எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 27, 2016

புதியவன் எழுத்துக்கள் மீதான விமர்சனப் பதிவுகள்...




புதியவன் எழுத்துக்கள் மீதான விமர்சனப் பதிவுகள்...

விமர்சனப் பதிவுகளுக்கு முன்பாகச் சில வார்த்தைகள்... “அறிவெனும் பெரும் பசி” (ஊடாட்டம் ஆய்விதழில் இக்கட்டுரையின் இறுதிப்படுத்தப்படாத வடிவம் வெளிவந்திருக்கிறது.) என்றக் கட்டுரையிலிருந்து  “நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்” என்ற நூலை திரும்பிப் பார்க்கிறேன்.
      குறைந்தபட்சம் எனது சக்தியால் சேகரிக்கப்பட்ட நேர்மையான விமர்சனங்களிலிருந்து மட்டுமே திரும்பிப் பார்க்க விரும்புகிறேன். இவற்றில் நேர்மறையான விமர்சனங்கள் நிறைய விடுபட்டுள்ளன.. ஆனால் எதிர்மறையான விமர்சனங்களை முழுக்கவும் பதிவு செய்துள்ளேன்.
       சமூகவிஞ்ஞானக் களங்களிலிருந்து இந்தச் சமூகத்திற்கு எவை தேவையென நான் உணர்ந்திருக்கிறேனோ அவற்றையேச் செய்ய முயன்றிருக்கிறேன். இத்தகைய அடிப்படையிலிருந்து மட்டுமே எனது எழுத்து முயற்சி தொடர்கின்றது.
      இந்த முயற்சி சமூகளாவிய நிலையில் பல்வேறு பரிமாணங்களில் விரிந்து பரவ வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த விருப்பமும் சமூகத் தேவையின் அடிப்படையிலேயே தோன்றியிருப்பதாக உணர்கிறேன். இதற்கானப் புரிதலை உருவாக்கிப் படிப்பினை பெறுவதற்காகவே கிடைத்த விமர்சனங்களை நேர்மையாகத் தொகுத்திருக்கிறேன்.
      நான் எத்தகையவர்களை வாசகர்களாகக் கருதி எழுத்து முயற்சியில் ஈடுபடுகிறேனோ அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட விமர்சனங்களே பெரும்பகுதி. சமூகவிஞ்ஞானக் களங்களில் புதிதாக அறிமுகமாகிறவர்களுக்காக... சமூக விஞ்ஞானிகள் அமைப்பாக்க விரும்புகின்ற வெகுமக்களுக்காக... எழுத்துக்களைப் படிப்பதன் மூலமாக சிந்தனையையும் செயலையும் உணர்வுகளையும் சமூகளாவிய நிலையில்  பக்குவப்படுத்த முடியுமா என்றக் கேள்வியுடன் படிக்க முயல்கின்ற படிக்கத் தெரிந்த மக்களுக்காக... படிக்கத் தெரியாத மக்களுக்குப் பேச்சிலும் செயலிலும் சமூக அறிவை ஊட்ட முயல்கின்ற சமூக அக்கறையுடையத் தோழர்களுக்காக... சமூக அக்கறை, சமூக அறிவு, சமூகப் பாதுகாப்பு இவை மூன்றும் சங்கமித்திருக்கின்ற சமூக விஞ்ஞானிகளின் புத்துலகை நோக்கி கவனம் பெறுகின்ற சகமனிதர்களுக்காக... என இவர்களுக்காகவே நான் எழுத முயல்கிறேன்.
      நான் எழுத்து வடிவில் பேசுவது உரியவர்களின் உணர்வுகளுக்குச் சரியாகப் பயணப்படுகிறது என்பதை இவர்களின் விமர்சனங்களிலிருந்து உணரமுடிகிறது. இந்த அங்கீகாரங்கள் எனக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தருகின்றன.
      நான் எத்தகையவர்களுக்காக எழுதியிருக்கிறேனோ அவர்களிடமிருந்து விலகியிருக்கக்கூடியவர்களுக்கும், எழுத்துக்களை பரிந்துரைப்பதன் மூலமாக சமூகஅறிவை சகமக்களிடம் விரிவுபடுத்துவதில் தெளிவான வேலைத்திட்டம் இல்லாதவர்களுக்கும் எமது எழுத்தை வாசிப்பது மிகவும் சிரமமான வேலையாகவே அமையும். அவர்களுக்கு இந்த எழுத்துக்கள் கூரிய கற்களாகவும், சகிக்க முடியாதவையாகவும், புரிந்துகொள்ள இயலாததாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும், முகம்திருப்பிச்செல்ல வைப்பவையாகவும் இருக்கின்றன. இவற்றையும் கடந்து எனக்குரிய வாசகர்களென நான் கருதாத இத்தகையவர்களிலும் எமது நோக்கத்தை அங்கீகரித்து எழுத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
      சமூக மாற்றம் என்பது தன்னையும் சக மனிதர்களையும் மாற்ற முயல்வதிலிருந்துத் தொடங்குகிறது.
சமூக நெருக்கடிகளில்
மன அழுத்தங்கள் தற்கொலைகளைத் தூண்டுகின்றன...
சமூக அழுத்தங்கள் தியாகங்களைத் தூண்டுகின்றன...

      நாம் ஒவ்வொருவரும் தியாக வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ சமூகமாற்றத்தில் அவரவர் சக்திக்கு உட்பட்ட அளவிலேனும் பங்கேற்க முயல்கிறோம் என்பதாக நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நான் படிப்பினைக்காகச் செய்த விமர்சனத் தொகுப்பின் சிறிய முயற்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள முயல்கிறேன்.
      இத்தகையப் பகிர்வை சுயவிளம்பர ஆர்வத்தில் செய்யவில்லை. ஒரு வேளை இதனைச் சுயவிளம்பர முயற்சியாக கருத விரும்பினால் நான் தலையிட விரும்பவில்லை. அது உங்கள் கருத்துரிமை. பகிர்வுக்கான எமது விருப்பம் ஒன்று மட்டுமே. என் புரிதலுக்கு எட்டிய சமூகத்தேவையின் அடிப்படையில் இதனைச் செய்வது எனது சமூகக்கடமையாக உணர்கிறேன்....
அறிவன்புடன்
 
*
“அறிவெனும் பெரும் பசி” என்றக் கட்டுரையின் விமர்சனங்களிலிருந்து தொடங்கி “நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்” என்ற நூலுக்கான விமர்சனங்களுக்குச் செல்வோம்..
*
“அறிவெனும் பெரும் பசி” விமர்சனப் பதிவுகள்...
1.திரு. ------ ( பெயர் சொல்ல விரும்பவில்லை. இவர் மிகச்சிறந்த இலக்கிய ரசனையாளர், படைப்பாளி, புதுச்சேரியில் மக்களுக்கான இலக்கிய மையத்தை உருவாக்குகின்ற முயற்சியில் இருப்பவர். பெரும் பெரும் இலக்கிய ஜாம்பவான்கள் பலரிடமும் நட்பு கொண்டிருப்பவர். இலக்கியச் சுவைஞர் என்று அறிமுகம் செய்தால் மிகவும் பொருந்தும்.. திருத்தப்பட்ட பழைய வடிவிலிருந்து விமர்சித்தார்.)
      கட்டுரை சுத்தமாகப் புரியல. கேடி சிதம்பரம்னு எப்படி ஒரு சகமனிதரைத் திட்டலாம். தன்னுடைய பாத்திரம் பற்றிய விமர்சனத்தை வாசகர்களிடம் விட்டுவிடுவதுதான் நல்ல படைப்பாளருக்கான நாகரீகம். நீங்களே கேடி என்று விமர்சிக்கக் கூடாது. இந்தக் கட்டுரையில முன்னுக்குப் பின்னான முரண்பாடு நிறைய இருக்குது. மேனி அழகைச் சோகக் கண்கள் முழுங்கிவிட்டன. இந்த வரியே முரணாக இருக்கு. இந்தப் பெண்ணை அறிமுகத்திலேயே கருத்த மேனி, பாத்திரம் தேய்த்துக் காய்த்துப்போன கைகள் என்றெல்லாம் அழகில்லாதவளாகச் சித்தரித்துவிட்டு இந்த வரியை எழுதியிருப்பது பொருத்தமற்றது. கட்டுரை முழுதும் விரக்தியே வெளிப்படுகிறது. இது 1980களில் உருவான எழுத்து வடிவம். நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம் என்ற  புத்தகத்தைப் படிச்சேன். சிறுபிள்ளைத்தனமானப் புத்தகம். கதைகள் பலவும் உடன்பாடில்லாதவை. கோட்பாடுகளைத் திணிக்கிறது, கோட்பாடுகளை விளக்குறது, இதுன்னா எதுக்கு? எடுத்துக்காட்டுக் கதைகளைச் சொல்வதற்கு என்னத் தேவை இருக்கு? அதுவும் ஒரு மட்டமானக் கதை. கொஞ்சங்கூட பொறுத்தமில்லாதக் கதை. சமூகவிஞ்ஞானிகள்னா யாரு? தனிமனிதக் கருத்துநிலைப்பாட்டை நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? நான் ஏன் சமூகத்தை மாற்றனும்? யாரோ உங்க மூளையில் திணிச்சதையெல்லாம் பேசிட்டிருக்கீங்க. தனி அறையில் கண்ணை மூடிட்டுப் பேசிட்டிருக்கீங்க. இந்தக் கட்டரைய யாராவதுப் படிச்சா தலை சுத்திக் கீழே விழுந்திடுவாங்க.. தயவு செய்து கொடுத்துறாதீங்க, உங்க பெயர் கெட்டுவிடும்.. ஏன் எழுதுறீ்ங்க? யாருக்காக எழுதுறீங்க? வெறும் தலைப்புக்காக எழுதாதீங்க. நல்ல தலைப்புக் கிடைச்சுட்டா நாலு நாளு உட்கார்ந்து மடமடன்னு கட்டுரை எழுதுறத நிறுத்துங்க. நல்ல தலைப்பு ஆனால் கட்டுரை பெரிய ஏமாற்றத்தைத் தருது. உங்க கட்டுரை என் வேலையைக் கெடுத்துருச்சு. காலைல நான் ஒரு வேலையத் திட்டமிட்டு வந்தேன். ஆனால் உங்களிடம் ஒரு மணி நேரமா பேசிட்டிருக்கேன். உங்கள்ட்ட துணிச்சல், உணர்வு, சிந்தனை இருக்குது, ஆனால் வடிவம் இல்லை. நீங்க நிறைய வாசிக்கனும். வாசிப்பு போதாது. நீங்க நல்லா எழுத முடியும் புதியவன். ஆனால் இதுமாதிரி எழுதுவதை தயவு செய்து நிறுத்திருங்க.. நம்ம நல்ல இலக்கியங்களை உருவாக்குவோம்.
2இணையாளர்கள் செல்லப்பன் & கலைமணி (திருத்தப்படாத பழைய வடிவிலிருந்து விமர்சித்தார்கள்)
      காமுகன் காமுகி சொற்களைப் பயன்படுத்தியிருப்பதை வன்னையாகக் கண்டிக்கிறோம். கயவர்கள் என்ற சொல்லை மாற்ற வேண்டும். சமூக அறிவுக் கேள்விகளைச் சுருக்கலாமே... சமூகவிஞ்ஞானிகள் யார்? மற்றபடி நல்லாருக்குது. விசயமுள்ளக் கட்டுரை. பார்த்ததும் ஆர்வத்தோடு படிக்கிற கட்டுரை இல்லை. விசயம் தேடி படிக்க விரும்புறவங்களுக்கான கட்டுரை. எனக்குப் படிக்கையில் முன்பக்கம் படிச்சது பின்பக்கம் மறந்துபோயிடுது.  குமாரு படிச்சாருண்ணா புரியாமல் தலைசுத்திரும், அப்பறம் பேருக்குன்னு நல்லாருக்குண்ணு சொல்லிக் கொடுத்திருவாரு. அறிவியல் கண்ணோட்டம் என்ற வார்த்தை திடீர்னு வருது.
3.தோழர் சத்யபாலன்
      நல்லா வந்துருக்கு தோழர். வாழ்த்துக்கள். உணரும் விதமாக அமைந்திருக்கு. உங்க முயற்சி எனக்கு செ. கணேசலிங்கனுடைய குந்தவிக்குக் கடிதங்களை நினைவுபடுத்துது.
4.தோழர் சுரேஷ்
      நல்லா வந்துருக்குத் தோழர். பயன்படக்கூடியக் கட்டுரை. குழந்தைக்குச் சொல்வது போல வாசகர் எல்லோரையும் கருதிச் சொல்வது சரியாக முடியுமானு யோசிங்க.. தத்தவம் குழந்தைக்கு உரியதா? அறிவெதிர் தத்துவம் என்ற சொல் சரியானதா?
5.ஹரி கிருஷ்ணன் ME1st
      சமூகத்திற்குத் தேவையானது. படிக்கப் புரியுது. சோர்வு இல்லை. குற்ற உணர்வு ஏற்படுது. மாற்றிக்கணும்னு தோணுது. மாற்றிக்க நினைச்சாலும் மாற்றிக்க முடியாதுங்கிறமாதிரியும் தோணுது. கதைக்கு முன் அறிமுகம் தேவையில்லை. நீங்க சொல்லவருவதை உணர்வதற்குப் இது பொருத்தமானக் கதை.
6.சு. குமார் – முனைவர் பட்ட ஆய்வாளர்
      நல்ல கட்டுரை. அவசியம் தேவையானது. கதையில் 2 இடத்தில் வரியை மாற்றலாம்னு தோணுது. இந்த விசயம் கண்டிப்பாகத் தேவைனு புரியது. வழிகாட்டுறவங்க யாருண்ணு தெரிஞ்சிக்க முடியல. அவங்களைத் தெரிஞ்சுக்கனும்னு ஆர்வம் இருக்குது. இது எல்லோருக்கும் போய் சேரனும். சோர்வில்லாத மொழிநடை. 8 கேள்விகளுக்கும் விடை தெரிஞ்சுக்கனும்னு ஆர்வம் வருது. விடைகளை விளக்காமல் போயிருப்பதுதான் பலவீனம்..
7.ராஜகுமாரி – முனைவர் பட்ட ஆய்வாளர்
      ரொம்ப நல்லா எழுதுறீங்க. நல்ல எதிர் காலம் உங்களுக்கு உறுதி. வார்த்தைகள் புதுசாக இருக்கு. தேவையான எழுத்துமுறை. சமூக விஞ்ஞானிகளைப்பற்றியும் உலகப்பார்வை போன்றவை பற்றியும் விளக்கி எழுதிருக்கலாம்னு தோணுது. கேள்விகள் அதிகமாகத் தெரியுது. முதல் பக்கம் மாற்றக் கூடாது. 2ம் பக்கக் கேள்விகளைச் சாராம்சமாகச் சுருக்கி அமைக்கலாம். மடையர்கள்னு திட்டும்போது நானும் ஒரு சக மனிதர் என்பதால் எனக்குக் கஷ்டமாக இருந்துச்சு. அதை மாற்றிக்கனும்னு தோணுது.
8.ரீகன் (page டிசைனர்)
      ரொம்பச் சரியா இருக்கு. நல்லா போகுது. கேள்வி நெறயா கேக்குறீங்க. பதில் விளக்கினால் எங்களுக்கும் பயனுடையதாக இருக்கும். தேவையை உணர்த்துற எழுத்து..
9. தோழர் ராம்குமார்
      வாழ்த்துக்கள் தோழர். நேரில் விவாதிப்போம்..
10.தோழர் காமராசர்
      கட்டுரை நல்லா வந்துருக்கு. கதை ரொம்ப மொக்கையா இருக்குது. மோசமான கதை என்று உணர்கிறேன். ஒரு போர்னோகிராப்பி கதையை எடுத்துப் பயன்படுத்தியுள்ளீர்கள். இதற்குப் பதிலாக ஒரு நாட்டுப்புறக் கதையையோ அல்லது எழுத்தாளளர்களின் கதையையோ பயன்படுத்தியிருக்கலாம்.
11. அமுரா ராஜவேலு (B.A.english)
      1st ரொம்ப அருமையாக இருக்குண்ணா. 3 இடத்தில் தடையாகுது. சரிபடுத்துங்கண்ணா. மனிதன் இயற்கையைப் பகைத்துத் தோன்றியுள்ளான், நீங்கள் எப்படி இல்லைனு சொல்லலாம். பல இடங்களில் அருமையானதாக தேர்ந்த மொழிநடை அமைந்திருக்கு. இந்தக் கட்டுரையைப் படிக்கயில எனக்கு “கடவுள் என்பது என்ன” அஷ்வகோஸ் புத்தகம் படிச்சது நினைவுக்கு வருது.
      2nd அண்ணா இந்தக் கட்டுரைய 2வது தடவ படிக்கயில ரொம்ப சந்தோசமாக இருக்குண்ணா. நீங்க எழுதுனதிலேயே ரொம்ப எஸ்ட்ரீமா வந்துருக்குண்ணா. ரொம்ப முக்கியமானக் கட்டுரை. எல்லாருக்கும் பரப்பனும். 1st படிச்சப்ப இந்த அளவு நான் நினைக்கல்ல. நல்லாருக்குதுண்ணா. மொழிநடையை மட்டுமே கவனிச்சிட்டுப் போயிட்டேன். விசயம் புரிஞ்சது, ஆனால் முக்கியத்துவத்தை இப்பதான் உணருகிறேன். நான் டீவி பார்க்கும் போது கிரிக்கெட் படம் எதுப்பார்த்தாலும் உங்க கட்டுரை நினைவுக்கு வந்து டிஸ்டர்ப் பண்ணுதுண்ணா. நான் முடிஞ்சவரை ஜெராக்ஸ் போட்டு பரப்புவேன். ஒருசில வார்த்தைகளை இன்னும் சரி செய்ய முடியும்னு தோணுது. அதாவது, சமூக அறிவுன்னா இந்த எட்டு மட்டுந்தான் என்பதுபோல ஏன் சொல்லனும். இதத்தாண்டி அடுத்து கண்டுபிடிக்கிறதுக்கு வழிவிடுவதுபோல வார்த்தைகளை அமைக்கலாமேன்னு தோணுது.. ரொம்ப எஸ்ட்ரீம்மான கட்டுரைண்ணா.. எனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல...
      3rd பல வரிகள் மிக அழகாக அமைந்திருக்கு. திரும்பவும் படித்துப் பார்க்கத் தூண்டுகிறது. திரும்பத்திரும்பப் படிச்சப் பிறகே அடுத்துப் படிக்கிறேன். தொடர்ந்து படிச்சு முடிக்கணும்னு நினைக்கிற மாதிரி வரிகள் உற்சாகமாக அமைந்திருக்கு. கதையைப் பிறகுச் சொல்வேன் என்ற அணுகுமுறையே நல்லாருக்குண்ணா.. கொல்லிக்கட்டைகளா வாழ்க்கை... இருட்டு மடிந்து பேரொளி பெருகிற்று...இந்தப் பத்திகள் என்னை திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டின. நமது சமூகஅறிவின் தேடல்கள் தகவலறிவுக் களஞ்சியங்களைத் தாண்டுவதே இல்லை... காலங்காலமாக அறிவெதிர் தத்துவத்தின் ஆதிக்கத்திலேயே வாழ்ந்து பழகியவர்கள் நாம்... நாம் எவற்றெயெல்லாம் பார்க்க வேண்டும்... சமூகம் ஒரு வீட்டின் அமைப்பு போல என்று எடுத்துக்காட்டி விளக்கிட்டுப்போற விதம்... இன்று மணலும் இல்லை நீரும் இல்லை... நம் கண்களுக்கு வீடுகள் தெரிகின்றன வீட்டின் அடித்தளங்கள் தெரிவதில்லை... உற்பத்திமுறை பற்றி விளக்கும்போது இந்தியச் சூழலில் சாதியக் குலத்தொழில் பற்றிய அறிவும் இவற்றில் அடங்கும்னு குறிப்பிட்டுப்போறது... எல்லாமே அருமையாக இருக்குண்ணா. பூவைப்போலன்னு சொல்லாம வெறும் குழந்தையாகவே சொல்றது சரியாக இருக்கும்னு தோணுது. கீழ்வீடு என்ற வார்த்தைக்குப் பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்த முடியுமான்னு பாருங்கண்ணா..  “AIM என்ற சமூகவிஞ்ஞான அமைப்பில்..” என்ற பத்தியை “நம் கவனங்கள் சமூக விஞ்ஞானிகளை நோக்கி அமையட்டும்..” என்ற பத்திக்கு முன்னதாகச் சேர்த்தால் ரொம்பப் பொருத்தமாக இருக்கும்ண்ணா. புகழ்றதா நினைக்காதீங்கண்ணா.. நான் உங்களுக்காகச் சொல்லல்ல. உங்க எழுத்தைப்பற்றிப் பேசும்போது உண்மையைச் சொல்லியாகனும். உங்க எழுத்தைப்பற்றி சொல்றேண்ணா.. மிகப் பெரிய விசயங்களை மிகச் சாதாரணமாக அழகாகச் சொல்றது அனுபவம் முத்திய பெரிய எழுத்தாளர்களுக்குத்தான் வரும். அவர்களுக்கே ஒரு 70 சதவிகிதம்தான் சாத்தியம். ஆனால் உங்களுக்கு இப்பவே 20சதவிகிதம் வந்துருச்சுண்ணா. எனக்குத் தெரிஞ்சு நான் வாசிச்சதிலேயே உங்கள்ட்டதான் அதிகம் உணர்ந்திருக்கிறேன். உள்ளம் சுடும் கட்டுரையிலும், உன்னைக் காதலிக்கக் காத்திருக்கிறேன் போன்றக் கவிதையிலும் ரொம்பவும் உணர முடிஞ்சது. புதுமையாகச் சொல்லிட்டிருக்கீங்கண்ணா. கடவுள் என்பது என்ன? என்ற புத்தகம் ரொம்பப் பிடிச்சதுக்குக் காரணம் அவர் சொல்லிட்டுப்போற முறைதான். ஆனால் அதுலகூட புதுமையாகச் சொல்றதா எனக்கு எதுவும் படல. ஏற்கனவே சொல்லிட்டிருக்கிறத அவரும் சொல்றாரு. சோர்வு தட்டாத நடையில் எளிமையாகச் சொல்லிருக்காரு. ஆனால் உங்க எழுத்துல புதுமைன்னு சொல்றதுக்கும் நிறைய இருக்குதுண்ணா....
12. தேவி – முனைவர் பட்ட ஆய்வாளர்
      கட்டுரைய முதல் பகுதி 2ம் பகுதின்னு பிரிச்சு பேசலாம் சிவா. முதல் பகுதில கதை பல விசயங்களுக்குப் பொருந்தக் கூடியதாக இருக்குது. ரொம்ப சரியாகச் சொல்லிருக்கீங்க. 2ம் பகுதிய நான் இன்னும் சரியாக புரிஞ்சுக்க வேண்டியதிருக்கு. பொருளுற்பத்தி அல்லாதது எல்லாம் எப்படி மேல்கட்டுமானம்னு சொல்ல முடியும்? மேல் கட்டுமானத்துலயும் பொருள் உற்ப்பத்தி இருக்குதே.  நான் இந்தக் கட்டுரையை இரண்டு தடவை படிச்சுட்டேன். நேரில் பேசும்போது 2ம் பகுதி பற்றிக் கூடுதலாகவும் விளக்கமாகவும் எனக்குச் சொல்லுங்க சிவா...
13. திரு. இலக்கியன் ஆறுமுகம்  
      இந்த மாதிரிக் கட்டுரையைப் படிச்ச அனுபவம் இல்லாததால பாண்டியன் பேசிருப்பாரு. இந்தக் கட்டுரை நல்லா வந்திருக்கு. முன் பக்கம் கொஞ்சம் குறைச்சுருக்கலாம். திரைப்படம், மஞ்சள் பத்திரிக்கை படித்தல் பற்றியதாகப் பேச்சை நீட்டிருக்க வேண்டாம். பார்வையைப் பலமடங்கு இழந்துவிட்டோம் என்பது ரொம்பச்சரி. உள்ளத்தியல் என்ற வார்த்தையே எனக்குப் புதுசா இருக்குது. நல்லா வந்திருக்கு..
14. புதிய விடியல் (சிற்றிதழ்)
      Thanks for sending an essay. but It Too Long. So Please Summarize It with in 300 words. that is very useful to read and print.
15. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (சூரியதீபன் என்ற பெயரில் நன்கு அறியப்பட்டவர்)
      ஊடாட்டத்தில் உங்க கட்டுரை ரொம்பவே நல்லா வந்திருக்குது. தத்துவார்த்த விசயங்கள் கோட்பாடுகள் பற்றி பலகாலமாகவே நான் படிக்கிறதே இல்ல. கலை இலக்கியத்துலதான ஆர்வமாக செயல்படுகிறேன்.  இந்தக் கட்டுரையை ரொம்ப ஆர்வமாகப் படிக்க முடிஞ்சது. மேல்கட்டுமானம் அடிக்கட்டுமானம் பற்றி ரொம்ப எளிமையாகவும் நல்லாவும் சொல்லிருக்கீங்க. தத்தவத்தை எப்படி மண்ணுக்கேற்றபடி புதிய சொற்களைப் பயன்படுத்தி புதிய முறையில் சொல்றதுண்ணு இத படிக்கயில உணர முடிஞ்சது. இந்தமாதிரி இதற்கு முன்பு யாரும் விளக்க முயற்சிக்கலன்னு தோணுது. எனக்கு தெரிஞ்சு நீங்கதான் செய்திருக்கீங்க. இது ரொம்பவும் புதிய முயற்சி. ஊடகங்கள் எல்லாம் எப்படி மூளையில் தகவல்களைத் திணிக்கின்றன. எதைப்பற்றியும் யோசிக் விடாமல் செய்கின்றன. அறிவை கூர்மைபடுத்துவதற்குப் பதிலாக மழுங்கச் செய்கின்றன. இந்த உண்மைகளை ரொம்பவே நல்லா உணர்த்திருக்கீங்க. நாளைய தலைமுறைகளுக்காக இன்றே முளைத்திருக்கின்ற அத்தனை அநீதிகளும் வென்றுவிடும் என்பது மிக சரியான வரி. 10 பக்கம் இருக்குது. கொஞ்சம் சுருக்க முடியுமான்னு பார்க்கலாம். பெரிய புத்தகங்கள் வெளிவருவதைவிட சிறு வெளியீடுகள்தான் இன்று தேவை. சிறுவெளியீடாகக் கொண்டு வர முயற்சி செய்ங்க தோழர்...
16. தோழர் மனுவேல்
      அறிவெனும் பெரும் பசி படிச்சேன்டா. பண்பாடு பற்றி தவறான புரிதலிலிருந்து எழுதிருக்க. பண்பாடு மேல்கட்டுமானத்தில் மட்டும்தான் வரும். அடிக்கட்டுமானத்தில் தாக்கம் செலுத்துகிறது என்பதற்காக அதை அடிக்கட்டுமானமாகப் புரிந்துகொள்ள முடியாது.
17.ஐ.ரவிச்சந்திரன் (திண்டிவனம் விவசாயி, புதுச்சேரி பல்கலைக்கழக காவலாளி)
      தலைப்பே  ரொம்ப அழகா இருக்குது. சமூகஅறிவு வீட்டைக் கற்பனை செய்யும்போது இப்ப கட்டிட்டிருக்காங்களே ஹாஸ்டல் கட்டிடம் அதுதான் நினைவுக்கு வந்தது. வாங்க அந்தக் கட்டிடத்தப் பார்வையிட்டுக்கிட்டு பேசலாம். என் சந்தோசத்த எப்படி சொல்றதுன்னு தெரியல. இதை இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடனும். எல்லோரும் படிச்சுட்டாங்கன்னா போதும். தெரிஞ்சுருச்சுன்னா உண்மையிலேயே பெரிய விளைவுகள் உருவாகும்.

“நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்” விமர்சனப் பதிவுகள்...
1.இணையாளர்கள் செல்லப்பன் & கலைமணி
      படிக்கயில பல இடங்களில் நம்ம சிவாவால இப்படியும் எழுத முடியுமான்னு தோணுச்சு. கதையாகப் படிக்கிறதால எல்லோருக்கும் புரியும். கடைசியில அம்மாவுக்குக் கடிதம் ரொம்ப சூப்பர். இன்னைக்கு உள்ள நிலமையில எல்லோரும் படிக்க வேண்டியது. படிச்சா உணராம இருக்கவே முடியாது. ஒவ்வொரு கட்டுரையும் முக்கியமானது. 5ரூ, 10ரூ புத்தகம் மாதிரி வெளியிடலாமே.

2.தோழர் அழகுதேவி
      நான் அமைப்புக்குள் வந்ததும் குடும்பத்த சமாளிக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். நான்  எங்க அம்மாகிட்ட எதையெல்லாம் பேச விரும்பினேனோ அத்தனையும் இந்தப் புத்தகத்துல இருக்குது. நம்ம சரியா யோசிக்கிறோம்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. எழுத்துமுறை, சொல்றவிதம், கதை சொல்றது மூலமாகப் புரிய வைக்கிறது எல்லாம் அருமையா இருந்துச்சுய்யா...கவிதை கட்டுரை எல்லாம் மொத்தமா சேந்திருக்கிறதுதான் புத்தகத்துடைய பலமே. ஒவ்வொரு கட்டுரையும் ரொம்ப முக்கியமானது. புத்தகம் முழுதையும் எல்லோரையும் படிக்க வைக்கணும். நாங்க எங்க தோழர்களோட கண்டிப்பா கலந்துரையாடுவோம்யா..
3.தோழர் சிவராம்
      நல்லா வந்துருக்குது. சொல்ல வந்தத சரியா சொல்லி முடிக்கிறீங்க. எழுத்து உங்களுக்கு நல்ல விதமாக கைவந்துருக்கு. சிறப்பு. தொடர்ந்து எழுதுங்க. உங்க எழுத்து ஆளுமையை விட்டுறாதீங்க. மதுரை வட்டாரத்தன்மை உங்களுக்கு ஏன் வரலன்னு புரியல. அது வந்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும். எல்லாத்தையும் ஒரே புத்தகத்துல சொல்லி முடிச்சுறனும்னு வேகம் காட்டிருக்கீங்க. அது தேவையில்ல. தனியா ஒரு கவிதை புத்தகம் வெளியிடுங்க. பேசப்பட வேண்டிய பல புத்தகங்கள் நிறைய கவனப்படுத்தப்படாமலும் பேசப்படாமலும் மறக்கடிக்கப்பட்டிருக்கு. அதுல இந்தப் புத்தகமும் சேர்ந்திடக் கூடாது. புத்தகத்தைப்பற்றி உடனடியாக அறிமுகக்கூட்டம் வாசகர் வட்டம்னு ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லுங்க தோழர்...
4.தோழர் காமராசர்
      புத்தகம் நல்லாதான் வந்திருக்குது. கவிதைகளைத் தேவையில்லாமல் சேர்த்திருக்கீங்க...


5. எழுத்தாளர் போப்பு
      நேர்மையான விமர்சனம்தான் சொல்வேன். மொழிநடை பிரச்சனையாக இருக்குது. முதல்முறை படிச்சப்ப ரொம்ப அதிருப்தியுடன் பாண்டிக்கிட்ட பேசினேன். மதிப்புரை எழுதுறதுக்காக 2வது முறை படிச்சேன். அப்ப எந்த அதிருப்தியும் எனக்குக் கொஞ்சங்கூட வரல. ஏன்னு எனக்கே புரியல. ஊன்றிப் படிச்சதால உணர முடிஞ்சது. ஆனால் சாதாரணமாகப் படிச்சா யாரலையும் படிக்க முடியாது. ஆர்வத்துடன் கவர்ந்து செல்லும் தன்மை இல்லை. சமூகவிஞ்ஞானம் ரொம்ப முக்கியமானத் துறை. அதுபற்றி எழுதிட உங்களுக்கு வயதும் அனுபவமும் போதாது. அதுக்காக எழுத வேண்டாம்னு சொல்லல. தொடர்ந்து எழுதுங்க. எழுத எழுதத்தான் வரும். பின்னாலிருந்தக் கட்டுரைகள் வாழ்வியல் அனுபவங்களுடன் பொருந்தி வருவதற்கான முயற்சியுடன் அமைந்திருக்கு. நல்ல முயற்சி. போதாமையை உணர்த்துகின்ற முயற்சிதான். நல்ல துணிச்சலான விசயம். தொடர்ந்து எழுதுங்க. முதல்ல நீங்க அதிகமாக வாசிக்கனும். உங்க இந்த எழுத்து யாருக்கும் ஆர்வமான முறையில் போகாது. தேவையில்லாமல் புதிய சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. புள்ளி, கமா, வார்த்தை பயன்பாடுபற்றி இறுதித் திருத்தத்திற்காக இன்னும் இன்னும் சரியாக்கணும் என்ற முயற்சி வேண்டும். சொல்றதுக்கு விசயம் இருந்தாலும் சொல்லும் முறை மிகவும் முக்கியமானது. அதிகம் படிச்சால் இது நமக்குப் படிந்துவிடும். அதனால் படிங்க. வாசிப்பு போதாது. உங்க புக் விற்பனையாகுறது சிரமம். பதிப்பகத்திடம் விசாரிச்சுப் பாருங்க. நான் புத்தக மதிப்புரையை நேர்மையாகத்தான் எழுதிருக்கேன். ஆனால் நம்ம பேசியவற்றைக் குறிப்பிடாமல் நேர்மறையானவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். 

புதியவன் எடுத்துரைக்கும் சமூகவிஞ்ஞானம் - எழுத்தாளர் போப்பு –


6. சு. குமார் – முனைவர் பட்ட ஆய்வாளர்
      புத்தகம் ரொம்ப நல்லா வந்திருக்கு சிவா. புதிய முயற்சி. இது மாதிரியான வேற எந்தப் புத்தகமும் எனக்குத் தெரியல. ஒவ்வொரு விசயமும் எல்லாருக்கிட்டயும் போய் சேரும். ஆர்வமாகப் போகுது. தனித்தனிக் கட்டுரைய சின்ன புத்தகமாக வெளியிட்டா எல்லாரிடமும் எளிமையா சேரும். கண்டிப்பாப் படிச்சுப்பார்த்து யோசிப்பாங்க...
 7.ஆ.தே. செந்தில்குமார் (ஆசிரியர்)
      சிவா உன் புத்தகத்தை இரண்டு சாருக்குப் படிக்கக் கொடுத்தேன். ஒருத்தரு பொதுவாகப் புத்தகம் படிக்கிறவரு. இன்னொருத்தரு பொழுதுபோக்குக்காகப் புத்தகம் படிப்பாரு. 2வது சார் படிக்க அரம்பிச்சுட்டுப் படிக்கவே முடியலன்னு கொடுத்திட்டாரு. 1வது சார் முழுசாப் படிச்சிட்டு ரொம்பப் பாராட்டினாரு. பொழுதுபோக்குக்காகப் படிக்கிற சாதாரணப் புத்தகம் இல்ல. உண்மையிலேயே அக்கறையோடு படிக்கிறவங்களை இந்தப் புத்தகம் ரொம்பவும் கவர்ந்திடும். சமூக உணர்வோடப் படிக்கிறவங்களுக்கு இது ரொம்பவும் முக்கியமானப் புத்தகம்.
8.பன்னீர் (விகடன் பிரசுரத்தின் பணியாளர்)
      இந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கவே முடியல சிவா. புதிய நடை. இப்படியொரு நடையில் நான் படிச்சதே இல்ல. புதியவன் என்ற பெயர் ரொம்ப ரொம்பப் பொருத்தமா அமைந்திருக்கு. கடவுள் பற்றி உங்க கதையைப் படிச்சேன். உடனே உங்கள்ட்ட பேசனும்னு போன் செய்தேன். நானும் கடவுளைக் கும்பிட மாட்டேன். ஆனால் இந்து மதத்துல்ல உள்ள அறிவியலைப்பற்றி பேசனும்னு நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தை என் நண்பர் எதார்த்தமாகப் பார்த்தார்.  காரணமானவர்களைப் படிச்சதிலேயே உங்க மேலே பெரிய மதிப்பு ஏற்பட்டுருச்சு. உங்களை ரொம்பவும் பாராட்டுரார். நீங்க என் நண்பர்னு சொன்னேன். வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னார். புத்தகத்தை எடுத்திட்டுப்போயி படிக்க ஆர்வமாக இருக்கார். நான் 60 பக்கம் முடிச்சிருக்கேன். முழுசாக முடிச்சிட்டு நேரில் வந்து சந்திப்பேன்...
9.கந்தசாமி ஐம்புலம் - முனைவர் பட்ட ஆய்வாளர்
      இந்தப் புத்தகம் சாதாரணமானதாகத் தெரியல. ஏதோ விருதுக்குத் தேர்வாகக் கூடிய புத்தகம் இது. நல்ல ஆற்றொழுக்கான நடை. எல்லாவற்றையும் நாம் இப்படியொரு நடையில் பேசினால்தான் சரியாக இருக்கும்னு தோணுது. இந்தமுறை ரெண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கு. ரெண்டையும் முழுசாகப் படிச்சுட்டேன். 1வது தமிழ்ஒளியைப் பற்றிய ஒரு புத்தகம். ரொம்பவும் சோர்வையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கு. 2வது உங்கப் புத்தகம். ரொம்பவும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கு. உற்சாகத்தையும் மனநிறைவையும் தந்திருக்கு. இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் அவசியம் எழுதனும்னு நினைக்கிறேன்...
10. உதயா – இளமுனைவர் பட்ட ஆய்வாளர்
      எனக்கு ஆச்சரியமாக இருக்குது. ரொம்ப நல்ல புத்தகம் எழுதிருக்கீங்க. கவிதை எல்லாமே ரொம்ப அருமையா இருக்குது. உன்னைக் காதலிக்கக் காத்திருக்கிறேன் கவிதை படிக்க படிக்க அருமையாக இருக்குது. இப்படியொரு கவிதையைப் படிச்சதே இல்ல. அறிவியலை கதை சொல்லி புரிய வைக்கிறீங்க. இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது. நான் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கிறேன். எப்படி இப்படியெல்லாம் முடிஞ்சது!
11.தோழர் ராம்குமார்
      ரொம்ப நல்லா வந்திருக்குத் தோழர். தனிச் சிறப்பு என்னதுன்னா சமூக விஞ்ஞானங்கிறது முழுக்க ஒரு இலக்கியப் புத்தகமாகவே வடிவமைந்திருக்கிறது.. நீங்க தொடர்ந்து நிறையா எழுதணும் தோழர்...
12.சந்தனக்குமார் (axis bank staff)
      புத்தகம் ரொம்ப நல்லாருக்குது சிவா. 1st  மூன்று பக்கம்தான் கொஞ்சம் புரியாதமாதிரி  இருந்தது. ஆனால் அடுத்து எந்தப் பக்கமும் சோர்வே இல்லாமல் நல்லா போகுது சிவா.  வீட்டுக்காரியின் வீக்கங்களில் தேங்கியிருந்தது அந்த வேதனை... அந்த வரியை திரும்பத் திரும்பப் படிச்சேன் சிவா. ரொம்ப அருமையான வரி. இது மாதிரி கவரக்கூடிய வரிகள் நிறைய இருக்கு சிவா...
13.திரு.மு.இளங்கோ (பேராசிரியர்)
      புத்தகம் முழுசாகப் படிச்சேன். ரொம்ப நல்லா வந்திருக்கு. ஆழமான விசயங்கள் எல்லாம் பேசிருக்கீங்க. இயக்க அனுபவங்கள் இல்லாமல் எழுதியிருக்கவே முடியாது. இணையதளங்களிலும் பார்த்தேன். சரளமாகக் கவிதைகள் வாசிக்கிறீங்க. வாழ்த்துக்கள்...
14. குணாண்ணா (காவல்துறை பணியாளர்)
      உன்னை மாதிரி எழுதனும்னு அண்ணனுக்கு ஆசைடா. நான் தொடர்ந்து முயற்சி செய்வேன். நீதான் எனக்குக் கத்துக்கொடுக்கனும். உன் புத்தகத்த எல்லா விசேசங்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். படிச்ச நண்பர்கள் எல்லோரும் உன்னை ரொம்பவும் பாராட்டுறாங்க. புதியவன் இன்னும் நிறையா எழுதனும் Okva? உன் கவிதைகள் எல்லாம் ரொம்ப அருமையாக இருந்தது. திரும்பத் திரும்பப் படிச்சேன். எல்லோரும் காதல் கவிதை எழுதுவாங்க. உன்ன மாதிரி எழுதுனதா யாரையும் பார்த்ததில்லை. காதலையும் சமூகஉணர்வோடு எனக்குத் தெரிஞ்சு நீதான் எழுதியிருக்க. வேற யாராவது எழுதியிருந்தாலும் உன்னளவுக்கு எழுதியிருக்கமாட்டாங்கன்னுதான் தோணுது. காதல் கவிதை ரொம்ப சூப்பர். காதலியோட நீ பழகுறதா செஞ்சக் கற்பனைகள் ரொம்ப அழகா இருக்கு. உண்மையாவதற்கு அண்ணன் வாழ்த்துறேன். கல்வியைக் கிண்டல் பண்ணிருக்கிற கவிதை, பறவைக்கு பறக்கவும் பறக்காமலிருக்கவும் உரிமையிருக்குது அதுமாதிரிதான் ஓட்டுரிமையும்னு எழுதிருக்கிற கவிதை எல்லாமே சூப்பர்டா.. நானும் தொடர்ச்சியா எழுதுறேன். உன் அளவுக்கு நானும் சீக்கிரம் எழுதணும்டா தம்பி....
15. திரு.ஜெனார்த்தன் (PILC காசாளர்)
      புத்தகம் ரொம்ப அருமையாக வந்திருக்கு சிவா. வீட்லயும் படிச்சாங்க. நான் முடிச்சிட்டு  நண்பருடைய நூலகத்துக்குக் கொடுத்தேன்.  அவரும் படிச்சுட்டு ரொம்பவும் பாராட்டுனாரு. புத்தகம் பற்றி எழுதித் தருவதாகச் சொன்னாரு. நல்ல சிந்தனை. இது தொடர்பாக எந்த உதவினாலும் கேளுங்க சிவா. செய்திருவேன்.
16.தோழர் சேகர்
      நல்ல முயற்சி. அளவு மாற்றத்துக்கு மதிப்பெண் என்பது பொருத்தம் இல்லாத எடுத்துக்காட்டாக இருக்கிறது.

17.பிரவின் 9th (மதுரை மீனாட்சி மெட்சிக்குலேசன் பள்ளி)
      அண்ணா உங்கப் புத்தகத்தை எங்க சாரும் மேடமும் படிச்சுப் பாத்துட்டு ரொம்பவும் பாராட்டுனாங்க. உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லச் சொன்னாங்க. எங்க பிரேயர்ல 2 நாள் உங்க கவிதைய வாசிச்சாங்க.  (1.ஆங்கில சோறு போட்டு... 2.பறவையைப் பார்த்து அதிகாரமாகச் சொன்னது அடைமழை...)
18.தீனா 12th
      உங்க ஜெராக்ஸ் எல்லாம் படிச்சேண்ணா. ரொம்ப நல்லாருந்துச்சு. முழுக்க முழுக்க சமூக விழிப்புணர்வோட இருக்குது. இளைஞர்கள் எல்லாரும் அவசியம் படிக்க வேண்டியதாக உங்கள் எழுத்து இருக்குண்ணா. நல்லா எழுதுறீங்கண்ணா.
19.வினோத் (JDS பால்டெக்னிக் ஸ்கூல்)
      அண்ணா உங்க புக் ரொம்ப நல்லாருக்குண்ணு சொல்றாங்கண்ணா. எங்க ஸ்கூல்ல பிரதாப் சார் படிச்சுட்டு ரொம்பவும் புகழ்றாரு.  2 நாளா உங்க புக்க வச்சுதான் class fullaa ஓட்டிக்கிட்டு இருக்காராம். நான் class போகாம லீவு போட்டதால மிஸ் பண்ணிட்டேன். பசங்க எல்லாரும் சொன்னாங்க. என்னடா புத்தகம் கொடுத்து சார ஐஸ் வக்கிரியாடானு கேக்குறானுங்கண்ணா...
20.புவணாக்கா (புரொபொசனல் கொரியர் - லாஸ்பேட்டை)
      உங்க எழுத்து ரொம்ப புதுசா இருக்கு. ரொம்ப நல்லாருந்தது. சுதாகர் சார்க்கு தமிழ்ப் படிக்கத் தெரியாது. காதல் செய்ய விரும்பு... கட்டுரையப் படிச்சிட்டிருந்தேன். சத்தமாப் படிக்கச் சொல்லி அவரும் கேட்டாரு. படிச்சதும் உங்கள ரொம்பவும் பாராட்டினாரு. உண்மைய அப்படியே எழுதிருக்காருல.! நல்லா எழுதிருக்காரு! உங்க புக் வந்ததும் 10 copies வாங்கி எல்லோருக்கும் gift கொடுக்கணும்னு சொன்னாரு. உங்க புக் வந்ததும் எனக்குக் கொடுங்க. நான் வாங்கனும். உங்க புக் எப்படி வரும்னு எனக்கு இப்பவே தெரியுது. கவிதை கட்டுரை (ஜெராக்ஸ் வடிவில்) எல்லாமே சூப்பர்...
21.சாதிக் (WPTC மாணவி)
      உங்க writing style (ஜெராக்ஸ் வடிவில்) ரொம்பவும் நல்லாருக்குதுண்ணா..
22.ராஜேந்திரன் என்ற முதியவர் (புத்தகப் பூங்கா என்ற புத்தகக்கடையில் மேலோட்டமாகத் திருப்பிப் பார்த்துவிட்டுப் பேசியவை)
      இந்தப் புத்தகத்துல ஆசிரியர் தன்னோட ஆதங்கத்தையெல்லாம் கொட்டி வச்சிருக்காரு சார். முதல்ல இப்படி எழுதுறதுனால எதுவும் சரியாகிவிடாது. அரசு சரியாகச் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தனும். அதுக்குச் சரியானத் தலைவரு உருவாகனும். நம்ம இந்து மதம் ரொம்பச் சரியானது. சாதிகள் எல்லாம் ஒழியனும். சாதிச்சான்று முறையே இருக்கக் கூடாது. பசங்களுக்குக் கல்யாணம் நடத்த முடியல. இன்னும் 20, 50 வருசத்துல சாதிகள் அழிஞ்சிடும். வாழ்க்கை ரொம்ப மோசமாகப் போகுது. நாங்கன்னா நொந்து போயிருக்கோம்...
23.ராம்சந்திரன் (ஊடாட்டம் ஆய்வுக்குழு)
      தோழர் ஒரு தகவல் சொல்லனும். உங்க புத்தகத்தைப் பிரதீப்னு ஒரு தம்பிக்கு படிக்கக் கொடுத்தேன். முழுசாகப் படிச்சிட்டு ரொம்பவும் சந்தோசப்படுறான். உங்க புத்தகம் அவனை ரொம்பவும் இம்பிரஸ் பண்ணிடுச்சு. என்கிட்ட சொல்லிட்டிருக்கிறான். “நீங்களும் பொருளாதார வல்லுனர் ஆகலாம்..” அப்படின்னு புத்தகம் எழுதலாம்னு சொல்லிட்டிருக்கான். உங்க போன் நம்பர் வாங்கிருக்கிறான். உங்கள்ட்ட பேச சொல்றேன் தோழர்.
24.எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை
      உங்கப் புத்தகத்துல பிரதிபலிப்புக் கோட்பாடு பற்றித் தவறாக இருக்கு. அத சரிபடுத்தனும். நல்லா எழுதியிருக்கீங்க. எளிமையா இருக்குது. உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்குது. படிக்கும்போது பல இடங்களில் நான் ரசிச்சு ரசிச்சு சிரிச்சேன். cpi, cpm யாரையும் திட்டாமல் நாசுக்காப் பேசிட்டுப்போறப் பண்பு ரொம்ப நல்லாருக்குது. நான் ரொம்பவும் ரசிச்சேன்.
25. அமுரா ராஜவேலு (B.A.english)
      கதை சொல்றதாலேயே நினைவில் நிக்குதுங்கண்ணா. ரொம்பச் சரியாகவும் நல்லாகவும் இருக்குது. கடைசில உங்க அம்மாவுக்குக் கடிதம்ன்னா Chanceசே இல்லண்ணா! கண்டிப்பாக படிக்கிறவங்கள மாத்தும். கவிதைகள் எல்லாம் ரொம்ப அருமையாக இருக்குதுண்ணா. கவிதை கட்டுரை கதை எல்லாம் ஒரே புத்தகமா இருக்கிறது புதுமையா இருக்குண்ணா. நல்லாயிருக்குது. என் நண்பர் சொன்னாரு கவிதைகளைத் தனிப் புத்தகமாகவே போட்டிருக்கலாமேன்னார். எனக்கும் சரிதான்னு பட்டுச்சு. இதுவரையும் புத்தக வடிவங்கள் அப்படித்தான் வந்திருக்குது. ஆனால் நீங்க புதுசா ஒரு முறையைச் செய்து பார்த்திருக்கீங்க. இதுவும் நல்லாத்தானே இருக்குது. உள்ளம் சுடும் கட்டுரையை யாரு படிச்சாலும் நிச்சயம் சுடும். காதல் செய்ய விரும்பு படிக்கயில் உள்ளம் சுடும் அளவுக்கு வரலையோன்னு தோணுது. ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியான சின்னப் புத்தகமாக வந்தால் (10ரூ, 20ரூ வடிவில்) ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். எல்லாரும் எடுத்துப் படிப்பாங்க. எல்லாரிடமும் சேர்க்க முடியும். அவசியம் வெளிவரணும்ண்ணா..
26. சரண்யா (பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு குடும்பத்திற்குள் முடங்கியுள்ள பெண்)
      உங்க புத்தகத்தைப் படிச்சுட்டு கொடுத்திட்டேன். ரெண்டே நாளில் முடிஞ்சது. செமயா இருக்குது. முழுசும் நீங்களே எழுதியதா! என்னால் நம்பவே முடியல. சோர்வு கொஞ்சங்கூட இல்ல. ரொம்பவும் இன்ட்டரஸ்ட்டா போகுது. சின்னச்சின்ன கதை சொல்றதால அருமையா புரிஞ்சுக்க முடியுது. படிச்சதும் நமக்கே நெறயா சொல்லத் தோணுது. சொந்தமா வாங்கிறனும்னு நெனச்சுருக்கேன். அந்தஸ்த்து, அதிகாரம்னு இருக்கிறவங்க இத உடனே ஏத்துக்க மாட்டாங்க. நீங்க நெறயா எதிர்ப்ப சந்திச்சிருப்பீங்கன்னு தோணுது. நீங்க தொடர்ந்து நெறயா புத்தகம் எழுதணும்...
27.ராஜாராம் (செந்தனல் கலைக்குழு பொறுப்பாளர்)
      இந்தப் புத்தகம் ரொம்ப மொக்கையா இருக்குது.
28.ஐ.ரவிச்சந்திரன் (திண்டிவனம் விவசாயி, புதுச்சேரி பல்கலைக்கழக காவலாளி) ph- 9159606441
      நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம் புதியவனுக்கு வாழ்த்துக்கள். நான் படித்த புத்தகங்களில் என் மனதைக் கவர்ந்த புத்தகம் இது. உழைப்பின் நேர்மை, வாழ்வின் உண்மை, எதிர்கால நடைமுறை இவற்றை எளிய மக்களுக்கும் அழகாக உணர்த்துகிறது. எல்லோரும் அவசியம் படியுங்கள். படிக்க முடியாதவர்கள் மற்றவர்களை படிக்கச் சொல்லிக் கேளுங்கள். இது கதை கவிதை அழகு மட்டும் அல்ல. வாழ்க்கையின் உண்மை. இதை படித்து செயல்பட்டால் வருங்காலம் நலம் பெறுவது உறுதி.

No comments:

அதிகம் படித்தவை