மீனாட்சி தெய்வத்தை வழிபடச் செல்வது இவர்களது நோக்கம். வழிபாட்டிற்குரிய மீனாட்சி வெள்ளி சிலையாக நின்றாள். வெள்ளி சிலை அசைந்தது. கை உயர்த்தி வாழ்த்தியது.  குருதினாவத்தும் அவன் குடும்பத்தினரும் அருள் பெற்று நெகிழ்;ந்தனர். பூஜை செய்த அய்யர் அதிசயித்து வாய் பிளந்தார். ராஜாவிடம் ஓதினார். எனக்கு கிடைக்காத அருள் நரிக்குறவனுக்கு கிடைத்துவிட்டதே. ராஜாவிற்கு மனது குமுறியது. பகல் முறிந்து இரவு மலர்ந்தது. ஆள் அரவமற்ற சூழலில் கோயில் சிலை சிறகின்றி பறந்தது. கோயில் சந்நிதி கடந்து, அய்யரின் ஆத்தைக் கடந்து, அரச அரண்மனை தாண்டி குறவனின் குடிசை உச்சிக்கு வந்தமர்ந்தாள், மீனாட்சி. மறுநாள் விடிந்தது. கோயிலுக்குள் நுழைந்த அய்யர் பதறினார். விசயம் அரசரிடம் விரைந்தது. சிலை பறிபோனதால் எங்கும் பதட்டம். அரசனின் கவனம் குருதினாவத்திடம் இருந்தது. அவனுக்கு தினாவத் மீதுதான் சந்தேகம். தினாவத்தின் சின்னக்குடிலை அரசின் படை சூழ்ந்து நின்றது. எல்லோருக்கும் நடுவில் குடிசையின் உச்சியில் காட்சி தந்தாள் மீனாட்சி. குடிசையிலிருந்து வெளியில் இழுத்துவரப்பட்டான் தினாவத். கோயில் சிலை எப்படி வந்தது உன் குடிசைக்கு என மிரட்டினார்கள். சிலை திருடியதாக குற்றம் சுமத்தி கட்டி வைத்தார்கள். நிலைமை புரியாமல் தவித்தான் தினாவத். அவன் பெரிய நெஞ்சில் பயம் பற்றிக்கொண்டது. தினாவத்திடம் ரகசியமாக பேசினாள் மீனாட்சி. அஞ்ச அவசியமில்லை தினாவத். எனது அருள் உன்னைத் தொடரும். இதைக் கேட்டதும் பட்டுப்புழு சிறகு விரித்து பறப்பதுபோல் உணர்ந்தான். சிலையை மீட்க உத்தரவிட்டான் அரசன். இரண்டு வீரர்கள் சென்றார்கள். கையில் சிக்காமல் பறந்தது சிலை. சில வீரர்கள் பிடிக்க முயன்றார்கள். எட்டாத உயரத்திற்கு விலகி பறந்தது. மொத்த வீரர்களும் குவிந்தார்கள். ஒருவர் முதுகில் ஒருவரென கட்டிடம்போல் உயர்ந்தார்கள். எல்லோரையும் திணறடித்து மீனாட்சி விளையாடினாள். அவர்கள் விழி பிதுங்கி நின்றார்கள். தினாவத்தை முறைத்துப்பார்த்தான் அரசன். அரசனின் பார்வையில் கோபம் கொப்பளித்தது. நரிக்குறவன் ஏதோ மாயம் செய்துவிட்டதாக கருதினான். அரச விசாரணை துவங்கியது. உனது ஆற்றலுக்கு யார் காரணம்? உன் தெய்வத்தின் பெயர் என்ன?  மதுரை வீரனை சொல்லும்படி மீனாட்சி கூவினாள்.  பதட்டத்தில் அவனுக்கு வாய் வரவில்லை. மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினாள். பொறுமை இழந்த அரசன் கையோங்கி கேட்டான். தினாவத்திற்கு கன்னம் சிவந்தது. மீனாட்சியின் அருளால் வீரம் விளைந்தது. அடிவயிற்றிலிருந்து முழங்கினான் தினாவத். மதுரைவீரன் என்ற சொல் அவர்களின் காதைப் பிளந்தது. வந்த வேகத்தில் முடித்துப்போனார் மதுரைவீரர். அரச படைகள் தவிடுபொடியாகின.தினாவத்திற்கு எல்லாக் கட்டுகளும்  அவிழ்ந்தன. வியப்புறும் வகையில் விடுதலைப் பெற்றான். முகத்தில் புன்னகையை உதிர்த்தான். அரசன் அச்சத்தில் உரைந்திருந்தான். அத்தனைப் படைகளும் நொடிப் பொழுதில் வீழ்ந்ததை சீரணிக்க முடியாமல் தவித்தான். தினாவத்தின் கண்களை நிதானத்துடன் கண்டான். அந்த வெள்ளிசிலை உன்னுடையதுதான். நீ திருடன் இல்லை. மீனாட்சி உனக்கும் உரிய கடவுள். இதை நான் ஏற்றுக்கொண்டேன் தினாவத். என் படைகளை உயிருடன் கொடு.  எனக்கு இரக்கம் காட்டு என கெஞ்சினான். இப்படித்தான் நரிக்குறவர்களுக்கு மீனாட்சி, மதுரைவீரர்  ஆகிய இரு தெய்வமும் உரியதானது. மீனாட்சிக்கு நெய், சந்தனம், பூ, கற்பூரம் ஆகியன படைத்தும், மதுரைவீரனுக்கு வெள்ளாட்டுக் கெடா வெட்டியும் வழிபடுகிறார்கள். இது மீனாட்சியை வழிபடுபவர்களின் வழக்கம்.
                நரிக்குறவர்களது வழிபாட்டிற்குள் காளியும், சாந்திடியும் இணைந்த காலம் எது? நரிக்குறவர்களது தலைமுறை கணக்கின் அடிப்படையில் விளக்க முயற்சித்தார், செஞ்சி  தேசிங்கு என்ற பெரியவர். இவர் கூறிய தலைமுறை பெயர்களின் வரிசை பின்வருகிறது.

1ம் தலைமுறை – காங்தோ
''2- பாத்திகுரு
''3-மானீசியா குரு
''4-குரு ஹாஜா
( நவாபின் எருமையை காளி பலியெடுத்தாள் )
''5-உக்கிடியா குரு
''6-குருதினாவத்
(இரத்த பலியிடும் வழிபாட்டு முறைறை விரும்பி சாந்திடி தெய்வம் நரிக்குறவர்களிடம் இணைந்தது)
''7-தீத்யோ தோப்ரா
''8-பிசிலா குரு
''9-ஜவலாத்
''10-பத்தாகுரு
''11-தென்சிங் குரு
''12-ஹருதிருஷ;யன் குரு
''13-நீலகிரி
''14-அரமணி
''15-பட்டு
''16-பாபரம்பேட்ட
''17-லைன்ஜர்
18ம் தலைமுறை –மாவீரன்
                நரிக்குறவர்கள் பத்து தலைமுறைகளாக எருமையைப் பலியிடாமல் காளி வழிபாட்டை நிகழ்த்தியுள்ளார்கள். குரு ஹாஜா தலைமையில்தான் எருமை பலியிடும் முறை துவங்கியது. இந்த தலைமறை கணக்கின்படி பார்த்தால் குரு ஹாஜாவிற்கு முன்பு பத்து தலைமுறைகள் இருந்திருக்க வேண்டும். ஆனால் மூன்று தலைமுறையே தெரிய வருகிறது.
                நவாபின் தெய்வம் சாந்திடி இரத்தப்பலியிடுகின்ற குறவர்களின் முறைக்கு ஆசைப்பட்டது. இதன் விளைவு, குரு தினாவத்தின் தலைமுறையில்தான் நரிக்குறவர்களுக்கு தெய்வமானது.
                குரு ஹாஜா தலைமுறைக்கு முன்புவரை காளிக்கு எருமை பலியிடுவது முறையல்ல. மாறாக சிவப்பு கலந்த  பூசணிக்காய் பலியிடுதலே வழக்கமாக இருந்துள்ளது. ஆதியில் கடவுளர்களின் உலகில் காளி எருமையை விரட்டி உண்டாள். 
   இந்த கதையை எருமை பலியிடும் சடங்கிற்கு ஒரு வரலாறாக சொல்கிறார்கள். ஆனால், காளி கதையோ எருமை பலியிடும் சடங்கின் வரலாறை உணர்த்தவில்லை. மாறாக, இந்தக் கதை நரிக்குறவர்களின் வரலாற்றுத் தொன்மையை உணர்த்துகின்றது. வாய்மொழி இலக்கியங்களை வரலாற்று ஆவணங்களாகக் கொண்டு வரலாறை கண்டறிதல் என்ற கோட்பாட்டின்படி இக்கதையில் வெளிப்படுகின்ற நரிக்குறவர்களது வரலாற்றுத் தொன்மையை அறியலாம்.
         கூட்டத்தின் அனைவரின் பெயரும் காளி என்ற பெண் பால் பெயரால் சுட்டப்படுகின்றது. ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு பற்றிய கருத்தாக்கங்கள் தோன்றாத தாய் தலைமையின் காலத்தைப் பிரதிபலிக்கின்றது. காளி என்ற தாயின் பெயரால் மட்டுமே கூட்டம் அடையாளப்படுகின்றது. எனவே, இக்கதை தாய்தலைமை சமூகத்தின் தொன்மையைப் பிரதிபலிக்கின்றது. 
      எருமைகள் மேய்ந்துகொண்டிருக்கும் தோப்பிலிருந்து பழங்களை மூட்டை கட்டி சேகரிக்கிறார்கள். மூட்டையாகப் பயன்படுத்தப்பட்ட பொருள் எது என்பது விளக்கம் பெறவில்லை. ஆனால், அது காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தின் தொன்மையான சேகரிப்பு கருவிகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். காளி கூட்டத்தார் பழங்களைச் சேகரித்த நடவடிக்கையானது தாய் தலைமை சமூகத்தின் தொன்மையாகிய காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தையே பிரதிபலிக்கின்றது.
       தற்காப்பிற்காகவும் பதில் தாக்குதலுக்காகவும் திரிசூலத்தால் எருமையைக் கொல்கிறார்கள். இதனைத் திட்டமிட்ட வேட்டை நடவடிக்கையாகக் கருத இயலாது. மேலும், திரிசூலம் என்பது வேட்டை கருவியும் அல்ல. மானிடவியலார் விளக்கப்படி திரிசூலம் என்பது கிழங்குகளைத் தோண்டி எடுப்பதற்கான கருவியாகும். எனவே, திரிசூலம் என்ற இக்கருவி காளி கூட்டத்தாரை வேட்டை நாகரிகத்திற்கு உரியவர்களாக உணர்த்தவில்லை. ஏனெனில், வேட்டை முதன்மை தொழிலாக அல்லாமல் துணைமை தொழிலாக மட்டுமே அறிய முடிகின்றது. காளி கூட்டத்தாரின் நாகரிகமானது விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஆரம்ப நிலையிலிருந்த தாய்தலைமை சமூகத்தின் நாகரிகமாகும். காடு சார்ந்த பொருள் சேகரிப்பே காளி கூட்டத்தாரின் முதன்மை பொருளாதாரமாக அறிய முடிகின்றது.  தாய்தலைமை சமூகத்தின் பிரதிநிதிகளாகவும், காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தின் பிரதிநிதிகளாகவும் காளி கூட்டத்தார் திகழ்கின்றனர் என்பது நிரூபனமாகின்றது. 
          காளி கூட்டத்தாரின் சந்ததிகளாகிய நரிக்குறவர்களின் தொன்மையானது மனித வரலாற்றின் தொடக்கத்தோடு தொடர்புறுகின்றது. அதாவது, காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தின் தாய்தலைமையைப் போற்றும் பழங்குடிகளாக நரிக்குறவர்கள் சமகாலத்தில் வாழ்வதே அத்தகைய வரலாற்றுத் தொடர்பாகும்.
                இந்த வடிவில் எமது நோக்கம் ஓரளவிற்கு வெற்றி பெற்றதாக நம்புகிறேன். இந்த நம்பிக்கைக்கும் வெற்றிக்கும் அடிப்படையாக இருப்பவர்கள், இக்கதைகளுக்குரிய மக்கள் மட்டுமே. இவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டோம். இவர்களின் வாழ்க்கைக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தக் கேள்வி நெஞ்சை கனக்கச் செய்கிறது.
                பெரும்பாலான மக்களைப் போலவே இவர்களும் சமூக பிரச்சனைகளில் மூழ்கியுள்ளனர். நரிக்குறவர்களுள் பலரும் அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். தங்களின் அவல நிலைக்கு அரசே காரணமென குற்றம் சுமத்துகிறார்கள். அதற்கான ஆதாரங்களையும் முன்வந்து  சொல்கிறார்கள்.
                உண்மையாக சொல்வதென்றால் இவர்கள் எங்களை அரசு அதிகாரிகளாகவே கருதினார்கள்.  'வந்து வந்து போகிறீர்கள். எங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்!' அவர்களது அமைதியான கண்களில் அமைதி இழந்தவர்களுடைய வலியையும் கோபத்தையும் காண முடிகிறது.
                குடிசை அருகில் பாம்புகள் வந்து விளையாடுகின்றன. கண்ணாடிவீரியன், கட்டு வீரியன், நல்ல பாம்பு, நாகப்பாம்பு இவைகளும் அடங்கும்.
                தண்ணி இல்லை. பிள்ளைகள் படிக்க வசதி இல்லை. வேலை இல்லை. ஒரு வீடு இல்லை. விளக்கு வசதி இல்லை. இப்படி பல இல்லைகளை எங்களிடம் அடுக்கினார்கள். 'உங்கள் தொல்லைகளைக் கேட்கவா வந்தோம்! கதைகள் கேட்கத்தானே வந்துள்ளோம்!' இப்படி சொல்ல  நினைக்கவே வெட்கமாக இருந்தது. அவர்களது கதைகளோடு வாழ்க்கை வலிகளையும் நிரப்பிக்கொண்டோம்.
                சமூக பிரச்சனைகளிலிருந்து இவர்களும் விடுதலை பெறுவதற்கு நமக்குரிய கடமையும் இருக்கிறதல்லவா! இவர்கள் வழிபடக்கூடிய கடவுள்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, சக மனிதர்களாகிய நமக்கு நிச்சயமாக இருக்கிறது. இந்த கடமையை மனிதர்களால் மறுக்க முடியாது. எனவே நம்மைப் பார்த்துக் கேட்டுக் கொள்வோம். நாம் மனிதர்களா?...

வெளிவந்த விபரம்
புதிய பனுவல், ஜுன் 2013
பக்கம் 100 - 110








No comments:

அதிகம் படித்தவை