எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

உங்கள் பொறுப்புள்ள பிள்ளை



உங்கள் பொறுப்புள்ள பிள்ளை
புதியவன்
(நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலிலிருந்து புதுப்பிக்கப்பட்ட வடிவம்)

அன்புள்ள அம்மாவுக்கு...
நீங்கள் பெற்றதுக்காக என் சிந்தனையும் உழைப்பும் உங்களுக்கு அடிமை கிடையாது. இது எனக்கு மட்டுமல்ல, மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பொருந்தும்.
என்னை நம் குடும்பத்தின் ஒருத்தன் என்று மட்டும் நீங்கள் கருதுகிறீர்கள். இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?  'மனித குல சமூகத்தில் நான் தனிமனிதன் மட்டுமில்லை. குடும்பத்திலும் ஒருத்தனாக இருக்கிறேன்.'
எனக்கும் பொறுப்புகள் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். குடும்பத்தில் மட்டுமல்ல. அதைவிட மனிதகுல சமூகத்தில்.
கண்ணைச் சுண்டிக்கொண்டு பைத்தியத்தைப் பார்ப்பதைப்போல பார்க்கிறீர்களா? உங்கள் பார்வை எனக்கு பழகிவிட்டது.
உங்களையும், நம் குடும்பத்தையும் தவிர்த்த ஏதோ தனியான ஒன்றல்ல, மனிதகுல சமூகம். இதை உங்களுக்கு குறிப்பிட்டுச் சொல்கிறேன். உங்களைப்போன்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் என்னைப் போன்ற பொறுப்புள்ள பிள்ளைகள் இதை உணர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
உங்களையும் உங்களைப் போன்றவர்களையும் அரசு திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. பல்லைக் கடித்துக்கொண்டு, ' லூசுத்தனமா பேசாதே, ஊரே உன்னைப் பார்த்து சிரிக்குது' என்று கத்துகிறீர்களா? கத்துவதை நீங்கள் உரிமையாக நினைக்கலாம். உரிமை மட்டுமல்ல, உங்களைப்  போன்றவர்களுக்கு வளர்ந்த குணமாகவும் இருக்கிறது. ஆனாலும்,  நீங்கள்  கத்துவதில் தற்சமயம்  நான் தலையிட முடியாது.
மனிதகுலத்தின் ஆரம்ப சமூகம், அரசு என்பதே இல்லாத பொதுவுடைமை சமூகமாக இருந்தது. மீண்டும் ஓர் அரசு இல்லாத சமூகமாக இனிப்பதற்கு, சமூக பிரச்சனைகளை உரமாக்கிக் கொண்டு, வேகமாக வேர்விட்டு, ஆரோக்கியமாக வளர்கிறது, இன்றைய சமூகமாற்றம். உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் விளங்கினாலும் விளங்காவிட்டாலும் இதுதான் சமூக விஞ்ஞானிகள் நிரூபிக்கின்ற  உண்மை. இருந்தாலும் உங்கள் புரிதலின் இன்றையத் தேவைக்காக இதைச் சொல்கிறேன்.
அரசு,அரசியல் என்பதெல்லாம் நீங்கள் நினைப்பது போல ஏதோ சில பெரியமனிதர்கள் அல்ல.
நானும் நீங்களும் நம்மைப்பற்றி யோசிக்கிறோமோ இல்லையோ, நம் அரசு யோசிக்கிறது. அரசின் நோக்கம் சரியோ தவறோ, அதன் செயல்பாடுகளில் நமது அக்கறை இருக்கிறதோ இல்லையோ, அது நம்மைப்பற்றி திட்டமிட்டுச் செயல்படுகிறது. எல்லா வகையிலும் நம் மீது அதிகாரம் செய்கிறது.
நமக்கு  தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ அரசுடன் பிண்ணிப் பிணைந்திருக்கிறோம். அதனால்தான் என்னைப் போன்றவர்கள் அரசின் மீது தங்கள் கடமையைக் காட்டுகிறார்கள்.
வீண்முயற்சி என்ற விரக்தி, எதையும் மாற்ற முடியாது என்ற மடமை, பைத்தியக்காரத்தனம் என்ற பம்மாத்து, பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி,இப்படித்தான் இருக்கனும் என்று அதிகாரம் செய்கின்ற திமிர்… இப்படி பல வடிவங்களில்  உங்களைப்  போன்றவர்கள் தட்டிப்பார்க்கிறார்கள், எங்களை… முட்டித்தள்ளுகிறோம் நாங்கள்… மனிதகுல சமூகத்திற்காக! மனிதகுல வரலாற்றில் பொறுப்புள்ள மனிதர்களின் வேலை இப்படித்தான் இருந்திருக்கிறது.
நானும் நீங்களும் அடிக்கடி மல்லுக்கட்டுவதை நினைத்துப் பாருங்கள்.
*எந்தக் கருத்தைச் சொல்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும், எந்தத் தகவலைப் பெறுவதற்கும், எனக்கு உரிமை  இருக்கிறது.
*கருத்தை மட்டும் சொல்லுங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள். 
*நான் எதை செய்ய வேண்டும் என்பதை நான்தான் முடிவெடுக்க வேண்டும்.   
*முடிவெடுக்கும் உரிமை எனக்கும் இருக்கிறது-
*எதைப்  பற்றி கருத்து சொல்லவும் எனக்கு  உரிமை இருக்கிறது...
இப்படியெல்லாம் நான் சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான், உடனே உங்கள் அத்தனை அணுக்களும் கோபத்தை அள்ளி அள்ளி எறிந்திருக்கின்றன என்மேல்.
'குடும்பம் ஒரு குட்டி அரசு'  சமூக விஞ்ஞானியும் மாவீரருமான லெனின் அவர்களுடைய கவிதை போன்ற இவ்வரிகளை அடிக்கடி உணர்த்தியிருக்கிறது உங்கள் கோபம்.
உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். உரிமை, சுதந்திரம் என்பதெல்லாம் நானாக சொல்வதல்ல. நம் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. மனிதகுல சமூகத்தில் ஒவ்வொரு மனிதரும் சக மனிதராக வாழ்வதற்குரிய சுதந்திரம், உரிமை பற்றிய தகவல்கள்  அரசியலமைப்புச் சட்டத்தில் விரிவாகவே இருக்கிறது. உங்களுக்குத் தேவையென்றால் ஐக்கியநாட்டுச் சபையையும் விசாரித்துப் பாருங்கள்.
மக்களின் வாழ்க்கை உரிமைகள் பொம்மையாக்கப்படுகின்றபோது நாங்கள் உண்மைக்காகப் போராடுகின்றோம்.
என் புத்தகங்களை நீங்கள் அருவெறுப்பாகப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன். நாம் எப்படிப்பட்ட உலகத்தில் வாழ்கிறோம்? மனிதகுல சமூகம் இப்படி இருப்பது சரியா? எப்படி இருக்க வேண்டும்? இதற்கான விடைகளைப் பெறுவதற்கு புத்தகங்களைப் படிப்பதும் மிகச் சிறந்த வழி. இவை முக்கியமான வழிகாட்டிகளாக பிரகாசிக்கின்றன.
மனிதகுல சமூகத்தில் எனக்கான பொறுப்புகளை தீர்மானிப்பதற்கு புத்தகங்களும் உதவுகின்றன. கலந்து பேசுவதையும், விவாதிப்பதையும்கூட நீங்கள் இப்படிப் புரிந்துகொள்வதே சரியாக இருக்கும்.
 'இப்படி இருன்னு என்னைய அதிகாரம் பண்ணாத. நான் உன்னைய அனுசரிக்க முடியாது. நீதான் எங்கள அனுசரிச்சு நடக்கனும். குடும்பத்துக்கு அடங்கிதான் நடக்கனும்...'  நீங்கள் இப்படி பேசுவதால் சொல்கிறேன்.
நான் கருத்து சொல்வதுகூட உங்களுக்கு அதிகாரமாகப்பட்டிருக்கலாம். உண்மையில் யாரும் யாரையும் கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ தேவையில்லை. ஒவ்வொரு மனிதரும் சக மனிதருடைய சமூக உரிமையை அங்கீகரிப்பதும் மதிப்பதுமே அவசியத் தேவையாக இருக்கிறது. இந்த உண்மையை நீங்கள் விரைவில் உணர்வது அவசியம். குடும்பத்தில் மட்டுமல்ல, சமூகத்தின் எல்லாப் புள்ளியிலும் இது பொருந்தும்.
நீங்கள் நினைத்துப்பாருங்கள், 'கொசு சனியன் இப்படியா மொய்ப்பது' என்று என்னிடம் புலம்புவீர்கள். ஒரு நாளுக்கு கோடிக்கணக்கான கொசுவை உற்பத்தியாகவிடுகிறது அரசு என்பேன். ஏதோ கேணையன் க்கே...க்கே... என்று அர்த்தமின்றி கத்துவதைப்போல என்னைப் பார்ப்பீர்கள்.
என்னுடைய கருத்துரிமையை அவமதிக்கும் நோக்கமாகவே உங்கள் பார்வை வெளிப்படுகிறது. உங்கள் பிள்ளை இப்படிச் சொன்னது எப்படிச் சரியாகும் என்ற கேள்வியோ, ஆர்வமோ சிறிதும் எட்டிப்பார்க்காது. இது உங்களுடைய குற்றமல்ல என்பதையும்  தெரிந்திருக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
குடும்ப உணர்வு மட்டும் உள்ளவனாக இருக்கச் சொல்கிறீர்கள். இது மனிதகுல வரலாற்றின் சமூக விஞ்ஞான உணர்விற்குச் சிறிதும் பொருந்தாது. சமூக மேன்மைக்கு எதிரானது. இயற்கை ,மனிதன், சமூகம் அனைத்திற்கும் எதிரான சிந்தனையென்று உறுதியாகச் சொல்லுவேன்.
மனிதகுல சமூகத்தில் நமது பொறுப்பை சிறிதும் உணராமல் இருக்கிறீர்கள் என்பதையே இது உணர்த்துகிறது.
உங்களைக் குற்றவாளியாக்குவது எனது நோக்கமல்ல. நானும், என்னைப் போன்றவர்களும் உங்களைக் குற்றவாளியாக கருதமுடியாது. ஏனெனில் நாங்கள் சமூகவிஞ்ஞானக் களங்களில் செயல்படுபவர்கள். சமூகவிஞ்ஞானமே எங்களது உலகப்பார்வை. உங்கள் குற்றத்தின் ஆணிவேர் சமூகத்தில் இருக்கிறது. சமூகத்தில் விரவியுள்ள குற்றமே உங்களிடமும் பிரதிபலிக்கிறது. எங்கள் நோக்கம் குற்றங்களை வேரோடு அறுத்தெறிவது.
எப்படி...?  'குடும்ப உணர்வு மட்டும் உள்ளவனாக...' அதாவது,                      ஓடில்லாத கொலகொலத்த முட்டையைப்போல அருவெறுப்பான வாழ்க்கை!     நாங்களும் இப்படித்தான் வாழ வேண்டுமா?                                                              எங்களால் அருவெறுப்பானவர்களாக வாழ முடியாது. சமூக அக்கறையற்ற குடும்பமாக வாழ வெட்கப்படுகிறோம்.
      சமூக அறிவும், சமூக அக்கறையும் பிரகாசிக்கின்ற குடும்பங்களை உருவாக்குவதே சமூகவிஞ்ஞானிகளின் லட்சியம். எதார்த்த வாழ்விலிருந்து உருவாகியுள்ள இவர்களது லட்சியமே எதிர்காலத்தில் அடிமைத்தனமற்ற பொன்னுலகை சாதிக்கப் போகின்றது. அந்த எதிர்காலப் பொன்னுலகிற்குத் தேவையான சிறய செங்கல் அளவாவது வாழ்ந்துவிட வேண்டும். இப்படிப்பட்ட வாழ்வையே நாங்கள் நேசிக்கிறோம். நமது சமூக வளர்ச்சிக்கும் இத்தகைய வாழ்க்கையே தேவைப்படுகிறது.
ஒரு காரியம் நம்மால் முடியவில்லையென்றதும் கோபம், அழுகை, நையாண்டி போன்ற பலவிதமான வடிவங்களில் வெளிப்படுகின்றது, நம் இயலாமை. உங்கள் விஷயத்தில் என்னிடமே இதை உணர்ந்திருக்கிறேன்.
நம் குடும்ப பிரச்சனைகளையும் அறிவியல் உணர்வோடு நான் விளக்கும்போது, என்னால் உணர முடிந்தது இதைத்தான். அப்பாவும் நீங்களும் என் உணர்வுகளை உதாசீனம் செய்தீர்கள். அந்தக் கோபத்தில் நான் எழுதியக் கவிதையை நினைத்துப் பார்க்கிறேன். அது 17.12.2006 தேதியிட்டக் கவிதை என்பது நினைவிருக்கிறது. தறுதலைகள் என்று தலைப்பிட்டிருந்தேன்.

எங்களைப் பெற்றெடுக்கவா
புணர்ந்தீர்கள்!

உங்கள்
கட்டளைகளையும், ஆசைகளையும்
சுமப்பதற்கு
கழுதைகளா நாங்கள்!

எங்கள்
சுதந்திரம், உரிமைகளை
அதிகாரக் கொடுக்குகளால் கிழிக்காமல்
வழிகாட்டத் தெரியாத நண்டுகளே!
உங்களுக்கு ஏன்
குழந்தைச் செல்வம்?
ஒப்பந்தம் இல்லாத கைதிகள் என்பதாலா?

'புரியாதவர்கள்' என்றே
புத்தியைப் புண்ணாக்குனீர்களே...
அதிகாரம் என்பது
புரிதல் இல்லை - இது
உங்களுக்குப் புரியாதா!

சரியாக பயன்படுத்தாத
அதிகாரங்கள் அழகற்றது

உங்கள் யாருக்குமே
அதிகாரம் செய்ய தகுதிஇல்லை!

அனுபவம்  +  வழிகாட்டுதல்= புரிதல்
புரிதல் நிகழ்ந்தால்
பயணம் வெற்றி!
புரியாவிட்டால்..?


'வாழ்க்கை'
ஜனனம் முன்வாசல்
மரணம் பின்வாசல்

வாழ்க்கையின் பயணம்
எந்தவாசலில் இருந்து
எந்தவாசலை நோக்கியது
என்பதே புரிதலின் இரகசியம்...

எங்களை வாழவிடுங்கள்!
பயணத்தின் இறுதி
பசுமையோ, பாடையோ
எல்லை வரையில் காத்திருங்கள்!

     இந்தக் கவிதை உங்கள் நெஞ்சை  கணக்கச் செய்தது. கண்ணீர் உங்கள் கன்னங்களைக் கோடிட்டது. உடனே என் இதயம் பதறியது. நீங்கள் வார்த்தைகளை உதிர்த்தீர்கள்.  “கவிதை சூப்பர்... எப்பவும் உன் கவிதைக்கு முதல் ரசிகை நான்தாண்டா!. உங்கள் பாராட்டை இன்று நினைத்தாலும் என் உள்ளம் சிலிர்க்கின்றது.

எங்கள் அறிவியல் உணர்வை எரித்துவிட்டு, உங்கள் தவறான புரிதலையே ஏற்றுக்கொள்ளச்சொல்லி கட்டாயப்படுத்துகிறீர்கள், என்னை.
குடும்ப பிரச்சனைகளை அறிவியல் உணர்வோடு புரிந்துகொள்ளும் ஆற்றல் உங்களுக்கில்லை என்பதல்ல பிரச்சனை. நான் சமூகவிஞ்ஞானிகளோடு மனிதகுல சமூகத்தின் பிரச்சனைகளை சரி செய்கின்ற கடமையை ஆர்வத்துடன் செய்கிறேன். இதுதான் உங்கள் பிரச்சனை.
உங்கள் மூளை என்னை சமூகத்தின் சக மனிதனாக பார்க்கவில்லை. குடும்பத்தின் வெறும் சொத்தாகவே பார்க்கிறது. நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
'அடுப்பில் பிறந்த உணவை அடுப்பே திண்பதில்லை. அடுப்பால் பெற்ற அமுதை அடுப்புக்கே ஊற்றினால், அது மடமை'.
என்னைப் போன்றவர்களின் தேவை நம் மனிதகுல சமூகத்திற்கு அதிகம் இருக்கிறது...
சகமனிதர்கள் அறிவியல் உணர்வாளர்களாக வளர்ச்சி பெற்று வருகிறார்கள்...
சமூக அறிவும் அக்கறையும் சமூகமாற்றக் களங்களை வலிமைபடுத்தி வருகின்றன...
சமூக விஞ்ஞானிகளின் லட்சியங்கள் வெற்றியை நோக்கி விரைகின்றன...
என்னைப் பற்றிய உங்களது அவநம்பிக்கைகள் பாராட்டகளாக மலரும் காலம் வரலாம்!
அத்தகைய காலம் விரும்பி சமூக அக்கறையுடன் உங்களை நேசிக்கும் அன்பன்...
 உங்கள் பொறுப்புள்ள பிள்ளை!
புதியவன்

No comments:

அதிகம் படித்தவை