எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 27, 2016

வாருங்கள் நண்பர்களே இடைவெளியை நிரப்பலாம்...


வாருங்கள் நண்பர்களே இடைவெளியை நிரப்பலாம்...
-ஆசிரியர் குழு-

SUMSன் சாளரம் : இது சமூக விஞ்ஞானியாவதற்கான மாணவர்களது களம்.
      மாணவ நண்பர்களே உற்சாகத்துடன் அழைக்கின்றோம்! நாம் சமூக அக்கறையுடையவர்கள் என்பதை நிரூபிக்க அழைக்கின்றோம்! சமூக அறிவும் சமூகப் பாதுகாப்பும் எழுச்சி பெற அழைக்கின்றோம்! சமூக விஞ்ஞான உலகப்பார்வையில் தேர்ச்சி பெற அழைக்கின்றோம்!
      அன்றாடப் பொருள் உற்பத்திக்காக உழைக்கின்ற மக்களை நினைத்துப் பாருங்கள். பல்வேறு வேலைகளுக்கு இடையில் துளி அளவு படிக்கவும் எழுதவும் செய்கிறார்கள். அவர்களின் அறிவிற்கு வேலையனுபவங்களே முதன்மையாகின்றன. எழுத்தும் படிப்பும் முதன்மை இல்லை. ஆனால் மாணவர்களுக்கு எழுத்தும் படிப்புமே கண்கள். தாய்மொழிக் கல்வியே இதயத் துடிப்பு.
      நமது கல்விமுறைகளே தாய்மொழிக்குச் சங்கு ஊதிவிட்டன. கல்வி பெறுபவர்கள் அனைவருமே அறிவாளிகள்  என்பதாக அறிவிக்கின்றன. கல்வி உரிமைகளை மறதியாக்கிவிட்டன. கவர்ச்சிகரமான வடிவங்களில் கல்வி வியாபாரம் செய்யப்படுகின்றன. கல்விக் கடன்களை மாணவர்கள் போராடிப் பெறுகிறார்கள். பழைய சாராயக் கடைக்காரர்களின் புதிய கல்வி நிறுவனங்களில் கடன்காரர்களாகப் படிக்கிறார்கள். எல்.கே.ஜி., முதல் எம்.பி.பி.எஸ்., வரை கல்வி வியாபாரம் அமோகம். பிச்சை எடுத்தாவது படிப்பதே நன்று என அறம் போதிக்கிறார்கள். எனினும் சமூக அறிவற்ற மாணவர்களின் வாழ்க்கைக்கு எப்படிக் காரணம் தேடுவது?
      நம் மனதைத் தொட்டு யோசிப்போம். ஆயிரம் புத்தகங்களைச் சுமக்கிறோம். புத்தகச் சுமை தாங்காமல் பூப்பெய்தவர்கள் நம்மில் பலர். எல்லாப் பாடங்களையும் கரைத்துக் குடிக்கிறோம். பக்கம் பக்கமாய் வாந்தி எடுக்கிறோம். மதிப்பெண்களே அறிவு என்று நம்பவைக்கப்படுகிறோம்.
      கல்வி நிறுவனங்களின் கட்டாயக் கட்டணங்களால் பாவப்பட்ட பெற்றோர்கள் நொந்து சாகிறார்கள். உழைப்பில் சோர்ந்து இறுதி வியர்வையையும் காசாக்கிக் கட்டணம் தருகிறார்கள். குருக்கு வலிக்கக் குறுகி நடந்தாலும் பிள்ளைகள் தலை நிமிர்ந்து வாழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் கழுத்தை நிமிர்த்தி நடக்கிறார்கள். நாம் வியக்கத்தக்க நல்ல மனிதராக வளர்க்கப்படுகிறோம் என்ற நம்பிக்கையில் எல்லா சோகங்களையும் கண்களுக்குள் புதைத்துக் கொள்கிறார்கள். கஷ்டம் தெரியாமல் நம்மை வளர்ப்பதற்கு அவர்களறிந்த ஒரே வழி, கஷ்டங்களைக் கண்களுக்குள் புதைத்துக்கொள்வதே!
      நம் கல்வி நிறுவனங்கள் பெற்றவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வழியில் நம்மை வளர்க்கின்றனவா? நம் கல்வி முறைக்கும், பெற்றவர்களின் நம்பிக்கைக்கும், வாழ்க்கை பற்றியச் சமூக அறிவிற்கும் எதாவது தொடர்பு இருக்கின்றனவா? வேலைக்காகப் படித்துவிட்டு படிப்பிற்கேற்ப வேலையில்லாமல் மனம் சோர்ந்த இளைஞர்கள் எத்தனை பேரென நினைத்திருக்கின்றோமா? நம் சமூகத்தில் கூர்மையாக வளர்ந்துகொண்டிருக்கின்ற வேலையில்லாப் பிரச்சனையால் சுயமரியாதை இழந்த இளைஞர்களின் எண்ணிக்கையை எண்ணி முடிக்க முடியுமா? அறியாமை போதையில் மூழ்கடித்து நம் வாழ்வையும் மண்ணின் செல்வங்களையும் களவிடும் கயவர்களை நம்மால் அறிய முடிகின்றதா? கயவர்களின் மறைவிடமாகவே கல்வி நிறுவனங்களின் வேலைத்திட்டங்களும் செயல்படுகின்றன என்பதை உணர முடிகின்றதா?
      நேர்மையான அறிவு நமது உள்ளுணர்விற்கு எவற்றைச் சொல்கின்றன? நமது சமூக உணர்வை புத்துயிர் பெறச் செய்வதற்கு புதிய கல்விமுறை தேவைப்படுகிறது.  சமூக அறிவுடன் வாழ்வதற்குப் பயிற்சி தேவைப்படுகின்றது. நமது வாழ்க்கை முறையைச் சரி செய்வதற்கான புதிய முயற்சிகள் தேவைப்படுகின்றன...
      உண்மையைத் தேடுகின்ற மனம் திறந்த உரையாடல்களையும் செயல்முறைகளையும் கல்வியாக்குவோம். தொடர்ந்து கொண்டிருக்கின்ற சமூக அக்கறையற்றக் கழிசடையான பழைய வாழ்க்கை முறையை விட்டொழிப்போம். புதியத் தொடக்கத்தைத் தொடங்குவோம். குடும்பம் உட்பட சமூக நிறுவனங்களின் அத்தனைத் தடைகளையும் படிகளாக்குவோம். சமூக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்ற நல்லுலகம் பற்றியக் கனவுகளை நெஞ்சில் ஏந்துவோம். அறியாமை, வறுமை, ஏக்கம், துரோகம், துயரம் போன்ற கொடுமைகள் நீங்கியப் பொன்னுலகைப் படைப்பதற்கு ஒட்டுமொத்தத் திறன்களையும் செயல் வடிவங்களையும் பயன்படுத்துவோம்!
      இழுத்துக்கொண்டிருக்கும் அரசுக் கல்விமுறையும், தொப்பை விழுந்திருக்கும்  வியாபாரக் கல்விமுறையும், சம்பளப் பிரச்சனைகளுக்கு மட்டும் எழுச்சி பெறும் ஆசிரியர்களும், சமூக அறிவின்றி தகவல்களை நிரப்புகின்ற மாணவ மூளைகளும்.. என சமூகத் தேவைக்குப் பொருத்தமற்றக் கல்வி முறையின் கைகளை முறுக்கி மண்டியிட வைப்போம்!
      மாணவர் என்பவர் தனிமனிதர் அல்ல. கூட்டமாக ஓடித்திரியும் மந்தைகளும் அல்ல. நல்லுலகம் படைப்பதற்காகத் திட்டமிட்டச் சமூக வாழ்க்கையில் பங்கேற்கின்ற மக்களின் பிரதிநிதி! தனித்துவம் நிறைந்தச் சமூகவிஞ்ஞானி! சமூகவிஞ்ஞானிகளாக வாழ்ந்துக் காட்டுவோம்!
      மோசமானக் கல்விமுறையின் கொடுமைகளே மாற்றுக்கல்விக்கானத் தேவையை உணர்த்தியுள்ளன. நல்லக் கல்வி முறையின் நோக்கங்களையும் வடிவங்களையும் கனவு காணத் தூண்டியிருக்கின்றன. எனவே துணிச்சலாகத் தொடங்குவோம். கல்விநிறுவனங்கள் நமக்குக் கற்றுக்கொடுத்தவைப் போதும்! இனி, நாம் கற்றுக்கொடுப்போம்!
      நம் செயல்களுக்கான அறிவுலகப் பயணத்திற்கு SUMSன் சாளரம் நட்பு பாராட்டி அழைக்கின்றது...

No comments:

அதிகம் படித்தவை