எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 27, 2016

தோழர்களுக்கு இதயங்கனிந்த வணக்கம்




தோழர்களுக்கு இதயங்கனிந்த வணக்கம்
           
            SUMS ன் சாளரம் இதழுக்கான முன்திட்டக் கலந்துரையாலில் நேரில் வர இயலவில்லை. பணிவன்புடன் எனது மன்னிப்புகள். இந்தக் கலந்துரையாடலில் எனது சிந்தனைகளை கடிதமாகச் சமர்பிக்கிறேன். சில இடையூறுகளுக்கு இடையில் எழுதுவதால் தொடர்ச்சி விடுபடலாம், சொன்னதைத் திரும்பச் சொல்லுதலும் நிகழலாம். பொறுத்துக் கொள்ளவும்.
            நமதுஇதழுக்கு எத்தகைய செயல் வடிவம் தேவைப்படுகிறது என்பதைப்பற்றி பேச விரும்புகிறேன். கலந்துரையாடலில் இந்தக் கருத்துக்களைப் பரிசீலிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
            சமகாச் சமூக நிலைமையில் SUMSன் இதழை எப்படிப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்?
            வெகுமக்கள் வாழ்வியல் நலனை இலக்காகக் கொண்டுள்ள SUMS இயக்கம், அறிவியல் தத்துவமாகிய மார்க்சிய உலகப்பார்வையிலிருந்து சமூகத்தைப் புரிந்துகொண்டு சரி செய்ய முயல்கின்றது. இத்தகைய முயற்சியில் ஈடுபட வேண்டியது சமூகக் கடமையாகவும் தேவையாவும் இருக்கின்றது. இதனை மாணவர்களுக்கும் வெகுமக்களுக்கும் உணர்த்த வேண்டியுள்ளது. நமது இந்த முயற்சியில் முடிந்தமட்டும் திணிக்கப்படுதலோ, வறட்டுத்தனமோ இல்லாத அளவிற்குச் செயல்பட வேண்டும். வழக்கமான பழைய வழக்கங்களிலிருந்து முடிந்தமட்டும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். புதுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பயன்படக்கூடிய பழைய உத்திகளைப் புதிதாகக் கையாள்வதாகவும் இருக்கலாம். புதியப் புதிய உத்திகளை உருவாக்கிக்கொள்வதாகவும் இருக்கலாம். நமது இயக்கத்தின் உலகப்பார்வையும் செயல்முறையும் சரியானது என்பதை மக்களே முன்வந்து ஏற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும். சமூகத்ததை அக்கறையுடன் சரி செய்கின்ற சமூகமாற்ற அமைப்பாக வாழ்கின்ற வாழ்க்கைமுறையே சரியானது என்பதை மக்களுக்கு உணர்த்தும்படியான அணுகுமுறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இவற்றிற்காக வாய்ப்புள்ள அத்தனைச் சக்திகளையும் வழிமுறைகளையும் நமக்குகச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
     சாளரம் என்பது SUMSன் இலக்கிய வடிவிலானச் செயல்பாடாகும். இலக்கியம் என்பது வரலாற்றின் அடிப்படையில் பொதுவாக வாய்மொழி இலக்கியம், எழுத்திலக்கியம் என இரு வகைப்படும். வடிவ அடிப்படையில் பொதுவாக கலை இலக்கியம், அறிவியல் இலக்கியம் என இரு வகைப்படும். நாம் சாளரத்தை இலக்கியத்தின் முழுதளாவியச் செயல் வடிவில் திட்டமிட வேண்டியச் சமூகத்தேவை இருக்கின்றது. ஆகவே, சாளரத்தின் பக்கங்களை அறிவியல் இலக்கியத்திற்கும், கலை இலக்கியத்திற்கும் சமமாகப் பிரிப்பது நல்லது.
     சாளரம் இதழ் மாணவர்களிடமும் மக்களிடமும் நமது கருத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பது என்பதற்காக மட்டுமல்ல. ஏனெனில், இத்தகைய அணுகுமுறை ஒரு சடங்கிற்காகச் செய்து முடிக்கின்ற நிகழ்வாகவே மாறிவிட முடியும். மாறாக, சமூகத்தேவையின் அடிப்படையில் மனம் திறந்த உரையாடல்களை வளர்த்தெடுப்பதற்கான கருவியாகப் பயன்பட வேண்டும். ஒரு கருத்தை மக்கள் பற்றிக் கொண்டால்  செயலாக வடிவம் பெறும்.  சொல்லப்படுவதால் மட்டுமே கருத்தை மக்கள் பற்றிக்கொள்ள மாட்டார்கள். சரியானக் கருத்தைப் பற்றிக்கொள்வதற்கு உந்துதல் தரக்கூடிய புதிய உத்தி முறைகளை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.
     மாணவர்களையும் மக்களையும் அதிகம் பேச வைத்துக் கேட்க வேண்டும். பிறகு நமது சிந்தனைகளை உணர்த்த வேண்டும். நமது மறுவினையைச் சிந்தித்து ஏற்பதற்கும், சரியை நோக்கி மாறுவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். அவர்களது இலக்கியப் படைப்பாக்கச் சமூக அறிவைக் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொண்டு உரையாடலை விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலமாக நமது உலகப்பார்வையை ஆழமாக விதைக்க வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் கலந்துரையாடுகின்றப் பண்பை உருவாக்க வேண்டும். இத்தகையப் பண்பைக் கடக்காமல் விவாதமுறையை உருவாக்குவது நல்லதல்ல. நோக்கத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படப் பழகுவதற்கு மாறாக, எதிரான விளைவுகளையே ஏற்படுத்திவிடும்.
பேசுவதற்கான விசயங்கள் எழுதப்பட வேண்டும்
எழுதப்பட்ட விசயங்கள் பேசப்பட வேண்டும்
இலக்கியம் என்பது படிப்பதற்காக அல்ல,
எல்லா இலக்கியங்களும் பேச்சுப் பொருளே!
      நம் சமூகத்தில் படிப்பவர்கள் மிகமிகக் குறைவு. எழுதுபவர்கள் அதைவிடக் குறைவு. இந்நிலையில் நமது இலக்கியம் வாசிக்கப்படுவதற்காக மட்டும் அமைந்தால் சமூக இலக்கிற்குப் பயன்படாது. தாய்மொழியில் படிப்பதற்கும், எழுதுவதற்கும், சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் ஊக்கம்தரக்கூடிய  புதியப் புதியச் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு இதழிலும் பல்வேறு0 படைப்புகளில் பதிவுசெய்துள்ள சமூக அறிவும், சமூக உணர்வும் மனம்திறந்த உரையாடல்களில் விடுதலை பெற வேண்டும். ஆங்காங்கே இதுபற்றிய கலந்துரையாடல் நிகழ்வுகள் உருவாக வேண்டும். படித்தவர்கள் படிக்காதவர்களுக்காக விவரித்துப் பேசுகின்ற கலந்துரையாடல் நிகழ்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இத்தகைய நிகழ்வுகளால் படிப்பதில் ஆர்வம் தூண்டப்பட்டு வாசிப்பவர்கள் விகிதம் பெருக வேண்டும். இத்தகைய அறிவியல் கலை இலக்கிய நிகழ்வுகளை அறிக்கைகளாக  எழுதச்செய்து ஆசிரியர்குழு பெற வேண்டும்.
      இந்த நிலையில் SUMSன் சாளரம் என்பது மார்க்சிய தத்துவ உலகப்பார்வையில் சமூகத்தைச் சரி செய்ய முயல்கின்ற ஓர் அறிவியல் கலை இலக்கிய இதழாகச் செயல்பட வேண்டும். மாணவர்களிடம் பாராளுமன்ற அதிகாரத்திலான வியாபாரப் பெரு ஊடகங்கள் கட்டமைத்திருக்கின்ற எதார்த்த வாழ்நிலையின் புரிதலற்ற உள்ளத்தியலை உடைத்தெறிய முயல்வது சாதாரணக் காரியமல்ல. இந்தக் காரியத்தைச் சாதிக்காமல் சமூகத்தின் முழுதளாவிய நிலைமைகளைப் பற்றிய சிந்தனையுடையவர்களாகவோ, சமூக அக்கறையுடன் செயல்படுபவர்களாகவோ மாணவர்களையும் மக்களையும் பக்குவப்படுத்தும் முயற்சி வெற்றி பெறாது. எனவே இதனைச் சாதிப்பதற்குரிய அத்தனை வழிமுறைகளையும், நம் படைப்பாற்றலுக்கு எட்டிய அத்தனை உத்திகளையும் சோதித்துப் பார்த்து வெற்றியைப் பெறுவோம்.
            நான் முக்கியமானதாகக் கருதும் ஒரு கருத்தை இங்கு வழியுறுத்த விரும்புகிறேன். நாம் சொற்களைப் பயன்படுத்துவதில்கூட புதிய உத்திகளை மேற்கொள்வது நலமாகும். மார்க்சியம் என்ற சொல்லின் அறிமுகத்தைச் சமூகவிஞ்ஞானம் என்ற சொல்லிலிருந்து தொடங்கலாம். இதனால் மார்க்சியம் பற்றிய இந்தச் சமூகத்தின் எதிர்மறையான முன்முடிவுகளிலிருந்து அறிமுகம் நிகழ்வது தவிர்க்கப்படுகிறது. மார்க்சியத்தைப் புதுமையாக அறிமுகம் செய்ய முடிகிறது. புதியவர்கள் மார்க்சியத்தை நெருங்கி வந்து கற்பதற்கு வழி கிடைக்கின்றது.
            சமூகவிஞ்ஞானம் என்ற இச்சொல்லை நானாக முன்மொழியவில்லை. நம்மிடம் பயன்படுத்தப்பட்ட பழைய சொல்லாகும். மார்க்சியம் என்பதற்கு இணையாக இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியங்களைப்  பல துறைகளின் அணுகுமுறையுடன் ஆராய்ந்த மூத்த மார்க்சிய ஆய்வாளர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கார்த்திகேசு சிவத்தம்பி, . கைலாசபதி, நா. வானமாமலை போன்றவர்கள் மார்க்சியத்திற்கு மாற்றுச்சொல்லாக சமூகவிஞ்ஞானம், மார்க்சிய சமூகவிஞ்ஞானம், சமூகவிஞ்ஞானத் துறை என்றெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள். சமகால அரசியல் சூழலில் மார்க்சியத் தத்துவத்தைச் சமூகவிஞ்ஞானம் என்றப் பழைய சொல்லில் அறிமுகம் செய்வதைப் பொருத்தமுடையதாகக் கருதுகிறேன்.
            SUMSஇரகுவின் நினைவேந்தல் நிகழ்வில் வெளிவந்தநீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்என்ற நூலில் மார்க்சியத் தத்துவ விதிகளை கதை வடிவில் விளக்கியிருப்பதும், மார்க்சிய சமூகமாற்ற அமைப்புகளில் வாழ்பவர்களை சமூகவிஞ்ஞானிகள் என்று குறிப்பிட்டிருப்பதும் இத்தகையக் கருத்தின் அடிப்படையிலேயே ஆகும்.
            SUMSஎன்ற மாணவர்களுக்கான சமூகவிஞ்ஞான அமைப்பில் செயல்படுவதாக நான் என்னைப்பற்றி அறிமுகம் செய்திருக்கிறேன். அமைப்புகள் பற்றி உரையாடுவதற்கு மேலும் வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றது. இந்த அடிப்படையில் சகநண்பர்களை அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியிருப்பதும், 4 நபர்கள் அமைப்பில் இணைந்திருப்பதும் இந்த அணுகுமுறையைச் சரியானது என்பதாக எனக்கு நிரூபித்திருக்கிறது. சமூகவிஞ்ஞானம் என்ற பெயரில் மார்க்சியப் பணிகளைச் செயல்பாட்டாளர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய சமூகத்தேவை இருப்பதாக உணர்கிறேன். SUMSன் சாளரம் இந்தப் பணியைச் செய்வதுபற்றி பரிசீலித்து முடிவு செய்ய வேண்டுமென விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
            சாளரம் காலாண்டு இதழாக வெளிவருவது நல்லது. வெளிவந்ததும் இதழ் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வுகளை விரிவாக நிகழ்த்தலாம். அடுத்த இதழைத் தயாரித்து வெளியிட ஒரு மாதம் போதுமானது.
            சாளரம் சமூகக் கருத்தியல்களை ஊடுருவுவதற்கானக் கருவி. சமூகத்தின் மாற்றம் சகமனிதர்களை மாற்றுவதிலிருந்து தொடங்க வேண்டும். எதிர்நிலை கருத்தியல் சக்திகள் சகமனிதர்கள் மீது பல்முனை தாக்குதல்களைச் செலுத்தி சகமனிதச் சிந்தனைகளையும், உள்ளத்தியல்புகளையும், செயல்முறைகளையும் கட்டுப்படுத்தியிருக்கின்றன. இந்தக் கட்டுக்களை உடைப்பதற்கு நாமும் பல்முனை கருத்தியல் தாக்குதல்களுக்கான உத்திகளை மேற்கொள்ள வேண்டும். நமக்கான இலக்கிய வெளிப்பாடு என்பது மக்களைச் சாளரம் வாங்கும்படிச் செய்வதும், நாம் சொல்ல வந்ததைச் சொல்லி முடிப்பதும் என்பதல்ல. இது தொடக்கம் மட்டுமே. அவர்களைத் திட்டமிட்ட  உரையாடல்களில் ஈடுபடுத்த வேண்டும். வாசிப்புப் பண்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். ஒரு கருத்தை 10 நபரிடமாவது உரையாடத் தூண்ட வேண்டும். இதன் அடிப்படையில் சமூக நிலைமைகளை பரிசோதித்துச் சரியானக் கருத்தைப் பற்றிக்கொள்ளக் கற்பிக்க வேண்டும். அதற்கான வாசிப்பு முகாம்களை பரவலாக உருவாக்க வேண்டும்.நம் சமூக அறிவிற்கு நிகழ்கின்ற தாய்மொழி புறக்கணிப்பிற்கு எதிராகத் துல்லியமான நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும்.
            நமது இதழில் சமகால அரசியல் தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் படைப்புகள் இடம்பெறுவதற்கு நிகராக, அரசியலற்று புதிதாக கற்க முன்வந்துள்ள மாணவர்களுக்கும் கருத்துரிமை அடிப்படையில் வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஏனெனில், இதழ் வெளிவருவதே முடிந்தமுடிபல்ல, தொடக்கம்தான். வாசிப்பு முகாம்களில் புதிய படைப்பாளர்கள் சமூக நிகழ்வை எத்தகைய உலகப்பார்வையில் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை கலந்துரையாடுதல் மூலமாகச் சரிசெய்ய முயல்வதும், சமூகவிஞ்ஞான உலகப்பார்வையில் எப்படிச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்பதும் நிகழ்ந்தாக வேண்டும். இதற்கான முன்தயாரிப்புக் கருவியாகச் சாளரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
            நமது பொதுவானக் கொள்கைகளுக்கு முரண்படாத வகையில் புதியபுதிய வடிவில் மாணவர்கள் செயல்படுவதற்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தவறுகளிலிருந்துதே சரியைக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் வளர்வதற்கு ஊக்கம்தர வேண்டும். கவிதை, கட்டுரை, கதை எழுத முயல்வதோடு மட்டுமல்லாமல் டப்பிங் பாடல்களை எழுதச் செய்தல், இசையுடன் பாடுதல், ஆடுதல், நாடகம் நடித்தல், திரைப்படம் பார்த்து கலந்துரையாடுதல், திரைவிமர்சனம் எழுதுதல், ஓவியம் வரைதல் இவை போன்ற மாணவர்களின் அறிவியல் கலை இலக்கியத் திறன்கள் சுதந்திரமாக வளர்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின்  அறிக்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சாளரத்தில் பதிப்பிக்க வேண்டும். டப்பிங் பாடல்கள், ஓவியங்கள் போன்றவற்றை இதழில் இடம்பெறச் செய்தால் புதிய உத்தியாகப் பயன்படுத்த முடியும்.
            பிரச்சாரம் என்ற சொல்லுக்குப் பதிலாகமக்களிடம் சென்று பேசலாம்என்று கூறி அழைத்துச் செல்ல வேண்டும். மக்களிடம் சென்று உரையாடிக் கற்றுக்கொள்வதை உறுப்பினர்களின் வேலைத்திட்டமாக உருவாக்க வேண்டும். பகுதி மக்களிடமோ, பேருந்து நிலையம் போன்ற பல்வேறு தளங்களிலுள்ள பொதுமக்களிடமோ புத்தகத்தைப் பற்றி மாணவர்கள் பேச வேண்டும். ஐந்து புதிய மனிதர்களிடமாவது உரையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். விற்பனையும் நன்கொடையும் இரண்டாம் பட்சமாகவோ மூன்றாம் பட்சமாகவோ இருப்பது நல்லது. ஒரு உறுப்பினர் குறைந்தது 5 புதிய மனிதர்களிடமாவது உரையாடி இதழைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதியை உருவாக்க வேண்டும். ஒரு உறுப்பினர் குழுவாக உரையாடிச் செயல்படுவது தொடர்ந்து நிகழ்வதற்கு இணையாக, குழுவிற்கு வெளியே புதிய புதிய மனிதர்களைச் சந்தித்து உரையாடுகின்ற அணுகுமுறைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும்.  புதிய மாணவர்களையும் மக்களையும் பங்கேற்கச் செய்யும் வகையில் புதிய புதிய உத்திகளில் நிகழ்ச்சிகளைச் சுதந்திரமாகத் திட்டமிட்டு  நிகழ்த்துவதும் அறிக்கைகளைத் தலைமைகளுக்கு அனுப்பி வைப்பதும் தொடர்ச்சியான செயல்வடிவமாக உருமாற வேண்டும். வெவ்வேறு அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்து கருத்துக்களையும் விமர்சனங்களையும் கலந்துரையாடுவதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். எல்லா அனுபவங்களிலிருந்தும் மாணவர்களை சமூக அக்கறையுடைய இலக்கியப் படைப்பாளர்களாக உருவாக்குவது சாளரத்தின் கடமை. SUMSன் சாளரம் என்ற இதழின் நோக்கத்தால் உருவெடுக்கும் இலக்கியப் படைப்பாளர்கள் நல்ல சமூகத்தைப் படைப்பதற்கும் ஆளுமையுடன் பங்கேற்பார்கள் என்பது உறுதி. என்று நம்புகிறேன்.

No comments:

அதிகம் படித்தவை