எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, November 27, 2017

முதலாளியக் கிழடை வீழ்த்துங்கள்


முதலாளியக் கிழடை வீழ்த்துங்கள்
புதியவன்

செடிகளே கொடிகளே மரங்களே
அந்தக் கிழட்டுப் பூதத்தை வீழ்த்துங்கள்
பூக்களின் கதறல்கள்
காய்கனி அலறல்கள்
பசுமையே பதறுது பாருங்கள்
உம்மை உயிர் நீக்கும் கிழட்டு பூதத்தை
பாடை கட்ட நீங்கள் வாருங்கள்

கொடுவாய் கெண்டை
தாவிடும் கெவலை
மிதக்கும் பாறை சுறா மீன்களே
கடல்த்தாய் மடியின் ஜீவன்களே
எல்லாம் ஓரணி சேருங்கள்
அந்தக் கிழட்டுப் பூதத்தை வீழ்த்துங்கள்
இரசாயனக் கழிவுகள்
அணுகுண்டு பரிட்சைகள்
செத்து ஒதுங்குது வாழ்க்கைகள்
அலைகடல் தாயை வல்லுறவாக்கும்
கிழட்டு பூதத்தை வீழ்த்துங்கள்

நெளியும் புழுக்களே நிமிருங்கள்
சுருண்ட பாம்புகளே சீறுங்கள்
கடிக்கும் பூச்சிகளே நகரும் நத்தைகளே
வீட்டுச் சுவர்களின் எறும்புகளே
அந்தக் கிழட்டுப் பூதத்தை வீழ்த்துங்கள்

உலகப் போர்களால் உயிர் சாகுதே
மணலும் வெளியும் விசம் ஆகுதே
உயிர் வாழவும் நிலம் காக்கவும்
ஒன்றுபட்டு களம் சேருங்கள்
இலாப வெறி பிடித்த கிழட்டு பூதத்தை
தாக்கி அழிக்க நீங்கள் வாருங்கள்
அதன் மூளை நரம்புகளைத் தாக்குங்கள்

ஊரில் நுழைந்த யானை சிறுத்தைகளே
கொம்புள்ள மான்களே மாடுகளே
தேனடை தேடிடும் கரடிகளே
ஓடித் திரிகின்ற நரிகளே
சினமிக்க சிங்கம் பலமிக்க புலிகள்
காட்டுத் தாய்மடி விலங்குகளே
எல்லாம் ஓரணி சேருங்கள்
அந்தக் கிழட்டு பூதத்தை வீழ்த்துங்கள்

தந்தமும் தோலுக்கும் சுடப்பட்டோம்
மின்கம்பம் வேலிக்கு எரிபட்டோம்
இலாப வெறிபிடித்த கிழட்டுப் பூதத்தின்
வங்கி வயிற்றுக்கு பணமானோம்
நம் பற்களை நகங்களை
கொம்பின் நுனிகளை
கூர்மை தீட்டிக்கொண்டு வாருங்கள்
அதன் குடலை மாலையாக்கிப் போடுங்கள்

தோகை மயில்களே கூவும் குயில்களே
வீட்டுச் சேவல் கோழி குஞ்சுகளே
மரங்கொத்திகளே காக்கை பருந்துகளே
காற்றில் மிதக்கும் மலைக் கழுகுகளே
வானை அசைக்கின்ற பறவைகளே
அந்தக் கிழட்டுப் பூதத்தை வீழ்த்துங்கள்
நம் வானையும் காற்றையும்
திசைகள் முழுவதையும்
வாரிக் குடித்த அந்தக் கிழட்டு பூதத்தைக்
கொத்தி கொலை செய்ய வாருங்கள்

வலியோடு வாழும் அடிமைகளே
மக்களைப் பெற்ற தாய்க்குலமே
மனிதரில் மூத்த பழங்குடியே
கடலோடு வாழும் மீனவரே
பசிப்பிணி நீக்கும் உழுவோரே
உலகைச் செதுக்கிய உழைப்போரே
படிப்போடு வாழும் மாணவரே
எதிர்காலம் இருண்ட இளையோரே
உலக உயிர்களுக்கு உணர்த்துங்கள்
இயற்கைக்கு நாமுயர் அங்கங்கள்
எல்லாம் ஓரணி சேருங்கள்
சமூகவிஞ்ஞானிகளாய் மாறுங்கள்

அணுக்கதிர் கழிவுகள் ஆயுதக் குவியல்கள்
முடித்திடும் பூமியின் போக்குகள்
ஆறு கடல்கள் ஏரி குளங்கள்
முழுங்கிடும் காடுகள் மலைகள்
இயற்கை வளங்கள் மனிதத் திறன்கள்
மென்றிடும் கணிப்பொறி ஆலைகள்
நிலநடுக்கங்கள் கடல் ஏற்றங்கள்
புயல் மழை வெள்ளம் சீற்றங்கள்
உற்பத்தி முடக்கங்கள் பொருளின் தேக்கங்கள்
பெருகிடும் கடன் வட்டி எழவுகள்
பாலியல் வன்மங்கள் தற்கொலை முடிவுகள்
பஞ்சம் பட்டினி சாவுகள்

காயும் சூரியக் கதிர்கள்
உருகும் ஆர்டிக் பனிகள்
சிதறும் எரிமலை வெடிகள்
நொறுங்கும் பூமியின் முகங்கள்
உலகம் முற்றிய அவலங்கள்
இந்தக் கிழட்டுப் பூதத்தின் சிரிப்புகள்

சமூகவிஞ்ஞானிகளின் திட்டங்கள்
பொதுவுடைமை செல்லும் பாதைகள்
இந்தக் கிழட்டுப் பூதத்தை வீழ்த்துங்கள்
சுற்றி வளைக்கலாம் வாருங்கள்
இந்தக் கிழட்டு பூதத்தை வீழ்த்திவிட்டால்
பூமியில் பூக்கும் புன்னகைகள்
சமூகவிஞ்ஞானிகள் தோற்றுவிட்டால்
உலகின் அழிவே மாற்றங்கள்

முடியப் போகிறது முதலாளியக் கிழடு
முடிக்கப் போகிறது மக்களின் அரசு
தொடரப் போகிறது சமூகத்தின் மேன்மை
தொடங்கப் போகிறது பொதுவுடைமையின் பாதை!



No comments:

அதிகம் படித்தவை