எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 27, 2016

சமூக விஞ்ஞானிகளுக்கு வலிமை சேர்ப்போம்!





சமூக விஞ்ஞானிகளுக்கு வலிமை சேர்ப்போம்!
(சமூக அக்கறையுடையவர்களிடம் ஒரு நூல் பற்றி பேச விரும்புகிறேன்) 

நூல் பெயர் - நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம், ஆசிரியர்– புதியவன், வெளியீடு– முகம்.
மூகத்தையும் சகமனிதர்களையும் சமூகஅக்கறையுடன் சரிசெய்துகொண்டிருக்கின்ற சமூகமாற்றக் களங்களுக்கு வணக்கம். எனது பெயர் கே.சிவக்குமார். பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தில் உறுப்பினராக இருக்கின்றேன். புதியவன் என்ற பெயரில் எழுத முயற்சி செய்கின்றேன். எனது புத்தகம் கோயம்புத்தூரில் 24.08.2014 அன்று வெளியிடப்பட்டது. தோழர் SUMS ரகுவின் நினைவேந்தல் நிகழ்வில் சமூகவிஞ்ஞான எழுத்தாளர் S.V.ராஜதுரை அவர்களால் வெளியிடப்பட்டது. மனிதன் பதிப்பகதத்தின் அறிவொளி அவர்கள் நூலைப் பெற்றுக்கொண்டார்கள். இந்தப் புத்தகத்தைச் சமூகப் பயன்படுத்தலுக்காக நீங்கள் பரிசீலிக்க வேண்டியத் தேவை இருப்பதாகக் கருதி உங்களிடம் பேச விரும்புகிறேன்.
      இந்தப் புத்தகத்தின் சமூகத்தேவையைப் பற்றி அறிஞர் S.V.ராஜதுரையும், முகம் பதிப்பக நிறுவனர் பிரசன்னாவும் பேசியவற்றைச் சிறிதாகத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
       ~இந்தப் புத்தகம் சமூக விஞ்ஞானி ஆவதற்கான வழிமுறையைச் சொல்லியிருக்கிறது. இந்தப் புத்தகத்தை இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் ஒவ்வொரு மனிதரிடமும் போய்ச் சேரும்படிச் செய்யுங்கள். சமூக அக்கறை இல்லாத மனிதரைக்கூட படித்துப்பார்க்கும்படிச் செய்யுங்கள். நாம் இங்கு வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இத்தகையப் பிரச்சனைகளுக்கு இடையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் புத்தகம் உணர்த்துகின்றது|                                                                    _S.V.ராஜதுரை

~எந்தக் கண்டுபிடிப்பையும் செய்யாதவருக்குக்கூட இந்தச் சமூகத்தில் விஞ்ஞானி என்ற பட்டம் கிடத்துவிடுகிறது. இந்தச் சமூகத்தில் எத்தனையோ துறைகள் வளர்ந்திருக்கின்றன. எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். இவர்களது கண்டுபிடிப்புகளால் ஏகபோக நிறுவனங்கள் கொள்ளை இலாபங்களைக் குவிக்கின்றன. உண்மையில் ஒரு சமூகத்தின் எல்லாத்துறைகளும் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைய வேண்டுமென்றால், அந்தத் துறைசார்ந்த விஞ்ஞானிகள் அடிப்படையில் சமூக அக்கறையுடைய சமூகவிஞ்ஞானிகளாக இருக்க வேண்டியது அவசியம். இந்தப் புத்தகம் இந்த நோக்கத்தில் வடிவமைந்துள்ளது.| _பிரசன்னா (முகம்)

நூலின் அறிமுகப்பகுதியை முழுதாகப் பதிவு செய்கின்றேன்
      சமூகவிஞ்ஞானம் என்பது உலகம் முழுவதும் அறிமுகம் பெற்றுள்ள அறிவியல் தத்துவம். உலகளாவிய உழைக்கும் மக்களிடம் நிறைந்த புகழையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புடைய மக்களின் தத்துவத்தைச் சமகால மக்களிடம் சேர்க்க வேண்டும். சமூகவிஞ்ஞான உலகப்பார்வையைச் சகமக்கள் பெற வேண்டும். இதற்கானச் சிறு முயற்சியே இந்நூல்.
      இது சமூகவிஞ்ஞானத்தின் எளிய அறிமுகம் மட்டுமல்ல. சமூகவிஞ்ஞான வாழ்க்கை முறையையும் நன்கு அறிமுகம் செய்கிறது. சமூகவிஞ்ஞானிகளின் வாழ்வியலை உணரச் செய்கிறது. இதற்கான புதிய முயற்சிகளை இந்நூல் நன்கு பிரதிபலிக்கிறது. ஒரு மாபெரும் அறிவியலை கலை வடிவில் சொல்கிறது. கதை, கவிதை போன்ற உணர்வு பொங்கும் மொழிநடையில் பேசுகிறது. அறிவியல் கலை இலக்கியத்தின் சிறப்பானப் படைப்பாக இந்நூலை உணரலாம்.
      இந்நூல் நம் உள்ளத்தில் மூன்று கேள்விகளை எழுப்புகிறது.
      1. சமூக அக்கறையின்றி வாழ்வது சரியா?
      2. சமூக அறிவின்றி வாழ்வது சரியா?
      3. சமூகப் பாதுகாப்பின்றி வாழ்வது சரியா?
நாம் சமூகவிஞ்ஞானிகளாக மலர்வதற்கான தர்க்கம், இந்தக் கேள்விகளில் இருந்தே துவங்குகிறது. நாம் ஒவ்வொருவரின் சகமனித உணர்வும் உரக்கச் சொல்கிறது, இவற்றின் விடையை. ~நாம் தவறான சமூக வாழ்வியலை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்!| இந்த விடை நம்மைச் சரியான வாழ்வியலுக்காக ஏங்கச் செய்கிறது. சரியான பாதையைத் தேடி அலையச் செய்கிறது. சமூகவிஞ்ஞானிகளின் பாதையே சரி என்பதை உணரச் செய்கிறது.
      சமூக அக்கறையுடனும், சமூக அறிவுடனும், சமூகப் பாதுகாப்புடனும் வாழ வேண்டுமல்லவா! அப்படியென்றால், சமூக அக்கறையுடன் நமது சமூகத்தைச் சரி செய்கின்ற சமூகமாற்றக் களங்களில் இணைந்து வாழ வேண்டும். சமூகவிஞ்ஞானக் களங்களில் குடும்பம் நிகழ்த்த வேண்டும். இத்தகைய வாழ்வியலே சரியாகும்.
      இந்நூலை வாசிப்பவர்கள் சமூகத்தைச் சரிசெய்கின்ற கடமையுணர்வுடன் சமூகமாற்றக் களங்களில் இணைந்து வாழ்வார்கள் என்பதை உறுதியாக நம்புகிறோம்.
      சமூகவிஞ்ஞானிகளும் இத்தகைய நிகழ்வை விரிவுபடுத்துவார்கள் என்பதாகவே உணர்கிறோம். இவை நிகழ்ந்தால் அதுவே எங்கள் வெற்றி. _முகம்
     
      சமூகத்தைச் சரிசெய்கின்ற முயற்சிகளில் எத்தகைய சமூகத்தேவைகளை உணர்ந்துள்ளேனோ அவற்றிலிருந்தே எழுதுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டிருக்கிறேன். வாசிக்கின்ற ஆற்றலுடைய வாசகர்களது மனநிலையிலிருந்தும் இரசனை நிலையிலிருந்தும் இந்நூலை உருவாக்கியுள்ளேன். சமூகவிஞ்ஞானம் என்பது மார்க்சியத்தின் மற்றொரு பெயர். மார்க்சியத்தையும், மார்க்சிய வாழ்வியலையும், இதனை உணர்த்துகின்ற கதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் கொண்டதாக இந்நூல் அமைந்திருக்கிறது.
      சமூகமாற்றத்திற்கான ஆயுதமாக இந்நூலை உருவாக்கியிருப்பதாக நம்புகிறேன். பட்டறையில் தயார் செய்தாலும் ஆயுதங்களைப் பணிசெய்கின்ற இடங்களுக்கல்லவா எடுத்துச் செல்ல வேண்டும். நான் நூலாயுதத்தை எடுத்துச் செல்வதற்கான முயற்சியாக உங்களிடம் பேசுகிறேன். எனக்கும் இந்நூலுக்கும் விளம்பரங்களைத் தேடி உங்களிடம் பேசவில்லை. அப்படி நான் பேசுவதாக விமர்சிப்பவர்கள் மற்றவர்களாக இருந்தால் எனக்குக் கவலையில்லை. ஆனால், சமூகமாற்றக் களங்களாகிய அமைப்புகளும் இயக்கங்களும் சமூகவிஞ்ஞானக் கட்சிகளும் இத்தகைய விமர்சனத்தைச் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இந்நூலை உங்களிடம் அறிமுகம் செய்வது எனது சமூகக் கடமை என்பதாகவே உணர்கிறேன். இந்நூலினைச் சமூக அறிவாகச் சகமக்களிடம் கடத்த விரும்புகிறேன். சமூக அறிவைப் பரப்புகின்ற கடமையைச் சமூகமாற்றக் களங்களால் மட்டுமே நேர்மையாகச் செய்ய முடியும். எனவே, இந்நூலைப் படித்துப்பாருங்கள். சுதந்திரமாக முடிவெடுங்கள்.
      இந்நூல் பற்றிய முன்கண்ட கருத்துக்கள் உண்மையானவையே என்பது உங்கள் கருத்தென்றால், உங்கள் அமைப்புத் தோழர்களிடம் இந்தப் புத்தகத்தைக் கொண்டுச் சேர்க்கவும். மொத்தமாகப் புத்தகங்களைப் பதிப்பகத்தாரிடமிருந்து முறையாகப் பெற்றுச் சகத் தோழர்களுக்கு விற்பனை செய்யலாம். ~எந்த அறிவும் செயலுக்காகவே!| என்பதன் அடிப்படையில் சமூக அறிவிற்கானக் கலந்துரையாடல்களில் இந்தப் புத்தகத்தையும் இணைத்துக்கொள்ளலாம்.
      சமூகத்தைச் சரிசெய்கின்ற சமூகமாற்றக் களங்களில் உறுப்பினராக இல்லாத எந்தத் தனிமனிதரும் வெட்கப்படுவதற்கும், குற்றவுணர்வால் உந்தப்படுவதற்கும் நாம் அழுத்தம் தரவேண்டியது சமூகத்தேவையாக இருக்கின்றது. சமூகமாற்றக் களங்களில் உறுப்பினராவதன் மூலமாகத்தான் ஒரு தனிமனிதர் சகமனிதராக உருமாறுகிறார். சகமனிதச் சமூகத்தைப் படைப்பதே இந்நூலின் நோக்கம்.
      நூலை வாங்க விரும்புபவர்கள் முகம் பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும். எமது இந்த உரையாடலை உங்கள் தோழமையிலுள்ள சமூகமாற்றக் களங்களுக்கு மின்னஞ்சலாகவோ நகலாகவோ கொண்டுச் சேர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நூல் விபரம்
நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம். புதியவன். முதற்பதிப்பு : ஆகஸ்டு 2014. வெளியீடு : முகம், 20/37, 13வது தெரு, அய்யர் மனைப்பிரிவு, சிங்காநல்லூர், கோவை-5. தொலைபேசி : 0422 2593938. மின்அஞ்சல் : mugambooks@gmail.com. அச்சு : ஜெமினி ஆப்செட் பிரிண்டர்ஸ். பக்கங்கள் : 128. படிகள் : 1000. விலை.80.

இப்படிக்குச் சகமனித உணர்வுடன்
                                                                         புதியவன்
puthiyavan1986@gmail.com





No comments:

அதிகம் படித்தவை