எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 27, 2016

ஊடாட்டம் ஆய்வுக்குழு அறிக்கை – 5





ஊடாட்டம் ஆய்வுக்குழு அறிக்கை – 5

நிகழ்வு 24-25.01.2015 சனி, ஞாயிறு
இடம் – முகம் பதிப்பக அலுவலகம், சிங்காநல்லூர், கோயம்புத்தூர்.
கலந்துகொண்டவர்கள் –                                                         ஹரி, பிரசன்னா, சவீதா, ராம்சந்திரன், காமராசர், பாலன், சித்தார்த், ஸ்டீபன், சிவக்குமார்
நிகழ்ந்த நிகழ்வுகள்
      1. முதல் நிகழ்வை ராம்சந்திரன் நிகழ்த்தினார். அவரது தலைப்பு ‘சிற்றிதழ்களின் அரசியல் நிலைப்பாடு’ – 15 நிமிடத்தில் பேசி முடித்தார். கேள்வி பதில் கலந்துரையாடல் ஆகியன 45 நிமிடங்கள் நீடித்தன. 1980 – 2000 காலக்கட்டத்தில் நிறப்பிரிகை, மேலும், நிகழ் ஆகிய சிற்றிதழ்கள் இயங்கின. இன்றைய மூத்த மார்க்சிய எழுத்தாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் ஆரம்பக் களமாக இவை திகழ்ந்துள்ளன. இவற்றின் கருத்தியலைச் சாராம்சமாகக் கொண்டு உரையை நிகழ்த்தினார். மார்க்சியம், பின்நவீனத்துவம், அமைப்பியல், தலித்தியம் பற்றிய சிந்தனைக்குக் களமாக அமைந்தது. மார்க்சிய அமைப்புகள் பீன்நவீனத்துவத்தின் புறநிலை எதார்த்த வரலாற்றுப் பின்னணியிலிருந்து அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பைச் செய்யவில்லை. மாறாக வெறும் முத்திரை குத்துவதோடு நின்றுகொண்டது. வரலாற்றுப் பின்னணியிலிருந்து விவாதத்திற்குத் தயாராகவில்லை.
      2. இரண்டாம் நிகழ்வைப் பிரசன்னா நிகழ்த்தினார். அவரது தலைப்பு ‘சாலை விபத்து முதல் நகரமயமாதல் வரை’. சாலை விபத்து ஏன் நிகழ்கிறது? இந்தக் கேள்விக்குக் குழுவினரின் பதில்களைக் கேட்பதிலிருந்து துவங்கினார். அவரது பேச்சு மிகவும் சுவாரசியமாக அமைந்தது. கலந்துரையாடல் உட்பட 1 மணிநேரம் நிகழ்ந்தது. சாலை விபத்திற்கு அரசு சொல்லும் காரணங்களும், ஊடகங்கள் ஊட்டுகின்ற புரிதல்களும் எத்தனை மோசடியானது. நோயின் அறிகுறியை மட்டுமே நோயாகப் புரிந்துகொள்ளச் செய்திருக்கின்றன. சாலையைப் பயன்படுத்துதல் பற்றிய சமூகத்தின் வேறுபட்ட உள்ளத்தியலும், தலைமுறைகளின் இடைவெளியும், வேகம் குறித்த மாறுபட்ட மதிப்பீடுகளும், வீடுகளின் அமைப்புமுறை மாற்றங்களும், இடங்களைப் பயன்படுத்துவதில் திட்டத் தெளிவின்மையும், ஒரே மையத்தில் மக்களின் தேவைகளைக் குவிப்பதும் போன்றன முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இவற்றையும் இவற்றிற்கான அடித்தளத்தையும் புரிந்துகொள்ளாமல் சாலை விபத்துக்களை வெற்றிகொள்ள முடியாது.  இவற்றின் அடித்தளமாக மோசமான அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் அமைந்திருக்கின்றன. இவற்றை உணர்த்துவதற்கான ஆவணப்படம் எடுக்கின்ற முயற்சியில் தோழர் சவீதாவும் இவரும் செயல்படுகிறார்கள். இந்த முயற்சியின் அனுபவங்களிலிருந்தே இவரது உரை அமைந்தது. ஆவணப்படத்திற்கு முன்பாக கட்டுரை வடிவில் வெளியிடுமாறு குழுவினர் கேட்டுக்கொண்டனர். பிரசன்னாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
      3. திரையிடலும் கலந்துரையாடலும் – தி கிரேட் டிக்டேடர் _ சார்லி சாப்லின். படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை அறையைச் சிரிப்பொலிகள் நிறைத்திருந்தன. படத்தில் இரண்டு சார்லி சாப்லின். படத்தின் இறுதியில் ஹிட்லர் சார்லி சாப்லினுக்குப் பதிலாக ஹிட்லர் வேடத்தில் மற்றொரு சார்லி சாப்லின் பேசுகிறார். இவர் முடி திருத்தும் கலைஞர் மட்டுமல்ல, ஒரு யூதர். நாசிச இனவெறி ஒடுக்குமுறைகளின் பயங்கரங்களை நன்கு உணர்ந்தவர். இவரை ஹிட்லர் என்று எல்லோரும் நம்புகிறார்கள். இரண்டாம் உலகப்போர் துவங்குகிறது. போரை உற்சாகப்படுத்தும் ஹிட்லரின் உரையைக் கேட்க லட்சக் கணக்கான ராணுவ வீரர்கள் காத்திருக்கிறார்கள். ஹிட்லர் பேசுகிறார். இவரது பேச்சின் சாராம்சத்தை உணர்ந்தவாறு சொல்கிறேன்.
‘இந்தப் போர் மனிதகுலத்திற்கு எதிரானது. நாம் மனிதர்களை நேசிக்க வேண்டும். அன்புடையவர்களாக வாழ வேண்டும். நாம் இயந்திரங்கள் அல்ல, மனிதர்கள். இயந்திரங்களை உருவாக்கிய நம்மால் மனிதநேயமிக்க புதிய உலகை உருவாக்க முடியாதா ? மனிதர்களின் நல்வாழ்விற்காகப் புதிய உலகைப் படைப்போம். போரைக் கைவிடுங்கள். போர் செய்வது நமக்குத் தேவையற்றது. மனிதர்களை இதயம் கனிந்து நேசிக்க வேண்டும். நேசிப்பதே நமக்குத் தேவை. நாம் இயந்திரங்களல்ல, மனிதர்கள்!..’
இந்த உரையைக் கேட்டு ஆச்சரியமும் உற்சாகமும் மேலெழ படை வீரர்கள் கொண்டாடுகிறார்கள். ஆயுதங்களைத் தூக்கியெறிந்துவிட்டு கட்டித் தழுவிக்கொள்கிறார்கள். சார்லிசாப்லின் ஹிட்லர் வேடத்தில்  நிகழ்த்திய இவ்வுரை அவர்களை மட்டுமல்ல, ஆய்வுக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. அறை முழுதும் கைதட்டல்கள் அதிர்ந்தன.
படம் பற்றிய கலந்துரையாடல் தொடர்ந்தது.  எத்தனைமுறை பார்த்தாலும் சகிக்காமல் கற்றுத்தரும் படம். இதைப் பற்றி நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்க முடியும். முசோலினி, ஹிட்லர், ராஜபட்சே, மோடி வரை இப்படம் தொடர்புடையதாகவே இருக்கின்றது. வெறுப்பு அரசியலை உருவாக்காமல் பாசிச அரசால் செயல்பட முடியாது. ‘இந்துத்துவாவின் மோடி அரசியல் இஸ்லாமிய கிறித்தவ சிறுபான்மையின வெறுப்புச் செயல்பாடுகளால் வாழ்கிறது.’ யூதர்களை அழிப்பதற்கு யூத வங்கிகளே பணம் கொடுத்தன.  இங்கு இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு இஸ்லாமிய பெரு முதலாளிகளே இந்துத்துவாவிற்கு பணம் கொடுப்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இனவெறி அரசுகள் வீழ்த்தப்படும்வரை சார்லியின் இந்தப்படம் பேசிக்கொண்டே இருக்கும்.
      4. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களது ‘மாதொரு பாகன்’ நாவல் மீதான சர்ச்சை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ந்தது. நாவலின் சாராம்சமானக் கதையைக் காமராசு விளக்கினார். திருச்செங்கோடு பகுதியிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நிகழ்ந்துவந்த ஒரு சடங்கை வரலாற்று உணர்வோடு பதிவு செய்திருக்கிறார். இந்தச் சடங்கு பற்றி எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
“இச்சடங்கு பெண்களின் பாலுறவு உரிமையைப் பிரதிபலிக்கின்றது. பெண்கள் தனது பாலுறவு உரிமையை ஒரு ஆணிடம் ஒப்படைத்ததாக ஒரு வரலாறு இருக்கின்றது. அதற்கு முன்புவரை ஒரு ஆணுடன் மட்டுமே பாலுறவு உரிமை என்ற சட்டம் கிடையாது. சில காரணங்களுக்காக இந்தச் சட்டத்தைச் சட்டம் என்ற பொருளில் அல்லாமல் ஒரு முறைக்காக உருவாக்கிக் கொண்ட பெண்கள், இனப்பெருக்கத் தெய்வத்திற்கு முரணான செயலில் ஈடுபடுவதாகவும் உணர்ந்தனர். இதற்குப் பாவமன்னிப்பாக அத்தெய்வத்திற்கு  ஒரு சடங்கு செய்கிறார்கள். அந்தச் சடங்கில் ஒரு ஆணுடன் மட்டுமே பாலுறவு உரிமை என்ற புதிய முறையை விட்டுக்கொடுக்கிறார்கள்.  அந்த வழிபாட்டிற்கு வரும் ஆண்களுடன் கட்டணம் பெற்று பாலுறவு உரிமையில் ஈடுபடுகிறார்கள். பாலுறவிற்காக ஆண்கள் கொடுத்தக் கட்டணத்தை இனப்பெருக்கத் தெய்வத்திற்குக் கழுவாயாகச் செலுத்துகிறார்கள். சொத்துக்கள் மீதான ஆண்களின் அதிகாரம் வலிமை பெற்றதும் ஆணாதிக்கம் வலிமை பெற்றது. தாய் தலைமைச் சமூகத்தில் பெண்கள் உருவாக்கிய ‘ஒரு ஆணிடம் தன்னை ஒப்படைத்தல் முறையை’ ஆண் சட்டமாக மாற்றினான். ஒருதார மணமுறை குடும்ப வடிவமாக வரலாற்றில் தோன்றியது. பெண்களது இனப்பெருக்கத் தெய்வ வழிபாடு பற்றி எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அலாஸ்கா ஆலயத்திற்குச் செல்லும் பாபிலோனியப் பெண்களைக் கவனிக்க வேண்டும். இத்தகைய வழிபாட்டோடு வரலாற்றுத் தொடர்புடையதாகத் திருச்செங்கோடு திகழ்வதை உணர முடிகிறது. இந்த வழிபாடு வெறும் சடங்காகக் கடந்த காலத்தின் சமீபம் வரை பின்பற்றப்பட்டுள்ளது. இதுவே பெருமாள்முருகன் அவர்களது நாவலில் இடம்பெற்றுள்ளது. ஒரு எழுத்தாளன் தனது சமகால உலகை கடந்த கால வரலாற்றுணர்வுடன் பதிவு செய்வது ஓர் கடமையே. கடமையைச் செய்தவரின் கருத்துரிமையைக் கொலை செய்வது இந்துத்துவாவாக இருந்தாலும்சரி, எவனாக இருந்தாலும்சரி கண்டனத்திற்கு உரியதே.”
எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் இந்துத்துவச்சாதிய மதவாத அரசு நிகழ்த்திய கட்டப்பஞ்சாயத்து வெறும் கருத்துரிமை மீதான பயங்கரவாதம் மட்டுமல்ல. ஆணாதிக்க வக்கிரம், வரலாற்றைத் திரித்துப் பேசுவதற்கான அதிகாரம்.
பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் ஆணின் உரிமையைப் போல பெண்ணுக்கும் உரிமை இருக்கின்றது என்பதை மறுக்கின்றது. தனி அறையிலும் பொது வெளியிலும் பெண் எப்படி இயங்க வேண்டும் என்பதை சாதிய இந்துத்துவாவாகிய நாங்கள்தான் முடிவு செய்வோம். பெண்ணிற்கு சுயம் என்பது கூடாது என்கிறது.
அறிவியல் தத்துவ நிலையிலிருந்து வரலாற்று உண்மை எதையும் பேசக் கூடாது. சாதிய இந்துத்துவாவாகிய நாங்கள் வரலாறு என்று எதைச் சொல்கிறோமோ அதையே வரலாறாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது பாசிசத்தின் அதிகார உச்சம். பாசிசத்தை வேரறுப்பது சமகாலக் கடமையாக இருக்கின்றது.
      5. கைதட்டுதலைப் பரிமாறுதல், பொருட்களைப் பெயர் மாற்றாமல் பெறுதலும் கொடுத்தலும் ஆகிய இரண்டு விளையாட்டுகள் மட்டும் நிகழ்வுகளுக்கு இடையில் சிறிய அளவில் உற்சாகத்திற்காக விளையாடப்பட்டது.
      6. ஊடாட்டம் ஆய்வுக்குழு பற்றிய கலந்துரையாடல்
  • ஹரி, ராம்சந்திரன் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துகொண்டனர். தொடர்ந்து 3 நிகழ்வில் பங்கேற்காதவர்கள் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக்கப்படுவர் என்பது ஒரு முடிவாக குறிப்பிடப்பட்டது தவறு. இது பற்றிய உறுதியான முடிவை அடுத்தச் சந்திப்பில் நிகழ்த்துவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றியத் தகவல்களும் கொள்கை அறிக்கையில் காமராசரால் முன்மொழியப்படும்.
  • மூன்றாம் மாதங்களின் இரண்டாம் வார சனி, ஞாயிறு ஆய்வுக்குழு சந்திப்பிற்கான நேரமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • நீண்டகால கொள்கையை காமராசர் வாசித்தார். மற்றபடி, நீண்டகாலக் குறுகிய காலக் கொள்கையை பிப்ரவரி இறுதிக்குள் முடித்ததும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு முன்மொழிவாக வழங்குவார். அனைவரும் பரிசீலனை செய்து அபிப்ராயங்களுடன் பங்கேற்க வேண்டும். அடுத்தச் சந்திப்பில் கொள்கை அறிக்கை இறுதி செய்யப்படும்.
  • இதழ் ஆசிரியர் இந்த முறையும் பங்கேற்கவில்லை. ஊடாட்டம் இதழ் பற்றிய தெளிவான கலந்துரையாடல்கள் நிகழவில்லை. ஊடாட்டம் இதழுக்கு ரசீது வெளியிடுவதும், இதழ்களை முழுமையாகப் பெற்று விற்பனைக்குச் செலுத்துவதும் முகம் பதிப்பகத்தின் பொறுப்பு. துணை ஆசிரியரை நியமிப்பது தேவையா என்பது அடுத்தச் சந்திப்பில் பரிசீலித்து உறுதி செய்யப்படும்.
  • ஊடாட்டத்திற்கு மின்னஞ்சல் உருவாக்குவதற்கும்,  FACE BOOK, BLOG SPOT உருவாக்கி இயக்குவதற்கும் உரிய பொறுப்பை சவீதா ஏற்றுக்கொண்டார். மாதந்தோறும் 15 நாட்களுக்குள் படைப்புகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
  • உறுப்பினர் கட்டணம் ரூ50. மாதந்தோறும் இயக்க நிதி ரூ100. உதவித்தொகை பெறாத மாணவ உறுப்பினர்களுக்கு இயக்க நிதி ரூ50. நிதிப் பொறுப்பாளர் வரவு செலவு கணக்குகளை எழுதுவதற்குத் தனியாக ஒரு நோட்டைப் பயன்படுத்த வேண்டும். அடுத்தச் சந்திப்பில் ஊடாட்டத்திற்கான கணக்கு நோட்டைக் குழுவினருக்குக் காட்ட வேண்டும். ஆய்வுக்குழுவினரின் பயணத்திற்கோ உணவிற்கோ ஊடாட்ட நிதியைப் பயன்படுத்தக் கூடாது. நிகழ்ச்சிக்கு முன்னதாகவே நிதிப்பொறுப்பாளர் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு செலுத்த வேண்டிய பணம் பற்றியத் தகவலைத் தெரியப்படுத்த வேண்டும்.
  • செயல் பொறுப்பாளர் ஊடாட்டம் ஆய்வுக் குழுவிற்காக ஒரு நோட்டை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
  • செயல் பொறுப்பாளர் குறுஞ்செய்தி மூலம் தொடர்புக்கு வந்ததும் உறுப்பினர்கள் அவசியம் மறுவினை செய்ய வேண்டும். முன்பு உறுதி செய்யப்பட்டிருந்த இத்தகைய முடிவு இந்தச் சந்திப்பில் மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. செயல் பொறுப்பாளர் அலைபேசியில் பேசுவார். அலைபேசி அழைப்பை ஏற்க முடியாதவர்கள் முறையாக முன்வந்து செயல் பொறுப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம் என்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அலைபேசி எண்ணை மாற்றுபவர்கள் செயல்பொறுப்பாளர் தொடர்பு கொள்வதற்கு ஒத்தழைக்கின்ற வகையில் புதிய எண்ணைத் தெரியப்படுத்த வேண்டும்.
  • நிகழ்ச்சி நிரலைத் திட்டமிடும்போது இடம் சூழல் ஆகியவற்றை உணர்ந்து திட்டமிட வேண்டும்.
  • முதல்நாள் நிகழ்வில் திட்டமிடப்பட்டிருந்த படிப்பினை நிகழ்வு நடைபெறவில்லை.
  • உறுப்பினர்களின் வாசிப்புக்களம்
சவீதா – பெண்ணியம் (விருப்பத்துறை), பெண்விடுதலை புதிய தரிசனம் _ஓஷோ­, The Bad Girl _losa, எல்ஸ்வோ (ஆவணப்படம்)
ராம்சந்திரன் - நவீனத்துவம் (விருப்பத்துறை), நிறப்பிரிகை, மேலும், நிகழ் சிற்றிதழ்கள். வர்க்கம் சாதி கம்யூனிசம் பற்றி. கலப்பால்குப்பு _வாய்மைநாதன் (NCBH)
ஹரி – அரசியல் பொருளாதாரம்  (விருப்பத்துறை), லும்பா இறுதிநாட்கள் _டீ விட்டோ, மூலதனம் 150 பக்கம் வரை, மஞ்சள் பிசாசு..
பிரசன்னா – நகரமயமாக்கம் பற்றிய வாசிப்பு
ஸ்டீபன் – அம்பேத்கர் பற்றி.. புத்தரா மார்க்ஸா? மார்க்ஸ் அம்பேத்கர் புதிய பரப்பைத் தேடல்..
காமராசர் – தமிழகத்தில் புத்தகப் பண்பாடு நிகழ்வில் சிங்காரவேலரின் சிந்தனைகள், தனிநாயக அடிகள் பற்றிய வாசிப்பு, இந்திய கம்யூனிஸ்ட் திட்டங்களில் இந்திய சமூகப் பொருளாதாரம் பற்றிய வாசிப்பும் வகுப்பும். பண்டைய காலத் தமிழகத்தில்  சமூக மாற்றப் போக்குகள்.
      7. மனம் திறந்த உரையாடல் – ராம் சந்திரன் தனது மதிப்பீட்டை உணர்வுமிக்க மொழிநடையில் எழுதி வாசித்தார். மற்றபடி உரையாடலில் சாராம்சம் பின்வருமாறு. குழுவின் முடிவு திட்டமிட்டபடி நிகழ கறாராக இருப்பதே சரியானது. செயல் பொறுப்பாளர் தனது பொறுப்பு அதிகமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். எல்லா உறுப்பினர்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது முக்கியமான பொறுப்பாகும். இதனை ஒவ்வொரு உறுப்பினரும் உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த நிகழ்வில் சில விசயங்கள் கோட்டைவிடப்பட்டுள்ளது. தாறுமாறாக நிகழ்ந்திருக்கிறது. இந்த நிகழ்வுதான் திட்டமிட்டபடி மிகச்சரியாக நிகழ்ந்திருக்கிறது. தாறுமாறாக உணரும்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. எல்லா உறுப்பினர்களும் பங்கேற்பதே குழுவின் விருப்பம். சில உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டாலும் திட்டமிட்டபடி நிகழ்வை நிகழ்த்துவதே வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சகமனிதரின் உள்ளத்தியல்பை அறிந்துகொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். தோழமை உணர்விற்குத் தடையாக இறுக்கமான மனநிலையை வளர்த்தெடுக்கின்ற அணுகுமுறைகளைக் கண்டறிந்து களைவதற்கு முன்வர வேண்டும். உறுப்பினர்களின் விருப்ப முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்களை முக்கியத்துவம் வழங்கி நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்கச் செய்ய வேண்டும். சமீபத்தில் செந்தில்குமார் என்ற முக்கியமான எழுத்தாளர் குடிப் பழக்கத்தால் இறந்தார். இது சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. குடியால் இத்தகைய இழப்புகள் நிகழ்வதை நாம் எதிர்க்க வேண்டும். ஊடாட்டம் ஆய்வுக்குழுவினர் இதனைப் படிப்பினையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • அடுத்த நிகழ்வு – 11,12.04.2015 (சனி, ஞாயிறு). நிகழ்விடமும் நிகழ்ச்சித் திட்டமும் பிறகு அறிவிக்கப்படும். உரிய ஒத்துழைப்புடன் செயல்படுவோம் என்ற நம்பிக்கையுடன்...
                                               
                                                செயல் பொறுப்பாளர்
‘எல்லா செயலும் அறிவை ஆக்கட்டும்
எல்லா அறிவும் செயலை ஆக்கட்டும்’

No comments:

அதிகம் படித்தவை